🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி 19

போகி பண்டிகை

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

போகி பண்டிகை மற்றும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்! இந்த பகுதியில் இதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வோம்.

புதிய மனிதனாய் பழைய தீய எண்ணங்களை "ருத்ர கீதை ஞான யக்ஞம்" த்தில் போட்டு பொசுக்கி புதிய மனிதனாய் வரக்கூடிய நாளே போகி.

பொங்கல் பண்டிகை எப்போது முதல் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை உறுதியாக கூற முடியாத அளவுக்கு இதன் வரலாறு மிகப் பழமையானது, தொன்மையானது.

சங்க இலக்கியங்களில் பொங்கல் பண்டிகை குறித்து பல குறிப்புகள் உள்ளதால், இது சங்ககாலம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

பரிபாடல் எனப்படும் சங்க இலக்கியத்தில், பொங்கல் குறித்த பல பாடல்கள், குறிப்புகள் உள்ளன.

வேத காலத்திற்கும் முன்பிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவது, அத்திருநாளின் தொன்மையைவிளக்குவதோடு, தமிழர்களின் பண்பாடு எவ்வளவு ஆழமானது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. 

போகி  தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.

தை மாதப் பிறப்பை புத்துணர்வுடன், புதுப் பொருட்களுடன் வரவேற்கும் நிகழ்வாகவும் போகி கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில், பழைய பொருட்களுத்து தீயிட்டு, மேளமடித்து அதை சுற்றி வந்து, பழையன கழியட்டும், புதுவாழ்வு மலரட்டும்என்று இறைவனை வேண்டி வணங்குவர்.

இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. 

பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப் பண்டிகையாகும்.

உண்மையில், போகி பண்டிகை என்பது, நம்முடைய மனதில் படிந்துவிட்ட அனைத்து கவலைகளையும், வெறுப்பு, கோபம், பொறாமை என தீய எண்ணங்களை அனைத்தையும் மனம் என்னும் வீட்டில் இருந்து வெளியில் தூக்கிப் போட்டு எரித்துவிட்டு, தை முதல் நாள் முதல் புது மனிதனாக நல்லவற்றை மட்டுமே செய்யும் புது மனிதனாக மாற வேண்டும் என்பதை உணர்த்தவே போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

போகி அன்று விடியற்காலை பழையப்பொருட்களை எல்லாம் ஓர் இடத்தில் குவித்து எரிப்பது வழக்கம். கொட்டு எனப்படும் போகி மோளத்தை கொட்டுவிப்பார்கள்.

அனைவரும் வாழ உதவும் சூரியனையும் அவனால் விளையும் மங்கலங்களையும் வரவேற்குமுகமாக, மார்கழி மாதக் கடைசி நாளன்று 'போகிப்பண்டிகை' கொண்டாடப்படுகிறது. 

உதவாத, தேவையற்ற பழைய பொருள்களை எல்லாம், தீயில் போட்டுப்பொசுக்கி, வீட்டைத் தூய்மை செய்து வெள்ளையடிப்போம். அதுபோல, நமக்கு உதவாமல் நம் முன்னேற்றத்துக்குப் பெரும் முட்டுக்கட்டைகளாக இருக்கும், கோபம், பொறாமை முதலான தீயகுணங்களையெல்லாம் தெளிந்த நல்லறிவு எனும் ஞானத்தீயில் போட்டுப் பொசுக்கி, நம் உள்ளமாகிய வீட்டைத் தூய்மையாக வைத்திருப்பதே 'போகி'.  

மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.

மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. 

மார்கழி மாதம், சாதாரணமாகவே சூரியோதய காலத்தில் பூஜை, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. தேவதைகளுடைய உஷத் காலமாக மார்கழி மாதம் அமைந்துள்ளது. 

அந்த சமயத்தில் பூஜை, பஜனை போன்றவை தவிர வேறெதுவும் செய்யும் பழக்கமே கிடையாது.

மார்கழி மாதம் பக்தி செய்வதற்கே உண்டானது. இதற்குபின், தை வந்த பிறகு தான் கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். பகவத் சம்பந்தமான மங்கள காரியங்கள் மார்கழி மாதத்தில் நடைபெறும்.

போகிப் பண்டிகை

மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

போகிக் பண்டிகை என்பது இந்திரன் முதலியோரை பூஜித்து, திருப்தி செய்ய வேண்டிய நாள்.

முன்னோர்களுக்கு பூஜை

காக்கை முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உணவிடுவது போகிப் பண்டிகையின் விசேஷம்.

 போகி தினம் பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. 

அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து தீப ஆராதனைச் செய்து வணங்க வேண்டும்.

பொங்கலிடுவதற்கு முன்னர் வீட்டின் கூரையில் வேப்பிலை, பூலாப்பூ, கருந்துளசி, ஆவாரம்பூ கொத்துகளைச் சொருகி, சுற்றியுள்ள ஆன்மாக்களை வீட்டருகே வரச் செய்வார்கள். 

போகிப்பண்டிகை தினம் ஆன்மாக்களை மகிழ்விக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இதுவே அன்றைய காலங்களில் பின்பற்றப்பட்ட நம்பிக்கை ஆகும் .

போகி அன்று, வைகறையில் 'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர். 

சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்.

போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.

அக்காலத்தில் போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளைப் புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.

முந்தையக் காலங்களில் எல்லாவிதக் குறிப்புகளும் பனையோலை ஏட்டில்தான் எழுதப்படும். இலக்கியங்களும், புராணங்களும்கூட பனையோலையில்தான் இருந்துவந்தன.

படித்தவர்களின் வீட்டில் பரணெங்கும் கிடந்த இந்தப் பனையோலைகள் யாவும் இந்த கிடந்த நாளில் எடுக்கப்பட்டு, சிதைந்துபோன ஏடுகள் நீக்கப்பட்டு, மீதமிருந்த ஓலைகள் புதிதாகக் கட்டப்படும். 

சிதைந்து போன ஓலைகளில் இருந்த விஷயங்கள் புதிதாக எழுதப்படும். சிதைந்த ஓலைகள் தீயிலிட்டுக் கொளுத்தப்படும். இதுவே போகியன்று தீ மூட்டும் வழக்கமாக மாறியது என்றும் சொல்லப்படுகிறது.

நம்முடன் மற்றவர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுத்தும் பொருள்களைக் கொளுத்தினால், நாம் இன்னும் நம் கடவுளைப் பற்றியும், நம்முடைய சடங்குகள் பற்றியும் அறிந்துகொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.

போகி பண்டிகைக்கும் இந்திர தேவன்  மற்றும் கிருஷ்ண பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தெய்வங்களின் அரசனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் வணங்கி வந்தனர். இந்திரனுக்கு கொடுக்கப்பட்டு வந்த இந்த மரியாதை அவருக்குள் கர்வத்தையும், ஆணவத்தையும் அதிகரிக்க செய்தது. மற்றவர்களை காட்டிலும் தான் மிகவும் சக்தி வாய்ந்தவராக அவர் கருதினார். 

ஆணவத்தில் திகைத்த இந்திரனுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க விரும்பினார் பகவான் கிருஷ்ணர்.

கிருஷ்ணர்  தன்னுடைய ஆடு மேய்க்கும் நண்பர்களை கோவர்தன மலையை வணங்க தூண்டினார். 

இதனால் ஆத்திரம் அடைந்த இந்திர தேவன் இடைவிடாத இடி, மின்னல், பலமான மழை மற்றும் வெள்ளத்தை உருவாக்க மேகங்களை அனுப்பினார். அந்த புராணத்தின் படி, ஆடு மேய்ப்பவர்களையும், ஆடுகளையும் பாதுகாக்க, மிகப்பெரிய கோவர்தன மலையை தன் சிறிய கைகளில் தூக்கினார். 

இந்திர தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க அந்த மலையை தூக்கி சுமந்தபடியே நின்றார் கிருஷ்ணர். 

மூன்று நாட்களுக்கு நீடித்தது அந்த மழை அதன் பின் தன் தவறையும் கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்து கொண்டார் இந்திர தேவன்.

ஆணவம் அடங்கிய இந்திரன் கண்ணனிடம் மன்னிப்பு வேண்டினான். 

தன்னிடமிருந்த ஆணவம் எனும் தீயகுணத்தைவிட்டு, இந்திரன் கண்ணனிடம் பணிந்த நாளே போகி. இந்திரனுக்கு 'போகி' என்றும் பெயருண்டு. அதன்காரணமாக அவன் ஆணவம் நீங்கிய இந்நாள் 'போகி' எனப்பட்டது.

அதன் பின் பணிவுடன் இருப்பதாக வாக்களித்த இந்திர தேவன் கிருஷ்ணரின் மன்னிப்பை கோரினார். அன்று முதல் இந்திரனை கௌரவிக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட கிருஷ்ணர் அனுமதித்தார். 

இதுவே போகி பொங்கல் கொண்டாட்டத்திற்கு விதையாக அமைந்தது. இந்த பண்டிகை இந்திரனின் மற்றொரு பெயரை பெற்று புராணக்கதையாக மாறியுள்ளது. மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம். அனைவருக்கும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

என்றும் அன்புடன் உங்கள்
முனைவர் கெ. நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ‌ கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved