🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியில் பூத்த குறிஞ்சி மலர் ரிஷி சூனக்!

மனித குழுக்களின் பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களால் சமூக நாகரீகங்களிலும், சித்தாங்களிலும் மாற்றங்களை உண்டு பண்ணுகிறது. சமூக அரசியலின் பரிணாம வளர்ச்சியில் பொதுவுடமைச் சமூகம், நிலவுடமை, பிரபுத்துவ சமூகம், முடியாட்சி சமூகம், குடியாட்சி சமூக முறைமைகளை உலகம் கண்டுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசின் அமைப்பு முறைகள் வெவ்வேறு மாதிரியாக, குறிப்பாக மக்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் அமைப்பு முறையை நோக்கி நகர்த்தியுள்ளது. மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசாக இருந்தாலும், தேர்வுமுறமைகளில் இனம், மொழி, சாதி,மதம் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது.

உலகில் ஒருசில நாடுகளில் நடைபெற்று வரும் மன்னராட்சிக்கு மதம் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி காப்பாற்றி வருகிறது. ஜனநாய நாடுகளில் துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய மத, இன, பூகோள காரணிகள், ஜனநாயகம் வளர, வளர இவற்றிற்கிடையேயான வேறுபாடுகளும், முரண்களும் மெல்லத் தேய்ந்து, மனிதமும், அன்பும் தழைக்கச்செய்கிறது.

ஜனநாயக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த பக்குவம், முதிர்ச்சியின் காரணமாக உலக வல்லரசான அமெரிக்காவின் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அதனைத்தொடர்ந்து தற்போது பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சூனக் தேர்வு செய்யப்பட்டிருப்பதும், இந்தியா உள்பட பல நாட்டு மக்களுக்கு மரைமுகமாக சில செய்திகளை வழங்கியுள்ளது.

கிருஸ்தவ மதத்தை பின்பற்றும் நாடுகளில், வளர்ச்சியை மையப்படுத்தும் மக்களின் மனநிலையால், அரசியலில் இருந்து மதம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பிற நாடுகளில் இருந்து குடியேறிவர்களும், சிறுபான்மை மதத்தை பின்பற்றுபவர்களும், தனித் திறமைகள் இருந்தால் உட்சபட்ச பதவிகளை அடைவதற்கு தடையேதும் இல்லை என்பதை ரிஷி சூனக் தேர்வு உறுதி செய்கிறது.

அதேவேளையில், இந்தியாவில் மத ரீதியான ஆதிக்கமும், சாதிரீதியான ஆதிக்கமும் நிலவுவதால், மதத்தின் பின்னனியில் இயங்கும் இனக்குழு மற்றும் பெருஞ்சாதிகள் மட்டுமே அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்கின்றன. நாட்டில் 4000-க்கும் மேற்பட்ட சாதியினர் இருந்தாலும், உயர்சாதியினர், தலித்துகள் மற்றும் மத சிறுபான்மையினருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மட்டுமே நிலைநிறுத்தப்பட்டுள்ளதும், நாட்டில் 60 சதவீதத்திற்கும் அதிகமாகவுள்ள இடைநிலை சாதியியைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான வாய்ப்புகள் பறிக்கப்பட்டிருப்பதும் மட்டுமே 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் எதார்த்தநிலை..

இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் உயர் பதவிக்கு வரும்பொழுது கொண்டாடும் நாம், உள்நாட்டில் சிறுபான்மை சாதி, மதங்களுக்கு எதிரான மனநிலையில் இருப்பது, ஜனநாயக முதுர்ச்சியின்மையை காட்டுவதாக உள்ளது. இதனால் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், நாட்டில் எண்ணற்ற சாதிகள் அதிகாரத்தின் வாடையே படாமல் உள்ளது.

அதேவேளையில், தமிழகத்தில் 40-லட்சம் கம்பளத்தார் இருந்தும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கே போராட வேண்டியுள்ள நிலையில், இங்கிருந்து வெளிநாடு சென்று ஒருவரால் பிரதமர் பதவியை அடையமுடிகிறது என்றால், அரசியல் அதிகாரத்தைப்பெற எண்ணற்ற வழிகள் இருந்தும், நாம் ஒரே வழியில் மட்டுமே முயன்று வருகிறோம் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். ரிஷி சூனக் தேர்வு நமக்கான ஒரு பாடம் என்றால் மிகையல்ல.

தாங்கள் அடிமைப்படுத்திய நாட்டைச் சேர்ந்த ஒருவரை, இன, மொழி, மதம், வயது, தேசப் பாகுபாடின்றி, அதிபராக தேர்ந்தெடுத்துள்ள இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களை பாராட்டாமல் இருக்கமுடியாது. முடியாட்சியோ, குடியாட்சியோ, நமக்கு முன்னுதாரணமாக இருப்பது மேற்கத்திய நாடுகள். அரசமைப்பிலும், நாகரீகத்திலும் அங்கு நடைபெற்ற மாற்றங்கள், நூறாண்டுகள் கழித்தேனும் இங்கும் நடைபெற்றுள்ளது, மக்கள் புரட்சி ஒன்றத்தவிர. வளர்ந்துவரும் பெருமுதலாளித்துவ ஆதிக்கம் இந்தியாவையும் ஒருகட்டத்தில் புரட்சியை நோக்கி நகர்த்தலாம். உலக அரங்கில் ஏற்படும் சமூக மாற்றங்களை கண்காணித்து, அதற்கேற்ப நம்மை கட்டமைத்துக்கொண்டாலே நாம் உலகை வெல்லும் நாள் தொலைவில் இருக்கப்போவதில்லை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved