🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மலம் அள்ளுவதற்கென்றே ஒரு சாதியை விஜய நகர பேரரசு காலத்தில் அழைத்து வந்தார்களா?

மலம் அள்ளுவதற்கு என்று குறிப்பிட்ட ஒரு சாதியை விஜய நகர பேரரசு காலத்தில் அழைத்து வந்தார்கள் என்பது வரலாற்றை தவறாக திரிக்கும் வேலை.  விஜயநகர பேரரசு காலத்தில் நடைபெற்ற பல்வேறு குடியேற்றங்கள் புன்செய் நிலங்களில் ஏற்படுத்தப்பட்டன. கிணற்றுப் பாசன முறையை பெரும் அளவில் பயன்படுத்தியவர்கள் அவர்கள். கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்காக கமலைகளை அமைப்பதற்கும், ஏற்றங்களை அமைப்பதற்கும்  பெருமளவில் அருந்ததியர்கள்  அழைத்துவரப்பட்டார்கள்.  இது தோல் தொடர்பான தொழில் என்பதால்,  அந்த துறையில் வல்லுனர்களாக இருந்ததால் அருந்ததியர் அழைத்து வரப்பட்டார்கள்.

மேலும்  தோல் தொடர்பான வேலைகளுக்காக, குதிரைகளுக்கு லாயம் கட்டுவது, மற்ற ஆயுதங்களுக்கு உரை போன்ற தோல் தொழிலுக்காக தான் கொண்டு வந்தார்கள். மலத்தை அள்ளுகின்ற இந்த வடிவம் என்பது தமிழர் வழக்கமும் இல்லை. தமிழர்கள் வெளிப்புறங்களில் தனக்கான இயற்கை உபாதையை கழிப்பதற்கு ஒரு இடத்தை வைத்திருந்தார்களே ஒழிய, அதை அள்ளுவதற்கு என்று யாரும் இல்லை. பன்றிகள், நாய்கள் போன்ற விலங்குகள் தான் அதை உண்டு தூய்மைப்படுத்தும்.  கிராமங்களில் அண்மை காலம் வரை இதுதான் நடைமுறையில் இருந்தது. இயற்கை உபாதைகளுக்கு ஒதுங்குவதற்காக, காடுவெளிகளிலும் ஆற்றங்கரை கண்மாய் குளம் குட்டை போன்ற பகுதிகளையும் தான் பயன்படுத்தினர். பெண்கள் தனியாக இயற்கை உபாதையை கழிப்பதற்கு தனி இடம் உண்டு. எங்கள் ஊரிலே அதை மந்தை என்று அழைப்பார்கள்.  வயல்வெளிகளையும் ஆற்றங்கரை ஓரங்களையும் தான் பயன்படுத்தியுள்ளோம். இந்த  நடைமுறை அறிவை புறந்தள்ளி விட்டால் உண்மை புலப்படாது. 

3000 ஆண்டுகளாக மலம் அள்ளுகிறார்கள் என்று திராவிட இயக்கத்தவர்களும், இதை விஜயநகரப் பேரரசு தான் கொண்டு வந்தது என்று சில தமிழ் தேசியர்களும் கூறி வருகிறார்கள். இரண்டுமே தவறு.

வெள்ளையர்கள் வருகைக்குப் பின்பு தான் நவீன கழிப்பறையின் வடிவங்கள் தோன்றின. அதற்கு முன் அரச குடும்பத்தில் இவை இருந்திருக்கலாம். ஒரு சிலர் இந்த பணி புரிந்திருக்கலாம். ஒரு சமூகம் முழுவதும் கழிப்பிடங்களை தூய்மைப்படுத்துவதற்கென்று  இல்லை.  இதை விஜயநகர பேரரசு கொண்டு வரவும் இல்லை. 

விஜயநகர பேரரசுக்கு முன்பு இங்கு யாரும் மலம் கழிக்கவே இல்லையா? விஜயநகர பேரரசு அல்லாத இடங்களில் இந்த பணியை யார் செய்தார்கள்? எந்த வரலாற்று இயங்கியல் அறிவும் இல்லாமல், புரிதலும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவு படுத்துவதையும், ஒரு குறிப்பிட்ட சமூக வரலாற்றை திரிப்பதும் தொடர்ச்சியாக இங்கு நடந்தேறி வருகிறது.

பின் எப்போது இந்த முறை தோன்றியிருக்கக்கூடும்? நவீன நகர்மயமாக்கமும் புதிய கட்டட வீடு வடிவமைப்புகளும் கழிப்பறையுடன் சேர்ந்த வசதியை ஏற்படுத்தி கொடுத்த பின்பு தான், வெள்ளையர்களின் காலங்களில் தான் இந்த மலமள்ளும் முறை பெரும் அளவில் நடைமுறைக்கு வந்தது. அதுவும் நகர் சார்ந்த இடங்களில் இருந்திருக்கின்றன.  அண்மைக்காலம் வரை கிராமங்களில் இந்த நடைமுறை இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

வரலாற்றை  சார்பு கண்ணோட்டமில்லாமல் தரவுகள் அடிப்படையில் ஆராய வேண்டும். அப்போதுதான் புதிய புதிய வெளிச்சங்கள் கிடைக்கும். மறைந்த, மறைக்கப்பட்ட வரலாறுகள் புலப்படும். 

கட்டுரை: திரு.மருதுபாண்டியன்.
                        சோசலிச மையம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved