🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பகத்சிங், உத்தம்சிங் ஆகிய புரட்சியாளர்கள் உருவாக காரணமான ஜாலியன் வாலாபாக் படுகொலை!

ஆங்கில ஏகாதிபத்திய அதிகாரியால் 1000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்ட ஜாலியன் வாலாபாக் நிகழ்வின் 104 வது ஆண்டு தினம் இன்று.

கருப்புச்சட்டம் எனப்படும் ரெளலட் சட்டம் அல்லது ரவ்லட் சட்டம் (Rowlatt Act) என்பது பிரித்தானிய இந்தியாவில் இயற்றப்பட்ட ஒரு குற்றவியல் சட்டமாகும். மார்ச் 1919ல் இச்சட்டம் இயற்றப்பட்டது. விடுதலை/சுயாட்சி வேண்டும் இந்தியர்களை அடக்கவும், காலனிய அரசுக்கு எதிரான சதிகளை நசுக்கவும் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

1917ம் ஆண்டு ரஷ்யப் புரட்சியில் போல்ஷெவிக்குகள் (பொதுவுடைமைவாதிகள்) வெற்றி பெற்ற பின்னர் இந்தியாவில் பஞ்சாப், வங்காளம் போன்ற இடங்களில் புரட்சி இயக்கங்களின் செயல்பாடு அதிகரித்தது. முதலாம் உலகப் போரின் போது ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட்ட இந்திய இடைக்கால அரசு போல்ஷெவிக்குகளோடு தொடர்பு கொள்ள முயன்று வந்தது. மேலும் போர் முடிந்தபின்னர் உருவான பொருளியல் மந்த நிலையால் இந்தியாவில் தொழிலாளர் போராட்டங்கள் வலுத்து வந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த காலனிய அரசு சர் சிட்னி ரெளலட் என்பவரது தலைமையில் குழு ஒன்றை அமைத்து புரட்சி இயக்கங்களை ஒடுக்க வழிவகைகளை ஆராய்ந்தது. இது குறித்து விசாரிக்கவும், இவ்வியக்கங்களைக் கட்டுப்படுத்தும் வழிவகைகளைப் பரிந்துரைக்கவும் ரவ்லட் குழு நியமிக்கப்பட்டது.

ரெளலட் குழுவின் பரிந்துரையின் பேரில் ரெளலட் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் தீவிரவாதி என்று சந்தேகிக்கப்பட்ட எந்த பிரித்தானிய இந்தியக் குடிமகனையும் ஈராண்டுகள் நீதிமன்ற வழக்கு விசாரணையின்றி சிறை வைக்க அரசுக்கு அதிகாரம் அளித்தது. ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் காவல் துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், நீதிமன்ற அனுமதியின்றி சிறையிலிடவும் இச்சட்டம் வழிவகுத்தது. மேலும் கூட்டங்களில் பங்கெடுக்க தடைவிதிக்கலாம், குறிபிட்ட இடத்தில் மட்டும் வசிக்க நிர்பந்திக்கலாம். இந்த சட்டதின் கீழ் கைது செய்யப்படுபவரை மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்து தண்டனை வழங்குவார்கள், குற்றஞ்சாட்டபட்டவருக்கு மேல்முறையிடு செய்யும் அனுமதி கிடையாது. 

இந்த சட்ட அமலாக்கத்தை எதிர்த்து காந்தி ஏப்ரல் 6 ஆம் தேதி நாடுதழுவிய வேலை நிறுத்ததுக்கு அழைப்பு விடுத்தார், ஜின்னா தனது "பேரரசின் சட்டமன்ற சபை உறுப்பினர்" பதவியில் இருந்து விலகினார், தாகூர் 1915 ஆம் வருடம் ஆங்கில அரசு வழங்கியிருந்த knighthood விருதை துறந்தார். நாடு முழுவதும் வலுவான போராட்டங்கள் தொடர்ந்தது. நாடெங்கும் இச்சட்டத்தைக் கண்டித்து ஊர்வலங்கள், கூட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன. 

இச்சட்டத்துக்கு எதிராக 1919ம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று இதே நேரத்தில் பஞ்சாப் மாகாணத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலா பாக் திடலில் ஆங்கிலேய கொடுங்கோல் சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருந்தனர். கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என வயது வித்யாசமே இன்றி பல்லாயிரக்கணக்கானோர் ஆங்கிலேயே ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற பெருங்கனவோடு அங்கு கூடியிருந்தனர்.

ஆனால், ஆங்கில அரசுக்கோ வேறு கனவு இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது இந்திய சுதந்திர போராட்டத்தை கொலைநடுங்க செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டியிருந்தது. அதன் படி நான்கு பக்கமும் பெரும் சுவர்களால் ஆன ஒரே ஒரு வாசல் மட்டுமே கொண்ட அந்த ஜாலியன்வாலா பாக் திடலில் அமைதியாக நடந்துகொண்டிருந்த போராட்ட உரைகளுக்கு மத்தியில் ஆங்கிலேயரின் குண்டு மழை பொழிந்தது.

ஆங்கில படையை தலைமை தாங்கி வந்த ஜெனரல் டயர் பாரபட்சமின்றி அங்கிருந்த போராட்டக்காரர்களை நோக்கி சுட உத்தரவிட்டான். அவன் உத்தரவிட்ட அடுத்த மாத்திரமே ஆங்கில துப்பாக்கிகுழல்களின் ஓட்டையில் இருந்து 1600க்கும் அதிகமான குண்டுகள் சுதந்திர போராட்ட வீரர்களின் நெஞ்சை பிளந்தது. பலர் தப்பிக்க வழியின்றி அங்கிருந்த கிணற்றில் விழுந்து இறந்தனர். சிலர் கூட்டத்தில் சிக்கி நசுங்கி செத்தனர். ஆயிரக்கணக்கான சுந்திர போராட்ட வீரர்கள் தாய் நாட்டுக்காக ஒரே நேரத்தில் உயிர்நீத்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு பேசியிருந்த ஜெனரல் டயர், நான் அங்கு வெறும் கூட்டத்தை கலைக்க செல்லவில்லை. இனி ஒருவர் ஆங்கில அரசை எதிர்க்க வேண்டுமென்றால் முதலில் இந்த சம்பவம்தான் மனதில் தோன்ற வேண்டுமென்று ஒரு பயத்தை விதைக்க சென்றேன். என்னிடம் மட்டும் படைகள் இன்னும் அதிகமாக இருந்திருந்தால் இன்னும் அதிகமான கொலைகள் விழுந்திருக்கும் என்றும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் சொன்னான்.

இந்த படுகொலையை கண்டித்து நாடு முழுவதிலும் இருந்து வந்த கண்டனங்களை தொடர்ந்து ஆங்கில அரசு "ஹண்டர் கமிஷன்" என்ற குழுவை அமைத்து விசாரணையை நடத்தியது. விசாரணையின் முடிவில் டையரை பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டது. அதே சமயத்தில் இதற்கு முரணாக டயர்க்கு "பஞ்சாப்பின் பாதுகாவலன்" என்று பொறிக்கப்பட்ட வாளும், ஆங்கில ஆதரவாளர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியும் வழங்கபட்டது.

இந்த படுகொலையில் இருந்து இரண்டு துடிப்புமிக்க போராளிகள் உருவானார்கள். இந்த சம்பவம் நடந்த உடனே அங்கே வந்து அங்கிருந்த ரத்தம் தோய்ந்த மண்ணை அள்ளி தன்னிடம் வைத்து கொண்டு இந்திய நாட்டிற்காக தன் வாழ்க்கையை அர்பணிப்பதாக உறுதி கொண்டான் 12வயது சிறுவன் ஒருவன். அவன்தான் பின்னாளில் ஆங்கில அரசே பார்த்து பயந்து நடுங்கி அவசர அவசரமாய் தூக்கிலிட்ட 23 வயது புரட்சியாளன் பகத்சிங்.

மற்றுமொரு சிறுவன் இந்த படுகொலைக்கு பழிதீர்க்க முடிவு செய்து சம்பவம் நடந்த நாளில் இருந்து 20 வருடம் கழித்து லண்டனில் வைத்து ஜெனரல் டயரை சுட்டுக்கொன்ற உத்தம்சிங். இவருக்கு ஜாலியன்வாலா பாக் நினைவு மண்டபத்தில் சிலையும் கூட வைக்கப்பட்டுள்ளது.நடந்த கூட்டமொன்றில் பிரித்தானியப் படைவீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதால் ஜாலியன்வாலா பாக் படுகொலை நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இச்சட்டம் கொடுமையானது என்பதை ஏற்ற காலனிய அரசு மார்ச் 1922 ல் இதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved