🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வருணம் சாதியாக மாறியது எப்படி? டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கர்

பாபாசாகிப் அம்பேத்காரின் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு இக்கட்டுரை வெளியாகிறது.

வருணம் சாதியாக மாறியதன் வரலாற்றுப் பின்புலத்தை ஆழமாக ஆராய்ந்தவர் மாமேதை அம்பேத்கர். "வருணதரும முறையைச் சாதியாக உருமாற்றம் செய்ததுதான் பிராமணியம் தனது வெற்றிக்கு பின் முதன்மையாக ஈடுபட்ட மிகப்பெரிய சுயநல நோக்குள்ள செயலாகும்" என்கிறார் அம்பேத்கர். 

"பிராமணியம் வர்ணத்தைச் சாதியாக மாற்றியது என்று நான் கூறும்போது தொழிலையும் செல்வக் குவிப்பையும் பரம்பரையாக வருவதாக அது மாற்றி விட்டது என்பதையே குறிப்பிடுகிறேன்" என விளக்குகிறார் அம்பேத்கர். 

நால்வர்ண முறை ஆரம்பகட்டத்தில் உற்பத்தியும், அது சார்ந்தும் மனிதர்களை வகை பிரிக்கும் ஒரு முயற்சியாகத்தான் தோற்றம் எடுத்தது. அப்போது இறுக்கமான ஒன்றாக இல்லை. வர்ணம், அதாவது அந்தஸ்தும் தொழிலும்-ஒரு குறிப்பிட்ட கால அளவே நீடித்த முதல் கட்டத்தில் இருந்து ஒருவரது வர்ணம் ஆயுட்காலம் வரை நீடிக்கும் இரண்டாம் கட்டத்துக்கு நகர்ந்தது. இறுதியில் பரம்பரை அடிப்படையில் வரும் சொத்து போல வருணம் மாறிவிட்டது. 

ஒரு யுகம் அளவுக்கு- அதாவது நான்காண்டு காலம் வரை மட்டுமே நீடிக்க அனுமதிக்கப்பட்ட வர்ணம் நான்காண்டுகள் முடிந்ததும் "மன்வந்தரம் " எனும் சோதனையை எதிர்கொள்ள வேண்டும். பண்டிதர்கள் அடங்கிய குழு ஒன்று நடத்தும் நேர்காணல் இது. நேர்காணலில் தரம் கண்டறியப்பட்டு அதற்கேற்ப வருண நீட்டிப்பு/ வருண உயர்வு/ வருணத்தாழ்வு வழங்கப்பட்டது. 

இயக்கப் போக்கில் வருணத்தை இறுதி செய்யும் இடமாக குருகுலம் மாறியது. கல்வி பயின்று முடிந்தபின் உபநயனம் எனும் ஒரு சடங்கின் மூலம் மாணவனது வருணம் என்ன என்பதை பெற்ற பயிற்சி தேர்ச்சிகளின் அடிப்படையிலேயே குரு தீர்மானித்தார். குரு முடிவுசெய்த வருணம் அம்மாணவனது ஆயுட்காலம் வரை நீடித்தது. 

குருகுலமுறையில் குருவால் முடிவு செய்யப்படும் வருணம் ஒருவனது ஆயுட்காலம் வரை நீடித்தது பிராமணியத்திற்கு நிறைவளிக்கவில்லை என்று குறிப்பிடுகிறார் அம்பேத்கர். " இந்த முறையில், ஆச்சாரியார் ஒரு பிராமணனின் குழந்தையை சூத்திரனாக இருப்பதற்குத்தான் தகுதி உடையவன் என்று அறிவிக்கக்கூடிய நிலை இருந்தது. இத்தகைய ஒரு முடிவு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதில் பிராமணியத்துக்கு இயல்பாகவே அக்கறை ஏற்பட்டது. வர்ணம் பரம்பரையாக வரவேண்டும் என்று அது விரும்பியது. வர்ணத்தைப் பரம்பரையாக வருவதாகச் செய்தால்தான் பிராமணர்களின் குழந்தைகள் சூத்திரர்களாக அறிவிக்கப்படாமல் காப்பாற்ற முடியும்" என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். 

தன் நோக்கத்தை நிறைவேற்றும் ஒரு தந்திர வழிமுறையாக உபநயனம் செய்யும் உரிமையை குருவிடம் இருந்து பறித்து தந்தைக்கு வழங்கியது பிராமணியம். உபநயனம் செய்யும் உரிமை பெற்ற தந்தை தன் குழந்தைக்கும் அவரது வருணத்தைத் தானே தருவார் ! இப்போது வருணம்  பரம்பரைச் சொத்தானது. 

"வர்ணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை குருவிடமிருந்து எடுத்துவிட்டு தந்தையிடம் அதைக் கொடுத்ததன் மூலம்தான் இறுதியாக வர்ணத்தைச் சாதியாக மாற்றியது பிராமணியம்" .

"மேற்கூறிய வர்ணம் சாதியாக உருமாறிய எல்லா விவரங்களும் நாம் விரும்பும் அளவுக்குச் சரியாக இல்லாமலும் இருக்கலாம். ஆயினும் மேலே விவரித்துள்ளது போன்ற கட்டங்களிலும் வழிகளிலும் தான் வருணம் மறைந்துபோய் அதனிடத்தில் சாதி வந்திருக்கவேண்டும். இதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் அம்பேத்கர். 

நான்கு வருணங்களுக்கு அப்பால் 'அவர்ணர்கள்' என்ற பெயரில் வர்ணம் அற்றவர்களாக ஒரு பிரிவினர் உண்டாக்கப்பட்டு -இம்மக்கள் பிரிவை 'சண்டாளர்' என்று மனு பெயரிட்டு, தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டனர். இதன் காரணமாகவே மனுதர்ம சாஸ்திரத்தை 1927 டிசம்பரில் தீயிட்டுக் கொளுத்தினார் அம்பேத்கர். மனுதர்ம சாஸ்திரத்தைப் பற்றியும் ஆழமாக ஆராய்ந்து நமக்கு அளித்திருக்கிறார் அண்ணல் அம்பேத்கர்.

நன்றி:ஆறுக்குட்டி பெரியசாமி

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved