🔴 LIVE | முப்பெரும் விழா 2023


செல்வி,ஜீவரத்னா எழுதும் இந்தியாவில் தொல்லியல்துறை ஆய்வுகள் ஒரு வரலாற்றுப்பார்வை

தொல்லியல் துறை இன்று பல்வேறு பரிணாமங்களில் விரிவடைந்து வளர்ச்சி பெற்றுள்ள துறையாக வளர்ந்துள்ளது. வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல் மற்றும் வரலாற்று கால தொல்லியல் என இரு பெரும் பிரிவுகளாக, மனிதப் பண்பாட்டின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆவணப்படுத்துதல், அவற்றை விளக்குதல், பண்பாட்டு வரலாற்றை புரிந்துகொள்ளுதல், பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியை கால வரிசைப்படுத்துதல், மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தல் என்பனவற்றை உள்ளடக்குகின்றன.

ஃப்ளவியோ பியோன்டோ என்ற இத்தாலிய வரலாற்றறிஞர் பண்டைய ரோமின் தொல்பொருட்களைக் கொண்டு ஒரு முறையான காலக் கணிப்பு முறையை உருவாக்கினார். அதனால் இவர் தொல்லியலைக் கண்டுபிடித்தவர் என்றும் போற்றப்படுகிறார். சிரியேக்கோ பிசிகோலி என்ற இத்தாலிய வணிகர் கிழக்கு மத்திய கடலில் உள்ள தொல்பொருட்களை கொண்டு கமான்டரியா என்ற ஆறு தொடர் புத்தகங்களை 14ஆம் நூற்றாண்டில் எழுதினர். அதனால் இவர் தொல்லியலின் தந்தை என்று போற்றப்படுகிறார். பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் இத்துறை பெரும் வளர்ச்சியை அடைந்தது.

ஐரோப்பியர்கள் மறைந்து போனதாக கருதப்படும் ட்ராய் நிலத்தை பற்றி அறிவதற்கான முயற்சிகளும், சார்லஸ் டார்வின் பரிணாமக் கொள்கையும் இத்துறை வளர்ந்ததற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை அலெக்சாண்டர் கன்னிங்காம் இந்தியத் தொல்லியல் ஆய்வின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவர் இந்திய அரசுத் தொல்லியல் மேற்பரப்பாய்வுத் துறையின் முதல் பரப்பாய்வாளர் ஆவார். 1861 ஆம் ஆண்டு இப்பதவியில் பிரித்தானிய இந்திய அரசால் நியமிக்கப்பட்டார். இவர் ஓர் ஆங்கிலேய இராணுவ அதிகாரியுமாவார். பழங்கால இந்திய எழுத்து முறையான அசோகர் பிராமியைப் படித்தறிந்த ஜேம்ஸ் பிரின்செப்பைச் சந்தித்தபிறகு தொல்லியல் ஆய்வில் நாட்டம் கொண்டார். இந்தியாவில் தொல்லியலில் முறையாக ஆய்வுகள் தொடங்குவதற்கு இவருடைய செயல்பாடுகள் ஒரு முக்கிய காரணமாகும். இவர் ஜேம்ஸ் பிரின்செப்புடன் சேர்ந்து இந்தியாவில் தொல்லியல் துறையைத் துவங்க 1840களில் முயற்சித்தார். ஆனால் அப்போது அம்முயற்சி வெற்றிபெறவில்லை. பின்னர் இவருடைய திட்டம் லார்ட் கானிங் என்பவரால் 1860 களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தியாவின் தொல்பழங்கால வரலாற்றின் தந்தை என்று புகழப்பட்டவர் ராபர்ட் புரூஸ் ஃபூட். 'ராபர்ட் புரூஸ் ஃபூட்  செப்டம்பர் 23, 1834ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள சில்டன்ஹாம் என்ற ஊரில் பிறந்தார். தனது 24ம் வயதில் சென்னையில் இந்திய புவியியல் அளவைத் துறையில் நிலவியலாளராக பணியில் சேர்ந்தார். இவர் 1863ம் ஆண்டு மே 30 அன்று சென்னைக்கு அருகில் பல்லாவரம் பகுதியில் உள்ள திரிசூலம் மலைப்பகுதியில் கல் கோடாரி ஒன்றை கண்டுபிடித்தார்.

அதன் பின்னர் செப்டம்பர் 28, 1863ம் ஆண்டு ஆத்திரபாக்கம், கொற்றலை ஆற்றுப் படுக்கையில் முதுமக்கள் தாழி, பானைகள், கற்கால வெட்டுக் கருவிகளை கண்டுபிடித்தார். இக்கருவிகள் சுமார் 5 லட்சம் முதல் 15 லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கருவிகளை ஹோமோ எரக்டஸ் என்னும் மனித இனம் பயன்படுத்தியதாக தெரிய வருகிறது. இவரின் இந்த அரிய கண்டுபிடிப்பு பழங்கால மனித இனத்தின் வாழ்க்கை இந்திய துணைக் கண்டத்திலும் இருந்துள்ளது என தெரிய வந்துள்ளது.

ராபர்ட் புரூஸ் ஃபூட் 1884ம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தில்  3.5 கி.மீட்டர் நீளமுள்ள பெலும் குகையைக் கண்டுபிடித்தார். இது இந்தியாவில் உள்ள இரண்டாவது நீளமான குகையாகும். இவர் 42 ஆண்டுகள் வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். இவரின் ஆய்வுகள் மனிதனின் வரலாற்றை அறிந்துக் கொள்ள உதவுகிறது. இவர் கண்டுபிடித்த கற்கருவிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் 1904ம் ஆண்டில் சென்னை அருங்காட்சியகம் எடுத்து காட்சிக்கு வைத்துள்ளது. இவர் கற்கருவிகள் கண்டுபிடித்து 149 ஆண்டுகள் முடிந்து 150 வது ஆண்டு தொடங்கியுள்ளது. இது நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ராபர்ட் புருஸ் ஃபூட் சேலம் மாவட்டம் ஏற்காடு பஸ் ஸ்டேண்ட் அருகே உள்ள ஐவி காட்டேஜ் என்னும் வீட்டில் வாழ்ந்தார். இவர் டிசம்பர் 29, 1912ம் ஆண்டு இறந்தார். இவரின் கல்லறை ஏற்காட்டில் ஹோலி டிரினட்டி சர்ச்சில் உள்ளது. இவரது கல்லறையை ஒட்டி இவரது மனைவி, மாமனார், குழந்தை கல்லறைகளும் இருக்கிறது. இந்தியாவின் தொல்பழங்கால வரலாற்றுத் தந்தை ராபர்ட் புரூஸ் ஃபூட் ஏற்காட்டில் வாழ்ந்தார் என்பது ஏற்காட்டிற்கு பெருமையானது.

ஜான் மார்ஷல் 1902-ம் ஆண்டு துவங்கி 1928-ம் ஆண்டு வரையில் பிரிட்டிஷ் இந்தியா அரசாங்கத்தின் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக இருந்தார். இவர்தான் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ தொல்லியல் களங்களில் அகழாய்வுகளை மேற்கொண்டு உலகிற்கு அறிவித்தவர். 

ஜான் மார்ஷல் மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா எனும் இரண்டு இடங்களில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளின் கூறுகளை ஒருங்கிணைத்து ஆய்வு செய்து, இந்த இரண்டு நாகரிகங்களும் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டறிந்தார். மேலும் இது திராவிட மொழிக்குடும்பத்தின் நாகரிகமாகத்தான் இருக்க வேண்டும் என்றும், வேத நாகரிகத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்தார். வேத காலத்தை விட 1500 ஆண்டுகள் பழமையான நாகரிகம் இது என்பதையும் ஜான் மார்ஷல் தெரிவித்தார்.

தொல்லியல் துறை தலைவராக இருந்த அலெக்சாண்டர் கன்னிங்காம் (Alexander Cunningham 1853-56) தான் முதன்முதலில் சிந்து சமவெளி ஆய்வைத் தொடங்கி வைத்தார். இந்த ஆய்வை அவர் தொடங்கியதற்கு முக்கியக் காரணம் அவருக்கு பௌத்தத்தின் தொன்மம் குறித்து இருந்த தேடலே ஆகும். பெளத்தத்தின் தொன்மங்களைத் தேடிப் புறப்பட்டவர்களின் விடையாகவே சிந்துவெளி நாகரிகம் நமக்குக் கிடைத்தது என்கின்றார் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் சுந்தர் கணேசன்.

தமிழ்நாட்டில் மத்திய தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், ஷர்மா பாரம்பரிய கல்வி மையம், காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கேரளா பல்கலைக் கழகம் போன்ற பல இடங்களில் பல ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு தமிழ்நாட்டு தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு சேர்க்கின்றன.

மதுரைக்கு வடக்கே சில கற்கால கருவிகளும், 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஆவியூர் என்ற இடத்தில் பழங்கற்கால கருவி ஒன்றும் ராபர்ட் புரூஸ் ஃபூட் அவர்களால் கண்டெடுக்கப்பட்டது. 

மத்திய தொல்லியல் துறையின் தென்னிந்திய வட்டத்தின் தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றியபோது 1950-களின் பிற்பகுதியில் மதுரை, திருமங்கலம், மேலூர், பெரியகுளம் ஆகிய இடங்களில் கிராமம் கிராமமாக கள ஆய்வுகள் மேற்கொண்டு பல தொல்லியல் இடங்களையும், தொன்மைச் சின்னங்களையும் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டில் முனைவர் கே.ராஜன் மற்றும் அவரது மாணவர்கள் வைகைநதி பதவியேற்பு பிடிப்பு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாதகப்பட்டி மற்றும் புலிமான்கோம்பை ஆகிய ஊர்களில் பொது ஆண்டின் தொடக்க நூற்றாண்டுகளைச் சேர்ந்த நடுகற்களை கண்டறிந்து வெளிக் கொணர்ந்தனர்.

தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வைகை நதிக்கரையில் 1987-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள எல்லப்பட்டு என்ற ஊரில் இரும்பு உருக்கும் தொழில் கூடப் பகுதி வெளிக்கொணரப்பட்டது. இதனை தொடர்ந்து அண்மையில் மத்திய தொல்லியல் துறையால் வைகை நதிக்கரையின் இருமங்கிலும் உள்ள 293 ஊர்களில் கள ஆய்வுகள் மேற்கொண்டு, பெருங்கற்காலத் தாழிகள், கல்வெட்டுகள், சிற்பங்கள், நடுகற்கள், பண்டைய வாழ்வியல் போன்றவற்றை கண்டறிந்து முறையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

அண்மையில் தமிழர் பண்பாட்டு புகழ் பரப்பிவரும் கீழடி அகழாய்வு பகுதியானது 110 ஏக்கர் நிலப்பரப்பிற்கு மேல் அதிக சிதைவில்லாமல் தென்னந்தோப்புகளால் பாதுகாக்கப்பட்டு 9 டிகிரி 51'  29" வடக்கு அட்ச ரேகைக்கும்,  98 டிகிரி 11' 69" கிழக்கு தீர்க்க ரேகைக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள ஒரு தொன்மை நாகரிக குடியிருப்பு மற்றும் தொழிற்கூட பகுதி ஆகும்.

தமிழகத்தின் ஒரு கோயில் நகராக திகழும் மதுரை நெடுஞ்சாலை வழியே கிழக்கு தென் கிழக்காக 13 கி.மீ தொலைவில் கீழடி அமைந்துள்ளது. கீழடி அகழாய்வு பணியிடத்தில் வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வைகை ஆறு செல்கிறது. கிழக்குப் பகுதியில் உள்ள மணலூர் கிராமத்தில் வடக்கில் ஒரு கண்மாய் அமைந்துள்ளது. வடக்கில் இயற்கை நீர்நிலைக் காட்சியளிக்கிறது. இது போலவே அகரம் என்ற ஊர் கீழடியில் தென்கிழக்கில் அமைந்துள்ளது. மேற்கே கொந்தகை என்னும் ஊர் ஒரு எல்லையாக விளங்குகிறது. இவ்வாறு சுற்றியுள்ள அனைத்து பாதைகளும் ஊரணிகள் கண்மாய்கள் என இயற்கை அரண்களாக பெற்று வரலாற்று தொடக்க காலம் முதல் சமகாலம் வரை மனிதன் வாழ்வதற்கு உகந்ததாக திகழ்கிறது.

முந்தைய ஆண்டுகளில் இப்பகுதியில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு, பெங்களூர் பிரிவு அகழாய்வு மேற்கொண்டு அகழாய்வில் புதைந்துள்ள கட்டப்பகுதியும், அரும்பொருட்களையும் வெளிக்கொணரும் வண்ணம் பெரும்பரப்பு அகழாய்வு தொடர்ந்து நடந்துவருகிறது. எட்டாம் கட்ட அகழ்வாய்வானது  முறைப்படுத்தப்பட்ட வகையில் நேர்த்தியுடன் பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் கீழடியில் நடந்தேறி வருகிறது.

கட்டுரையாளர்: செல்வி.ஜீவரத்னா,
கட்டபொம்மன் அகாடமி குரூப் தேர்வு பயிற்சி மாணவி


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved