🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும், மெய்ஞானமும் - பகுதி 17

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

இந்த வாரம் நாம் சிந்திக்க இருப்பது உராய்வு விசையின் வகைகள்.

உராய்வு விசை என்பது இரு திடபொருள் அடுக்குகள் அல்லது திரவ அடுக்குகள் ஒன்றன்மீதொன்று சறுக்கும்போது ஏற்படும் விசையாகும். உராய்வு விசைகளில் பல வகைகள் உள்ளன:

1. உலர் உராய்வு விசை தொடர்பில் உள்ள இரண்டு திட பரப்புகளின் ஒப்புமை நகர்தலை (relative motion) தடுக்கும் வண்ணம் அமையும். உலர் உராய்வு விசை, நகரும் பரப்புகளுக்கு இடையே வரும் அசைவு உராய்வு விசை மற்றும் நகரா பரப்புகளுக்கு இடையே வரும் நிலையான உராய்வு விசை என மேலும் பிரிக்கப்படும்.

2. திரவ உராய்வு விசை ஒன்றுக்கொன்று தொடர்பிலிருக்கும், நகரும், ஒரு பிசுபிசுப்பு தன்மை கொண்ட திரவத்தில் உள்ள, அடுக்குகளுக்கு இடையில் நிகழும் விசையாகும். 

3. எண்ணெய் உராய்வு விசை (lubricated friction) என்பது இரு திடப்பொருள் பரப்புகளுக்கு இடையில் உள்ள ஒரு திரவத்தில் ஏற்படும் உராய்வு விசை ஆகும். 

4. தோல் உராய்வு விசை (skin friction) ஒரு திரவத்தில் இருக்கும் ஒரு திடப்பொருளின் இயக்கத்தை எதிர்க்கும் சக்தியைக் குறிக்கிறது.

5. அக உராய்வு விசை(internal friction) ஒரு திடப்பொருளின் உருவம் மாறுதலுக்கு உள்ளாகும் போது அத்திடப்பொருளின் கூறுகளுக்கு இடையே நிகழும் எதிர்ப்பு விசையைக் குறிக்கிறது.தொடர்பில் இருக்கும் பரப்புகள் ஒன்றுக்கொன்று நகரும்போது, அவ்விரண்டு பரப்புகளுக்கு இடையே, உராய்வு விசை வெப்பம் மூலம் இயக்க ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இப்பண்பு பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். உதாரணத்திற்கு இரு மரத்துண்டுகளை தேய்ப்பதன் மூலம் தீயை உண்டாக்கிவிடலாம். இயக்க ஆற்றல் உராய்வு விசை உள்ள இடங்களில் வெப்பமாக மாற்றப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு பிசுபிசுப்பு தன்மை கொண்ட திரவத்தை கிளறும்போது அத்திரவம் வெப்பமடைதலைக் காணலாம்.

உராய்வு விசையே ஒரு அடிப்படை விசை இல்லை. ஆனால் இரண்டு தொடர்பிலுள்ள பரப்புகளில் உள்ள மின்சுமை (charge) கொண்ட துகள்களுக்கு இடையே உள்ள அடிப்படை மின்காந்த சக்தியால் எழுகிறது. 

இது திட, திரவ மற்றும் வாயு நிலைகளில் ஏற்படும் ஒருவித விசை. இது அதிகமாக இருந்தால் பிரச்சினைகள் அதிகமாகும். எனவே அளவோடு இருந்தால் தான் நாம் நடக்க முடியும், ஒட முடியும், ஊர்திகள் இயங்க முடியும்.. உராய்வு விசை குறைவாக இருந்தால் அல்லது இல்லாமல் இருந்தால் பூமி மீது நாம் நிற்கவோ, நடக்கவோ, வாகனங்கள் ஒடவோ அல்லது நிறுத்தவோ இயலாது. எனவே நம் கண்ணுக்கு புலப்படாத எத்தனையோ விசயங்கள் இருப்பதை விஞ்ஞானம் மூலம் நாம் கற்றுக் கொண்டு வருகிறோம். வாருங்கள் அடுத்த வாரமும் தொடர்ந்து சிந்திப்போம். 

அனைத்து நமது சமுதாய சொந்தங்களுக்கும் எனது ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் கூறி விடைபெறுகிறேன். நன்றி.மீண்டும்சந்திப்போம். வாழ்க வளமோடு!

என்றும் அன்புடன் உங்கள்,
முனைவர்.கெ.நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved