🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும், மெய்ஞானமும் – பகுதி 3

விஞ்ஞானமும், மெய்ஞானமும் – பகுதி 3

அன்புச் சொந்தங்களே, விஞ்ஞானமும், மெய்ஞானமும் தன்னைத்தானே  வெளிப்படுத்திக் கொண்டே உள்ளன. இதற்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. 

ஒன்றிலிருந்து தான் எல்லாம் வந்தது என மெய்ஞானம் கூறுகிறது. அதே ஒரு அணுவில் இருந்துதான் எல்லாம் வருகிறது என்பதை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மெய்ஞானம் என்பது ஒருவர் தன்னைத்தானே அறிய உதவும் ஒரு ஞானம் என்பதை நாம் முன்னரே பார்த்து உள்ளோம். ஆனால், அதை அடைவதற்கும், அறிவதற்கும் ஒரு ஞானி தேவை. அதாவது ஒரு குரு தேவை. ஏனெனில் நாம் யாவரும் ஞானசம்பந்தர் அல்ல அல்லது ஆதி சங்கரர் அல்ல. நாம் யாவரும் மெய்ஞானத்தை தேடி பெறவேண்டிய நிலையிலே உள்ளோம். நமது தேசம் ஒரு புண்ணிய பூமி, இதில் எத்தனை எத்தனையோ புண்ணிய ஆத்மாக்கள் தோன்றி ஞானத்தில் தோய்ந்து மறைகின்றன, வாழ்கின்றன, வாழப்போகின்றன. இதற்கெல்லாம் யார் காரணம் ? சுமார் மூண்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு மகான் திருமந்திரத்தை எழுதிய  திருமூலர்  இப்படி பாடியுள்ளார்.

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் 

நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான் ஐந்து 

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் 

சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டெ.

அதாவது எப்பொழுதும் மாறாத அல்லது தோற்றுவிக்கப்படாத  ஒன்று உண்டு அதுதான் சிவம்.

இரண்டு என்பது சிவம் சக்தி , சக்தி என்பது மாறாத சிவனின் அசையும் தன்மை. சக்திதான் ஜீவன்களுக்கு  ‌‌அருளை வழங்கி உயிர்ப்பித்து கொண்டு உள்ளது.

மூன்று என்பது சக்தியின் மூன்று வெளிப்பாடு அதாவது இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் க்ரியா சக்தி அல்லது பிரம்மா ( படைத்தல்), விஷ்ணு ( காத்தல்), ருத்ரா ( அழித்தல்) அல்லது மூன்று முக்கிய குணங்கள் அதாவது ரஜோ குணம், தமோ குணம் , சாத்வீக குணம். அல்லது  இந்த பிரபஞ்சம் முழுவதும்  ஆண், பெண் மற்றும் அது (he, she and it) என்பதால் நிரம்பி உள்ளது. அல்லது இறையியலில் பதி, பசு மற்றும் பாசம் என குறிப்பிடுகின்றனர்.

நான்கு என்பது நான்கு வேதங்கள் அதாவது ரிக், யசூர்,  சாம, அதர்வண என்பதை குறிக்கும். அல்லது இறைவனை அடையும் நான்கு மார்கங்கள் அதாவது சரியை, கிரியை, யோகா மற்றும் ஞான மார்க்கம் என்பதாகும்.

ஐந்து என்பது ஐந்து இந்திரியங்களை குறிக்கிறது கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் மெய் அல்லது ஐந்தொழில்களை, ஆக்கல், காத்தல், அழித்தல் , அருளல் மற்றும் விடுவித்தல் பற்றி குறிக்கும்.

ஆறு என்பது ஆறு  தத்துவங்களை குறிக்கும் அதாவது  சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதம், சோதிடம். அல்லது ஆறு வழிகள் அதாவது பதம், எழுத்து, மன்றம், கலை, தத்துவம் மற்றும்  புவனம். அல்லது ஆறு ஆதாரங்கள், நமது உடலில் உள்ள சக்கரங்கள் மூலாதாரம், சுவாதிஸ்தானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி மற்றும் ஆக்னேயம்.

ஏழு என்பது ஏழு உலகங்கள் அதாவது பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர லோகம், தவலோகம், சத்ய லோகம் மற்றும் சிவலோகம்.ஏழாவது சக்கரம் சகஸ்ரார சக்கரம். (தலை உச்சியில்) உள்ளது.எட்டு என்பது இந்த பிரபஞ்சத்தில் ஊடுருவி இருக்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன் மற்றும் ஜீவன் ஆகியவையே!

ஆக இந்த எட்டும் மெய்ஞானம் பற்றி நாம் அறிய அடிப்படை ஆகும். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம். வாழ்க வளமோடு!

அன்புடன் உங்கள்,
முனைவர்.கெ. நாகராஜன்,
இயற்பியல்துறை பேராசிரியர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved