🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மனிதகுல வரலாற்றைத் தேடும் அகழாய்வுப் பணிகள்!

ஒவ்வொரு மனிதனுக்கும் நாம் யார் என்ற கேள்வி எழுவது இயல்பு. இதற்கு விடைதேடிச்சென்றால் அதிகபட்சம் ஒவ்வொருவரும் அதிகபட்சமாக ஐந்து தலைமுறை வரை ஆண் மூதாதையர் பெயர்களை அறிந்து வைத்துள்ளனர். இதனைத்தாண்டி அவர்களின் வாழ்வியல், பண்பாடு, மொழி குறித்தான எந்தவிதமான தகவல்களும் தெரியாது. இதற்கு விடைதேட முற்படுவதுதான் அகழ்வாய்வு. தனி மனிதனைப்பற்றியாக அல்லாமல் ஒரு மனிதக் கூட்டத்தினுடைய வாழ்வியல், உடலமைப்பு, பண்பாடு எப்படி இருந்தது என்பதை தெரிந்துகொள்ள உதவியாக இருப்பது அகழாய்வு. 

மண்ணில் புதையுண்டு காணப்படும் தொல்லியல் சான்றுகளையும், அவை கிடைக்கும் சூழல்களையும் அறிவியல் பூர்வமாக அகழ்ந்து (தோண்டி), முறையாகப் பதிவுசெய்து சேகரித்து பகுப்பாய்வு செய்வது அகழாய்வாகும். பண்பாட்டு எச்சங்களை வகைப்படுத்தி அறிவியல் முறையில் ஆய்தலாகிய அகழாய்வு தொல்லியல் வரலாற்றின் ஒரு முக்கியப் பிரிவாகும்.

அகழாய்வு மக்கள் வாழ்ந்த பகுதி (Habitation sites), ஈமச்சின்னங்கள் அமைந்த பகுதி (Burial sites) ஆகிய இருவிடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் வாழ்ந்த பகுதி என்பது அரண்மனை, ஊர், கோயில், கோட்டை, ஆற்றங்கரையோரங்கள், கடற்கரை பட்டினம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றினை அகழாய்வுக்கு உட்படுத்தி வரலாறு அறிதல் ஒரு முறையாகும். மனிதர்கள் இறந்த பின் புதையுண்ட இடத்தில் அமைக்கப்பட்ட ஈமச்சின்னங்களான கல்வட்டம், கல்திட்டம், கற்குவை, நெடுங்கல், தாழி, நடுகல் ஆகியவற்றை அகழாய்வு செய்தல் ஒரு முறையாகும்.

அகழாய்வில் கிடைத்த தொல் பொருட்கள் அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆராயப்படுகின்றன. காலக்கணிப்பு செய்வற்கு கரிமக்கணிப்பு முறை (radiocarbon dating), ஒளி உமிழ் காலக்கணிப்பு முறை (thermoluminescence), மரவளையக் கணிப்பு முறை (dendrochronology) ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

அகழாய்வுக்குப் பின்னர் அகழாய்வுகள் குறித்த அறிக்கைகளை, அதாவது கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்களை வரலாற்றுப் புரிதலோடு, தொடர்புடைய விடயங்களோடு வெளியிடுதல் அகழாய்வு அறிக்கை ஆகும்.

அகழாய்வுக்குப் பின்னர் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் அருங்காட்சியகத்தில் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கக் காட்சிப்படுத்தப்படுகின்றன.

தமிழக அகழாய்வுகளில் பெரும்பாலும் சங்க கால ஊர்களான கரூர், பூம்புகார், அழகன்குளம், மாங்குளம், மாங்குடி, கொடுமணல், கொற்கை, வசவசமுத்திரம், கீழடி ஆகியவை அகழாய்வு செய்யப்பட்டுள்ளன. அவை பண்டைய தமிழக சமூக, பண்பாட்டு வரலாற்றை அறிய உதவுவதோடு தமிழக வரலாற்றுக் காலத்தை இன்னும் முன்னோக்கி கொண்டு செல்லவும் உதவுகின்றன.

அகழ்வாய்வு மூலம் கிடைக்கும் பொருட்களின் வயதினை கணக்கிட 1. தொல்பழங்காலம் 2.வரலாற்றுக்காலம். என இரண்டு வகையாக பிரிக்கின்றனர். 

தொல் பழங்காலம் என்பது வரலாற்றுக்கு முந்தையக் காலமாகும். இக்காலம் கற்காலம் என்றும், வரலாற்றுக்கு முந்தைய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. தொல் பழங்காலம் மனித இனம் பூமியில் தோன்றிய காலத்தில் இருந்து தொடங்குவதாகக் கருதலாம். எழுத்துச் சான்றுகள் இல்லாத காலத்தில் மனிதன் வாழ்ந்து விட்டுச் சென்ற எச்சங்களைக் கொண்டு மனித குல வரலாற்றை அறிவது தொல் பழங்கால வரலாறு ஆகும். தொல் பழங்காலத்தில் வாழ்ந்த மனித இனம் கற்கால மனித இனம் என்று என்று அழைக்கப்படுகிறது. தொல் பழங்காலத்தில் கற்களைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடி மனிதன் உணவைத் தேடினான். மனித குல வாழ்விற்கு கற்களே பெரிதும் பயன்படுத்தப்பட்டதாலும், அவைகளை வேட்டையாடுவதற்கேற்ற கருவிகளாக மாற்ற மனிதன் முதலில் சிந்திக்கத் தொடங்கியதாலும் அக்காலம் கற்காலம் என அழைக்கப்படுகிறது.


தமிழகத்தில் பழைய கற்காலம் முதல் பெருங்கற்காலம் வரையிலான காலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என வழங்கப்படுகிறது. அதன்படி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை (1). பழைய கற்காலம் - Palaeolithic Period (2). நுண்கற்காலம் - Mesolithic or Microlithic Period (3). புதிய கற்காலம் - Neolithic Period (4) பெருங்கற்காலம் - Megalithic Period அல்லது இரும்புக்காலம் - Iron Age Period.


தமிழகத்தில் அத்திரம்பாக்கம் என்ற இடம் தொல்பழங்கால (Prehistoric) மக்களின் வாழ்விடமாகும். கற்கருவிகளைப் பயன்படுத்தி வேட்டையாடி, உணவு சேகரித்த மக்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்துள்ளனர். இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயம் செய்தல், ஆடு-மாடு வளர்த்தல் போன்றவற்றை அறிந்திருக்கவில்லை. மேலும் இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களின் பயனையும் அறிந்திருக்கவில்லை. இம்மக்களின் சான்றுகள் இந்த இடத்தில் மண்ணில் புதையுண்டு காணப்படுகின்றன. இது உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த தொல்பழங்கால இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved