🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஊமைத்துரைக்கு தோள் கொடுத்த மருது பாண்டியரின் 221 வது குருபூஜை!

மருது பாண்டியர்கள் விருதுநகர் மாவட்டம், நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த மொக்க பழநியப்பன் சேர்வை என்பவருக்கும், அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748 டிசம்பர் 15 இல் மகனாகப் பிறந்தவர் பெரிய மருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753 ஏப்ரல் 20 இல் சின்ன மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவை விட உயரத்திற் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்று அனைவராலும் அழைக்கப்படலானார்.

இவ்விருவரும் சிவகங்கைச் சீமையின் அரசர் முத்து வடுகநாதரின் போர்ப்படையில் வீரர்களாகச் சேர்ந்து தமது திறமையை நிரூபித்தனர். இவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய மன்னர் முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புக்களில் நியமித்தார்.

திருப்பத்தூரில் மருதிருவருக்கு அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூண் ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்ட ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப்படை 1772 இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய பின் உடனடியாகச் சிவகங்கை மீது போர் தொடுத்தது. இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மருது சகோதரர்கள் ஆகியோர் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர்.

1772 க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779 இல் தொடங்கி ஆற்காட்டு நவாப், தொண்டைமான், கும்பினியார் ஆகியோரின் படைகளை வெற்றி கொண்டு 1780 இல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போர் சோழவந்தானில் தொடங்கி சிலைமான், மணலூர், திருப்புவனம், முத்தனேந்தல் என நடைபெற்று கடைசியாக மானாமதுரையில் போர் பயிற்சியே பெறாத சுதந்திர தாகமிக்க மக்களின் உதவியோடு போர் வெற்றி பெற்றது. மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலியின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலுநாச்சியாரை மீண்டும் ஆட்சியில் மருதுபாண்டிய சகோதரர்கள் அமர வைத்தனர்.

மருது சகோதரர்களின் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. இவர்கள் முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர்.

இவர்கள் காளையார் கோவில் கோபுரத்தைக் கட்டியதுடன் குன்றக்குடி, திருமோகூர் கோயில்களுக்கும் திருப்பணி செய்தனர்.

மானாமதுரை சோமேசர் கோயிலுக்கு கோபுரம் கட்டித் தேரும் செய்தளித்துள்ளனர். மருது பாண்டியர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இத்திருக்கோயிலின் பெருமை பற்றிப் சிவகங்கைக் கவிஞர் வேதாந்தம் சுப்பிரமணியம் வானர வீர மதுரைப் புராணத்தை இயற்றியுள்ளார். இந்நூலின் இறுதி பாடல் மருது சகோதரர்களை “யதுகுல மருது பூபன் மைந்தர்கள் ” என்று குறிப்பிடுகிறது.

இளையவரான “சின்ன மருது” அரசியல் தந்திரம் மிக்கவராக விளங்கினார். இவர்கள் தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி வரை மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயருக்கு எதிரானப் போராட்டத்திற்கு வித்திட்டனர்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததாகக் காரணம் கூறி 1801 மே 28 இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடைவிடாமல் நடந்தது. ஜெனரல் ஆக்னியூ தலைமையில் மருது பாண்டிய சகோதரர்கள்,அவர்களது போர்ப்படையில் பணியாற்றிய தளபதிகள், மருது பாண்டியர்களின் ஆண் வாரிசுகளான 10, 12 வயதே நிரம்பியபாலகர்களைத் தூக்கிலிட்ட கொடுமை உலக வரலாற்றில் ஒப்பீடு சொல்லவியலாத நிகழ்வுகளாகும். இந்நிகழ்வுகளை நேரில் கண்ட ஆங்கில ராணுவ அதிகாரி வெல்ஸ், ராணுவச் சட்டப்படி அவற்றைப் பொது வெளியில் தெரிவிக்க இயலவில்லை. எனவே, லண்டன் சென்றபின் ஜே.கோர்லே என்கிற எழுத்தாளர் மூலமாக Mahradu, an Indian Story of the Beginning of the Nineteenth Century: With Some Observations (1813) என்ற புத்தகத்தில் விவரித்துள்ளார்.

காளையார்கோவில் காடுகளில் கொரில்லா முறையில் போர் நடந்தது. புதுக்கோட்டை தொண்டைமான், ஆங்கிலேயருக்கு படை அனுப்பி உதவி செய்தார்.

மருது சகோதரர்கள் மற்றும் பிற விடுதலை வீரர்களைப் பிடித்துக் கொடுப்போர்க்கு வெகுமதி அறிவிக்கப்பட்டது. காளையார்கோவில் காட்டினை அழிப்பவர்க்கு, அழிக்கப்படும் நிலம் 20 வருடத்திற்கு இலவச குத்தகையாக வழங்கப்படும் என ஆங்கிலேயர் அறிவித்தனர்.

ஒக்கூர் காட்டில் பதுங்கியிருந்தபோது, தன் உதவியாளன் கருத்தானால் சின்ன மருது சுடப்பட்டார். இதற்காக கருத்தானுக்கு ஆங்கிலேயர் வெகுமதி அளித்தனர்.

மருது சகோதரர்களின் மறைவு மற்றும் ஒட்டுமொத்த குடும்ப அழிப்பு சிவகங்கை மக்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சிவகங்கை சரித்திரக் கும்மி, சிவகங்கை சரித்திர அம்மானை, நாட்டுப்புறப் பாடல்களின் வழியாக இதனை அறியமுடிகிறது.

மருது சகோதரர்களின் முழு உருவ கற்சிலைகள் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் காளீஸ்வரர் கோயிலின் உட்புறமும், மருது சகோதரர்களின் சமாதி காளீஸ்வரர் கோயிலின் எதிர்ப்புறமும் அமைக்கப்பட்டுள்ளன.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved