🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் – பகுதி 25

விஞ்ஞானமும் மெய்ஞானமும் – பகுதி 25. அன்புச் சொந்தங்களே வணக்கம்!

நமது உடலில் உள்ள ஏழு  சக்கரங்களை தியானத்தின் மூலம் இயக்க சக்தியான ஆத்ம சக்தியை அடைய முடியும். நம் முன்னோர்கள் இறைவனுடைய மந்திரத்தை இந்த சக்கரங்களை எழுப்பக்கூடியதாக அமைத்திருக்கின்றனர்.

இப்படி நம் இயக்க சக்தியை அளிக்கக்கூடியது தான் பீஜாட்சர மந்திரங்கள். பீஜம் என்றால் விதை. அக்‌ஷரம் என்றால் எழுத்துக்கள். விதை போன்ற எழுத்துக்கள் அடங்கிய மந்திரம் என்ற பொருளை உணர்த்துவதே பீஜாக்‌ஷர மந்திரம் எனப்படுகிறது.

பீஜாட்சர மந்திரத்தை உபயோகித்தால் அந்த இடத்தில் மிக அதிகளவில் நேர்மறை அதிர்வாற்றலை உண்டாக்க வல்லது. அதனால் அதை பிரயோகிப்பவர்களுக்கும், அவரை சுற்றீ உள்ளார்களுக்கும் ஆன்ம மற்றும் ஜீவ சக்தி பெருக்க வல்லது.

மூலாதாரம்.

ஆறு ஆதாரங்கள் பற்றிய விவரத்தை யூகிமுனி பின்வருமாறு விவரிக்கிறார்.

பார்க்கவே ஆதாரம் ஆறுமாச்சு

பரிந்திட்ட தத்துவங்கள் முப்பத்தாறும்

சேர்க்கவே சிவதத்துவம் ஆகும்கண்டீர்

சிறந்திருந்த மண்டலங்கள் மூன்றும்கேளாய்

ஆக்கவே அக்கினி மண்டலத்தினோடு

அலரி மண்டலம் விந்து மண்டலம்

தோக்கவே இதன்சூட்சம் சொல்லக்கேளாய்

சுருதியாய் மூலமென்ற தொடர்ச்சிதானே

யூகிமுனி, தத்துவ ஞானம், பாடல் 72.

இறைவன் 96 தத்துவங்கள் கொண்ட மனிதனாக மாறி உள்ளான். இந்த 96 தத்துவங்களுக்குள் ஆறு ஆதாரத் தலங்கள் முக்கியமானவை ஆகும். இந்த ஆறு ஆதாரத் தலங்களே மூச்சுக் காற்றை இயக்கும் தலங்களாக உள்ளன. இதில் வெட்டாத ஆறு சக்கரங்கள் இயங்குகின்றன. நம் உடலில் 72000 நாடி நரம்புகள் உள்ளன என சித்தர்கள் கணித்துள்ளனர். இவற்றையும் ஆறு தலங்கள் தான் இயக்குகின்றன. இந்த நரம்புகளில் 51 தொகுதிகள் உள்ளன. இந்த நரம்புத் தொகுதிகள் இதழ்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. அந்த நரம்புத் தொகுதிகளில் எழும் ஓசையே, அதிர்வே பீஜ மந்திரம் எனப்படுகிறது.

திருமூலர், திருமந்திரம், பாடல்

நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்

நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்

ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும்

பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்

ஆகின்ற ஐம்பத்தோர் எழுத்துள் நிற்கப்

பாகொன்றி நிற்கும் பராபரன் தானே

திருமூலர், திருமந்திரம், பாடல் 945

ஆதாரத் தலங்களில் கூத்தன் என்ற சிவனின் பீஜ மந்திரமாகிய, நமசிவய உள்ளது. ஐந்து பூதங்களான மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் உள்ளன. அதன் நிறங்களும் உள்ளன. ஆறு ஆதாரத் தலங்களிலும் உள்ள மொத்த இதழ்கள் ஐம்பது ஆகும். இதனுள் ஐம்பது எழுத்துக்கள் அடங்கும். நிராதாரத் தலமான சகஸ்ராரத்தில் ஓம் என்ற ஓர் எழுத்து உள்ளது. அதையும் சேர்த்து 51 எழுத்துக்களாக விரியும். அக்காலத்தில் தமிழுக்கு ஐம்பத்தியோறு எழுத்துக்கள் என்றும் கூறுவர். சமஸ்கிருதத்தில் 51 எழுத்துக்கள் என்றும் கூறுவர். இந்த 51 எழுத்துக்களும் ஐந்து எழுத்தில் அடக்கம். எனவே, ஐந்து எழுத்து பீஜ மந்திரத்தையும் ஓம் என உச்சரித்தல் சிறப்பு, அல்லது போதும்.

மூலாதாரத் தலமும் சக்கரமும்

நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம்

தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்

தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்

கூவிக் கொண்டீசன் குடிஇருந் தானே

திருமூலர், திருமந்திரம், பாடல்

மூலத்திரு விரல் மேலுக்கு முன்னின்ற

பாலித்த யோனிக் கிருவிரல் கீழ்நின்ற

கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர்

ஞாலத்து நாபிக்கு நால்விரல் கீழதே

திருமூலர், திருமந்திரம், பாடல் 580

மூலாதாரம் இருக்குமிடம்: தொப்புளுக்கு நான்கு விரற்கிடை உள்ளேயும், அங்கிருந்து பன்னிரண்டு விரற்கிடை பருமன் கீழேயும் உள்ள இடத்தில் மூலாதாரம் உள்ளது. மலத் துவாரத்திற்கு இரண்டு விரற்கிடை மேல் உள்ளது. குறிக்கு இரண்டு விரற்கிடை கீழ் உள்ளது. இங்கு குண்டலினி உருவாகும். மூலாதாரத்தில் இருந்து தான் வாசியோகம் தொடங்க வேண்டும். அங்கு தாபிக்கும் மந்திரம் - ஓம். இதை அறிந்து செய்தால், உடலையும் உயிரையும் இணைக்கின்ற இறைவன், விரும்பி அங்கு குடியிருப்பான். உயிரும் நிலைத்திருக்கும்.

மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை

மூலநிலத்தில் எழுகின்ற மூர்த்தியை

ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்

பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே

திருமூலர், திருமந்திரம், பாடல் 590/

மூலாதாரத்தில் ஆண்களுக்கு ஆண்தன்மை கொண்ட உயிர் சக்தி. இது எதிர்மறை உயிர் சக்தியாக (விந்து சக்தியாக) உள்ளது. இதைத்தான் மூலநிலத்தில் எழுகின்ற மூர்த்தியை என்கிறார் திருமூலர். அகாரம் என்கிறார் போகர். விந்து சக்தியை வாசியுடன் குண்டலினியாக சுழுமுனை வழியே, மேலே ஏறி மேலைநிலம் என்ற ஆக்ஞா சக்கரத்தில் உள்ள பெண் சக்தியான நாத சக்தியுடன் இணைந்தால், வாலை உருவாகி, அமிர்தம் சுரக்கும். அந்த அமிர்தத்தை உண்டு வந்தால் முதிர்ந்த வயதானவர்கள் கூட இளமை அடைவர். இது நந்தி என்ற சிவனின் மேல் சத்தியம். இது உண்மை என அறுதியிட்டுக் கூறுகிறார் திருமூலர்.

மூலாதாரத்தின் நிறம்: மாணிக்கச் சிவப்பு. 

இதழ்கள்: நான்கு தாமரை இதழ்கள்.

பீஜ மந்திரம்: ஓம், அ உ ம்.

சிவ பீஜ மந்திரம்: ஓம், அ உ ம்.

சுவாசம்: ஒரு நாளைக்கு 3600 சுவாசங்கள்.

பூதங்கள்: நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் ஒடுக்கம்.

அவத்தைகள்: ஐந்து அவத்தைகளும் ஒடுக்கமாக அமைந்துள்ளன.

வித்துக்கள்: அகர, உகார, மகார, நாத, விந்து என்ற பஞ்ச வித்துக்களின் ஒடுக்கம்.

அதிதேவதைகள்: கணபதி, வல்லபை.

தொழில்: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய 5 தொழில்கள். 

வாருங்கள் மீண்டும் அடுத்த வாரம் சிந்திப்போம்!

என்றும் அன்புடன் உங்கள்,
முனைவர் கெ. நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved