🔴 LIVE | முப்பெரும் விழா 2023


EWS 10% இடஒதுக்கீடு விவகாரம்!- சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட....

உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் வகையில் மத்திய அரசு செய்துள்ள 103-வது சட்டதிருத்தற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, கடந்த வாரம் முதல் அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வருகிறது. இன்றோடு நிறைவடைந்துள்ள இந்த வழக்கு விசாரணையின்போது எழுப்பப்படும் கேள்விகளும், வைக்கப்படும் பதில்களும், கற்பிக்கப்படும் நியாயங்களும்-சமாதானங்களும், இந்தியச் சமூகத்தில் எளியோர்களுக்கான நீதி என்பது, நீதிபோதனை கதைகளில் மட்டுமே கிடைக்கும் என்பதை சொல்லாமல் சொல்கிறது.

விசாரணையின் போக்கும், மத்திய அரசும், வாதிகள் தரப்பு வாதங்களும் சட்டத்தின் அடிப்படையிலோ, நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலோ இல்லாமல், ஏதுமறியாத எளிய பிற்படுத்தப்பட்ட மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது என்பது சமூகநீதி கூட்டமைப்பின் கருத்தாக உள்ளது. ஆகையால் சண்டைக்காரன் காலில் விழுவதை விட சாட்சிக்காரன் காலில் விழுவதே மேல் என்ற நிலைக்கு பிற்படுத்தப்பட்ட சாதிகள் தள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் ஒரே மதத்திலுள்ள முன்னேறிய வகுப்பினரிடம் இச்சட்டம் தங்களின் உரிமைகளை எவ்வாறு பறிக்கிறது  என்பதை இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் சார்பாக சமூகநீதி கூட்டமைப்பு முன்வைத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது, 

அன்புக்குறிய உயர் வகுப்பினரே,

இந்திய சமூக கட்டமைப்பில் எங்கும் புறக்கணிப்புக்கோ, தீண்டாமைக்கோ உள்ளாகாத, உயர்சாதி அந்தஸ்து கொண்டவர்கள் மீது மத்திய அரசு கொண்டுள்ள அக்கறையால்,  உங்களில் ஏழைகளுக்கு (EWS) 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும்  103-வது சட்ட திருத்தம் இதர பிற்படுத்தப்பட்ட (OBC), தாழ்த்தப்பட்ட (SC), பழங்குடி (ST) வகுப்பினரின் உரிமைகளை நிச்சயமாக அழித்தொழிக்கும் வேலையைச்செய்கிறது என்பதை தரவுகள் மூலமாக நிரூபிக்க விரும்புகிறோம்.

நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் மிக மிக அதிகபட்சமாக எடுத்துக்கொண்டாலும் 20 விழுக்காடுக்கு மேல் இல்லாத உயர்சாதி சமூகம், உயர் ஆராய்ச்சி நிறுவனங்களில் 100 சதவீதமும், அரசுச்செயலாளர் பதவிகளில் 95 சதவீதமும், உச்ச/உயர் நீதிமன்ற நீதிபதி பணியிடங்களில் 90 சதவீதமும், குரூப் A பணிகளில் 70 சதவீதமும், குரூப் B & C பணிகளில் 60 சதவீதமும், குரூப் D பணிகளில் 50 சதவீதமும் ஆக்கிரமித்துள்ள நிலையிலும், இன்னும் எங்களில் ஏழைகளுக்கு தனியாக இடஒதுக்கீடு வேண்டும் என்று (EWS) 10 விழுக்காடு எடுத்துக்கொண்டால், 80 விழுக்காடு மக்கள்தொகை கொண்ட  OBC/SC/ST எங்கு செல்வார்கள் என்ற கேள்வியை முன்வைக்கின்றோம். 

ஆண்டாண்டுகாலமாக உங்களின் ஏவலாளிகளாக, உங்களுக்கு பணிவிடை செய்ய, உங்களுக்காகவே வாழ்நாளெல்லாம் உழைக்கும் எங்கள் மீது ஏன் இந்த கொலைவெறி? 

உங்களில் ஏழைகளுக்கு (EWS) 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் முன், அனைத்து வகுப்பினரும் இதுவரை இடஒதுக்கீட்டை பகிர்ந்து கொண்ட விபரங்களை உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறோம்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC) -  பிரத்தியேகமாக வழங்கப்படும் 15 விழுக்காடு தவிர்த்து, திறந்த இருக்கையில் (Open Category) உள்ள 50 விழுக்காடு இடங்களில் போட்டியிட்டு வந்தனர்.

பழங்குடி வகுப்பினர் (ST) -  பிரத்தியேகமாக வழங்கப்படும் 7.5 விழுக்காடு தவிர்த்து, திறந்த இருக்கையில் (Open Category) உள்ள 50 விழுக்காடு இடங்களில் போட்டியிட்டு வந்தனர்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) -  பிரத்தியேகமாக வழங்கப்படும் 27 விழுக்காடு தவிர்த்து, திறந்த இருக்கையில் (Open Category) உள்ள 50 விழுக்காடு இடங்களில் போட்டியிட்டு வந்தனர்.

கிரிமிலேயர் பிரிவில் வரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களோடு (CL-OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினர் உள்ளிட்ட ஒட்டுமொத்த உயர்வகுப்பினரும் பொதுப்பட்டியலில் உள்ள 50 விழுக்காடு இடங்களில்போட்டியிட்டு வந்தனர்.

உயர்சாதி ஏழைகளுக்கு (EWS) 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு முறையே, 

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC) -  பிரத்தியேகமாக வழங்கப்படும் 15 விழுக்காடு தவிர்த்து, திறந்த இருக்கையில் (Open Category) இதுவரை போடியிட்டுவந்த 50 விழுக்காடு இடங்களில் 10 விழுக்காடு குறைந்து 40 விழுக்காடு இடங்களிலேயே போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

பழங்குடி வகுப்பினர் (ST) -  பிரத்தியேகமாக வழங்கப்படும் 7.5 விழுக்காடு தவிர்த்து, திறந்த இருக்கையில் (Open Category) இதுவரை போடியிட்டுவந்த 50 விழுக்காடு இடங்களில் 10 விழுக்காடு குறைந்து 40 விழுக்காடு இடங்களிலேயே போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) -  பிரத்தியேகமாக வழங்கப்படும் 27 விழுக்காடு தவிர்த்து, திறந்த இருக்கையில் (Open Category) இதுவரை போடியிட்டுவந்த 50 விழுக்காடு இடங்களில் 10 விழுக்காடு குறைந்து 40 விழுக்காடு இடங்களிலேயே போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் 20 விழுக்காடு மக்களில் 20 விழுக்காட்டினர் ஏழைகள் என்று சொல்லப்படும் 4 விழுக்காடு உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீட்டோடு, 40 விழுக்காடு பொதுஇடங்களில் போட்டியிடும் வாய்ப்பை பெருகின்றனர். 

அதேவேளையில் கிரிமிலேயர் ஓபிசி பிரிவினர் போட்டியிடும் 50 விழுக்காடு இடங்களில், 10 விழுக்காடு குறைக்கப்படுவதால், 40 விழுக்காடு இடங்களில் மட்டுமே போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கிறது.

EWS இடஒதுக்கீட்டால் OBC/SC/ST- வகுப்பினருக்கு ஏற்படும் தொடர்பாதிப்புகள் எப்படி இருக்கப்போகிறது என்பதை எங்களால் கணிக்கமுடிகிறது. 

அதன்படி, எந்தவிதமான தரவுகள், புள்ளி விவரங்கள், ஆய்வுகள், பரிந்துரைகள், கோரிக்கைகள் ஏதுமின்றி உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம், 50 சதவீத திறந்த இடங்களுக்கான (Open Category) தகுதிப்பட்டியலில் கடைசி இடங்களைப்பெற்றுவந்த OBC/SC/ST சமூகத்தினர், திறந்த இடங்கள் 50 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைக்கப்படுவதன் மூலம், அவர்கள் அனைவரும் அவரவர் வகுப்புகளுக்கு ஒதுக்கப்படும் இடஒதுக்கீடு இடங்களுக்குள் அடைக்கப்படுகின்றனர். உயர்சாதி ஏழைகளுக்கு கொடுக்கப்படும் 10 விழுக்காடு இடஒதுக்கீட்டில் OBC/SC/ST-இல் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை கணக்கில் கொள்ளாமல் புறக்கணிப்பதின் மூலம் அவர்களின் வாய்ப்புகளை இச்சட்டம் நிர்மூலமாக்குகிறது.  

இதுவரை 50 விழுக்காடு திறந்த இடங்களில் போட்டியிட்டு வந்த உயர்வகுப்பு ஏழைகள் (EWS), பொதுப் பிரிவினரிடையே போட்டியிட முடியாத நிலையில், அரசாங்கத்தின் அனைத்து முடிவெடுக்கும் அதிகாரங்களிலும் வியாபித்திருக்கும் வர்க்கத்தைச்சார்ந்த ஏழைகளை மேம்படுத்த உறுதியான,பயனளிக்கும் மாற்று திட்டங்கள் வழியாக, அவர்களின் தற்காலிக ஏழ்மைநிலை களையப்பட வேண்டுமே தவிர, சமூகத்தின் படிநிலைகளை பல்வேறுகோணங்களில் அலசி ஆராய்ந்து, அதில் பல்வேறு அளவுகளில் பின்தங்கியுள்ளதை உறுதிசெய்து வகைப்படுத்தப்பட்ட OBC/SC/ST-களுக்கு, பிரத்யோகமாக அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளை சீர்குளைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு, சமூகநீதி தத்துவத்தை நீர்த்துப்போகச் செய்யக்கூடாது என்பதே எங்களின் வேண்டுகோள்.

கிரிமிலேயர் முறையில் நடத்தப்படும் கொலைவெறி தாக்குதல் என்ன?

சமூகநிலையிலும், கல்வியியிலும் பின்தங்கியுள்ள கிரிமிலேயர் பிரிவில் இடம்பெரும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் (CL-OBC) பொருளாதரத்தில் பின்தங்கிய வகுப்பினரை (EWS) விட ஒரே ஒரு ரூபாய் அதிகமாக வருவாய் ஈட்டும்பட்சத்தில்கூட அவருக்கு இடஒதுக்கீடு வாய்ப்பு மறுக்கப்படும்பொழுது, அதே ஒரு ரூபாய் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைவிட குறைவாக வருவாய் ஈட்டும் இடஒதுக்கீடு பெற தகுதியற்ற முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவருக்கு இடஒதுக்கீடு வழங்குவது எத்தகைய நீதியை இந்த சட்ட திருத்தம் நிறுவ முயல்கிறது?. இச்சட்ட திருத்தம் சமூக சமத்துவமற்ற நிலையையும், மேலாதிக்க, ஒடுக்குமுறைகளை தொடர வழிவகை செய்கிறதோ என்ற அச்சமும் எழுகிறது.

ஒரே மதத்தில் இருக்கும் பிற்பட்ட வகுப்புகளை தொடர்ந்து நசுக்கும் போக்கை கண்டிக்க வேண்டியது வளர்ந்த உயர்வகுப்புகளின் கடமை என்பதை உணர மறுத்தால், நாட்டில் 60 விழுக்காடு மக்கள் தொகையுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் கோபம், இந்திய அரசியலின் திசைவழிபோக்கை மாற்றி அமைக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

சுரண்டல்களுக்கு எதிராய் நிற்போம்!

சாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ சமத்துவமின்மையை சமூகத்தில் நிலைபெறச் செய்து, சுரண்டல்களுக்கு துணைபோகும் , பகுத்தறிவுக்கு ஒவ்வாத தத்துவங்களை புறக்கணிப்போம். அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்வதே மானுட நல்லிணக்கத்திற்கு அடிப்படையாய் அமையும். வளமான பாரதத்திற்கு வர்க்க முரண்/பேதங்களை களைவதே தீர்வு.

இவ்வாறு சமூகநீதி கூட்டமைப்பு வேண்டுகோள் வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved