🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பிற்படுத்தப்பட்டவர்களுக்கு துரோகம் செய்வது யார்? தேசிய கட்சிகளா? மாநிலக்கட்சிகளா? நீதிமன்றமா?

கீழ்காணும் விபரங்களிலிருந்து அந்த நிகழ்வுகளுக்கு யார் காரணம் அது எப்படி மற்ற துரோகங்களைவிட அதிகம் என்பதற்கான காரணத்துடன் சரியான பதில் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் .

80 ஆண்டுகளாக 80 கோடி ஓபிசி BC+M.BC/DNC மக்களுக்கு அரசியல் சட்டப்படியான உரிய உரிமைகளை வழங்குவதில் எல்லா அரசுகளும், எல்லாம் மக்கள் மன்றமும், எல்லா நீதிமன்றங்களும், எல்லா அரசியல் கட்சிகளும் படுதோல்வி அடைந்துவிட்டனர். தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றோம். எல்லா அமைப்புகளும் ஓபிசி மக்கள் உரிமைகளை வழங்குவதில் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக்கொண்டிருப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. காரணம் என்னவென்றால் எல்லா அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு அளிக்கின்றன, ஆனால் ஓபிசி சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் நடக்கவில்லை. 2011-ல் நடந்த சமூகப் பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்புதான் ஓபிசி மக்களுக்குச் செய்த மாபெரும் துரோகம். ஓபிசி என்ற வார்த்தையைக்கூட அரசு சேர்க்க மறுத்துவிட்டது.

சுமார் 1200 SC, 800 ST சாதிகளைப் பிழையில்லாமல் 1961 லிருந்து கணக்கெடுக்கும்போது, 2479 ஓபிசி சாதிகளை கணக்கெடுத்தால் மட்டும் 8 கோடி பிழைகள் எப்படி வரும்? அக்கரையின்மையால் மட்டுமே இப்பிழை நடக்கிறது. SC/ST சாதிகளைப் பிழையில்லாமல் எடுக்கும் சென்சஸ் அமைப்பு, ஓபிசிகளை எடுத்தால் வானம் இடிந்து விழுந்துவிடும் என்று எவரெஸ்ட் சிகரத்தை விட உயரமாக புளுகுகிறது.

ஏன்? எப்படி? என்ற கேள்வி கேட்க நாதியில்லாத நிலையில் ஓபிசி மக்கள். SC/ST மக்களுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற கட்டாயத்தால் சென்சஸ் கணக்கு  எடுக்கின்றோம், ஆனால் ஓபிசிக்கு அப்படியில்லை, அதனால் எடுக்க முடியாது என்பதும், இது அரசின் கொள்கை முடிவு, ஆதலால் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்பது மாண்புமிகு நீதிமன்றத்தின் நிலைப்பாடு. 80 கோடி மக்களுக்கு எதிராக என்ன ஒரு அற்புதமான விளையாட்டு.

ஆனால் சட்டம் என்ன தெரியுமா? அரசமைப்புச்சட்டம் சரத்து 16 (4), 341, 342,  மற்றும் 342A ன்படி SC/ST/OBC பிரிவினர்களை வேறுவேறு அளவீடுகளில் அணுக முடியாது என்று உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புசட்ட அமர்வு தேவேந்தர் சிங் தீர்ப்பில் 2020-8 SCC 63 பத்தி 27ல் கூறியுள்ளது. வேலை, கல்வி, மக்கள் மன்றம் மூன்றிலும் SC/ST/OBC மூன்று பிரிவினருக்கு இடஒதுக்கீடு உண்டு. SC/ST க்கு சட்டமன்றம் பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட காலம் வரை கூடுதலாக உள்ளது.

இடஒதுக்கீடு என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் பரிகாரமல்ல. சமத்துவத்தை உறுதிசெய்யும் பிரதிநிதித்துவம் வழங்கும் சக்திவாய்ந்த கருவி. 2017 & 2018 ஆம் ஆண்டு மத்திய பணியாளர் அமைச்சகத்தின் ஆண்டறிக்கை புள்ளிவிவரப்படி 1.1.2015 ல் மத்திய அரசு குரூப் A & B பிரிவில் SC மக்களின் பிரதிநிதித்துவம் முறையே 13.31 & 16.27 விழுக்காடு. ஆனால் ஓபிசி மக்களின் பிரதிநிதித்துவம் 11.77 & 12.9 விழுக்காடு மட்டுமே. இரண்டும் சேர்த்து 25-28 விழுக்காடு மட்டுமே என்றால் மற்ற 75 விழுக்காடு இடங்களை எடுத்துக்கொண்டவர்கள் யார் என்பது பெரிய கேள்விக்குறி. ஆனால் சட்டப்படியான இடஒதுக்கீட்டை உறுதி செய்ய மறுக்கும் நீதிமன்றங்கள், பல தீர்ப்புகளில் ஓபிசி மக்களின் இட ஒதுக்கீட்டைக் குறைக்க சட்டமுள்ளது  என்பது கொடுமையிலும் கொடுமை.

மக்கள் தொகைப்புள்ளிவிவர தேவை இருபிரிவினருக்குமே உண்டு. மேலும்  உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச்சட்டம் அமர்வு நாகராஜ் வழக்கில் ((2006) 8 SCC 212), இடஒதுக்கீடு வழங்குவதற்கு முன்பு சமீபகால மக்கள்தொகை உட்பட பிற்பட்டதன்மை, குறைவான பிரதிநிதித்துவம், நிர்வாகத் திறமை குறையா நிலை ஆகிய மூன்று புள்ளிவிவரங்களும் அரசமைப்புச்சட்டத்தின் அவசியம் என்று பத்தி 122 ல் கூறியுள்ளது. அதுவே முப்பரிமாண சட்ட வேதமாக  எல்லா வழக்குகளிலும்  பொறுத்திப்பார்க்கப்பட்டு, புள்ளிவிவரம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக உள்ளாட்சி அமைப்புகளில் பல ஆயிரக்கணக்கான ஓபிசி மக்களின் உரிமைகளை பறிக்கப்பட்டு வருகின்றது.

ஒருபிரிவிற்கு எடுத்துக்கொண்டு மற்ற பிரிவிற்கு சாதிவாரிகணக்கெடுப்பு எடுக்க மறுப்பது 80 கோடி ஓபிசி மக்களின் சமத்துவ அடிப்படை உரிமையை மீறிய கொள்கைமுடிவு. எனவே நீதிமன்றங்கள் தாங்களாக முன்வந்து தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் தொடுக்கும் வழக்குகளையும் தள்ளுபடி செய்வது என்பது அந்த  நீதி தேவதைக்கே வெளிச்சம். 

அது மட்டுமல்ல இந்த கொள்கை முடிவும் சட்டத்தை மீறிய முடிவு. உச்சநீதிமன்றம் இந்திரா சஹானி வழக்கில் 9 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலும் (1992 Suppl. (3) SCC 2017, பத்தி 860A), மத்திய, மாநில சட்டங்களிலும் பிற்படுத்தப்பட்ட ஆணையம் வழங்கும் பரிந்துரை அரசைக் கட்டுப்படுத்தும் என்று உள்ளது. பிற்படுத்தப்பட்ட ஆணையம் சென்சஸ் கணக்கெடுப்பில் ஓபிசி சாதிவாரிக்கணக்கெடுப்பு எடுக்க 1996 முதல் பரிந்துரைத்துள்ளது. அப்படிப்பட்ட பரிந்துரைகளை மீறுவது சட்டவிரோதம் என்று ராம்சிங் வழக்கில் (2015) 4 SCC 697 பத்தி 26ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இன்னும் பல கோணங்களில் மத்திய அரசு ஓபிசி சாதிவாரிக்கணக்கெடுப்பு நடத்த மறுப்பது சட்டவிரோதமானது மற்றும் அநீதியானது. இருப்பினும் ஓபிசி சாதிவாரிக்கணக்கெடுப்பு நடத்துவது சிரமம் என்ற முரட்டுப்பிடிவாதத்தில் மத்திய அரசு உள்ளதால், வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஓபிசி மக்களே சென்சஸ் கணக்கெடுப்பை உலகின் தலைசிறந்த நிபுணர்களைக்கொண்டு, தனித்துவமான, அதிநவீன கணக்கெடுப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புள்ளிவிவரத்திற்கு எந்த சேதாரமும் இல்லாமல் மிகக் குறைந்த காலத்தில் புள்ளிவிபரங்களைச் சேகரிக்க அனுமதி வழங்க பாராளுமன்றம் தீர்மானம் கொண்டு வருமாறு பணிந்து கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு
146 BC & 115 MBC/ DNT சமூகங்களின் சமூகநீதிக் கூட்டமைப்பு. 

குறிப்பு : என்ன சன்மானம் என்பதை சமூகநீதிக் குழு முடிவுசெய்யும். குழுவின் முடிவே இறுதியானது. மேலும் விவரங்கள் பெற 7010592827, 9865114446, 9994261233, 8610010230, 9487367214, 9443725367, 9884745474, 9443294892 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved