🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தெலுங்கானா கொல்லவார்கள் கடும் எதிர்ப்பு! பகுத்தறிவுக்கு எதிரானது என காட்டம்!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதிகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பகுத்தறிவுக்கும், சமூகநீதி கோட்பாடுக்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது என கடுமையாக விமர்சனம் செய்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார் தெலுங்கான மாநில கொல்லவார்கள் சமுதாய தலைவரும், உயர்நீதிமன்ற அரசு வழக்குரைஞருமான வெங்கட்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட சட்டங்களும், நீதிமன்றங்களால் வழங்கப்படும் தீர்ப்புகளும் மதிக்கப்பட வேண்டியவை. அச்சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் வரை அதை  தலைவணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேவேளையில், சட்டத்தை இ்யற்றுபவர்களும், தீர்ப்புகளை வழங்குபவர்களும் மனிதர்கள் தான் என்ற உண்மையை நாம் கருத்தில் கொள்ளத் தவறக்கூடாது. எனவே அவர்களால் இயற்றப்படும் சட்டங்களையும், தீர்ப்புகளையும் அதன் நீள, அகலங்களை அலசி ஆராய வேண்டிய தேவையும்,விவாதிக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது. அவசியம் ஏற்பட்டால் மீண்டும் திருத்தப்பட வேண்டும் என்று கோருவதற்கான கருத்துச் சுதந்திரத்தை இந்திய அரசியலமைப்பு நமக்கு வழங்கியுள்ளது என்பது வேறு விஷயம். அத்தகைய சூழ்நிலையைப் புரிந்துகொள்வதற்கும், பதிலளிப்பதற்கும் உண்டான மனநிலையை ஒரு சிலர் மட்டுமே கொண்டுள்ளனர். இப்படியான சூழ்நிலைகளை புரிந்துகொண்டு நடக்க வேண்டுமானால், பிரச்சினையைப் பற்றிய தெளிவு இருக்க வேண்டும். அப்பிரச்சினையால் பாதிப்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் இழப்புகளை மதிப்பீடு செய்துகொள்ளக்கூட ஆற்றல்மிக்கவராக இருக்க வேண்டும். இல்லையெனில் சமூக மாற்றத்தை உணர்ந்தவராகவோ அல்லது பாதிக்கப்பட்ட சமூகங்கள் மீதான அனுதாபத்தையோ கொண்டிருக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் சமீபத்திய உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் ஆழத்தையும் அகலத்தையும், பாதிப்புக்குள்ளாகும் சமூகங்களின் வலியையும், காயங்களையும் புரிந்துகொள்வது கடினம்.

 

2019 ஜனவரியில் 103 வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் மத்தியில் உள்ள பாஜக அரசு உயர்சாதி ஏழைகளுக்கு பத்து சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியது. இதை எதிர்த்து பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் 40 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் செப்டம்பர் 27, 2022 அன்று இறுதி வாதங்களைக் கேட்டது. நவம்பர் 7ம் தேதி, தனது தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு சரியானது என்று தீர்ப்பளித்தது. இது அரசியலமைப்பின் மீதான கடும் தாக்குதல். இத்தீர்ப்பு இந்திய அரசியலமைப்பின் கொள்கைக்கு மாறானது என்பதோடு, அதன் அடிப்படைக் கோட்பாட்டையே அழிக்கிறது.

 

இந்திய அரசிலமைப்புச் சட்டம் முதல்முறையாக திருத்தத்திற்குள்ளான போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது சாதிகளின் தொகுப்பேயன்றி வேறொன்றுமில்லை என்று டாக்டர். பாபா சாகேப் அம்பேத்கர் கூறியதை அரசுகளும், நீதிமன்றங்களும் மறந்துவிட்டன என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. "சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை" வழங்குவதே இதன் நோக்கம் என்று இந்திய அரசியலமைப்பின் முன்னுரை கூறுகிறது. ஆனால் 103-வது திருத்தம் இங்கு முக்கியமாக சேர்க்கப்பட்டுள்ள, கவனிக்கப்பட வேண்டிய "சமூகம்" என்ற வார்த்தையை கருத்தில் கொள்ளவில்லை. இது அரசியலமைப்பிற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக கருதப்பட வேண்டும். இது தவிர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வித் தேவைகள் மற்றும் நிதித் தேவைகள் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும். சமூக அநீதிகள் மற்றும் அனைத்து வகையான சுரண்டலிலிருந்தும் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சரத்து 46 கூறுகிறது. இங்கு சமூக அநீதி என்பது சாதி, தொழில், வசிப்பிடம், உணவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சமூகத்தின் பாகுபாடு, சுரண்டல் மற்றும் அநீதியைக் குறிக்கிறது. அத்தகைய ஒரு விரிவான சரத்து இத்தீர்ப்பின் மூலம் நசுக்கப்பட்டுள்ளது. சமூக ஏற்றத்தாழ்வுகள் மட்டுமின்றி, கல்வி, மருத்துவம், பொருளாதாரம், அரசியல், பண்பாட்டு ஏற்றத்தாழ்வுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேரூன்றியுள்ள நாடு நமது நாடு.

 

பெரியகருப்பன் Vs தமிழ்நாடு அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலம் சாதியே இங்கு வகை என்று கூறுகிறது. இவ்வாறாக சாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் சாதிகளுக்கு கல்வி, அளவீடு, சொத்து, அதிகாரங்கள், ஆயுதங்கள் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஆதிக்க சாதியினர் அனைத்து அதிகாரங்களையும், வசதிகளையும் தங்கள் கைகளில் வைத்திருந்தனர். இதன் விளைவாக, தாழ்த்தப்பட்ட சாதியினர் வெறும் உடல் உழைப்பை வழங்கும் அடிமைத்தனத்தில் சிக்கிக் கொண்டனர். பள்ளிக்குள் நுழையாத நூற்றுக்கணக்கான சாதிகளும், சட்டமன்றம், பாராளுமன்றங்களில் மட்டுமல்ல, உள்ளாட்சி அமைப்புகளில்கூட நுழையாத ஆயிரக்கணக்கான சாதிகளும் இன்னும் உள்ளன. இங்கு அந்நியப்படுதலுக்கும், பின்தங்கிய நிலைக்கும் சாதியே அடிப்படையாக இருக்கிறதே தவிர பொருளாதாரம் காரணமல்ல. அதேவேளையில் இடஒதுக்கீடு வாக்குகளை மையப்படுத்தியும் வழங்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக வேலையாட்களாக இருந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான நிவாரணம். உழைப்புச்சுரண்டல் நடத்தப்பட்ட அடிமைச் சமூகங்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள கொடை. இது அவர்களுக்கு மட்டுமே உரியது தானே தவிர, சுரண்டலை அனுபவித்த உயர் சாதியினருக்கு அல்ல. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்சாதியினரின் பின்தங்கிய நிலையை சரிசெய்ய அரசு விரும்பினால், பொருளாதார மேம்பாட்டுத்திட்டங்களை முன்னெடுக்கலாமே தவிர, அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது உண்மையான இடஒதுக்கீட்டின் தத்துவத்தை நீர்த்துப்போகச்செய்யும்.

 

நிலப்பிரபுக்களும்,செல்வந்தர்களும் தங்கள் பொருளாதார வலிமையால் போலியாக வருமானச் சான்றிதழ்களைப் பெறுவதன் மூலம் இந்த இடஒதுக்கீட்டை அபகரித்துக் கொள்ளும் நிலை வந்தால், உண்மையில் பின்தங்கியவர்களுக்கான நிவாரணம் போய்ச்சேராது. அப்படியானால் உயர்சாதியில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடுக்கான பதில் எங்கே உள்ளதென்றால், 1990-இல் சின்னப்பரெட்டி Vs கர்நாடக அரசு வழக்கின் தீர்ப்பின்படி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பிராமணர்களை சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் பின் தங்கியவர்களாக தற்போதைய சமூக கட்டமைப்பில் காணமுடியாது. ஆகையால் அவர்களை ஏழைகளாக கருதி இடஒதுக்கீடு வழங்க வேண்டிய எந்த தேவையும் எழவில்லை என்ற தீர்ப்பை கவனத்தில்கொள்ள வேண்டும்.

 

சமூக சமத்துவத்தின் முன்னுரிமையை வலியுறுத்தும் சரத்து 46வது பிரிவை பொருளாதார ஏற்றத்தாழ்வின் ஒரு வடிவமாக மட்டுமே பார்ப்பது சரியல்ல. நீங்கள் அதை அப்படியே பார்த்தால், ஓ.பி.சி.யிலும் ஏழை மக்கள் இருக்கிறார்கள்! எஸ்.சி.எஸ்.டி மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஏழைகள் அல்லவா? எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நாட்டில் வறுமையில் மூழ்கிக் கொண்டிருப்பது எஸ்.சி, எஸ்.டி, பி.சி.க்கள் தான், இல்லையா? அப்படியானால், வறுமையை ஒழிக்க இந்த இடஒதுக்கீடுகளின் உண்மையான தேவை அவர்களுக்கு இருக்கிறது! இவற்றில் எதனையும் புறந்தள்ளிவிட்டு, உயர்சாதி ஏழைகளுக்கு மட்டுமே 10 சதவீத இடஒதுக்கீடு என்ற வகையில் நாடாளுமன்றத்தில் தங்கள் எண்ணிக்கை பலத்துடன் மசோதாவை அவர்கள் அங்கீகரித்தனர். இடஒதுக்கீட்டுக்கு எதிராக முன்பு கிளர்ச்சி செய்த பிஜேபி கட்சி, மண்டலின் பரிந்துரைகளை செயல்படுத்தவில்லை, இடஒதுக்கீட்டு கொள்கைகு எதிராக உயர்சாதிக்ளுக்கு  இட ஒதுக்கீடு வழங்க ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது ஆச்சரியத்தை விட ஒரு சதி என்று கருதப்பட வேண்டும். அதுபோலவே, அசாதுதீனும், திருமாவளன் லந்தியும் ஒன்று அல்லது இரண்டைத் தவிர, பிராந்திய, தேசிய, முதலாளித்துவ, கம்யூனிசக் கட்சிகள் என்ற பாகுபாடின்றி உயர்சாதியினருக்கான இடஒதுக்கீட்டை வலுவாக ஆதரித்தனர். அவர்கள் அனைவரும் அரசியலமைப்பின் உணர்வைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர்கள் 103 வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறுத்த அரசியலமைப்பின் நிபுணர்களான உச்ச நீதிமன்றத்தை அணுகினாலும், எந்த பலனும் இருக்காது. ஈ.டபிள்யூ.எஸ் இடஒதுக்கீடு சரியானது என்ற எதிர்மறையான முடிவை நாட்டு மக்களில் சிலர் கொண்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த மண்ணில் பிறந்த பாவத்திற்காக அவர்கள் துன்பப்பட வேண்டும் என்று சொல்லாமல் சொல்வதுபோல் அவர்கள் நடவடிக்கை உள்ளது.

ஆந்திராவில், என்.டி.ஆரின் ஆட்சியின் போது மண்டல் பரிந்துரைகளின்படி கல்வி வேலைகளில் நாற்பத்து நான்கு சதவீத இடஒதுக்கீட்டை முரளிதர் ராவ் ஆணையம் ஏற்றுக்கொண்ட போதும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. காரணம், ஐம்பது சதவீத இடஒதுக்கீட்டுக்கு மேல் இருக்கக் கூடாது என்று அவர்கள் சேகரித்துக் கொண்டு வரும் வரை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இல்லை, தெளிவான விவரங்கள் இல்லை, விரிவான அறிக்கை இல்லை என்பதே. இப்போது, உயர்சாதி ஏழைகள், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் துறைகளில் அவர்களின் நிலை, மக்கள்தொகை மற்றும் சமூக வாழ்க்கை நிலைமைகள் பற்றிய விரிவான விவரங்கள் இல்லாவிட்டாலும், எந்த விதமான விஞ்ஞான ரீதியான கணக்கீடுகளையும் மேற்கொள்ளாமல் அவர்களின் இடஒதுக்கீடுகள் சரியானவை என்று கூறுவது இயற்கை நீதியை மட்டுமல்ல , சமூகநீதியையும் மீறுவதாகும். படித்த பெரும்பான்மையான மக்கள் இடஒதுக்கீடு குறித்தான தெளிவான பார்வையோ, சிந்தனையோ, சமூக வரலாற்றையோ அறிந்துகொள்ளாமல், இச்சட்டத்தை ஆதரிப்பது என்பது உட்சபட்ச கோமாளித்தனம் என்று சொல்வதைதவிர வேறொன்றுமில்லை. உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகளின் படி, ஐந்து பேர் கொண்ட பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை பகுத்தறிவற்றதாக பார்க்க வேண்டும். ஏனெனில் ஒன்பது பேர் கொண்ட பெஞ்ச் இடஒதுக்கீடுகளுக்கு ஐம்பது சதவீத வரம்பை விதித்து தீர்ப்பளித்தது. ஒரு பெரிய பெஞ்ச் மட்டுமே இது குறித்து கருத்து தெரிவிக்க முடியும். இல்லையெனில் அது அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யலாம். ஆனால் அது ஐந்து பேர் கொண்ட பெஞ்ச் மட்டுமே. எனவே இந்த தீர்ப்பு பகுத்தறிவு அல்ல. அதாவது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், அது அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டை மீறுவதாகும் என்றும், உயர்சாதி இடஒதுக்கீடு அறுபது சதவீதத்தை அடைந்தாலும், அடிப்படைக் கொள்கை சேதமடையாது என்றும் உச்சநீதிமன்றம் கூறுவது வேடிக்கை.

 

நீதிமன்றத் தீர்ப்பு வரும்போது, அந்த பெருமை உண்மையில் எங்களுடையது என்று ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும், பல்வேறு அரசியல் கட்சிகளும் கூறுவது வெட்கக்கேடானது. சாமானிய மக்களின் எதிர்காலத்தைக் கொன்ற பெருமையைப் பெறுவதற்கான அவர்களிடையே ஏற்பட்டுள்ள போட்டி துரதிர்ஷ்டவசமானது. கட்சிகளாக இருந்தாலும் சரி, உச்ச நீதிமன்றமாக இருந்தாலும் சரி, உயர்சாதி இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்பவர்களாக இருந்தாலும் சரி, இந்த நாட்டின் வளர்ச்சிக்கு எதிரிகளாக பார்க்கப்பட வேண்டும். மேலும் நீதிபதி இ.எஸ். வெங்கட்ராமையா ஒருமுறை கூறியது போல், இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள், இந்திய சமூக அமைப்பு மற்றும் அதன் வரலாற்றை அங்கீகரிக்க மறுத்துள்ளது என்பதை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. எனவே, சாமானிய பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் நம்பிக்கைகள் இந்த நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டுமானால், சம உரிமைகள் வரவேண்டுமென்றால், அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்ட வாய்ப்புகளை அடைய வேண்டுமானால், போராட்டமே திசைவழி. சமத்துவத்தை அடைவதற்கு, பூலேயும், பெரியாரும், அம்பேத்கரும் விரும்பியது போல் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதைத் தவிர வேறுவழியில்லை என்பதை இந்தத் தீர்ப்பிலிருந்து கற்றுக் கொள்வது அவசியமாகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved