🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இரண்டாவது முறையாக திமுக தலைவராகும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!

முக தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்,  தற்போதைய தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மட்டுமே  நேற்று (07.10.2022) வேட்பு மனு தாக்கல் செய்தநிலையில், இரண்டாவது முறையாக திமுக தலைவராக  போட்டியின்றி தேர்வாகியுள்ளார். 

தந்தைப்பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தலைவர்கள், பெரியாரின் அடிப்படைக்கொள்கைகளில் இருந்து முழுமையாக விடுபடமுடியால், அவரது பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி  1949-ஆம் ஆண்டு சென்னை, ஜார்ஜ் டவுனின் கூடி உருவாக்கிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். இதனையடுத்து அடுத்தநாள் செப்டம்பர்-18 ஆம் தேதி சென்னை, ராயபுரம் இராபின்சன் பூங்காவில் பேரணி ந்டத்தப்பட்டு பேறரிஞர் அண்ணா முதல் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பேரறிஞர் என்று புகழப்படும் அளவிற்கு வரலாறு, இலக்கியம், பொருளாதாரம், மொழிப்புலமை என அனைத்திலும் சிறந்து விளங்கிய அண்ணாத்துரை அவர்கள் திரைத்துறை, நாடகத்துறை, பத்திரிக்கைத்துறை, மேடைப்பேச்சுகள் மூலம் அன்றைய படிப்பறிவில்லாத பாமர தமிழ்ச்சமூகத்திற்கு உலக வரலாற்றையும், அறிவியல் கண்டுபிடிப்புகளையும், பண்பாடு, கலச்சாரம், இறைநம்பிக்கை, சமயம் குறித்தெல்லாம் எளிய தமிழில் மூலம் அறிவை ஊட்டியவர். உலக அரங்கில் வியர்ந்து பார்க்கப்பட்ட அறிஞர் அண்ணா, தான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் தந்தைப் பெரியார் ஒருவர் மட்டுமே, இனி யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று சூளுரைத்து, திமுக-வில் தலைவர் பதவியை தந்தைப் பெரியாருக்காக காலியாகவே வைத்திருந்தார்.

அறிஞர் அண்ணாவிற்குப்பிறகு பொறுப்பேற்றுக்கொண்ட மு.கருணாநிதி அவர்கள், கட்சி விதிகளில் மாற்றம் செய்து 1969-இல் தலைவர் பதவியை உருவாக்கி,  2018-இல் இறக்கும் வரை சுமார் அரைநூற்றாண்டுகாலம் தலைவர் பதவியில் இருந்தார். அவரின் மறைவையடுத்து, அதுவரை செயல் தலைவராக இருந்துவந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்முறையாக திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுக தலைவராக பொறுப்பேற்றபொழுது, மத்தியிலும், மாநிலத்திலும் அவரது கட்சி  எதிர் வரிசையில் இருந்தது. கலைஞர் கருணாநிதி போன்று எழுத்தாற்றால், பேச்சாற்றல் இல்லாதவர், இனி கட்சி அவ்வளவு தான் என்று கட்சியின் அனுதாபிகள் உட்பட அனைவரும் நினைத்திருந்தது ஒருபுறம், நேர் எதிர் சித்தாந்தம் கொண்ட வலிமையான கட்சி மத்தியில் ஆட்சி செய்து வருவது மறுபுறம், சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியின் எதிர்ப்பு நிலை, சகோதரி கனிமொழி, கட்சியின் முக்கிய தலைவர் அ.ராசா ஆகியோர் மீதான 2ஜி அலைக்கற்றை வழக்கு, அடுத்த ஆறு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் என எண்ணற்ற சவால்களை ஒருசேர எதிர்கொள்ள வேண்டிய நிலையில், தளபதி என்ற அடைமொழிக்கு ஏற்ப களம் முழுவதும் போர்ச்சூழலே காணப்பட்டது.

ஆனால் எல்லா விமர்சனங்களுக்கும் பதில் சொல்லும் விதமாக, இந்தியாவிலேயே ஒத்த கருதுள்ள கட்சிகளை ஒன்றிணைத்து 2019 பாராளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்று, ஒட்டு மொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்தார் மு.க.ஸ்டாலின். தங்கள் கணிப்புக்கு மாறான திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு இருந்தமையால், அடுத்த ஓரிரு வருடங்களில் (2021) நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அவர்மீது கொள்கை ரீதியான விமர்சனங்களை முன்வைக்காமல், அவரின் ஜாதக கட்டத்தை வைத்து, அவருக்கு முதலமைச்சார் ஆகும் யோகம் இல்லை என்ற பிரச்சாரம் கட்டமைக்கப்பட்டது.

அதையும் வெற்றிகரமாக முறியடித்து "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" என நெஞ்சை நிமிர்த்து தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டவருக்கு, ஆளுநர் வழியாக நிர்வாக ரீதியான தொந்தரவுகள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனம் என இருமுனைத்தாக்குதல் மூலம் ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்க தீவிரமான முயற்சிகள் ஒருபுறம், சமூகநீதி பேசும் முதல்வர், கட்சியிலும், ஆட்சியிலும் தொட்டிய நாயக்கர் போன்ற வாய்ப்பற்ற சமூகங்களுக்கான சமூகநீதியை வழங்குவதில் முதல்வர் போதிய அக்கறை காட்டவில்லை என்ற விமர்சனங்கள் மறுபுறம் என மலைபோல் விமர்சனங்களும், சவால்களும் நிறைந்துள்ள சூழலில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

"திராவிட மாடல்" ஆட்சி என்ற கோசத்தோடு, தனக்கென தனி பாணியை உருவாக்கிக்கொண்டு, நிதானமாகவும், பொறுமையாகவும், அதேவேளையில் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் விவாதப்பொருளாக்கக்கூடிய வல்லமையோடு தொடர்ந்து செயல்பட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சாதனைச் சரித்திரம் படைக்க வேண்டும் என்பதே கம்பளத்தாரின் விருப்பம். திமுக தலைவரின் சமூகநீதி பக்கங்களில் கம்பளத்தார்களுக்கும் உரிய வாய்ப்புகள் கிடைத்தன என்பதை உறுதி செய்யும் வகையில் செயல்பாடுகள் அமைந்திட இரண்டாவது முறையாக திமுக தலைவராக பொறுப்பேற்கும் தளபதியாரிடம் வேண்டி, கம்பளத்தாரின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved