🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காலம் செதுக்கிய சமூகநீதி தூதன் அறிவாசான் தந்தை பெரியார்!

“காலம் செதுக்கிய சமூகநீதி தூதன் ஈ.வெ.ரா”

தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகுதொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார் – பாவேந்தர் பாரதிதாசன்
 

மனித சமூக வரலாற்று இயக்கவியலின் அடிப்படை விதிகளை கண்டறிந்த 19-ஆம் நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளரும், புரட்சியாளருமான ஜெர்மானிய மெய்யியலாளர் காரல் என்ரிக்ஸ் மார்க்ஸ் மரணிப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் 1879-இல் ஈரோட்டில் பிறந்த, சாதிய இந்தியச் சமூக இயக்கத்தின் ஆணிவேரில் புரையோடிப்போயுள்ள நோயைக்கண்டறிந்து தன் பேச்சாலே குணமாக்கி, பிற்படுத்தப்பட்ட மக்களின் திசைவழிப்போக்கை மாற்றிய மாபெரும் சமூக சீர்திருத்தவாதி ஈ.வெ. ராமசாமி. காரல் மார்க்ஸின் பொதுவுடமைச் சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்டு, தன் நாட்டிற்கேற்ப மாற்றிய ரஷ்ய புரட்சியாளர் விளாதிமிர் லெனின் போன்று பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம் பெற்றவரோ அல்லது மார்க்ஸை முழுமையாக படித்தபின் சீர்திருத்த சிந்தனைகளை பேசியவரோ அல்ல ஈரோடு வெங்கட்ட ராமசாமி. பல்லாயிரமாண்டுகாலமாக கோடானுகோடி மக்கள் நம்பிவந்ததற்கு நேர்மாறான எதிர்திசையில் ஒருவரை நிறுத்த இயற்கையால் படைக்கப்பட்டரோ என்று எண்ணும் அளவிற்கு இயல்பிலேயே சமூகத்தின் போக்கோடு முரண்பட்டு நின்றவர் ஈ.வெ. ராமசாமி.


கூலி வேலை செய்த வெங்கட்ட நாயக்கரும், செங்கல் சூளையில் கல் சுமந்த சின்னத்தாயம்மாளும் வாயை கட்டி, வயிற்றைக்கட்டி சிக்கனமாய் இருந்து நாளு காசு சேர்க்காமல் போயிருந்தால் ஒருவேளை நாம் விரும்பும் ராமசாமி கிடைக்காமல் போயிருக்கலாம்.

சிக்கனம் வெங்கட்ட நாயக்கரின் முதலீடுகளாக மாறி செல்வம் பல்கிப்பெருகியபொழுது, அளவு மாற்றம் பண்பு மாற்றத்திற்கு அடிப்படையாக அமையும் என்ற மார்க்ஸின் மெய்யியல் விதியின்படி, பழுத்த மரங்களை தேடிவரும் பறவைகளைப்போல புலவர்களும், புராணக்கதைகள் கூறும் பாகதவர்களும் நாயக்கர் வீட்டை மொய்க்கத்தொடங்கியபொழுது முழு வைதீகக்குடும்பமாய் மாறியது வெங்கட்ட நாயக்கர் குடும்பம்.


சின்னத்தாயம்மாளுக்கு செல்வம் பெருகிய அளவிற்கு பெற்ற பிள்ளைகள் ஆயுள் பெருகாததால் இரண்டு குழந்தைகள் அற்ப ஆயுளில் இறந்துவிட அடுத்த பத்தாண்டுகள் கழித்து அடுத்தடுத்த ஆண்டுகளில் சின்னத்தாயம்மாளுக்குப் பிறந்த இரண்டு ஆண்குழந்தைகளில் இராமசாமி இரண்டாமவர்.

ஆரம்பக்கல்வியைக்கூடாத தாண்டாத ராமசாமி பெற்றோர்கள் எதைச் செய்யக்கூடாது என்றார்களோ அதையெல்லாம் செய்து பார்த்த குசும்புக்காரன். சிறுவயதிலேயே பாகவதர் சொல்லும் புராணக்கதைகளில் உள்ள முரண்களை கேள்வி கேட்டு திணறடிப்பவர். ஆறு வயதில் திண்ணைப்பள்ளியில் சேர்த்தபொழுது, அங்குள்ள வாணிபச் செட்டியார்கள், முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள் வீடுகளில் தண்ணீர் குடிக்காதே, ஓதுவாராகிய வாத்தியார் வீட்டில் மட்டும் தண்ணீர் குடி என்று பாட்டி சொல்லி அனுப்பினால், வாத்தியார் வீட்டைத் தவிர எல்லோர் வீட்டிலும் தண்ணீர் குடிப்பான். சமூகம் வகுத்திருந்த உணவு பழக்கவழக்கங்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளிலும் நம்பிக்கை அற்றவன். உயர்சாதிப்பிள்ளைகளொடு நட்புகொள் என்று  பாட்டி சொன்னதற்கு நேர்மாறாக, யாரோடெல்லாம் சேரக்கூடாது என்று ஒரு சாதிப்பட்டியலை பாட்டி சொன்னாளோ அந்த சாதி நண்பர்களோடு பழகுவதும், அவர்கள் வீட்டில் உணவுண்பதுமே இராமசாமியின் முரட்டுத்தனத்திற்கு காரணமென்று ஒரு காலில் சங்கிலியால் விலங்கு மாட்டியும் கட்டுப்படுத்த முடியாமல், இரண்டு கால்களையும் சங்கிலியால் பிணைத்து, மரக்கட்டையில் கட்டி வைத்தால், மரக்கட்டைகளைத் துக்கிக்கொண்டு நண்பர்களோடு விளையாடப் போய்விடுவான் ராமசாமி.


இராயிரம் ஆண்டுகளாக எந்த கேள்விகளுக்கும் உட்படுத்தப்படாமல், இந்தியச் சாதிய சமூகங்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த புராணங்கள், இதிகாசங்களில் சொல்லப்படும் கருத்துகளை கேள்விகளுக்குட்படுத்திய இளம் வயதில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விளையாட்டாக செய்து வந்தாரே தவிர, எந்த இயக்கங்களிடமிருந்தோ, தனி மனிதர்களிடமிருந்தோ கற்றுக்கொண்டதல்ல. இயல்பாகவே எழுப்பிய கேள்விகளும், தர்க்கங்களும் இயற்கை ராமசாமிக்கு வழங்கிய கொடை.

பெற்ற தாய், தந்தைக்கும், வளர்த்த பாட்டிக்கும் கட்டுப்படாத ராமசாமி, வாத்தியார் சொல்லியா கேட்டுவிடப்போகிறான். ஒருமுறை ஆசிரியருக்கே அடிவிழ, பள்ளியின் கதவுகள் மூடப்பட்டு விட்டன. வேறு வழியின்றி தந்தை தான் நடத்தி வந்த தரகு மண்டியில் வேலை செய்யச்சொன்னபோது, தட்டாமல் நிறைவேற்றிய ராமசாமி, வியாபாரத்திலும் கெட்டிக்காரன் என்ற பெயரெடுத்த சிலகாலம் மட்டும் தான் மகன் குறித்து தாய்-தந்தை மகிழ்ந்திருந்த தருணம். அதுவும் கொஞ்ச காலம் தான். மண்டி வாழ்க்கை மைனர் வாழ்க்கை ஆனபொழுது பெற்றோருக்கு மீண்டும் கவலை தொற்றிக்கொண்டது.


மைனர் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க பெற்றோர் முடிவு செய்தபோது, சேலத்திலுள்ள ஒன்றுவிட்ட தாய்மாமன் மகள் நாகம்மை மீது ராமசாமிக்கு மையல். ஆனால் நாயக்கர் வீட்டு வசதி நாகம்மை தரப்புக்கு ஏணி வைத்தாலும் எட்டாத உயரம். ஈரோட்டு நாயக்கர் குடும்பம் பணக்கார வீட்டில் சம்மந்தம் செய்யணும் என்பது புதுப்பணக்காரி சின்னத்தாயம்மாளுக்கு விருப்பம். ராமசாமி ஒருமுறை முடிவு செஞ்சுட்டா அப்புறம் அவர் பேச்சை அவரே கேட்கமாட்டார். அது அப்பொழுது மட்டுமல்ல, பின்னாட்களிலும் அப்படித்தான். கல்யாணம் செஞ்சா அது நாகம்மை கூடத்தான் என்று திட்டமாக சொல்லிவிட, முரட்டு மகனைப் பெற்ற சின்னத்தாயம்மாளுக்கு வேறு வழியேயில்லை.

விருப்பமில்லாமல் நாகம்மையை மகனுக்கு கட்டிவைத்தாலும், மருமகள் மாமியார் கிழிச்ச கோட்டை தாண்டாதவள். மாமியார் விருப்பப்படி சைவ உணவு, தவறாமல் விரதம், அடிக்கடி கோவில்னு சமத்து மருமகள். ஆனால் விரும்பியவளை கரம் பிடித்த ராமசாமிக்கு, காதல் மனைவியின் சாமியார்த்தனம் பிடிக்கவில்லை. ஒருநாள் கோவிலுக்கு போன நாகம்மை காதுபட, “இவள் நம்ம ஊருக்கு புதுசா வந்திருக்கிற தாசியா?” என இருவர் தங்களுக்குள் பேசிக்கொள்ள, இது தன் கணவர் நடத்திய நாடகம் என்பதைத் தெரியாமல் அத்தோடு கோவிலுக்கு போவதை நிறுத்திக்கொண்டார். நாகம்மை உண்ணாவிரதம் இருக்கும் நாட்களில் தான் அசைவ உணவு வேண்டுமென்பார், மனைவியின் சைவ சாப்பாட்டுக்குள் எழும்புத்துண்டை வைப்பது என ராமசாமியின் சேட்டைக்கு அளவேயில்லை. கல்யாணத்தின் போதே தாலி கட்டிய ராமசாமிக்கு, மனைவி தாலி அணிவது பிடிக்காமல், கணவர் ஊரில் இருக்கும்போது தாலி தேவையில்லை என்று கணவன் சொன்னதை நம்பி தாலியை கழட்டி அவரிடமே கொடுத்துவிட்ட அப்பாவி நாகம்மை. அடுத்தநாள் காலையில் வெளியே சென்ற நாகம்மையின் வெறும் கழுத்தைப்பார்த்து பெண்கள் பரிகாசம் செய்ய, கணவர் கூறிய விசயத்தை நாகம்மை அவர்களிடம் ஒப்புவித்தார்.


அதுவரை பொருத்துக்கொண்டிருந்த வெங்கட்ட நாயக்கருக்கு பொல்லாத கோபம் தலைக்கேற, ராமசாமியை கூப்பிட்டு வெச்சு சும்மா வெளு வெளு என்று வெளுத்துவிட்டார்.

கல்யாணம் ஆகி ஐந்தாரு வருடம் ஆகியிருந்த நிலையில், 25-வயசுல அப்பாகிட்ட அடிவாங்கியது ராமசாமியை ஏதோ செய்திருக்கும்போல். கோபித்துக்கொண்டு விஜயவாடா போகிறார். அங்கு இதேபோல் வீட்டில் கோபித்துக்கொண்டு வந்த இரண்டு பிராமண வாலிபர்கள் நண்பராகிறார்கள். அங்கிருந்து ஹைதரபாத் போனவர்கள், பிச்சை எடுத்து சாப்பிட முடிவு செய்கிறார்கள். (பாவம், அவர்கள் வேறென்ன வேலை செய்யமுடியும்). கையில் அணிந்திருந்த இருந்த தங்கக்காப்பு, சங்கிலி, மோதிரம், கடுக்கண், அரைஞாண் வகையறா அனைத்தையும் கழற்றி பாதுகாப்பாக வைத்துக்கொண்ட ராமசாமி, வீடு வீடாகப் போய் மூவரும் பிச்சையெடுத்துவிட்டு, பிளாட்பாரத்தில் ஓய்வெடுப்பதும், புராணப்பெருமைகளை பிராமண நண்பர்கள் சொல்லச் சொல்ல அவர்களோடு விதண்டாவதம் செய்வதுமாக நாட்கள் கழிகிறது. ஹைதராபாத் சமஸ்தானத்தில் வேலை செய்யும் ஒரு தமிழர் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, ராமாயணம் பிரசங்கம் செய்யும் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கின்றார். பிராமண நண்பர்கள் பிரசங்கம் செய்யச் செய்ய இடையிடையே ராமசாமி மட்டும் சொந்த சரக்கை எடுத்துவிடுவார்.


இப்படியே வாழ்ந்துவிட முடியாதல்லவா? காசிக்கு செல்ல மூவரும் முடிவு செய்கிறார்கள். ஒற்றை மோதிரத்தை மட்டும் அரைஞான் கயிற்றில் கட்டிக்கொண்ட ராமசாமி, மற்ற ஆபரணங்களை தமிழ் நண்பரிடம் கொடுத்துவிட்டு செல்கிறார். காசியைச் சென்றடைந்தவுடன் பிராமண நண்பர்கள் தனியாக சென்றுவிட தனியாளானார் ராமசாமி. கையில் இருந்த காசு முதல்நாளே கரைந்துவிட, அடுத்தநாள் கொஞ்சம் கொஞ்சமாக பசி வயிற்றைக்கடிக்க, பொறுக்கமுடியாமல் அன்னசத்திரத்திற்குள் நுழைந்த ராமசாமியின் கோலம் பிராமணர் அல்ல என்பதை காட்டிக்கொடுக்க காவலாளியால் விரட்டியடிக்கப்படுகின்றார்.  ராமசாமிக்கு பசியும், கோபமும், என்ன செய்ய?... ஹைதராபாத்தில் பிச்சை எடுத்தவர், காசியில் அன்னசத்திரத்திலிருந்து வெளியே வீசப்படும் இலையில் மீதமுள்ள உணவை வழித்து சாப்பிட்டு பசியை போக்குகிறார்.


கோலத்தை மாற்றினால் காசியில் காலத்தை ஓட்டலாம் என்று முடிவு செய்த ராமசாமி, பிச்சையெடுத்து மிஞ்சியகாசில் மொட்டையடித்துக்கொண்டு மடங்களில் சென்று வேலைதேடுகிறார்.  குளித்து, திருநீறுபூசி வில்வம் பறித்துவந்தால் ஒருவேளை சாப்பாடு என்ற சாமியார்களின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ளும் தினசரி குளிக்கும் பழக்கமில்லாத ராமசாமி, குளிக்காமல் விபூதி மட்டும் பூசிக்கொண்டு, ஈரத்துண்டைக்கட்டிக்கொண்டு வில்வம் பறித்து வருவது சாமியார்களுக்கு  தெரிந்துபோக, பெரிய தகராறு ஏற்பட்டு மடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். மடத்தில் இருந்த காலத்தில் சாமியார் மத்தியில் நடக்கும் ரகசியங்களையும், சாமியார்கள் செய்யும் பித்தலாட்டங்களையும், மோசடிகளையும் கண்ணால் பார்த்து தெரிந்துகொண்டது, ராமசாமியின் எதிர்கால செயல்பாடுகளுக்கு உதவியாக இருந்தது.


மடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ராமசாமி, தினசரி சாப்பாட்டுக்கு மாற்று ஏற்ற்பாடாக. காசிக்கு தர்ப்பணம் கொடுக்க வரும் உறவினர்கள் பிச்சைக்காரர்களுக்கு போடும் சாப்பாட்டை வரிசையில் நின்று யாசகம் பெற்று சில நாட்களை கழித்துப்பார்த்தார். காசியைப்பற்றி கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பத்திற்கும், ஒழுக்கக்கேடுகள் நிறைந்திருந்த எதார்த்தத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்த ராமசாமி, அதுவரை காப்பாற்றி வந்த ஒன்னரைப்பவுன் மோதிரத்தை 19 ரூபாய்க்கு விற்றுவிட்டு அசன்ஸால், பூரி ஆகிய இடங்களுக்கு சென்றுவிட்டு, இறுதியில் ஆந்திராவில் இருந்த குடும்ப நண்பர் வீட்டிற்கு வந்துசேர்ந்தார். இத்தகவல் வெங்கட்ட நாயக்கருக்கு சென்றவுடன், மகனைத் தேடி களைத்திருந்தவர், உடனடியாக மகனை அழைத்துவர ஆந்திரா விரைந்தார். தந்தை வந்தவுடன் ஹைதராபாத் நண்பரிடமிருந்த நகைகளை வரவழைத்தார். வியப்புற்ற தந்தை, அடே இத்தனை நாளாய் எப்படிடா சாப்பிட்டாய்? என்று கேட்க, “அதுவா, நாம் ஈரோட்டில் எத்தனைபேருக்கு பிச்சை போட்டிருக்கிறோம். அதையெல்லாம் மொத்தமாய் வசூல் பண்ணி சாப்பிட்டேன்”, என்று கூச்சமில்லாமல் போட்டுடைத்தார் ராமசாமி.


காசியிலிருந்து ஈரோடு திரும்பிய ராமசாமி பழைய போக்கிரி ராமசாமியாக இல்லை. தனது பெயரில் இருந்த மண்டியை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் மண்டி என்று மாற்றம் செய்து அவரிடமே ஒப்படைத்தார் தந்தை. குடும்பத்திலும், சமூகத்திலும் பொறுப்புள்ள மனிதராக மாறத்தொடங்கிய ராமசாமி, வியாபாரத்திலும் கொடிகட்டிப்பறந்தார்.

ராமசாமியின் செல்வாக்கால் முக்கிய விசேசங்களுக்கு அழைக்கப்பட்டவர், சாதி, மதம் கடந்து அனைவர் வீடுகளுக்கும் சென்றார். கௌரவ நீதிபதி, தாலூகா போர்டு உப தலைவர், வணிகர் சங்கம், நாயுடு சங்கம், சமரசக்குழு, வங்கிக்குழு, சங்கீத சபை என்று 29 பதவிகள் வந்து சேர்ந்தன. எப்படியாவது ராமசாமிக்கு தெய்வநம்பிக்கை உண்டாகட்டும் என்று தேவஸ்தான கமிட்டியின் தலைவராகவும், செயலாளராகவும் ஆக்கினார்கள். பல கோவில்களை புதுப்பித்தார், கோவில்களை பழுது பார்த்தார், கடனில் இருந்த தேவஸ்தான கமிட்டியை மீட்டு 45 ஆயிரம் ரூபாய்களை சேமித்துக்கொடுத்தார். தன்னிடம் கொடுக்கப்படும் பொறுப்புகளை நாணயமாக நிறைவேற்றினாரே தவிர தெய்வநம்பிக்கை ஏதும் ஏற்படவேயில்லை. ராமசாமி பிறந்த நோக்கம் அதுவல்ல என்பது காலம் போட்டு வைத்த கணக்கு.

ஆம், காலம் அங்குதான் ராமசாமியை தன் வயம் எடுத்துக்கொள்ள தொடங்கியது. ராமசாமி வகித்த முக்கிய பொறுப்புகளில் ஈரோடு நகரமன்ற தலைவர் பொறுப்பு மிக முக்கியமானது. காவிரி ஆற்றிலிருந்து நகருக்கு குடிநீர் கொண்டு சென்று மக்களின் தாகம் தீர்த்தார். போக்குவரத்துக்காக சாலையை விரிவு படுத்தியபொழுது தன் பணக்கார நண்பர்களின் ஆக்கிரமிப்புகளை தயவு தாட்சணியமின்றி அகற்றியது, ராமசாமிக்கு, பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகினாலும், நண்பர்கள் வசைபாடினர்.


வீடியோ உதவி- நன்றி: திருமிகு.தமிழருவி மணியன்.

ஈரோடு நகரமன்ற தலைவராக ராமசாமி பொறுப்பு வகித்த அதேகாலத்தில், சேலம் நகராட்சித் தலைவராக ராஜாஜி பொறுப்புவகித்தார். மதுரையிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் நடைபெற்ற பிரச்சினைக்காக, தொழிற்சாலை தரப்பு வழக்கறிஞராக மதுரை கோர்ட்டுக்கு செல்லும் வழியில் ஈரோடு வரும் இராஜாஜியை, வரதராஜுலு நாயுடு பெரியாருக்கு அறிமுகம் செய்துவைக்க, மூவரும் நண்பர்களாகிறார்கள். தான் நகரமன்ற தலைவராக உள்ள சேலம் நகராட்சியைவிட ஈரோடு நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியைப்பார்த்து மனம்திறந்து பாராட்டுகிறார் இராஜாஜி.

இதே காலகட்டத்தில், 1916-டிசம்பர்’20-இல் தொடங்கப்பட்ட பிராமணர் அல்லாதோர் சங்கமான  “தென்னிந்திய நல உரிமை சங்கம்” (நீதிக்கட்சி) கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் செல்வாக்கு பெறத்தொடங்கிய தருணம், அதன் வளர்ச்சியை மட்டுப்படுத்த வேண்டிய நெருக்கடி காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுகிறது.  காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களாகவும், பெரியாரின் நண்பர்களாகவும் இருந்த இராஜாஜியும், வரதராஜுலு நாயுடுவும் ஈ.வெ.ராமசாமி நாயக்கரை காங்கிரஸ் கட்சியில் சேரும்படி வற்புறுத்தி வருகின்றனர். நீதிக்கட்சியின் வளர்ச்சியை தடுக்க காங்கிரசிலுள்ள பிராமனர் ஆல்லாத தலைவர்கள் இணைந்து “சென்னை மாகாண சங்கம்” என்ற பெயரில் சென்னையிலுள்ள கோகலே மண்டபத்தில் 1917-செப்டம்பர்’20-ஆம் தேதி தொடங்கி, அதன் உபதலைவர்களில் ஒருவராக ஈ.வெ.ராமசாமி நாயக்கர் நியமிக்கப்படுகிறார்.


எதையும் வெளிப்படையாக வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு என்று உடைத்துப்பேசுவதும், உண்மையை உரக்கப்பேசுவதும் ராமசாமி அவர்களின் குணம். தன் வாழ்நாளில் இறுதியில் ஒருமுறை வானொளிக்கு அளித்த பேட்டியில், நெறியாளர் சுதந்திரப்போராட்டத்தில் எல்லோரும் ஈடுபடாதபொழுது உங்களுக்கு மட்டும் எப்படி அந்த எண்ணம் வந்தது? என்றபொழுது, அப்படியொன்னு இருக்கிறதா எனக்கு தோணலை, சுதந்திரப்போராட்டம்னு நெனைச்சு ஒன்னுலையும் சேரலை, காந்தியின் கரத்தை வலுப்படுத்த காங்கிரசில் சேரவேண்டும் என்று இராஜாஜியும், வரதராஜுலு நாயுடுவும் வற்புறுத்தியதால் சேர்ந்தது தானே தவிர சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் வரவில்லை என்று வெளிப்படையாக சொன்னார்.

1919-ஆம் ஆண்டு காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்ட ஜாலியன்வாலாபாக் படுகொலை மற்றும் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் பொறுப்பு காந்தியார் ஏற்ற தருணம், ஈ.வெ.ராமசாமி நாயக்கர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றத்தொடங்கினார்.1919 முதல் 1925 வரை ஆறாண்டுகாலம் காந்தியார் கொள்கைகளில் காந்தியாரே சமரசம் செய்துகொண்டாலும் காந்தியார் கொள்கையில் இருந்து கொஞ்சமும் பின்வாங்காமல், சின்ன சமரசமும் கூட செய்துகொள்ளாமல் ஆற்றிய பணிகள் காலத்தால் அழிக்கமுடியாத வரலாற்றுப்பொக்கிஷங்கள்.


ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி பயணிக்க, கட்சிக்குள் நிலவும் பிராமண ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கலகம் செய்துகொண்டிருந்தார் ராமசாமி. 1925 மேமாதம் 2-ஆம்நாள் குடியரசு இதழைத்தொடங்கி காங்கிரசிலுள்ள ஆதிக்க சக்திகளுக்கு எதிராக கலக்குரல் எழுப்பிய ஈ.வெ.ராமசாமி நாயக்கர், அதே ஆண்டு நவம்பரில் செங்கல்பட்டில் நடைபெற்ற மாநாட்டோடு காங்கிரஸோடும், காந்தியோடும் தொடர்பை துண்டித்துக்கொண்டு ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டார்.

அன்று தொடங்கிய ஈ.வெ.இராமசாமி நாயக்கரின் சமூகநீதிப் பெரும்பயணம், கரடுமுரடான பாதைகளில் ஏறக்குறைய அரைநூற்றாண்டுகாலம் பெரும் சோதனைகளையும், வேதனைகளையும், வலியையும் தாங்கிக்கொண்டு தொடர்ந்தது. 20-ஆம் நூற்றாண்டின் ஈடுஇணையற்ற அறிவாசானாக போற்றப்படும் தந்தைப்பெரியார் தன் நீடித்த பயணத்தை 1973-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி நிறுத்திக்கொண்டார். ஆனால் மக்களின் மனங்களில் அவர் ஏற்றிவைத்த அறிவொளிச்சுடர் அவர் மறைந்து அரைநூற்றாண்டு கடந்தும் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே செல்வதுபோல், சூரியஒளி எல்லையின்றி பயணிப்பது போல் பூகோள எல்லை கடந்து பயணித்துக்கொண்டே உள்ளது. மானுட சமூகம் அறிவும், சமூகநீதியும் பெற காலமெல்லாம் கால்கடுக்க பயணித்த தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாளில், அவர் ஏற்றிவைத்த பகுத்தறிவுச்சுடரை அடுத்த தலைமுறைக்கு கடத்தி அறிவார்ந்த சமூகம் உருவாக உறுதி ஏற்போம். 

தந்தை பெரியாரை பற்றி கவிஞர் கண்ணதாசன் பாடிய வரிகள் என்றும் வாழ்பவை.

ஊன்றிவரும் தடி சற்று நடுங்கக்கூடும்
உள்ளத்தின் உரத்தினிலே நடுக்கமில்லை;
தோன்றவரும் வடிவினிலே நடுக்கம் தோன்றும்
துவளாத கொள்கையிலே நடுக்கமில்லை!

வான் தவழும் வென்மேகத் தாடி ஆடும்
வளமான சிந்தனைக்கோர் ஆட்டமில்லை
ஆன்றவிந்த பெரியார்க்கும் பெரியார்
எங்கள் அய்யாவிக்கிணை எவரே மற்றோர் இல்லை!

நீதிமன்றின் நீதிக்கும் நீதி சொல்வார்
நெறிகெட்டு வளைந்ததெல்லாம் நிமிர்த்திவைப்பார்
ஜாதி என்னும் நாகத்தைத் தாக்கித் தாக்கி
சாகடித்த பெருமை கைத்தடிக்கே உண்டு!

ஆக்காத நாள் இல்லை ஆய்ந்து தேர்ந்து
அளிக்காத கருத்தில்லை அழுத்தமாக
தாக்காத பழமையில்லை தந்தை நெஞ்சில்
தழைக்காத புதுமை இல்லை தமிழ் நிலத்தில்!

நாதியிலார் நாதிபெற நாப்படைத்தார்-
நாற்பத்தி அய்ங்கோடி மக்களுக்கும்
பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார்
பிறக்கையிலே பெரியாராய்த் தான் பிறந்தார்!

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved