🔴 LIVE | முப்பெரும் விழா 2023


செஞ்சீனத்தின் அதிபராக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் தேர்வானார்!

நமது அண்டை நாடான சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரு கட்சி ஆட்சிமுறையுள்ள சீனாவில் ஆளும்கட்சியாக இருப்பது சீன பொதுவுடமைக்கட்சி என்று சொல்லப்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சி.

மன்னராட்சி முறைக்கும், காலணி ஆதிக்கத்திற்கும் எதிராக உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற புரட்சி மக்களாட்சி முறைக்கு தொடக்க வாயிலாக இருந்தது. இந்த மாதிரியான ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்போது, அதுவரை அரசுக்கு எதிராக போராடி வந்த குழுக்களுக்கு இடையே ஒரு யுத்தம் தொடங்கும். அந்த உள்நாட்டு யுத்தத்தில் வெல்லும் குழுக்களே நாட்டைக் கைப்பற்றும். ஒரு புரட்சி, அதற்குப்பின்னான உள்நாட்டு யுத்தம் இவற்றில் வென்று ஆட்சியை பிடிப்பதற்கு கைகொடுப்பது கம்யூனிஸ்ட் சித்தாந்தம்.

இருபதாம் நூற்றாண்டின் முதல்பாதியின் தொடக்கத்தில் ரஸ்யாவில் நடைபெற்று வந்த ஜார் மன்னர் பரம்பரையில் வந்த இரண்டாம் நிக்கலஸ் ஆட்சிக்கு எதிராகவும், அதற்குப்பின் முதலாளித்துவ ஆதரவு குழுவான வெள்ளைப்படையையும் (White Army) வென்று ரஸ்யாவில் ஆட்சியைப்பிடித்தது லெனின் தலைமையிலான (Red Army), கட்சியின் பெயர் சோவியத் ஒன்றிய பொதுவுடமைக் கட்சி. 

அதேபோல், மங்கோலியர்களின் யுவான் அரசு மரபிற்குப்பிறகு  1644 முதல் 1912 வரை சீனாவை ஆட்சி செய்து வந்த குயிங் அரச குடும்பத்திற்கு எதிராக 1911-இல் நடைபெற்ற புரட்சிக்குப்பின், தேச ஒற்றுமையை வலியுறுத்தி சீன இராணுவப் படைத்தலைவர் யுவான் சிக்காய் 1912-இல் முதல் சீனக் குடியரசை நிறுவினார். 1916-இல் யுவான் சிக்காய் மறைவிற்குப் பின் அரசியல் தலைமை வெற்றிடம் ஏற்பட்டதால், சீனா பல பல படைத்தலைவர்களின் கீழ் சிதறியது. 1928-இல் நாஞ்சிங் பகுதியின் இராணுவத் தலைவர் சியாங்கே சேக், சீனாவின் வடக்குப் போர்கள் மூலம் பிளவுபட்ட சீனாவின் பகுதிகளை ஒன்றிணைத்தார். குவோமின்டாங் (சீன தேசியவாத கட்சி) அரசியல் கட்சியின் தலைவரான சியாங்கே சேக் தலைமையில் ஒரே கட்சி, ஒரே அரசு என்ற அடிப்ப்டையில் சீனாவின் தேசியவாத அரசு ஆட்சி செய்தது. 

ரஷ்யப்புரட்சியின் தாக்கத்தால் புரட்சிக்குழுவின் ஒருபகுதியினர் யுவான் சிக்காய் மறைவிற்குப்பின், 1921-இல் சீன கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கி தேசியவாத அரசுக்கு எதிராக சண்டையிட்டு வந்தனர். சியாங்கே சேக் தலைமையிலான அரசு கம்யூனிஸ்ட்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு அதில் ஓரளவு வெற்றியும் பெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மா சேதுங்கின் மனைவியும், சகோதரியும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 1931-முதல் சீனாவிற்கும், ஜப்பானுக்கும் நடைபெற்றுவந்த சிறிய அளவிலான மோதல் 1937-இல் வலுப்பெற்று பெரிய போராக மூண்டதைத் தொடர்ந்து, சியாங்கே ஷேக், கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து ஐக்கிய கூட்டமைப்பை உருவாக்கினார். ஜப்பானிய படைகள் சீனப்படைகளை பின்தள்ளி முன்னேறி தலைநகர் நாஞ்சிங்கை கைப்பற்றின. இதன்பின் நடந்த நாஞ்சிங் படுகொலை சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், சரணடைந்த சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். இதுதவிர பல்லாயிரக்கணக்கான சீனப்பெண்கள் ஜப்பானிய ராணுவ வீரர்களால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டனர்.

ஜூன் 1938ல், சீன படைகள் ஜப்பானிய படைகளின் முன்னேற்றத்தை தடுக்க மஞ்சள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தின. இதன் மூலம் சீனப்படையினருக்கு வுஹன் (Wuhan) நகரத்தில் தற்காப்பு முயற்சிகள் எடுக்க சிறிது நேரம் கிடைத்தது. ஆனாலும் வுஹன் நகரம் அக்டோபர் மாதத்தில் ஜப்பானிய படையினரிடம் வீழ்ந்தது. ஜப்பானியர்கள் எதிர்பார்த்தது போல் இந்த வெற்றிகளால் சீனர்களின் எதிர்ப்பை முறியடிக்க முடியவில்லை. சீன அரசாங்கம் தனது இருப்பிடத்தை நாட்டின் உட்பகுதிக்கு மாற்றி அங்கிருந்து போரை தொடர்ந்தது. ஜப்பானின் தாகுதலை எதிர்கொள்ள முடியாத சீன அதிபர் சியாங்கே ஷேக் அமெரிக்க உதவியை நாடினார். ஆனால் இதனை கம்யூனிஸ்ட்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்கிடையே ஜப்பானுக்கும், சீனாவிற்கும் நீடித்து வந்த போரில் ஜப்பான் கை மேலோங்கியிருந்த நிலையில், இரண்டாம் உலகப்போர் மூண்டது. 1939-இல் தொடங்கி 1945 வரை நடைபெற்ற இரண்டாம் உலக யுத்தத்தின்போது சீனா அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நேசநாடுகளின் பக்கமும், ஜப்பான் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட அச்சு நாடுகளின் பக்கமும் இருந்தது. அப்போரின் இறுதியில் அமெரிக்கா ஜப்பான் மீத அணுகுண்டு தாக்குதல் நடத்தியதின் விளைவாக ஜப்பான் சரணடைந்த நேரிட்டது. அப்பொழுது சீனாவிலிருந்த ஜப்பான் துருப்புகளும் சரணடைய நேரிட்டது.

ஒருவழியாக ஜப்பானுடனான போர் முடிவுக்கு வந்தாலும், பொதுவுடை இயக்க குழுக்கள் சியாங்கே ஷேக் அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்தனர். தெற்குப் பகுதியிலிருந்து வெளியேறி 6,000 மைல்கள் நெடும்பயணத்தை மேற்கொண்டு, சீனாவின் வடமேற்குப் பிராந்தியத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தை அமைத்துக்கொண்டார் மா சேதுங். 1948 முதல் மா சே துங் மக்களை ஒன்று திரட்டி சீனா முழுவதும் புரட்சி செய்தார். இதனால் சியாங் காய் சேக்கின் அரசு பதவியிலிருந்து விலகி, தைவானில் தனது அரசை நிறுவினார். 1949-இல் பொதுவுடமைக் கட்சியின் சார்பில் மா சே துங் தலைமையில் சீனக் குடியரசு நிறுவப்பட்டு, தற்போது வரை ஆளப்பட்டு வருகிறது.

மாசேதுங் நண்பரும், பொதுவுடமை மூதுவரின் மகனான அறியப்படும் தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங், 1953,ஜூன் 15 ஆம் நாள் பிறந்தவர். துவக்கத்தில் ஃபுஜியன் மாகாணத்தில் பணியாற்றியவர், ஜீசியாங் மாகாணத்தின் கட்சித் தலைவராகவும், அதன்பின் சாங்காய் நகர கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 15 நவம்பர் 2012-இல் சீன பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதின் மூலம் 14 மார்ச் 2013-இல் சீன மக்கள் குடியரசின் அதிபரானார். (சீன பொதுவுடமைக்கட்சியின் பொதுச்செயலாளரே சீன அதிபர் பொறுப்பையும் வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது).

முன்னதாக, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு, தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 16-ம்தேதி தொடங்கி, நேற்றுவரை (23.10.2022) வரை நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் 2,300 பேர் கலந்து கொண்டனர். இறுதி நாளில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார். அவரே அதிபராகவும் தொடர்வார். சீன அரசியலமைப்பு சட்டத்தின்படி, அதிபர் 10 ஆண்டு காலம் மட்டுமேபதவி வகிக்க முடியும். அதன்படி அதிபர் ஜி ஜின்பிங்கின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைகிறது. ஆனால், அதிபர் பதவிக்காலத்தின் கால வரம்பு கடந்த 2018-ம் ஆண்டு நீக்கப்பட்டது.

அதன்படி மாநாட்டின் இறுதி நாளான்று அதிபர் ஜி ஜின்பிங் 3-வது முறையாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது போலவே நடைபெற்று முடிந்துள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved