🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஆயுதம் ஏந்துவதே சுதந்திரத்திற்கான தீர்வு! சாஹீது பகத்சிங் வாழ்க்கை குறிப்பு

'நாளை காலை மெழுகுவத்தி ஒளி மங்குவதுபோல் நானும் மறைந்துவிடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள், குறிகோள்கள் இந்த உலகத்தைப் பிரகாசிக்கச் செய்யும். மீண்டும் பிறப்போம்... எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்' என்று முழங்கிவிட்டு தூக்குக் கயிற்றுக்கு முத்தமிட்டனர் அந்த மாவீரர்கள். அதில் முதன்மையானவரான தோழர் பகத் சிங்கின் பிறந்ததினம் இன்று.

இந்திய விடுதலைப் போரட்டத்தை இளைஞர்கள் மத்தியில் கொண்டுசென்று சுதந்திர தீயை மூட்டியவர்களில் முதன்மையானவர் பகத்சிங். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து போனதால், இவர் ‘சாஹீது (மாவீரன்) பகத்சிங்’ என அழைக்கப்பட்டார். ஆங்கில ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் ஒருவர் ஆவார். கடுமையான போராளி, தீவிர எதிர்ப்பாளர், உண்மையான ஜனநாயகவாதி என ஆங்கில ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரன் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பகத்சிங் பஞ்சாபில் உள்ள லாயல் போர் (பாகிஸ்தான்) மாவட்டத்தில் பங்கா என்னும் கிராமத்தில் செப்டம்பர் 27, 1907-இல் சர்தார் கிஷன் சிங் மற்றும் வித்யாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். விடுதலைப் போராட்ட வீரர்களை கொண்ட குடும்பத்தில் பிறந்ததால், இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார் பகத்சிங்.

லாகூரில் உள்ள டி.ஏ.வி பள்ளியில் கல்வியைத் தொடங்கிய பகத்சிங், காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் மற்றும் ராஸ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் நட்புறவு கொண்டிருந்தார். 1919 ஆம் ஆண்டு, இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல், ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலைக் கண்டு நாடே கொதித்தது. இந்த கொடூரமான படுகொலை, பகத்சிங்கின் மனதில் பெரும் மாற்றத்தையும் விதைத்ததோடு மட்டுமல்லாமல், இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்துவந்து தன்னுடன் வைத்துக்கொண்டு, அவர் வெள்ளையர்களை விரட்ட சபதமும் பூண்டார்.

தன்னுடைய பதின்மூன்று வயதில், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்த பகத்சிங் அவர்கள், 1922 ஆம் ஆண்டு கோரக்பூரீல் நடந்த “சௌரி சௌரா” வன்முறைக்கு எதிராக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது, பகத்சிங் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். ‘அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெறமுடியாது, ஆயுதம் தாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெறமுடியும்!’ என முடிவுக்கு வந்த பகத்சிங், 1924 ஆம் ஆண்டு, சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் தொடங்கப்பட்ட “இந்துஸ்தான் குடியரசுக் கழகம்” என்னும் அமைப்பில் இணைந்தார். பிறகு 1926ல் பகத்சிங், சுகதேவ், பவதிசரண் வேரா, எஷ்பால் போன்றோர் இணைந்து “நவ்ஜவான் பாரத் சபா” என்ற இளைஞர் அமைப்பை நிறுவினர்.

1928 ஆம் ஆண்டு, “சைமன் கமிஷனை” எதிர்த்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் போலீஸாரால் தடியடிப்பட்டு இறந்தார். இதனால் கோபம்முற்ற பகத்சிங்கும், ராஜகுருவும் இணைந்து, லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாயினர். அதே நேரத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிராமாகப் போராடினர். இதனால், அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு “தொழில் தகராறு சட்ட வரைவு” என்ற ஒன்றை கொண்டுவந்தது. இச்சட்ட வரைவை ஏற்காத பகத்சிங் “சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்” குண்டு வீசுவதென்று தீர்மானித்தார். 1929 ஆம் ஆண்டு, ஏப்ரல் 8 ஆம் தேதி, இச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்ட பொழுது, குண்டுகளை வீசினர். இதனால் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டனர். 

சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியது மற்றும் துண்டு பிரச்சாரம் போட்டு “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டு தானே சரணடைந்த பின்னர், காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோர் ஆங்கில அரசின் 24 வது வயதில் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள்.

திருமணம் செய்துகொள்ளுமாறு வீட்டில் கட்டாயப்படுத்தியபோது, "இது திருமணத்துக்குரிய நேரமல்ல. நாடு என்னை அழைக்கிறது" என்று அவரின் தந்தை கிஷான் சிங்குக்குக் கடிதம் எழுதிய பகத்சிங்கிடம். "உன் பாட்டிக்காக (தன்னுடைய தாயார்) நீ ஒப்புக்கொள்" என்று தந்தை அவருக்கு மீண்டும் கடிதம் எழுதுகிறார். "நீங்கள் பாட்டிக்காகக் கவலைப்படுகிறீர்கள், நான் 33 கோடி மக்களின் தாயான நம் இந்திய மாதாவுக்காகக் கவலைப்படுகிறேன். அவளின் நலனுக்காக நான் எல்லாவற்றையுமே தியாகம் செய்கிறேன்” என்கிறார். நாட்டுக்காக சொந்த நலன்களை, ஆசைகளைத் துறந்த தேசத்துறவி பகத்சிங்.

ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல, அது ஒரு பாடமும் கூட. இன்றைய இந்தியாவில் எத்தனையோ இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் பகத்சிங் வாழ்க்கை போற்றத்தக்க ஒன்றாகும். விடுதலைப் போராட்ட உணர்வுகளை இளைஞர்கள் மனதில் விதைத்திட, தன் மரணத்தையே பரிசாகத் தந்த மாபெரும் போராளி. வாழ்வதன் மூலமாக மட்டுமல்லாமல், இறப்பதன் மூலமாகவும் ஒரு சகாப்தத்தினை உருவாக்க முடியும் என வாழ்ந்துக் காட்டியவர். அவர் வாழ்ந்த வாழ்க்கை காலம் குறுகியது என்றாலும் நூற்றாண்டுகளைக் கடந்து சுமந்து நிற்கும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved