🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும், மெய்ஞானமும் - பகுதி-22

அன்புச் சொந்தங்களே வணக்கம்,

சென்றவாரம் ஆற்றல் மற்றும் ஆற்றல் வகைகளைப் பற்றி அறிந்தோம். இதிலே ஒவ்வொரு ஆற்றலும் ஒருவகை மூலப் பொருளிலிருந்து உருவகமாற்றம் செய்யப்பட்டு இன்னொரு ஆற்றலாக மாற்றப்படுகிறது. உதாரணமாக நாம் சாப்பிடும் உணவு திட, திரவ நிலையில் உள்ளது, கார்போஹைட்ரேட், புரோட்டீன், அமினோ ஆசிட் என உருமாற்றம் அடைந்து நமது உடலுக்கு ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் உண்டு பண்ணும். இதைத்தான் விஞ்ஞானம் ஒரு ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது, ஆனால் அது ஒரு ஆற்றல் நிலையில் இருந்து இன்னொரு ஆற்றலாக மாற்றும் பெறும் ' என குறிப்பிடுகிறது.  

நிலக்கரி என்பது ஒரு திட நிலையில் உள்ள ஒரு ஆற்றல் அதை எரிக்கும் பொழுது வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது. அந்த வெப்ப ஆற்றல் நீரை சூடாக்கி நீராவியாக மாற்றி அதனால் ஜெனரேட்டரில் உள்ள டர்பைன்களை இயக்கி அதை மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது. இவ்வாறு மின் ஆற்றலாக மாறியது வெவ்வேறு உபகரணங்களை இயக்கப் பயன்படுகிறது. உதாரணமாக தொழிற்சாலையில் உள்ள மின் மோட்டார்களை இயக்க பயன்படுத்த உதவுகிறது, வீட்டில் உள்ள மின் விசிறி, குளிர் சாதனப் பெட்டி, மின் விளக்குகள் மற்றும் பல்வேறு மின்சாதனங்களை இயக்கப் பயன்படுகிறது. அதனால் வரும் உராய்வு மற்றும் வெப்பம் மீண்டும் ஆற்றலாக மாறி காற்றில் கலந்து விடுகிறது. எனவே மின்சாதனங்கள் எண்ணிக்கை பெருகப் பெருக புவி வெப்பமடைதல் அதிகரிக்கும். இதைத்தான் Green house  effect என அழைக்கிறோம்.  

இதுபோலவே, யுரேனியம் என்னும் வேதிப்பொருளை அணு உலையில் இட்டு வேதியியல் வினை நிகழ்வு மூலம் பெறப்படும் வெப்ப ஆற்றல், மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது. இவ்வாறு மாற்றப்பட்ட மின் ஆற்றல் பல கனரக எந்திரங்களை இயக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த ஆற்றல் மீண்டும் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது.

இவ்வாறு, நீரிலிருந்து பெறப்படும் மின்சாரம், காற்றில் இருந்து பெறப்படும் மின்சாரம், சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் மின்சாரம், கடல் நீரிலிருந்து பெறப்படும் மின்சாரம், மாட்டு சாணத்திலிருந்து கிடைக்கும் மின்சாரம் என அனைத்து ஆற்றல்களும் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு வெவ்வேறு ஆற்றலாக மாற்றம் செய்யப்பட்டு நமது வேலைகளை எளிதாக்குகிறது.

இதில் மரபு சார் மற்றும் மரபு சாரா எரிசக்தி மூலம் பெறப்படும் ஆற்றல்கள் பல்வேறு பயன்பாட்டுகளையும் கடந்து வெவ்வேறு நிலைகளில் ஆற்றலை, அதாவது வெப்பமாகவோ அல்லது பல வாயுக்களாகவோ இந்த பிரபஞ்சத்தை நிரப்பி கொண்டு உள்ளது. இதையே நாம் உலக வெப்பமயமாதல் எனக் கூறுகிறோம். சரி இதை தவிர்ப்பது அல்லது தடுப்பது எப்படி என்றால் நாம் பயன்படுத்தும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தி , தேவைக்கு அதிகமான இயந்திரங்கள் ஆகட்டும், மோட்டார் வாகனங்கள் ஆகட்டும் அதன் பயன்பாட்டை குறைத்து வெப்ப ஆற்றலை வெளியிடுவதை உலகளவில் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமும் நமக்கு கிடைத்த ஆற்றலை சிக்கனமாக செலவழித்து ஆற்றலை சேமிக்க வேண்டும்.

வாருங்கள் அடுத்த வாரமும் தொடர்ந்து சிந்திப்போம்.

என்றும் அன்புடன் உங்கள்,
முனைவர்.கெ. நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved