🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கொ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 28

அன்புச் சொந்தங்களே வணக்கம்,

கடந்த மூன்று வாரங்களாக நாம் நமது உடலில் உள்ள ஏழு ஆற்றல் நிலைகளில் முதல் மூன்று ஆற்றல் நிலைகளாகிய மூலாதாரம்,   சுவாதிஷ்டானம்,  மணிபூரகம் பற்றி அறிந்து கொண்டோம். இந்தப் பதிவில் நாம் அனாகத சக்கரத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

அனாகத சக்கரம் இருக்கும் இடமும் அதன் வடிவமும்:

ஒரு முக்கோணம் அதைச் சுற்றி வட்டம் அதனைத் தொடர்ந்து பன்னிரண்டு இதழ்கள் கொண்ட தாமரை அடர் சிவப்பு நிறத்தில் இருதயத்தின் மத்தியில் அமைந்துள்ளது. நான்காவதாக உள்ளது அனாகத சக்கரம். வடமொழியில் ‘அனாகத’ என்றால் ‘ஒலிக்கப்படாத’, என்று பொருள்; அதாவது, ஒலிக்கப்படாத ஓசையைக் குறிப்பிடுவதாக அமைகிறது. அனாகத சக்கரம் ஆங்கிலத்தில் Heart Chakra என்று அழைக்கப்படுகிறது.

இருப்பிடம்:  மார்பு மத்தி

நிறம்:  அடர் சிவப்பு மற்றும் ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் 

ஒலி:  ரம் 

தொடர்புடைய மூலகம்:  காற்று

தொடர்புடைய புலன்:  பார்வை

இத்தலத்தின் பூதம்: அக்னி

வேதம்: சாம வேதம்

தொழில்: அழித்தல்

அதிதேவதை: ருத்தரனும், ருத்தரியும்.

அனாகதம் கீழுள்ள சக்கரங்களான மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரகம் ஆகியவற்றையும் மேலுள்ள சக்கரங்களான விசுத்தி, ஆக்ஞா,  மற்றும் சகஸ்ராரம் ஆகியவற்றையும் இணைக்கிறது. பொருட்களின் மீது பற்றுள்ள வாழ்க்கையையும், அப்பற்றினைக் கடந்த உன்னதமான மனநிலையையும் இணைக்கும் பாலமாக அனாகத சக்கரம் விளங்குகிறது. அனாகத சக்கரத்தின் சீரான இயக்கத்தால் சமூகத்தோடு அன்பான பிணைப்பு ஏற்படுகிறது; வாழ்வை இரசனையோடு வாழ முடிகிறது.


இப்பதிவில் நாம் பார்க்கவிருப்பது:

அனாகத சக்கரத்தின் தன்மைகள் மற்றும் அனாகதத்தோடு தொடர்புடைய உறுப்புகள் தன் மீதும் பிறர் மீதும் நேசம் கொள்ளுதல், பிறரின் உணர்வுகளைப் புரிந்துணர்தல், மன்னிக்கும் தன்மை கொண்டிருத்தல் ஆகிய குணங்களை நிர்வகிப்பது அனாகத சக்கரமாகும். சக உயிர்களிடத்து பரிவு, அக்கறை, இரக்கம் காட்டுதல் ஆகிய மேன்மையான குணங்களை நிர்வகிப்பதும் அனாகத சக்கரமாகும்.

எதிர்பார்ப்பற்ற அன்பைக் காட்ட வல்ல மனதை அடைய அனாகத சக்கரம் சீராக இயங்க வேண்டும். பிறரிடம் ஆழ்ந்த உறவைப் பேணுவது, நிலவும் சூழல்களை ஏற்கும் பண்பு, மாற்றங்களை ஏற்கும் பக்குவம் இவையாவும் அனாகத சக்கரத்தின் சீரான செயல்பாட்டால் சாத்தியப்படுகிறது.

உங்களின் தவறுகளையும் பிறரின் தவறுகளையும் மன்னித்து அவற்றைக் கடந்து போதல், அன்பால் சூழப்பட்டு வாழ்தல், மகிழ்வோடிருத்தல், சுற்றியுள்ள உலகோடு அய்க்கியப்படுதல் இவையாவும் உங்களின் வாழ்க்கையை உன்னத நிலைக்குக் கொண்டு செல்லும். அனாகத சக்கரத்தின் சீரான இயக்கம் இவற்றை சாத்தியமாக்கும்.

இருதயம், நுரையீரல், இரத்த ஓட்டம் மற்றும் தைமஸ் சுரப்பி ஆகியவற்றை நிர்வகிப்பது அனாகத சக்கரமாகும். ஒவ்வொருவரும், இந்த சக்கரங்களின் பீஜ மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் என்பது உறுதி.

அடுத்த வாரம் மீதமுள்ள சக்கரங்கள் பற்றி சிந்திப்போம்.

என்றும் அன்புடன் உங்கள்
முனைவர் கெ நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்
பூ.ச. கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved