🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இடைநிலை சாதிகளுக்கான இயக்கமா அதிமுக?

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 223-வது நினைவுநாள் நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக அனுசரிக்கப்பட்டிருந்தது. தேர்தல் காலமாக இல்லாததால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும், தலைவர்களும் மாவீரன் நினைவு தினத்தை கண்டும் காணாததும்போல் கடந்துவிட்டனர். 

வழக்கம்போல் தன்னைச்சுற்றி இரும்புத்திரை போட்டுக்கொண்டுள்ள முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பெருந்துறை மற்றும் கரூர் ஆகிய இடங்களில் கட்டபொம்மன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியவர், இம்முறை முதல்வரான பின் அமைச்சரவை சகாக்களைக்கூட அனுப்பவில்லை என்பது கம்பளத்தாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக உள்ளது. குறுநில மன்னர்கள் முதல்வரின் தூக்கத்தை தொலைத்தாலும், அவர்களின் கண் அசைவின்றி மாற்று சமூகங்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்ற நிலையே திமுக-வில் தொடர்கிறது.

எதிர்க்கட்சித்தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி க.பழனிச்சாமி அவர்கள் கடந்தமுறை கயத்தாறு வருவதாக தெரிவிக்கப்பட்டு கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டு, கல்லூரி வளாகத்தில் கட்டபொம்மனாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். இம்முறை தனது முகநூல் மற்றும் டிவிட்டர் பதிவுகளில் மாவீரனின் தியாகத்தை நினைவுகூர்ந்து பதிவிட்டு, தனது கடமையை முடித்துக்கொண்டார். இதேபாணியில் அமமுக தலைவர் டிடிவி மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் சமூகவலைதளங்களில் தங்கள் கடமையை நிறைவேற்றி மகிழ்ந்தனர்.

திராவிடக்கட்சியான திமுக மாநில அளவில் பெருஞ்சாதி அரசியலை முன்னெடுக்கிறது என்றால் தேசிய அளவில் பெருஞ்சாதி அரசியலை முன்னெடுக்கும் கட்சியாக பாஜக உள்ளது. மாநிலத்தலைவர் பதவிக்கு பெருஞ்சாதியைச் சேர்ந்தவர்களை நியமிப்பதோடு, முக்கியத்துவம் வாய்ந்த கட்சி பதவி என்றாலும், மத்திய வாரியங்கள், குழுக்கள், கவர்னர் போன்ற நியமனப்பதவி என்றாலும் பெருஞ்சாதியினருக்கு வழங்கிவிட்டு, இடைநிலை சாதிகளுக்கு அரசியல் முக்கியத்துவம் இல்லாத துக்கடா பதவிகளை வழங்கி, சோசியல் எஞ்சினியரிங் என்று மார்தட்டிக்கொள்கிறது. அதேபோல் மத்திய அரசின் வருமானம் கொழிக்கும் துறை சம்மந்தமான பதவிகளிலும் பெருஞ்சாதிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தனது சாதியைச் சேர்ந்த தீரன் சின்னமலையோடு துணைநின்ற தளபதி குணாளன் நாடார் நினைவுநாளுக்கெல்லாம் பதிவிட்டவருக்கு, மாவீரன் கட்டபொம்மன் நினைவுக்கு வரவில்லை.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், செல்வி.ஜெயலலிதா காலத்து அதிமுக-வாக இல்லாமல் பெருஞ்சாதிகளுக்கிடையேயான அதிகாரப்போட்டியில் அக்கட்சி சிக்கித் தவித்தாலும், தற்போதுவரை இடைநிலை சாதிகளுக்கான வாய்ப்புகளை வழங்குவதில் ஓரளவு திருப்தி தரும் கட்சி என்றால் அது அதிமுக மட்டுமே. இன்னும் கூடுதலாகக்கூட அங்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதைப்பெறுவதற்கான தகுதி, திறமைகளை நம்மவர்கள் வளர்த்துக்கொண்டால் நாளை நமதே. 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved