🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பாண்டியர்களை வீழ்த்தியது முகமதியர்களா? வடுகர்களா? - பகுதி-3

பாண்டியர்களை வீழ்த்தியது முகமதியர்களா? வடுகர்களா? - பகுதி-3

மார்க்கோ போலோ தமிழகத்தை விட்டுச் சென்று 17 ஆண்டுகள் கழித்து முகமதியர்களின் தமிழகத்தின் மீதான முதல் படையெடுப்பு கி.பி. 1311 ல் நிகழ்ந்தது. இப்படையெடுப்பு அலாவுதீன் கில்ஜியின் கட்டளையின் பேரில் அவனுடைய தளபதியான மாலிக் கபூரின் தலைமையில் நடைபெற்றது. ஆரம்பத்தில் அலாவுதீன் கில்ஜிக்கு தமிழகம் வரை படையெடுத்து வரும் நோக்கமில்லை. பாண்டிய சகோதரர்கள் இருவருக்குள் இடையே ஏற்பட்ட பதவிச் சண்டையே, மாலிக் கபூரை மதுரை மீது படையெடுக்கத் தூண்டியது.

சகோதரர்களுக்கு இடையேயான சண்டையைப் பற்றிப் பார்க்கும் முன்னர் அலாவுதீன் கில்ஜியைப் பற்றியும், அவனது தளபதியாள மாலிக் கபூரைப் பற்றியும் பார்ப்போம்.

கில்ஜி வம்சம் இந்தியாவை ஆண்ட டெல்லி சுல்தான்களின் வம்சங்களில் ஒன்று. அடிமை வம்சத்தை முடித்து வைத்து விட்டு, டெல்லியில் கில்ஜி வம்சம் ஆட்சிக்கு வந்தது. கில்ஜி வம்சம் சுமார் 30 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் நீடித்தது. கில்ஜி வம்சத்தில் மூன்ற அரசர்கள்தான் தோன்றினார்கள். அவர்கள் ஜலாலுதீன் பிரோஸ்கில்ஜி, அலாவுதீன் கில்ஜி மற்றும் குதுப்புதீன் முபாரக் ஷா கில்ஜி ஆகியோர். இதில் அலாவுதீன் கில்ஜி மட்டும் தான் நீண்ட காலம் (20ஆண்டுகள்; 1296-1316) ஆட்சி புரிந்தான். அலாவுதீன் கில்ஜிக்கு நாடுகளைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. சுல்தான் ஆவதற்கு அவனுக்கு நிறைய செல்வங்கள் தேவைப்பட்டன. 

அவனுக்கு முன்னர் டெல்லியில் சுல்தானாக இருந்தவர் ஜலாலுதீன் கில்ஜி. ஜலாலுதீன் கில்ஜியின் மகளைத்தான் அலாவுதீன் திருமணம் செய்திருந்தான். அலாவுதீனின் மனைவி தன் தந்தையின் பிறந்தவீட்டு பெருமையை பேசிக்கொண்டு அலாவுதீனை ஏளனம் செய்து வந்தாள். அலாவுதீன், தன் மனைவிக்குத் தகுந்தப் பாடம் கற்பிக்க நினைத்தான். கூடவே டெல்லியின் சுல்தான் ஆக வேண்டும் என்ற ஆசையும் அவனுக்கு ஏற்பட்டது. சுல்தான் பதவிக்கு வரவேண்டுமென்றால் அமிர்களின் (ஆளும் வர்க்கத்தின்) ஆதரவு அவனுக்குத் தேவைப்பட்டது. அவர்களது ஆதரவைப் பெற நிறைய செல்வத்தைக் கொட்டியிறைக்க வேண்டும். ஆனால் பொருட்செல்வத்திற்கு எங்கே போவது? விந்தியமலையைத்தாண்டி தென்பகுதிகளிலுள்ள ராஜ்ஜியங்கள் மீது படையெடுத்தால் என்ன? இதுவரை எந்தச் சுல்தானும் செய்யாத காரியம். ஆனால் அதற்கு மாமா ஜலாலுதீன் கில்ஜி ஒப்புக் கொள்ள வேண்டும். ஒப்புக் கொள்ளாவிட்டால் என்ன! சுல்தானுக்குத் தெரியாமல் காரியத்தைச் செய்துவிடலாம் என்று அலாவுதீனுக்குத் தோன்றியது. இதற்கு எற்றவாறு அலாவுதீனுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. 

டெல்லி சுல்தானின் ஆட்சிக்கு உட்பட்டது சந்தேரி ராஜ்ஜியம். சந்தேரி, கில்ஜி சமஸ்தானத்தின் தென் பகுதியில் உள்ளது. சந்தேரி அரசன் சுல்தானுக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்டான். சந்தேரி அரசனுக்குப் பாடம் கற்பிக்க டெல்லி சுல்தான் ஜலாலுதீன் கில்ஜி, அலாவுதீனைப் படையெடுத்துப் போகும்படி கட்டளையிட்டான். காத்திருந்த சந்தர்ப்பம் அலாவுதீனுக்குக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான். சந்தேரி அரசனைத் தோற்கடித்து விட்டு, அப்படியே தான் கொண்டு வந்த படையை சுல்தானின் அனுமதியில்லாமல் மேலும் தெற்கே எடுத்துச் சென்றான். 

விந்திய மலை ஏறி இறங்கியவுடன், யாதவர்களின் தேவகிரி ராஜ்ஜியம் அலாவுதீனுக்கு காட்சி தந்தது. தேவகிரியை ஆண்டு கொண்டிருந்த அரசன் ராமச்சந்திர தேவ். தென்னிந்தியாவின் அப்போதிருந்த நான்கு  ராஜ்ஜியங்களில் மிகவும் பலம் பொருந்தியது தேவகிரி ராஜ்ஜியம் . ராமச்சந்திரதேவ் வெகுகாலம் ஆட்சியில் இருந்ததால் கஜானாவில் நிறைய செல்வம் சேர்ந்திருந்தது. தேவகிரியின் படை, பலம் பொருந்தியதாக இருந்தது. ஆனால், அலாவுதீன் படை சிறியது. வெறும் 8000 போர் வீரர்களை மட்டுமே கொண்டது. இருப்பினும் அதிர்ஷ்டம் அலாவுதீன் பக்கம்தான். ராமச்சந்திர தேவின் மகனான சந்திரதேவ் ஒரு பெரும் படையுடன், தெற்கே ஹொய்சலர்களுடன் போருக்குச் சென்றிருந்தான். இந்த சூழ்நிலையில் அலாவுதீன் படை தேவகிரி கோட்டையை முற்றுகையிட்டது. முற்றுகையின் போது அலாவுதீன் ஒரு தந்திரமான காரியத்தைச் செய்தான். தான் வெள்ளோட்டமாக ஒரு சிறிய படையுடன் வந்திருப்பதாகவும், தனக்குப் பின்னால் 20,000 பேர் அடங்கிய பெருஞ்சேனை வந்து கொண்டிருப்பதாகவும், ஒரு வதந்தியை எதிரிகளிடம் பரப்பிவிட்டான்.  இச்செய்தியைக் கேட்ட ராமச்சந்திர தேவ், யுத்தம் புரிவதற்குப் பதில், சமாதானமாகப் போய்விடலாம் என்ற முடிவுக்கு வந்தான்.   அலாவுதீனுடன் சமாதானம் பேசினார். அலாவுதீன், தான் முற்றுகையை விலக்கிக் கொள்ளவேண்டுமென்றால், தனக்கு 500 மொடக்கு    தங்க நாணயங்களும்,(1 மொடக்கு - 37.32 கிலோ அதாவது 18660 கிலோ தங்க நாணயங்கள்), 7 மொடக்கு முத்துகளும், 40 யானைகளும் மற்றும் சில ஆயிரக்கணக்கான குதிரைகளும் வேண்டும் என்று தெரிவித்தான். ராமச்சந்திர தேவ் அதற்கு ஒப்புக்கொண்டான்.

இதற்கிடையில் ராமசந்திர தேவின் மகனான சந்திர தேவ், முகமதியர் படையெடுப்பின் செய்தி அறிந்து தேவகிரிக்கு படையுடன் திரும்பினான். ராமச்சந்திர தேவ், தான் அலாவுதீனுடன் உடன்படிக்கை செய்துவிட்டதாகக் கூறியும், சந்திர தேவ் சமாதானமாகவில்லை. சந்திர தேவ் அலாவுதீனுடனான போருக்குத் தயாரானான். அலாவுதீன் தன்னுடையத் தந்திரத்தைத் தொடர்ந்தான். தனது தளபதியான நஸ்ரத்கானிடம் 1000 வீரர்கள் அடங்கிய படையை கோட்டையின் வெளியே சற்று தொலைவில் நிறுத்தி வைக்குமாறு கூறிவிட்டு, தன்னுடன் மீதமுள்ள 7000 வீரர்களுடன் சந்திர தேவை எதிர்த்துப் போர் புரிந்தான். போரில் அலாவுதீனின் படைக்கு பலத்த சேதம். போர் யாதவர்களுக்குச் சாதகமாக முடியும் தருவாயில், திட்டமிட்டபடி நஸ்ரத்கான் 1000 வீரர்களுடன் அலாவுதீன் படையினருடன் சேர்ந்து கொண்டான். அலாவுதீனின் உதவிக்காக டெல்லியிலிருந்து 200,000) பேர் கொண்ட பெரும்படை வந்துவிட்டதாக எண்ணி, யாதவர்களின் படையினர் கலக்கம் அடைந்து போர்க்களத்திலிருந்து ஓடிவிட்டனர். அலாவுதீனுக்கு வெற்றி.

இம்முறை அலாவுதீனின் கெடுபிடி அதிகமாகிவிட்டது. நிபந்தனைகள் அதிகரித்தன. ராமச்சந்திர தேவ் புதிய நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டார். அலாவுதீன் 6000 மொடக்கு தங்கக் காசுகள்,(2, 23,920 கிலோ அதாவது 223.92 டன் தங்ககாசுகள்), 1000 மொடக்கு வெள்ளிக்காசுகள், (37320 கிலோ வெள்ளி காசுகள்) 70 மொடக்கு முத்துகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான யானைகள் மற்றும் குதிரைகளுடன் டெல்லிக்குத் திரும்பினான்.

அலாவுதீனுக்கு எதிர்பார்த்தது கிடைத்து விட்டது. பிறகென்ன, டெல்லிக்கு சென்றவுடன் தன்னுடைய மாமா ஜலாலுதீனை மேலே அனுப்பி விட்டு, டெல்லியின் அடுத்த சுல்தானாகத் தன்னை ஆக்கிக் கொண்டான்.

அலாவுதீனின் தென்னாட்டின் மீதான படையெடுப்பு, இரண்டு விஷயங்களை அவனுக்கு ஊர்ஜிதப்படுத்தியது. செல்வத்தைக் குவிக்க வேண்டுமென்றால், தென்னாட்டின் மீது படையெடுக்கலாம், மேலும், தென்னாட்டில் தான் இன்னும் முகமதியர்கள் படையெடுப்பு நிகழாத மூன்று ராஜ்ஜியங்கள், ஹொய்சாலப் பேரரசு, காகதியப் பேரரசு, பாண்டியப் பேரரசு இருக்கின்றன. சுல்தான் ஆன பிறகு அலாவுதீன் கில்ஜி, குஜராத்தில் உள்ள காம்பே என்ற பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த அரசனுடன் போரிட்டு அவனைத் தோற்கடித்து அந்த ராஜ்ஜியத்தைக் கைப்பற்றினான்.

போரில் கல்தானின் வீரர்கள் ஒரு அழகிய திருநங்கையையும் சிறைப்பிடித்தனர். அந்தத் திருநங்கையின் பெயர் சந்த்ராம். அலாவுதீன் கில்ஜிக்கு அந்தத் திருநங்கையை மிகவும் பிடித்துப் போய்விட்டது. அதனால் 1000 தினார்கள் கொடுத்து அலாவுதீன் கில்ஜி, சந்த்ராமை விலைக்கு வாங்கினான். சந்த்ராம் மதம் மாறினான். மதம் மாறிய பிறகு அவனுக்குப் பெயர் மாலிக்கபூர். மற்றவர்கள் தினார் கபூர் என்று அழைத்தனர். அலாவுதீன் கில்ஜிக்கு மாலிக்கபூரின் மீது மோகம். மாலிக்கபூரின் மீதிருந்த கிறக்கத்தால் அலாவுதீன் கில்ஜி, அவனை தன்னுடைய ராஜபிரதிநிதியாக நியமித்தான். மாலிக் கபூரும் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டான்.

அலாவுதீன் கில்ஜி டெல்லியில் சுல்தானாகி 10 வருடங்கள் ஆகியிருந்தன. சுல்தானுக்கு மறுபடியும் பணநெருக்கடி, மேலும், தேவகிரியின் அரசன் ராமச்சந்திர தேவ் சில ஆண்டுகளாகக் கப்பம் செலுத்தவில்லை. அப்போதுதான், சுல்தானுக்கு பழைய யோசனை தோன்றியது. தென்னாட்டின் மீது நாம் ஏன் இன்னொரு படையெடுப்பை நடத்தக் கூடாது? படையெடுப்பு நடத்த அலாவுதீன் கில்ஜி முடிவெடுத்தான். ஆனால் அலாவுதீன் கில்ஜியால் படையை தலைமை தாங்கி செல்ல முடியாது. காரணம், கில்ஜி டெல்லியை விட்டுக் கிளம்பினால், அவன் இல்லாத சமயத்தில் யாரேனும் புரட்சி செய்து அவனது ஆட்சியை அபகரித்துவிடுவார்கள் என்ற பயம்தான். அதனால் தனக்கு மிகவும் பிடித்தமான மாலிக் கபூரின் தலைமையில் படை ஒன்றை தயார் செய்து தென் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தான்.

முதலில், மாலிக்கபூரின் படை, யாதவ ராஜ்ஜியத்தில் ராமச்சந்திரதேவின் படையைத் தோற்கடித்து, யாதவ ராஜ்ஜியத்தைப் புரட்டிப்போட்டது.  மாலிக்கபூர் யாதவ மன்னனை கைது செய்து அலாவுதீன் கில்ஜியைப் பார்க்க டில்லிக்கு அனுப்பி வைத்தான். அலாவுதீன் கில்ஜி, ராமச்சந்திர தேவை மன்னித்து தேவகிரிக்குத் திருப்பி அனுப்பினான். ராமச்சந்திர தேவ் அது முதற்கொண்டு சுல்தானுக்கு சரியாகக் கப்பத்தைச் செலுத்தி வந்தார்.

அலாவுதின் கில்ஜிக்கு டெல்லி ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தும் நோக்கம் இல்லை. செல்வம் ஒன்றே குறி, அதனால்தான் ராமச்சந்திர தேவை மன்னித்து திருப்பி அனுப்பிவிட்டான். தென்னிந்தியாவில் இருக்கும் ராஜ்ஜியங்களை டெல்லியுடன் இணைத்துக் கொண்டால், அவற்றை டெல்லியிலிருந்து நிர்வகிப்பது கடினம். அதன் காரணமாகத்தான் அலாவுதீன் கில்ஜி, தான் ஜெயித்தப் பகுதிகளைத் தோல்வியுற்ற மன்னர்களிடம் திரும்பக் கொடுத்துவிட்டு, கப்பத்தை மட்டும் பெற்றுக் கொண்டான். மாலிக் கபூரின் படை அடுத்து காகதீயர்கள் மீது போர் தொடுக்க வாராங்கல்லை நோக்கிச் சென்றது. வாராங்கல் கோட்டை மிகவும் வலிமையானது. ஏற்கெனவே கல்தான்களின் படை வாராங்கல்லைப் பிடிப்பதில் தோல்வி அடைந்திருக்கிறது. இம்முறை மாலிக் கபூரின் படை, வராங்கல் கோட்டையைப் பிடிப்பதற்கு, யாதவர்களின் உதவி பெறப்பட்டது. கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளெல்லாம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. வாராங்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள மக்களெல்லாம் கொல்லப்பட்டனர்.

வாராங்கல் கோட்டைச் சுவர் இரண்டு பிரகாரங்களைக் கொண்டது. உள்சுவர் கற்களினால் கட்டப்பட்டது. வெளிச்சுவர் மண்ணால் கட்டப்பட்டது. மாலிக் கபூர் தன்னுடைய வீரர்கள் ஒவ்வொருவரிடமும் கோட்டையைச் சுற்றி, வளைந்து, வளைந்து செல்லும் அகழியைத் தோண்டச் சொன்னான். அந்த அகழியின் வழியே கோட்டையின் முதல் சுவரைக் கைப்பற்றினான். இரவு நேரங்களில், முதற் சுவரிலிருந்து இரண்டாவது சுவரைத் தாக்கினான். தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் போன காகதீயர்களின் அரசனான ருத்திர தேவ், மாலிக் கபூரிடம் சமாதானம் கோரினான். சமாதானம் என்று வரும் பட்சத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அலாவுதீன் கில்ஜி, முன்னரே மாலிக் கபூருக்கு அறிவுறுத்தியிருந்தான்.

ருத்திர தேவ், தன்னுடைய அனைத்து செல்வங்களையும், யானைகளையும், குதிரைகளையும் மாலிக் கபூரிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அவன் தனக்கென்று எவ்வித சொத்துகளையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற நிபந்தனை இட்டான். மேலும் ராஜா ருத்திர தேவிடமிருந்து பெறப்பட்ட செல்வங்கள் அனைத்தும் 1000 ஒட்டகங்களின் மீது கட்டப்பட்டு டெல்லிக்கு அலாவுதீன் கில்ஜியிடம் அனுப்பப்பட்டது. ராஜாருத்திர தேவ் தங்கத்தால் செய்யப்பட்ட, சங்கலியால் பிணைக்கப்பட்ட தன்னுடைய உருவத்தை தனது அடிபணிதலுக்கு அடையாளமாக மாலிக் கபூரிடம் தந்தான். 

யாதவர்களை வீழ்த்தியாகிவிட்டது. காகதீயர்களையும் வீழ்த்தியாகிவிட்டது. இன்னும் தென்னகத்தில் மீதமிருப்பது ஹொய்சாளர்கள் மற்றும் பாண்டியர்கள்தாம். ஹொய்சாளர்களையும் பாண்டியர்களையும் வீழ்த்த மேலும் ஒரு பெரும்படை மாலிக் கபூரின் தலைமையில் டெல்லியிலிருந்து புறப்பட்டது. இம்முறை மாலிக்கபூர் படைக்கு யாதவர்களும், காகதீயர்களும் பல உதவிகள் புரிந்தனர். அதனால் மாலிக்கபூரின் படை சுலபமாக தென்னகத்தை நோக்கி முன்னேறியது.

மாலிக்கபூரின் தாக்குதலின் முதல் இலக்காக இருந்தது துவாரசமுத்திரம். இது ஹொய்சாளர்களின் தலைநகரம். மாலிக்கபூர் படையெடுப்பின்போது, துவார சமுத்திரத்தை ஆண்டு கொண்டிருந்தவன் மூன்றாம் வள்ளாலதேவன்.  இப்படையெடுப்பின் போதும் சூழ்நிலை டெல்லி படைக்கே சாதகமாக இருந்தது. மாலிக்கபூரின் படை துவார சமுத்திரத்தை முற்றுகையிட்டபோது, வள்ளாலதேவன் பாண்டிய நாட்டில் சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்கைச் சரி செய்வதற்காக தெற்கே பயணம் செய்திருந்தான். முற்றுகைத் தகவலறிந்த வள்ளாலதேவன் தலைநகரான துவார சமுத்திரத்திற்கு உடனே திரும்பினான். பாண்டிய சகோதரர்களில் ஒருவனான வீரபாண்டியன், வள்ளால தேவனின் உதவிக்கு ஒரு படையை அனுப்பி வைத்தான். இருப்பினும், வள்ளாலதேவனால் மாலிக்கபூரின் முற்றுகையை முறியடிக்க முடியவில்லை . மாலிக்கபூரின் படை, ஹொய்சாளர்களைத் துவம்சம் செய்ய காத்திருப்பதை உணர்ந்த வள்ளாலதேவன் அடிபணிந்தான். 

இனி, மிச்சம் இருந்தது பாண்டியர்கள் மட்டுமே. தமிழகத்தின் மீதான முஸ்லிம்களின் முதல் படையெடுப்பு கி.பி. 1311 ல் நிகழ்ந்தது. அப்போது விசயநகர பேரரசு உருவாகக் கூட இல்லை. ஆனால் பாண்டியரை வீழ்த்தியது வடுகர்கள் என்று வரலாற்றை வசதியாகத் திரிக்கிறார்கள்.  சரி. மாலிக்கபூரின் படையெடுப்பால் பாண்டிய நாடு  பட்டபாடுகளை அடுத்த பதிவில் பார்ப்போம்.

நன்றி: மருதுபாண்டியன்.
ஆதார நூல் : மதுரை சுல்தான்கள் - S.P. சொக்கலிங்கம்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved