🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - தொடர் 27

அன்புச் சொந்தங்களே வணக்கம்,

கடந்த இரண்டு வாரங்களாக நாம் நமது உடலில் உள்ள ஏழு ஆற்றல் நிலைகளில் முதல் இரண்டு ஆற்றல் நிலைகளாகிய மூலாதாரம் மற்றும் சுவாதிஷ்டானம் பற்றி அறிந்து கொண்டோம். இந்தப் பதிவில் நாம் மணிபூரகச் சக்கரத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

மணிபூரகச் சக்கரம் இருக்கும் இடமும் அதன் வடிவமும்:


மணிபூரகச் சக்கரம் இருக்கும் இடம் மனித உடலின் நாபிப்(தொப்புள்) பகுதியாகும். இது சுவாதிஷ்டானத்திற்கு எட்டு விரற்கடைக்கு மேல் உள்ளது.இந்தச் சக்கரம்,வட்டம், வட்டத்தினுள் மேல் நோக்கிய பிறைச்சந்திரனை உள்ளடக்கிய‌ பத்து இதழ் கொண்ட மஞ்சள் நிறத் தாமரை வடிவானது. 

ஜடராக்னி எனப்படுகின்ற தகிக்கும் ஜ்வாலையை மையத்தில் கொண்டது இந்தச் சக்கரம். ஜ்வாலை இருக்கும் இடம் முக்கோணத்தால் குறிக்கப்படுகிறது. இந்தச் சக்கரம் பிளவுபட்ட ரத்தினம் போல் ஒளிர்வதால் "மணிபூரகம்" எனப்பட்டது.

பத்துத் தாமரை இதழ்களும் பத்து யோக நாடிகளைக் குறிக்கும். அந்த நாடிகளின் சப்த பரிமாணம், டட,ணத, தத, தந, பப, என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றது. இதன் மையத்தில், 'நமசிவாய' மந்திரத்தின், 'ம' என்ற எழுத்தின் தத்துவம் விளங்குவதாகக் கூறப்படுகிறது.  இதன் பீஜ மந்திரம் 'ரங்' ஆகும். இதை முறையான பயிற்சி மூலம் உருவேற்றினால, குண்டலினி மணிபூரகத்தை அடைந்து இந்தச் சக்கரம் மலரும். 

இந்தச் சக்கரம் மலரும் போது, உடல் உறுதி பெறும். என்ன நேர்ந்தாலும் மனம் அமைதியுடன் இருக்கும். சுறுசுறுப்பும், கடுமையாக உழைக்கும் திறனும் கிடைக்கும். வயிறு, சிறுகுடல், கல்லீரல், மண்ணீரல் போன்ற உடல் உறுப்புகள் இச்சக்கரத்துடன் தொடர்புடையன. 

இந்தச் சக்கரத்தின் அதிதேவதை, ஸ்ரீ விஷ்ணுவும் லாகினி தேவியும் ஆவார்கள். ஆண்தெய்வம் ருத்திரன் என்றும் சில நூல்களில் கூறப்பட்டு இருக்கிறது.

மணிபூரகச் சக்கரத்தில் தேவி, இச்சாசக்தி ரூபிணியாக எழுந்தருளியிருக்கிறாள். அம்பிகையின் அருட்கருணை, மணிபூரகச் சக்கரத்தில் பொழியும் விதத்தை, ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பின்வரும் ஸ்லோகங்களால் துதிக்கிறது.

மணிபூராப்ஜ -நிலயா வதனத்ரய- ஸ‌ம்யுதா

வஜ்ராதிகாயுதோபேதா டாமர்யாதிபி -ராவ்ருதா

ரக்த வர்ணா மாம்ஸநிஷ்டா குடான்ன -ப்ரீத -மானஸா 

ஸ‌மஸ்த- பக்த-ஸுகதா லாகின்யம்பா- ஸ்வரூபிணி.

இதன் பொருள், மணிபூரகச் சக்கரத்தில், அம்பிகை, மூன்று முகங்களை உடையவளாக, வஜ்ராயுதம் உள்ளிட்ட ஆயுதங்களைத் தரித்தவளாக, டாமரி தொடங்கி பத்து சக்தி தேவதைகளால் சூழப்பட்டவளாக இருக்கின்றாள்.

இந்தச் சக்கரத்தில் ரத்தச் சிவப்பு வண்ணத்துடன், லாகினி என்ற பெயருடன் எழுந்தருளும் தேவி, உயிரினங்களின், தசைப் பகுதியில் உறைபவளாக, வெல்லம் சேர்த்துச் சமைக்கப்பட்ட அன்னத்தை (சர்க்கரைப் பொங்கல்) விருப்பத்துடன் ஏற்பவளாக, பக்தர்களுக்கு சுகத்தை அருளுபவளாக இருக்கிறாள். 

இதிலிருந்து, நாம் அறிய வேண்டுவது என்னவென்றால், ஒவ்வொரு சக்கரங்களிலும் மனித உடலின் எந்தெந்த பாகத்தில் தேவி உறைவதாகக் கூறப்பட்டிருக்கிறதோ, அந்தந்த உடல் பாகத்தை வலிவூட்டும் சக்தி படைத்த உணவினை அந்தந்தச் சக்கரஙகளில் வாசம் செய்யும் தேவி விரும்பி ஏற்கிறாள் என அறியப்படும்.

மணிபூரக சக்கர ரகசியம்.
ஸ்ரீ மூகாம்பிகை இருப்பிடம் 

தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயா

ஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்

தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக சரணம்

நிஷேவே-வர்ஷ்ந்தம் ஹரமிஹிரதப்தம் த்ரிபுவநம்

தாயே, நீலமேக ரூபமான,மணிபூரகச் சக்கரத்தை இருப்பிடமாகக் கொண்ட உனது சதாசிவத் தத்துவத்தை வணங்குகிறேன். அந்த மேகமானது, மணிபூரகச் சக்கரத்தில் உள்ள இருளை அகற்றும் மின்னல்களை உடையது. பற்பலவிதமான ரத்னாபரணங்களுடைய ஒளியினால் அது இந்திரனுடைய வில்லைப் போல் இருக்கிறது. காலாக்னி ருத்ரனால் தகிக்கப்படும் லோகங்களை தன் அம்ருத வர்ஷத்தால் குளிரச் செய்வது. 

 (ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர், சௌந்தர்ய லஹரி).

இதன் தொடர்ச்சியை வரும் வாரங்களில் சிந்திப்போம்.

என்றும் அன்புடன் உங்கள்,
முனைவர் கெ நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி,
கோயம்புத்தூர் -641014.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved