🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பெருஞ்சாதிகள் மட்டுமல்ல அதிமுக! சாதி சிறுபான்மையினரே கட்சிக்கு ஆதாரம்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் 1972-இல் தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மிகக்குறுகிய காலத்தில் மக்களின் அபிமானத்தைப்பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. எம்ஜியாரின் மறைவுக்குப்பிறகு பல்வேறு சவால்களைக் கடந்து, செல்வி.ஜெயலலிதா அவர்களின் தலைமையில் வலுப்பெற்று மீண்டும் அரியணை ஏறியது. 2016 சட்டமன்றத் தேர்தலை ஜெயலலிதா அவர்களின் தலைமையில் எதிர்கொண்டு தொடர் வெற்றியைப் பதிவு செய்து புதிய வரலாறு படைத்தது. 2016 டிசம்பர் 5 ஆம் தேதி அம்மையாரின் மறைவுக்குப்பின் கட்சிக்குள் தொடர்ந்து நடைபெற்றுவரும் சம்பவங்கள், கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக அதிமுக-வை ஆதரித்து வரும் கட்சி சாராத அபிமானிகளுக்கு சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திலுள்ள பெருஞ்சாதி வாக்குகளை திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒவ்வொரு மண்டலத்திற்கேற்ப கூடுதலாகவோ, குறைவாகவோ பங்கிட்டு ஒட்டுமொத்த கணக்கில் சரிசமமாக பங்கிட்டுக்கொண்ட நிலையில், மொழி, மத சிறுபான்மை மக்களின் பெரும்பான்மை ஆதரவு அதிமுக-விற்கே இருந்து வந்தது. இதற்கு அடிப்படைக்காரணமாக சாதி, மதம் கடந்து எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகள் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒன்றியச் செயலாளர் தொடங்கி மாவட்டச் செயலாளர் வரை துணை அமைப்புகளில் கூட பெருஞ்சாதிகளுக்கே வழங்கப்பட்ட நிலையில், அதிமுக-வில் எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற ஆளுமைகள் சாதி, மதம் கடந்து கட்சியின் விசுவாசிகளுக்கு சரிசமமான வாய்ப்புகளை வாரி வழங்கிவந்தனர். குறிப்பாக செல்வி.ஜெயலலிதா அவர்கள் பொள்ளாச்சி, கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், பொங்கலூர், உடுமலை, விருதுநகர் போன்ற தொகுதிகளில்  சாதி சிறுபான்மையினருக்கு வாய்ப்பு வழங்கி சட்டமன்ற, நாடாளுமன்ற  உறுப்பினர்களாக ஆக்கியதோடு, மந்திரி பதவியையும் வழங்கினார்.

இதுதவிர ஆட்சி நிர்வாகத்திலும், வாரியங்கள், கூட்டுறவு சங்கப்பதவிகள் என சகலமும் பெருஞ்சாதி மாவட்டச் செயலாளர் கைகாட்டும் நபர்களுக்கே திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வருகிறது. குறுநில மன்னர்கள் போல் செயல்படும் மாவட்டச் செயலாளர்களும் தங்கள் சாதியினருக்கே அனைத்து வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுக்கின்றனர். தலைமையிடம் நேரடி செல்வாக்கு உள்ள சிறுபான்மை சாதியைச் சேர்ந்த ஒருசிலருக்கு மட்டுமே அரிதான வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும், மாவட்டச் செயலாளர், மாவட்ட அமைச்சர் தாண்டி தங்கள் குறைகளை தலைமையிடம் தெரிவிக்க முடியாது. அக்கட்சித் தலைமையும் அந்த வட்டத்திற்குள்ளேயே இருப்பதைத் தான் விரும்புகிறது.

தற்போது ஆட்சிக்கட்டிலிலுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, சமூகநீதி குறித்து மேடைகளில் தம்பட்டமடித்துக்கொண்டாலும், கட்சிப் பதிவிகளிலோ, நிர்வாகப் பதவிகளிலோ கடைக்கோடி சாதி வரை சமூகநீதி கொண்டுபோய் சேர்க்கப்படவில்லை என்பதே எதார்த்தம். பேராசிரியர் சு.ப.வீ. தலைமையில் சமூகநீதி கண்காப்புக்குழு அமைக்கப்பட்டிருந்தாலும், அக்குழு இதுவரை வாய்ப்பற்ற சாதிகளுக்கு அதிகாரம் வழங்க எந்தவித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்பதும் தெரியவில்லை, எதை சாதித்துள்ளது என்பதும் தெரியவில்லை.

இவ்வாறான சூழலில் மொழி,இன சாதி சிறுபான்மையினர் அதிமுக-வை தங்களுக்கான கட்சியாக நம்பி நீண்டகாலம் பயணப்படு வந்தநிலையில், தற்போது அதிமுக தலைவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் சாதிய மோதலாக பொதுவெளியில் அடையாளப்படுத்தப்பட்டு வருவது அக்கட்சியின் ஆதரவாளர்களுக்கு  கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெருஞ்சாதியைச் சேர்ந்த தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி விமர்சித்துக் கொள்வதால், அது சாதி மீதான விமர்சனமாக ஊடகங்களால் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் பூத் வாரியாக கட்சிகளுக்கு கிடைத்துள்ள வாக்குகள் சாதிய அடையாளத்திற்கு மேலும் தூபம் போடுவதாக உள்ளது. தங்களை மாற்று என்று சொல்லக்கூடிய மத்தியில் ஆளும் பாஜகவும் பெருஞ்சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கே மாநில தலைவர், மத்திய வாரியப் பதவிகள், கவர்னர் பதவிகளை வழங்குவது சாதி சிறுபான்மையினருக்கு நம்பிக்கை இழக்கச் செய்கிறது. இதனால் அதிமுக வலுப்பெற வேண்டும் என்பதே பெரும்பான்மை மக்களின் விருப்பமாக உள்ளது.

 தற்போதைய சூழலில் பெருஞ்சாதி தலைவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதல் சாதி முலாம் பூசப்பட்டுவிட்ட, கட்சி யார் தலைமையில் இயங்கினாலும் அனைத்து சாதி மக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்து கட்சி மீண்டும் வலுப்பெற வேண்டுமானால் அதிகார வாய்ப்பற்ற சாதி சிறுபான்மை வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம். குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி தொடங்கி தூத்துக்குடி, இராமநாதபுரம் வரை 20-க்கும் கூடுதலான மாவட்டங்களில் 70-க்கும் மேற்பட்ட தொகுகளில் வெற்றிவாய்ப்பை நிர்ணயிக்கும் தொட்டிய நாயக்கர் சமுதாயம் போன்று இதுவரை அதிகார சுவையை அனுபவிக்காத குறிப்பிடத்தக்க வாக்குவங்கியைக் கொண்டுள்ள சாதி சிறுபான்மை சமுதாயங்களுக்கு உரிய அங்கீகாரத்தை கட்சி வழங்க வேண்டும். அதேபோல் இந்த சமுதாயங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் மாறியுள்ள அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, கண்ணைமூடிக்கொண்டு ஏதாவது ஒரு தலைவரை ஆதரிக்காமல், தங்கள் சமுதாயத்தோடு அதிகாரத்தை பங்கிட்டுக்கொள்கின்ற தலைமையுடன் சேர்ந்து புதிய அரசியல் பாதையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved