🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஹைதராபாத்தை மீட்ட ஆப்ரேசன் போலோ!

பிரிட்டன் அரசு இந்தியாவை விட்டு வெளியேறும்போது, இங்கு 562 சுதேச அரசுகள் இருந்தன. அவற்றில் காஷ்மீர், ஜுனகத் மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று சுதேச அரசுகளைத் தவிர மற்றவை இந்தியாவுடன் இணைந்தன. அந்த சமயத்தில் ஹைதராபாத்தின் நிஜாமாக இருந்தவர் மீர் உஸ்மான் அலி கான் பகதூர்.

பிரிட்டிஷ் ஆட்சியிலேயே, ஹைதராபாத்திற்கு என்று பிரத்யேக ராணுவம், ரயில் சேவை மற்றும் தபால் துறை போன்ற வசதிகள் இருந்தன. அந்த நேரத்தில், மக்கள் தொகை மற்றும் மொத்த தேசிய உற்பத்தியில் இந்தியாவின் மிகப்பெரிய முடியாட்சி அரசாக திகழ்ந்தது ஹைதராபாத். 82698 சதுர மைல் பரப்பளவு கொண்டது ஹைதராபாத். இது இங்கிலாந்தையும் ஸ்காட்லாந்தையும் சேர்த்த மொத்த பரப்பளவு என்பது குறிப்பிடத்தக்கது.

நிஜாம் மன்னரின் ஆளுகையின் கீழ் இருந்த ஹைதரபாத்தில் பாகிஸ்தான் ஆதரவு ரஜாக்கர்கள் ஏற்கெனவே பல வகையிலும் கலகங்கள் செய்து வந்தனர். 1947 நவம்பர் மாதத்தில் ஹைதராபாத் சமஸ்தானம் ரஜாக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்தியாவுடன் ஹைதராபாதை இணைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிஜாம், ஹைதராபாத், இந்தியாவுடன் இணைக்கப்பட்டால், இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவமுடியுமா என்று கேட்டு பாகிஸ்தான் தந்தை என்று அழைக்கப்பட்ட முகம்மது அலி ஜின்னாவிடம் கோரிக்கை விடுத்தார். இதில் இருந்து ஹைதராபாத் நிஜாமின் இந்திய எதிர்ப்பு நிலையை தெரிந்துக் கொள்ளலாம்.

சென்னை மாகாணத்திற்குப் பக்கத்தில் இருந்த ஹைதராபாத் சமஸ்தானத்தை மீட்பதில், ஓமந்தூர் ராமசாமியின் உதவியும் ஒத்துழைப்பும் தேவைப்பட்டது. சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவிவகித்த ஓமந்தூரார், ஹைதராபாத் சமஸ்தானத்தை மீட்கும் விஷயத்தில் பெரும் பங்காற்றினார். ஹைதராபாத் சமஸ்தானத்தில் நடக்கும் தேச விரோத சதி வேலைகளை ஓமந்தூரார் கூர்ந்து அவதானித்து வந்தார். பெல்லாரி மாவட்ட ஆட்சியரான ஐ.சி.எஸ்.கே.எம்.அனந்தராமன், சென்னை மாகாணப் பகுதி ராணுவத் தளபதி மேஜர் ஸ்ரீ நாகேஷ் உள்ளிட்ட பலரைத் தினமும் தொடர்புகொண்டு நிலவரங்களை அறிந்து டெல்லிக்குத் தகவல்களை அனுப்பிக்கொண்டே இருந்தார். இவற்றின் அடிப்படையில் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. சர்தார் வல்லபாய் பட்டேல் ஓமந்தூராரை அடிக்கடி தொலைபேசியில் ஆலோசனை கேட்டு செயல்பட்டார். ஹைதராபாத் சமஸ்தானத்தில் படை பலமும் ஆயுதங்களும் பெரிய அளவில் ரகசியமாகக் குவிக்கப்பட்டு வருகின்றன என்று ஓமந்தூரார் எச்சரித்தார்.

இறுதியில் ஹைதராபாதை இந்தியாவுடன் இணைக்க இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அந்த நடவடிக்கை 'ஆபரேஷன் போலோ' என்று அறியப்பட்டது. இந்த பெயர் காரணத்திற்கும் ஒரு முக்கிய பின்னணி உண்டு.

அந்த காலத்தில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான போலோ விளையாட்டு மைதானங்கள் கொண்டதாக இருந்த ஹைதராபாத்தில் 17 போலோ விளையாட்டு மைதானங்கள் இருந்தன.

ஐந்து நாட்கள் நீடித்த 'ஆபரேஷன் போலோ' நடவடிக்கையில், ஹைதராபாத் ராணுவத்தின் 1373 ரஜாக்கர்கள் (தனியார் ராணுவம்) கொல்லப்பட்டார்கள். ஹைதராபாத் அரசின் 807 இளைஞர்களும் உயிரிழந்தார்கள்.

இந்திய ராணுவத்தின் 66 வீரர்கள் உயிரிழந்தனர், 97 பேர் காயமடைந்தனர். இந்திய ராணுவத்தின் நடவடிக்கை தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னா செப்டம்பர் 11 இல் இறந்தார்.

ஹைதராபாதின் கடைசி நிஜாம் மீர் உஸ்மான் அலி கான், 1886ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாளன்று பிறந்தார். 1911 முதல் 1948 வரை ஹைதராபாதை ஆட்சி செய்த அவர், 1967 பிப்ரவரி 24ஆம் தேதியன்று அமரரானார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved