🔴 LIVE | முப்பெரும் விழா 2023


20-ஆம் நூற்றாண்டின் இளைஞர்களின் ஆதர்சநாயகன் புரூஸ் லீ!

70-களில் இவர் வசப்படாத வாலிபர்களே இல்லை...!

உருவமே இல்லாமல் இருங்கள். தண்ணீரைப் போல. உங்களது மனதை காலியாக வைத்துக் கொள்ளுங்கள். கோப்பையில் தண்ணீரை ஊற்றும்போது, அது கோப்பையின் வடிவம் பெறுகிறது. பாட்டிலில் ஊற்றும்போது பாட்டிலாக மாறுகிறது. அதுபோலத்தான் நாமும் இருக்க வேண்டும். தண்ணீரைப் போல இருங்கள் எப்போதும்.. இது ப்ரூஸ் லீ சொன்ன வார்த்தை.

ப்ரூஸ் லீ.. கேட்டதுமே உடல் முடிக்கால்கள் சிலிர்க்கும்.. நரம்பு முறுக்கேறும்... கை கால்களில் துடிப்பு குடியேறும்.. அப்படி ஒரு மாய மந்திரம் இந்தப் பெயர். இன்று ப்ரூஸ் நம்மிடையே இல்லை.. இறந்து 40 வருடங்களாகி விட்டது. ஆனால் இந்தச் சொல்லை மந்திரமாக உச்சரிக்கும் உதடுகள் ஏராளம் ஏராளம்.

1973 ஜூலை 20 இல் மரணமடைந்த லீ நம்மை வி்ட்டுப் பிரிந்து கிட்டத்தட்ட இரு தலைமுறைகள் ஓடி விட்டன. ஆனாலும் நம்மிடையே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது அவரது நினைவுகள் அவரது கை கால்கள் பறப்பதைப் போல.

20ம் நூற்றாண்டின் அதிரடி அடையாளம்:

20ம் நூற்றாண்டின் அதிரடி அடையாளமாக விளங்கியவர் லீ. தற்காப்புக் கலைஞர். இயக்குநர், நடிகர், தத்துவவாதி.

அடிக்கிற கைதான் அணைக்கும்:

அன்புக்கு அடிமையானவர் ப்ரூஸ் லீ. அடிக்கிற அதே வேகத்தில் குழந்தை போல அன்பு செலுத்தவும் தயங்காதவர். அருமையான மனிதர். எளிமையானவர்.

சீனர்களின் பெருமை:

சர்வதேச அளவில் சினிமாவில் ஜொலித்த முதல் சீனர் ப்ரூஸ் லீதான். சீனத்திலிருந்து கிளம்பி அமெரிக்க பாப் கலாச்சாரத்தின் அடையாளமாக மாறிய அதிசயத்துக்குரியவர் லீ.

டிராகன் வருடத்தில் பிறந்த புயல்:

1940ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி பிறந்தார் ப்ரூஸ் லீ. இவர் பிறந்த தேதி, நேரம் ஆகியவை சீன வழக்குப்படி பார்த்தால் அது டிராகன் வருடமாகும். அதாவது என்ட்ரி ஆப் தி டிராகன் என்று நாம் ப்ரூஸ் லீயின் பிறப்பைக் கொண்டாடலாம்.

நர்ஸ் வைத்த பெயர்:

ப்ரூஸ் லீக்கு ப்ரூஸ் என்ற பெயரை வைத்தவர் அவர் பிரசவித்தபோது அங்கிருந்த நர்ஸ்தான். உண்மையில் ப்ரூஸ் லீயின் தாயார் அவருக்கு வைத்த பெயர் லீ ஜூன் பேன். அதாவது இது பெண்களுக்கு வைக்கும் பெயராகும். பெண் குழந்தைகள் பெயர் வைத்தால் சாத்தான்கள் குழந்தைகளை அண்டாது என்ற நம்பிக்கையால் இப்படி பெண் பிள்ளை பெயரை வைத்தாராம் ப்ரூஸ் லீயின் தாயார்.

13 வயதில் செம அடி:

ப்ரூஸ் மிகவும் அமைதியானவர். யாரிடமும் சண்டைக்குப் போக மாட்டார். சாது. 13 வயதாக இருக்கும்போது தெருவில் ஒரு சண்டையில் இவரை இழுத்து விட்டு விட்டனர். அதில் ப்ரூஸ் லீக்கு செம அடி விழுந்தது. அவ்வளவுதான பொங்கி விட்டார் ப்ரூஸ் லீ.

விங் சுவான்:

உடனடியாக விங் சுவான் என்ற தற்காப்புக் கலையைக் கற்றார். துரிதமாக அதில் தேறினார். அதன் பின்னர் ப்ரூஸ் லீ ஒரு சண்டையில் இறங்கினால் அதில் தோற்றதே இல்லை. அடி அடி அடிதான்.

அமெரிக்காவுக்கு ஓடு:

சாதுவாக இருந்த ப்ரூஸ் லீ புயலாக மாறியதால் பயந்து போன பெற்றோர் அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர். அதற்குக் காரணம் உள்ளூரில் பெரிய புள்ளி ஒருவரை செம மாத்து மாத்தி விட்டார் ப்ரூஸ்லீ. இதற்குப் பயந்தே அவரை அமெரி்காவுக்கு அனுப்பி வைத்தனர்.

தற்காப்புக் கலை மாஸ்டரானார்:

ஆனால் அமெரிக்காவில் கல்லூரியில் சேர்ந்த லீக்குப் படிப்பு ஏறவில்லை. படிப்பை விட்டார். ஜூன் பான் குங்பூ என்ற பெயரில் தனது ஸ்டைலில் குங்பூ கற்றுக் கொடுக்கும் பள்ளியைத் தொடங்கினார்.

சவால் சண்டை:

ஆனால் அப்போது சீனர் அல்லாதவர்களுக்கு தற்காப்புக் கலையைக் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று தற்காப்புக் கலைச் சட்டம் இருந்தது. இதையடுத்து வாங் ஜேக் மேன் என்பவருடன் ப்ரூஸ் லீ மோத வேண்டும். அதில் அவர் தோற்றால் சீனர் இல்லாதவர்களுக்கு ப்ரூஸ் லீ குங்பூ கற்றுக் கொடுக்கக் கூடாது என்று சவால் விடப்பட்டது.

அடித்து நொறுக்கிய அள்ளிய லீ:

சவாலை ஏற்ற ப்ரூஸ் லீ, ஜேக்கை அடித்து நொறுக்கி அள்ளிப் போட்டு விட்டார். அத்தனை பேரும் ப்ரூஸ்லீயின் மின்னல் வேகத்தைப் பார்த்து அசந்து போய் விட்டனர். அமெரிக்காவிலும் குங்பூ பிரபலமானது.

மின்னல் இடி அடி:

ப்ரூஸ் லீ என்றால் மின்னல் வேகம் என்றுதான் சொல்ல வேண்டும். நிஜத்திலும் சரி சினிமாவிலும் சரி அவர் மெதுவாக சண்டை போட்டதே இல்லை.

ஒரு இன்ச் காயம்:

ஒரு இன்ச் அளவுக்கு காயத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் செமையாக பன்ச் வைப்பதில் ப்ரூஸ் லீ வல்லவர். இவரிடம் மோதி காயப்படாதவரே கிடையாது.

நுன்சுக்கால் டேபிள் டென்னிஸ்:

நுன்சுக் உபகரணத்தை வைத்து டேபிள் டென்னிஸ் ஆடக் கூடியவர் ப்ரூஸ் லீ. அதேபோல தனது ஒரு கையின் ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலை கீழே வைத்து புஷ் அப் செய்வதில் கில்லாடி.

டாக்டர்களை மிரட்டியவர்:

1970ல் முதுகில் அடிபட்டு காயமடைந்தார் ப்ரூஸ் லீ. அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் இனிமேல் குங்பூ செய்யக் கூடாது என்று லீயிடம் கூறினார். ஆனால் துரித கதியில் உடல் நலம் சரியாகி மறுபடியும் ஆக்ரோஷமாக சண்டை போட்டு டாக்டர்களைப் பிரமிக்க வைத்தவர் ப்ரூஸ் லீ.

1973ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி மரணமடைந்தார் ப்ரூஸ் லீ. அவரது மரணம் உலக இளைஞர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ப்ரூஸ் லீயால் உலகம் முழுவதும் பரவிக் கிடந்த குங்பூ கலையைக் கற்ற அத்தனை பேரும் லீக்காக வீர வணக்கம் செலுத்தினர்.

உலகை பாதித்த முக்கிய நபர்:

20ம் நூற்றாண்டில் உலகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய முக்கிய இளைஞர் ப்ரூஸ் லீ ஆவார். 70களில் உலக வாலிபர்களை வசீகரித்த முக்கிய முகம் ப்ரூஸ் லீ. இன்றும் கூட எத்தனையோ இளைஞர்களின் ஆதர்ச மாஸ்டராக இருக்கிறார் லீ.

நன்றி: முருகவேல் குட்டிவேல்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved