🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பாண்டியர்களை வீழ்த்தியது முகமதியர்களா? வடுகர்களா? - பகுதி 2

முகமதியர்களின் படையெடுப்பு நடப்பதற்கு முன்னர் தமிழகத்தில் நிலைமை எப்படி இருந்தது?

பத்தாம் நூற்றாண்டில் பராந்தக சோழனின் தலைமையில் சோழ சாம்ராஜ்ஜியம் மீண்டும் துளிர்த்தது. பராந்தக சோழனைத் தொடர்ந்து ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் போன்றோர்கள் சோழ சாம்ராஜ்ஜியத்தை உன்னத நிலைக்கு கொண்டு சென்றனர். சோழர்களின் ஆட்சி காலத்தில் பாண்டியர்களும், தமிழகத்தில் இருந்த ஏனைய மன்னர்களும் சோழர்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டியிருந்தது. ஆனால் அவ்வப்போது பாண்டியர்கள் மட்டும் சோழர்களின் அதிகாரத்தை ஏற்க மறுத்தனர். இதன் விளைவாக சோழ அரசர்கள், பாண்டியர்களை மதுரையில் இருந்து அகற்றிவிட்டு தங்களுடைய வம்சத்தவர்களையே மதுரையில் ராஜ பிரதிநிதிகளாக நியமனம் செய்தனர். இப்படி நியமிக்கப்பட்ட ராஜபிரதிநிதிகளுக்கு 'சோழ பாண்டியர்கள்' என்று பெயர்.

சோழ பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு தப்பிச் சென்று விட்டனர். இலங்கையை ஆண்ட மன்னர்கள் பாண்டியர்களுக்கு அடைக்கலம் கொடுத்த செய்திகளெல்லாம் மகாவம்சம் என்ற இலங்கை சரித்திரத்தைப் பற்றி குறிப்பிடும் நூலில் இடம் பெற்றிருக்கிறது. இலங்கை அரசர்கள் பாண்டியர்களுக்கு அடைக்கலம் கொடுத்தற்காகவே சோழர்கள், இலங்கை மீது பலமுறை போர் தொடுத்திருக்கிறார்கள். 11 ம் நூற்றாண்டின் இறுதியில் சோழர்கள் வீழ்ச்சி அடையத் தொடங்கினார்கள். இந்த காலகட்டத்தில் பாண்டியர்கள் தலைதூக்கினார்கள். சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பாண்டியர்கள் தன்னிச்சையாகச் செயல்பட ஆரம்பித்தனர். பாண்டிய வம்சத்தில் பொதுவாகவே எல்லா காலகட்டத்திலும் பங்காளி சண்டை நடைபெற்றது. பாண்டியர்கள் தங்கள் நாட்டை பல பகுதிகளாகப் பிரித்துக் கொண்டனர். ஒவ்வொரு பகுதிக்கும் தங்கள் வம்சத்தைச் சேர்ந்த வெவ்வேறு வாரிசுகளை அரசர்களாக்கி அந்த பகுதிகளைத் தனித்தனியே ஆட்சி செய்தனர்.

கி.பி.1170ம் ஆண்டு சமயத்தில் சிறிது தலைதூக்கிய பாண்டிய ராஜ்ஜியத்தில், கோஷ்டி மோதலும் தொடங்கியது. பராக்கிரம பாண்டியன் என்பவன் மதுரையை ஆண்டு வந்தான். அவனைப் பதவியிலிருந்து விரட்டிவிட்டு தன்னை அரசனாக்கிக் கொள்ள முயன்றான் சடையவர்மன் குலசேகர பாண்டியன். சடையவர்மன் குலசேகரனுக்கும் பராக்கிரமனுக்கும் சண்டை மூண்டது. பராக்கிரம பாண்டியன் தனக்கு உதவிக்கு வரும்படி இலங்கை அரசனான பராக்கிரம பாகுவை அழைத்தான். பராக்கிரமபாகு இலங்கையின் பல பகுதிகளில் ஆட்சி செய்து வந்த அரசர்களையெல்லாம் பதினாறு வருடங்களாக போராடி தோற்கடித்து தன்னை ஒருங்கிணைந்த இலங்கையின் நிகரற்ற அரசனாக ஆண்டு கொண்டிருந்தான். பராக்கிரமபாகு, பராக்கிரம பாண்டியன் கேட்டுக் கொண்டதன் பேரில் அவன் உதவிக்கு, ஒரு பெரிய சேனையை தன்னுடைய

முக்கிய தளபதிகளின் தலைமையில் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தான். ஆனால் துரதிஷ்டவசமாக இலங்கையிலிருந்து படை உதவிக்கு வருவதற்கு முன்னரே சடையவர்மன் குலசேகர பாண்டியன் தன்னுடைய எதிரியான பராக்கிரம பாண்டியனை, போரில் வெற்றி பெற்றான், பராக்கிரம பாண்டியனையும், அவன் மனைவி மக்களையும் கொன்றுவிட்டு, சடையவர்மன் குலசேகர பாண்டியன் மதுரையில் தன்னுடைய ஆட்சியை நிலைநாட்டினான்.

மதுரையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும், இலங்கைப் படை தமிழகத்தில் நுழைந்தது. மதுரையிலிருந்து சடையவர்மன் குலசேகர பாண்டியனை விரட்டியடித்துவிட்டு, அங்கு பராக்கிரம பாண்டியனின் வாரிசுகளை ஆட்சிப் பீடத்தில் அமர்த்துமாறு, பராக்கிரமபாகு தனது தளபதிகளுக்கு உத்தரவிட்டான்.

போரில் தோற்றுப் போய் மலையாள தேசத்தில் தஞ்சம் புகுந்திருந்த, பராக்கிரம பாண்டியனின் மற்றொரு வாரிசான சடையவர்மன் வீரபாண்டியனை மதுரையில் ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியது. இலங்கைப் படைக்கு அகப்படாமல் சடையவர்மன் குலசேகர பாண்டியன் தப்பிச் சென்றுவிட்டான். சடையவர்மன வீரபாண்டியனை அரியணையில் அமர்த்திவிட்டு, இலங்கைப் படை இலங்கைக்குத் திரும்பிச் சென்றுவிட்டது.

இலங்கைப் படை திரும்பிச் சென்ற பிறகு, சடையவர்மன் குலசேகர பாண்டியன் மதுரையிலிருந்து சடையவர்மன் வீரபாண்டியனை விரட்டுவதில் இறங்கினான். சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்கு, சோழ அரசனான மூன்றாம் குலோத்துங்கன் உதவி புரிந்தான். போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் சடையவர்மன்

குலசேகர பாண்டியன் இறந்துவிட்டான். சடையவர்மன் குலசேகரனுக்குப் பின்னர் அவனுடைய மகனான விக்கிரமபாண்டியன் ராஜ்ஜியத்தைப் பிடிப்பதில் முனைந்தான். விக்கிரம பாண்டியனுக்கும் மூன்றாம் குலோத்துங்கன் உதவி புரிந்தான். போரின் முடிவு குலோத்துங்கனுக்கும் விக்கிரம பாண்டியனுக்கும் சாதகமாக முடிந்தது. சடையவர்மன் வீரபாண்டியனை மதுரையிலிருந்து விரட்டிவிட்டு, விக்கிரம பாண்டியன் மன்னனாக முடிசூடிக் கொண்டான். 

மூன்றாம் குலோத்துங்க சோழனின் பாதுகாப்பில் விக்கிரம பாண்டியனின் தலைமையில் பாண்டிய ராஜ்ஜியம் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது. விக்கிரம பாண்டியனுக்குப் பிறகு அவனுடைய மகன் முதலாம் சடையவர்மன் குலசேகரன் ஆட்சிக்கு வந்தான். கி.பி.1190ல் தொடங்கி கி.பி.1216ம் ஆண்டு வரை முதலாம் சடையவர்மன் குலசேகரனின் ஆட்சி நீடித்தது. அவனுக்குப் பிறகு முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சி 22 ஆண்டுகள் நடைபெற்றது. அவனைத் தொடர்ந்து இரண்டாம் சடையவர்மன் குலசேகரனும், இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனும் ஆட்சிக்கு வந்தார்கள், இவர்கள் ஆட்சிக் காலத்தில் குறிப்பிடும் படியான சரித்திர நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை . இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சண்டை , சச்சரவு இல்லாமல் நாடு அமைதியாக இருந்தது.

இவர்களுக்குப் பின் கி.பி.1251ம் ஆண்டு முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்கு வந்தான். இவனது ஆட்சிக்காலத்தில்தான், தமிழகத்தில் பாண்டியர்களின் ராஜ்ஜியம் உன்னத நிலையை அடைந்தது.

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்கு வந்தவுடன், தன்னுடைய ராஜ்ஜியத்தை விஸ்தரிக்கும் செயலில் இறங்கினான். முதலில் மலையாள தேசத்தில் சேர மன்னனுடன் போரிட்டு, போரில் சேர மன்னனைக் கொன்றான். சேர வம்சத்தைச் சேர்ந்த, உரிமை கொண்டாடிய மற்றொரு வாரிசை அரசனாக்கி விட்டு சோழ நாடு நோக்கிச் சென்றான். சோழநாட்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழனுக்குப் பிறகு மூன்றாம் ராஜராஜ சோழனும், அவனைத் தொடர்ந்து மூன்றாம் ராஜேந்திர சோழனும் ஆட்சிக்கு வந்தனர். ஆனால் இவர்கள் இருவரும் மூன்றாம் குலோத்துங்கனைப் போல் வலிமையானவர்களோ, திறமையானவர்களோ இல்லை. 

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் சோழநாட்டின் மீது போர் தொடுத்தபோது, மூன்றாம் ராஜேந்திர சோழன் அரசனாக இருந்தான், போரில் தோற்றுப்போன சோழ அரசன் கானகத்தில் தஞ்சம் புகுந்தான். பின்னர் சோழ அரசன் தன் மனைவி, மக்களுடன் பாண்டிய மன்னனைச் சந்தித்து உயிர்ப் பிச்சைக் கேட்டான். பாண்டிய மன்னனும் சோழ மன்னனை மன்னித்து சோழ ராஜ்ஜியத்தை மீண்டும் வழங்கினான். நன்றி மறந்த சோழ அரசன், பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தான். சினம் கொண்ட பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன், சோழ அரசனை வீழ்த்தி தஞ்சாவூரையும் உறையூரையும் எரித்துவிட்டு சோழ நாட்டைக் கைப்பற்றினான். இந்த வீழ்ச்சியிலிருந்து சோழர்களால் மீள முடியவில்லை. சில ஆண்டுகளில், சோழர்கள் மறைந்து போயினர். 

சோழர்கள் வலிமையிழந்த சமயத்தில் ஹொய்சாளர்கள் (இவர்கள் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்கள்) தமிழகத்தில் புகுந்து கண்ணூர் கொப்பத்தைக் கைப்பற்றி (கண்ணூர் கொப்பம் இன்றைய சமயபுரம்) அப்பகுதியை அவர்கள் ராஜ்ஜியத்தின் தலைநகரமாக ஆக்கிக் கொண்டார்கள். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், ஹொய்சாளர்களுடன் போரிட்டு அவர்களைப் புறமுதுகிட்டு ஓட வைத்து கண்ணூர் கொப்பத்தையும் கைப்பற்றினான். பல்லவர்களின் வம்சத்தைச் சேர்ந்த கோப்பெரும் சிங்கன் என்பவன் செந்திமங்களம் என்ற இடத்தில் கோட்டை எழுப்பி ஒரு சிறிய ராஜ்ஜியத்தை நடத்திவந்தான். இந்த பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவர்களுக்கு சம்பூவராயர்கள் என்ற பெயரும் உண்டு. சடையவர்மன் சுந்தரபாண்டியன், கோப்பெரும் சிங்கனின் கோட்டையை முற்றுகையிட்டான். கோப்பெரும் சிங்கன், சடையவர்மன் சுந்தர பாண்டியனிடம் அடிபணிந்தான். அதனால் அவனது ராஜ்ஜியம் மீண்டும் அவனுக்குக் கிடைத்தது. 

காஞ்சிபுரத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த பாணர்களைத் தோற்கடித்த சடையவர்மன் சுந்தரபாண்டியன், அவர்களது அரசனான கந்தகோபாலனைப் போரில் கொன்றான். காஞ்சிபுரத்தை வீழ்த்திய பிறகு வடக்கே முன்னேறிச் சென்று கிருஷ்ணா நதி வரை உள்ள அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினான். கிருஷ்ணாநதிக்கு மறுபுறமிருந்த பகுதியை ருத்ரம்மா தேவி என்ற பெண் ஆட்சி செய்து கொண்டிருந்தாள். பெண்ணரசிக்கு எதிராக போர் புரிய விரும்பாமல், தன்னுடைய சேனையுடன் தமிழகத்திற்குத் திரும்பிவிட்டான் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் தமிழகத்திற்கு திரும்பி வரும் வழியில், மீண்டும் ஹொய்சாளர்களின் படையை எதிர்நோக்க வேண்டி வந்தது. இந்தப் போரில் ஹொய்சாள அரசனான சோமேஸ்வரன் கொல்லப்பட்டான். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், தான் ஆட்சிக்கு வந்த வருடமே தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கிவிட்டான். இந்தப் படையெடுப்புகள் முடிவதற்கு சுமார் 12 வருடங்கள் ஆகின.

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் தன்னுடைய வெற்றிகளைக் கொண்டாடும் விதத்தில் கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தான். அதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது அவன் திருவரங்க கோயிலுக்குச் செய்த திருப்பணி. திருவரங்க கோயிலுக்கு முதலாம் சடையவர்மன், சுந்தரபாண்டியன் வழங்கிய கொடை பதினெட்டு லட்சம் பொற்காசுகளாகும். இதில் சிறப்பு என்னவென்றால், இக்கொடைக்காக உருவாக்கப்பட்ட துலாபாரம்தான், ஒரே அளவு எடை கொண்ட இரண்டு பெரிய படகுகள் தயார் செய்யப்பட்டு, அப்படகுகளுக்கிடையே ஒரு இணைப்பு உருவாக்கப்பட்டு துலாபாரம் போன்று உருவாக, பின்னர் துலாபாரப் படகுகள் காவிரி நதியில் விடப்பட்டன. இவற்றில், ஒரு படகில் யானை ஒன்று ஏற்றப்பட்டு அதன் மேல்

முதலாம் சடையவர்மன், சுந்தரபாண்டியன் போர்க் கருவிகளுடன் அம்பாரியில் அமர்ந்து கொண்டான். இந்தப் படகை சமன்செய்யும் பொருட்டு, காலியான இன்னொரு படகில் பொற்காசுகள் குவிக்கப்பட்டன. இப்படி குவிக்கப்பட்ட 18 லட்சம் பொற்காசுகள்தான், பின்னர் திருவரங்கப் பெருமாளுக்குக் காணிக்கையாக கொடுக்கப்பட்டன.

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்கு அடுத்து தோன்றிய முக்கியமான பாண்டிய அரசன் முதலாம் மாறவர்மன் குலசேகரன். சிறப்பாக ஆட்சி செய்த கடைசி பாண்டிய அரசன் இவனே. கடைசி தமிழ் அரசனும்கூட. இவனுக்குப் பிறகு தமிழ் அரசர்கள் யாரும் குறிப்பிடும்படியாக தமிழகத்தில் ஆட்சி செய்யவில்லை . முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக்குப் பிறகுதான் முகமதியர்களின் முதல் படையெடுப்பு நிகழ்ந்தது (கி.பி. 1311). முகமதியர்களை தமிழ் மண்ணிற்கு அழைத்து வந்தது யார்? எப்படி பாண்டிய பேரரசு வீழ்த்தப்பட்டது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

நன்றி:மருதுபாண்டியன்
ஆதார நூல்: மதுரை சுல்தான்கள் - S.P. சொக்கலிங்கம்


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved