🔴 LIVE | முப்பெரும் விழா 2023


டிஎன்டி சாதிகளும் குற்றப்பரம்பரை சட்டமும்!

ஒரு மனிதனின் வாழ்நிலையை அவனது பிறப்பு தான் தீர்மானிக்கும் என்று மனுதர்மச் சட்டம் கூறுகிறது. அதே கருத்தைத் தான் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டமும் கூறுகிறது.

19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிரான்சு, இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் சுரண்டலுக்கு எதிராகவும், சமூகப் பொருளாதார மாற்றத்திற்காகவும் கலகங்கள் வெடித்தன. பிரெஞ்சு புரட்சியால் உத்வேகமடைந்த மக்களைக் கண்டு நடுங்கிய மேலைய வல்லரசுகள் முதலில் சுதந்திரமான வாழ்வியலைக் கொண்ட நாடோடி இனத்தவர்களைக் கட்டுக்குள் கொண்டு வர விரும்பின. அதன் பொருட்டு அம்மக்களைச் சமூக வாழ்வுக்கு அந்நியமானவர்கள் என்று கூறி பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களை கொண்டு வந்தன.

இந்தியத் துணைக்கண்டத்தை கைப்பற்றிய பிரித்தானிய அரசு அதே வழியில், தனது ஆதிக்கத்திற்கு அடிபணியாத மக்களையெல்லாம் காட்டுமிராண்டிகள், நாகரிகமற்றவர்கள், படிப்பறிவற்றவர்கள் என்றெல்லாம் முதலில் இழிவுபடுத்தத் தொடங்கியது. பின்னர் அம்மக்கள் மீது பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களை ஏவியது. அந்தச்சட்டங்களில் ஒன்று தான் சி.டி. ஆக்ட் (Criminal Tribes Act) எனப்படும் குற்றப்பழங்குடிகள் சட்டமாகும்.

இந்தச் சட்டப்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் எந்தவொரு சாதியையும் குற்றப்பரம்பரை என்று அறிவிக்கலாம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஒரு சாதியில் பிறந்தவர்கள் அனைவரும் பிறவிக் குற்றவாளிகளாக கருதப்படுவர். 18 வயதுக்கு மேற்பட்ட  ஆண்கள் அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக் கூடாது. கச்சேரி எனப்படும் இதற்கென ஒதுக்கப்பட்ட மந்தையிலோ அல்லது காவல் நிலையத்திலோ விடிய விடிய விழித்திருக்க வேண்டும். பக்கத்து ஊருக்குச் செல்வதாக இருந்தால் நதாரிச்சீட்டு எனப்படும் நடமாடும் சீட்டு பெறப்பட வேண்டும். மேற்கண்ட விதிகளை மீறுவோர்க்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை தண்டனை உண்டு.

1871ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு கொண்டு வந்த சட்டத்தில் வீடிழந்தோர், குறி சொல்வோர், பாலியல் தொழிலில் ஈடுபடுவோர், பிச்சைக்காரர்கள், நாடோடிகள், அரவாணிகள் ஆகியோர் தண்டிக்கத் தகுதி படைத்தவர்கள் என்று கூறப்பபட்டது. பின்னர் மேலும் பல்வேறு திருத்தங்களை அச்சட்டத்தில் கொண்டு வந்து தமிழ்நாடு, மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், வங்காளம் ஆகிய மாநிலங்களில் 200க்கும் மேற்பட்ட சாதியினர் குற்றப் பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர்.

1911ஆம் ஆண்டு குற்றப்பழங்குடிகள் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 90 சாதிகள் கொண்டு வரப்பட்டன. நாவாபே குறவர், தொம்பர், சேலம் மேல்நாட்டுக் குறவர், ஆத்தூர் கீழ்நாட்டுக் குறவர், வெள்ளையங்குப்பம் படையாச்சி, பிறமலைக்கள்ளர், மறவர், அகமுடையார், காலாடி, கங்காலி, வேப்பூர் பறையர் ஆகியோர் இச்சட்டத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் வாழ்ந்து வந்த பிரமலைக் கள்ளர்கள் இச்சட்டத்தினால் குறிவைத்து தாக்கப்பட்டனர்.

‌1913ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் மதராஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் முதன்முறையாகக் குற்றச்செயல்கள் நடைபெறும் மாவட்டங்களின் புள்ளி விவரக் கணக்கை உள்ளூர் அதிகாரிகளிடம் கோரினார். அதன்படி திருநெல்வேலி , மதுரை, இராமநாதபுரம், தஞ்சாவூர், ஆகிய மாவட்டங்களில் வழிப்பறி, மாடு கடத்தல், கொள்ளை, கபுள்க்களவு, கொலை  முதலிய பெருங்குற்றச் செயல்கள் நடைபெறுவதாக உள்ளூர் அதிகாரிகள் புள்ளிவிவர அறிக்கை அளித்தனர். 

அதன் பிறகு 1914இல் மதுரை மாவட்டத்தில் வாழ்ந்து வந்த பிறமலைக்கள்ளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வெகுண்டெழுந்தனர். ஏப்ரல் 3, 1920ஆம் ஆண்டு பெருங்காமநல்லுரில் விடியற்காலையில் ஆயுதங்களோடு காவல்படையினர் ஊரைச் சுற்றி வளைத்தனர். பொதுமந்தையில் வைக்கப்பட்ட கைரேகைப் பதிவேட்டில் அனைத்து ஆண்களும் உடனடியாக கைரேகை வைக்க வேண்டுமென்றும், தவறும் பட்சத்தில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்தனர். பெருங்காமநல்லூர் மக்களோ பொது மந்தையில் ஒன்றாகக் கூடினர். கைரேகை சட்டத்திற்கு எதிராக காவல்துறையோடு கடும்வாக்குவாதம் செய்தனர். நாங்கள் எல்லோரும் குற்றப்பரம்பரை இல்லை, எங்களில் சிலர் திருடலாம். அதற்காக எல்லோரையும் திருடர்கள் என்று சொல்வதா? இது அரசாங்கத்திற்கே மிகப் பெரும் அவமானம். எந்த மனிதனும் குற்றவாளியாக பிறப்பதில்லை. பிறப்பிற்கும் குற்றத்திற்கும் சம்பந்தம் உண்டா? நாங்கள் ஒரு போதும் கைரேகை வைக்க முடியாது என்று கடும் சினம் கொண்டு பேசினர்.


அந்த மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத காவல்துறையினர் ஆத்திரமடைந்து துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். துப்பாக்கி குண்டுகளை நெஞ்சிசேலந்தியபடி பலரின் உடல் சரிந்தது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவருக்கு மாயாக்காள் என்னும் பெண்மணி தண்ணீர் தர முயன்றார். அப்போது அந்தப் பெண்மணியை இரக்கமின்றி சுட்டு வீழ்த்தினர். மொத்தம் 16 பேர் நிகழ்விடத்திலே வீரச்சாவடைந்தனர்.

உயிரிழந்தோர் பெயர் பின்வருமாறு: மாயாண்டித் தேவர் என்ற நொத்தினி, குள்ளன் பெரிய கருப்பன், விருமாண்டித் தேவர், சிவன் காளைத் தேவர், ஆ.பெரியாண்டி, ஓவாயன் என்ற முத்துக்கருப்பன், மோனை சின்னாத் தேவர், சூ.மாயாண்டித் தேவர், முனியாண்டி என்ற மாயாண்டித் தேவர், பெ.உடையாத் தேவர், உ.சின்னமாயத் தேவர், மா.பெரிய கருப்பத் தேவர், ந.வீரணத் தேவர், உ.முத்தையாத் தேவர், வீரத் தேவர், பெ.மாயாக்காள்.

காவல்துறையின் இரத்த வெறியோ அடங்க மறுத்தது. மேலும் 200க்கும் மேற்பட்டோரை கைது செய்தது. கையிலும், காலிலும் சங்கிலி பிணைத்ததோடு நீரும், உணவும் தர மறுத்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமங்கலம் நீதி மன்றத்திற்கு ஆடு மாடுகளை ஓட்டிச் செல்வது போல கால்நடையாகவே அழைத்துச் சென்றது.

பெருங்காமநல்லூர் மக்களின் ஈகமும், அதனைத் தொடர்ந்து நாடெங்கும் நடைபெற்ற போராட்டங்களும் குற்றப்பழங்குடிகள் சட்டத்தை செயலிழக்க வைத்தன. விடுதலை வீரர் ஜார்ஜ் ஜோசப், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், செய்யூர் ஆதி திராவிடர் இராஜ கோபால், ருக்குமணி லெட்சுபதி, ஆதிதிராவிடர் வி.ஐ.முனியசாமிப் பிள்ளை ஆகியோர் கடும் போராட்டம் நடத்தினர்.

1946ஆம் ஆண்டு மே 30ஆம் நாள் பேராயக்கட்சி ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சர் ப.சுப்பராயன் அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் மூலம் இந்தச் சட்டம் அடியோடு நீக்கப்பட்டது. பெருங்காமநல்லூர் கிராமத்தில் உயிர்நீத்த 16 பேர்களின் பெயர் தாங்கிய நினைவுத்தூண் எழுப்பப்பட்டுள்ளது. பிரித்தானிய வல்லாதிக்க எதிர்ப்புப்போரில் உயிர்நீத்த ஈகியருக்கு இந்நாளில் வீரவணக்கம் செய்திடுவோம்!.

குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்புப்போரில் உயிர் நீத்த பெருங்காமநல்லூர் ஈகியர் நினைவு நாள் இன்று 03.04.1920

நன்றி:கதிர்நிலவன்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved