🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இசைத்தமிழுக்கு இயற்கை கொடுத்த பெரும் கொடை ஸ்ரீலஸ்ரீ நல்லப்பசுவாமிகள்!

கத்தியால் களம் கண்ட கஞ்செய பாண்டியனின் வம்சா வழியில் ஒரு கர்நாடக சங்கீத இசைமேதையாக பிறந்த ஸ்ரீலஸ்ரீ நல்லப்பசுவாமிகளின் 134-வது பிறந்தநாள் இன்று. இயற்றமிழுக்கு பாரதி, புதுமைப்பித்தன், நாடகத்தமிழுக்கு சங்கரதாஸ் சுவாமிகளை தந்த நெல்லைச்சீமை இசைத்தமிழுக்கு வழங்கிய கொடைதான் இசைமகாசமுத்திரம் என்றழைக்கப்படும் நல்லப்பசுவாமிகள்.

வாள்சுழற்றிய கம்பளத்தாரின் ரத்தமும், சதையும் பாரததேசமெங்கும் நிலம், நீர், நெருப்பு போன்ற பஞ்சபூதங்களுக்கும் தீணிபோட்டு சுதந்திர தீயை மூட்டியபோது, தன் ராக ஆலாபனைகளால் காற்றுக்கும், ஆகாயத்திற்கு தீணிபோட்ட தனி ஒருவன் இசை மகாசமுத்திரம்  நல்லப்பசுவாமிகள்.

பாஞ்சை பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனாரைப் பெற்றெடுத்த ஆறுமுகத்தாய் அடுத்துப்பிறந்த சண்முகத்தாயம்மாளை கரம்பிடித்த  காடல்குடியாண்ட வீரகஞ்செய பாண்டியனார், மாவீரன் கட்டபொம்மன் தூக்கிலடப்பட்ட அதேதினத்தில் ஆங்கிலேயர்களால் துக்குலிடப்பட்ட தியாக வேங்கை. இளையவன் குசலவீரகஞ்செய பாண்டியன் வம்சாவளியில் மூன்றாம் தலைமுறையாய் பிறந்த சோமசுந்தர ஜெகவீரகஞ்செய பாண்டியனுக்கு நான்கு பெண்களோடு ஐந்தாவதாகப்பிறந்து, பஞ்சபூதங்களையும் தன் ராக ஆலாபனைகளால் கட்டிப்போட்டவர் ஸ்ரீலஸ்ரீ நல்லப்பசுவாமிகள்.

குருவழியாக பயிற்சி பெறாமல், சுத்த சுயம்புவாக இயற்கை கொடுத்த இசைதூதுவரான நல்லப்பசுவாமிகள், ஒரு ராகத்தை ஒரே மாதிரி மீண்டும் பாட மாட்டார் என்பதும், விதவிதமான ஓசைகளையும், ஒலிகளையும் எழுப்புவதோடு, இசை மூலமாகவும் ராகங்களை இசைப்பவர், 1. கனகாங்கி 2. ரத்னாங்கி 3. கானமூர்த்தி 4. வனஸ்பதி 5. மானவதி 6. தானரூபி 7. சேனாவதி 8. ஹனுமத்தோடி 9. தேனுகா 10. நாடகப்பிரியா 11. கோகிலப்பிரியா 12. ரூபவதி 13. காயகப்பிரியா 14. வகுளாபரணம் 15.மாயாமாளவகௌளை 16. சக்ரவாகம் 17. சூர்யகாந்தம் 18. ஹாடகாம்பரி 19. ஜங்காரத்வனி 20. நடபைரவி 21. கீரவாணி 22.கரகரப்பிரியா 23.கௌரிமனோகரி 24.வருணப்பிரியா 25.மாரரஞ்சனி 26.சாருகேசி 27.சரசாங்கி 28.ஹரிகாம்போஜி 29.தீரசங்கராபரணம் 30.நாகாநந்தினி 31.யாகப்பிரியா 32.ராகவர்த்தனி 33.காங்கேயபூஷணி 34 வாகதீச்வரி 35.சூலினி 36.சலநாட 37.சாலகம் 38.ஜலார்ணவம் 39.ஜாலவராளி 40.நவநீதம் 41.பாவனி 42.ரகுப்பிரியா 43.கவாம்போதி 44.பவப்பிரியா 45.சுபபந்துவராளி 46.ஷட்விதமார்க்கிணி 47. சுவர்ணாங்கி 48.திவ்யமணி 49.தவளாம்பரி 50.நாமநாராயணி 51.காமவர்த்தனி 52.ராமப்பிரியா 53.கமனாச்ரம 54.விஷ்வம்பரி 55.சியாமளாங்கி 56.சண்முகப்பிரியா 57.சிம்மேந்திரமத்திமம் 58.ஹேமவதி 59.தர்மவதி 60.நீதிமதி 61.காந்தாமணி 62.ரிஷபப்பிரியா 63.லதாங்கி 64.வாசஸ்பதி 65.மேசகல்யாணி 66.சித்ராம்பரி 67.சுசரித்ர 68.ஜோதிஸ்வரூபிணி 69.தாதுவர்த்தனி 70.நாசிகாபூஷணி 71.கோசலம் 72.ரசிகப்பிரியா போன்ற 72 வகையான மேள கர்த்தாக்களையும் குருவின் துணையின்றி இயல்பிலேயே அறிந்த இசைமாமேதை நல்லப்பசுவாமிகள். 

தென்னிந்திய இசையின் சிறப்பு ராக ஆலாபனையும், தாளங்களும். வட இந்திய இசையில் ராக ஆலாபனை உண்டெனினும், கலப்படங்களும் உண்டு. இலக்கணம் முறையாக மதிக்கப்படும் தென் இந்திய இசையில், ராக ஆலாபனையை இயல்பிலேயே பெற்று, தன் குரலிசையால் மயக்கிய மாபெரும்மேதை நல்லப்பசுவாமிகள். ராக ஆலாபனையில் ஒப்பாரும், மிக்காருமில்லாத நல்லப்பசுவாமிகளின் பாட்டைக்கேட்டு மெய்மறக்காதார் இருக்கமுடியாது. மூன்று மணி நேர கச்சேரியில் சுவாமிகளின் ராக ஆலாபனை மட்டுமே இரண்டரை மணிநேரம், அச்சர சுத்தமாக, குரல் பிசகாமல் ஓங்கி ஓலிக்கும் ஆலாபனையில் மகுடிக்கு மயங்கும் சர்ப்பம்போல், சுவாமிகளின் ராகத்தில் மக்கள் மெய் மறந்து தன்னிலை மறப்பர் என்றால் சுவாமிகளின் திறமையை கற்பனை செய்துகொள்ளுங்கள்.

மைசூர் மகாராஜா ஒருமுறை தனது சமஸ்தானத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார். தன் நண்பர் கட்டப்பூச்சி முதலியாரோடு மைசூர் சென்று அரண்மணையில் தங்கும் நல்லப்பசுவாமிகள், மகாராஜா முன்னிலையில் வித்வான் இலட்சுமணப்பிள்ளை என்பவர் ஒரே ராகத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் ஆலாபனை செய்வதை காண்கிறார். மூன்று நாட்கள் ஒரே ராகத்தை தொடர்ந்து பாடி, அதிசய சாதனை நிகழ்த்திய லட்சுமணபிள்ளைக்கு மகாராஜா விலையுயர்ந்த ஜரிகையிட்ட அங்கவஸ்திரம் அணிவித்து, பணமுடிப்பும், வைரக்கல் மோதிரமும் பரிசாக அளித்தார். பரிசினை பெற்றுக்கொண்ட லட்சுமணப்பிள்ளைக்கு தலைக்கணம் ஏறிப்போய், என்னைப்போல் யாராவது மேடையில் அமர்ந்து ஒரே ராகத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து ஆலாபனை செய்தால், தான் பெற்ற பரிசுகளை அவர்களுக்கே தந்துவிடுவதாக கூட்டத்தினரைப் பார்த்து சவால் விடுகிறார்.

இதனைக்கேட்ட சுவாமிகள் அந்த மேடையேறி கரஹரபிரியா இராகத்தை தொடர்ந்து ஐந்து நாட்கள் வரை பாட, வித்துவான் லட்சுமணப்பிள்ளை ஓடோடிச்சென்று சுவாமிகளின் கால்களில் விழுந்து வணங்கி தான் பெற்ற பரிசினை கொடுத்து மகிழ்கிறார். சுவாமிகளில் ராக ஆலாபனைகளில் மயங்கிய மகாராஜா சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து சுவாமிகளை கட்டி அணைத்துப் பாராட்டி பொன்னாடை அணிவித்து, சன்மானமும், விலையுயர்ந்த தங்கமெடல் ஒன்றையும் வழங்குகிறார். பரிசை பெற்றுக்கொண்டு நேரே ஊர்வந்து சேராத சுவாமிகள், வடக்குநத்தம் கிராமத்திற்குச்சென்று அங்குள்ள ஆறுமுகசுவாமி ஜீவசமாதிக்கு சென்று  வணங்கி, தான் பெற்ற தங்கமெடலை கோவிலுக்கே காணிக்கையாக கொடுத்துவிட்டு ஊர்திரும்புகிறார்.

இயற்கை அளித்த இசையைத்தவிர எதன்மீதும் பற்றுக்கொள்ளாத நல்லப்பசுவாமிகள். மகாகவி பரதியின் உற்ற நண்பனாக இருந்தார். இன்று இசைமகா சமுத்திரத்தின் 134-வது பிறந்தநாளில் வணங்குவோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved