🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தொழில் முக்கியம் தான் தொழிலாளி முக்கியமில்லையா? - 12 மணிநேர வேலை சரியா?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 12ந் தேதி தொழிலாளர் நலத்துறை அமைச்சரால் முன்வைக்கப்பட்ட தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா - 2023 கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. இந்த சட்டத்திருத்த மசோதா 12 மணி நேர வேலை நேரமாக மாற்றுகிறார்கள் என்பதாக பலரின் மனதில் பதிந்துள்ளது. ஒரு உதாரணத்திற்காக அமைச்சர் 12 மணி நேரம் என்று கூறியதை, அனைவரும் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றுவதாக கூறுகிறார்கள். ஆனால், அந்த சட்டத் திருத்தத்தில் உச்சபட்ச வேலை நேரம் எத்தனை மணி நேரம்  என்று ஒரு இடத்திலும் இல்லை. இந்த சட்டத்திருத்தம் ஏற்கெனவே உள்ள சட்டத்தில் மாறுதல்களை செய்யவில்லை. மாறாக, ஏற்கெனவே உள்ள சட்டப் பிரிவுகளை ஒன்றுமில்லாமல் செய்கிறது.

தொழிற்சாலைகள் சட்டத்தில் 51, 52, 54, 55, 56, 59 ஆகிய 6 பிரிவுகள் வேலை நேரம், உணவு இடைவேளை, விடுமுறை போன்றவை குறித்து விளக்குகின்றன. உதாரணமாக, தொழிற்சாலையில் விபத்து  ஏற்படுகிறது. மழைநீர் புகுந்து விடுகிறது. அவசரமாக உற்பத்தி செய்ய வேண்டி இருக்கிறது போன்ற நிலைகளில் தற்போதுள்ள சட்டப் பிரிவு 65, ஏற்கெனவே உள்ள 6 பிரிவுகளில் இருந்து அந்த நிறுவனத்திற்கு விலக்கு கொடுக்கிறது. அதற்கு தொழிற்சாலை ஆய்வாளர் அனுமதி கொடுக்க வேண்டும். தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கக் கூடிய  திருத்த மசோதாவில், தொழிற்சாலை ஆய்வாளரிடம் அனுமதி பெறத் தேவையில்லை. மாநில அரசு நினைத்தால், ஒரு தொழிற்சாலை அல்லது குறிப்பிட்ட வகை தொழிற்சாலை அல்லது ஒரு பகுதியில் உள்ள தொழிற்சாலை அல்லது மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து இந்த 6 பிரிவுகளை நீக்கிவிடலாம். அதாவது 65ஏ என்ற பிரிவு, 65வது பிரிவையும் அதற்கு முன்பு உள்ள 6 பிரிவு களையும் ஒன்றுமில்லாமல் செய்துவிடலாம்.

இந்த புதிய சட்டப் பிரிவு 65ஏ, நெகிழ்வு  தன்மையுடன் கூடிய பணிக்காக, கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதே தவிர, வேலை நேரம் 12 மணி நேரமாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அது 16 மணி நேரமாக கூட இருக்கலாம். இப்போது உள்ள சட்டப்படி, 16 மணி நேரம் வரை வேலை பார்க்கக்கூடிய நிறுவனங்கள் பலவும் உள்ளது. பணியின் போது, ரிலிவர் ஒருவர் வரவில்லை என்றால் தொழிலாளி தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். அந்த நேரத்திற்கு மிகைநேர பணிக்கு ஊதியம் வழங்கப்படும். தற்போதைய சட்டத்திருத்தத்தின்படி, 12, 14, 16 மணி நேரம்  என வேலை வாங்கிக் கொள்ளலாம். மிகை  நேர பணிக்கான ஊதியம் தரத் தேவையில்லை என்பதாக அமைகிறது. தமிழ்நாடு அரசு கடுமையான முயற்சி செய்து, தொழில்களை கொண்டு வந்து, வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்று  செயல்படுவதாக கூறுகிறது. 

ஆனால், அது  முதலாளித்துவத்தின் விதிகளுக்கு உட்பட்டது. காரல் மார்க்ஸ், ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில், முதலாளித்துவம் வளர வளர ஒவ்வொரு நாட்டுக்கும், அந்த நாட்டில் உள்ள தொழில்களை காப்பாற்றிக் கொள்வதே ஜீவ மரண பிரச்சனையாக மாறிவிட்டது என்று கூறியுள்ளனர். தற்போது, அந்த கட்டத்தை தாண்டி, நாடு கடந்து ஒவ்வொரு மாநிலமும், முதலீடுகளை ஈர்ப்பது ஜீவ மரண போராட்டமாக மாறியுள்ளது.

தொழில் வளர்ச்சி வந்தால் வேலை வாய்ப்பு பெருகும், பணப்புழக்கம் அதிகரிக்கும், மாநில அரசுக்கு கூடுதல் வரி வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டது. கூடுதல் வரி வரும் என்று கூறிவிட்டு, அந்நிய முதலீட்டுக்கு 10 வருடத்திற்கு வரி விலக்கு கொடுக்கிறார்கள். அதற்கு டேக்ஸ் ஹாலிடே  என பெயர் வைத்துள்ளனர். நவீன தாராளமயம் நடத்தும் தாக்குதலின் ஒருபகுதிதான் இந்த வேலை நேர அதிகரிப்பு. முதலாளித்துவம் இப்படி ஒரு நெருக்கடியை தருகிறது. புதிய தொழில் வந்தால் வேலைவாய்ப்பு கிடைக்கிறதா? இந்த சட்டத்திருத்தம் புதிதாக வரும் கம்பெனிகளுக்கு மட்டும் பொருந்துமா? புதிதாக வரும் கம்பெனியில் எதிர்பார்த்த வேலைவாய்ப்பில் 3ல் ஒரு பங்கு  வேலைவாய்ப்பு இல்லாமல் போகுமல்லவா? ஏற்கெனவே உள்ள கம்பெனிகள் இதை நோக்கித்தானே செல்லும்?  இந்தியாவில் நவீன தாராளமயம் அமலானபோது அதன் போஸ்டர் பாயாக இருந்தவர் சந்திரபாபு நாயுடு. அப்போது, அமெரிக்க குடியரசு தலைவர் பில் கிளிண்டன் இந்தியா வந்தபோது ஹைதராபாத் சென்றார். சந்திரபாபு நாயுடுவை பாராட்டி, இவர் மாநிலத்தின் சிஎம் என்று சொல்வதை விட சிஇஏ (தலைமை  செயல் அதிகாரி) என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அந்தளவிற்கு நேர்த்தியாக தொழில்களை கொண்டு வருகிறார் என்றார். அந்த சிஇஓ அதற்கு பிறகு தேர்தலில் வெற்றி பெறவே முடியவில்லை. அந்த மாநிலம் எல்லா வகையிலும் வளர்ந்து விட்டதா? அதற்கு பின்னர்தானே ஏற்றத்தாழ்வு அதிகமாகி, ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாக பிரிந்தது. ஆகவே, முதலீடுகள் வந்தாலே எல்லாம் தலைகீழாக மாறிவிடும் என்பது பொருத்தமான வாதமல்ல.

மறைமலை நகரில் இருந்த போர்டு  தொழிற்சாலையை மூடுவதாக அறிவித்த போது, அந்த தொழிற்சாலையை தக்க வைக்க தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் பெரும் முயற்சி செய்தார். ஆனால், வெற்றி பெற முடிந்ததா? போர்டு உற்பத்தி செய்த கார்கள் முழுவதையும் கனடாவிற்குதான் ஏற்றுமதி செய்தது. அமெரிக்காவில் இருந்து  தரைவழியாகவே ஏற்றுமதி செய்து கனடாவிற்கு கொண்டு செல்ல வாய்ப்பு இருந்தும், பூமி பந்தின் ஒருமுனை (இந்தியா)யிலிருந்து மற்றொரு முனைக்கு ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதிக்க முடிகிறது. அதற்கு காரணம், இந்தியாவில் குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் கிடைக்கிறார்கள், சுற்றுச்சூழல் அனுமதி எளிதாக கிடைக்கிறது என்பதுதான்.  போர்டு நிறுவனத்திற்கு வேறு ஒரு காரணம் கிடைத்ததும் ஆலையை மூடிவிட்டு சென்று விட்டார்கள். இதேபோன்றுதான் நோக்கியாவும் செய்தது. 10 வருடம் முழுமையாக வரி கட்டத்  தேவையில்லை. அதன்பிறகு அடுத்த 5 வருடம் 50 விழுக்காடு வரி கொடுத்தால் போதும் என்று சலுகை வழங்கப்பட்டது. நோக்கியா 15வருடம் முழுவதுமாக இருந்ததா? இல்லையே. 11வது வருடம் அதன் லாபம் குறைகிறது (நட்டம் அல்ல)  என்றவுடன் வெளியேறிவிட்டது. 

இதற்கிடையில், உற்பத்தி செய்ததை இந்தியாவிற்குள்ளேயே விற்றுவிட்டு, ஏற்றுமதி செய்ததாக ஒன்றிய அரசை ஏமாற்றியது. 21 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக ஒன்றிய  அரசு தில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. 2,430 கோடி  ரூபாயை ஏமாற்றியதாக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்தது. அந்த வழக்கு எந்த நிலையில் உள்ளது? முதலாளிகள் சங்கம் தலையிட்டு அந்த வழக்குகளை கைவிட வைத்துவிட்டது. ரெனால்ட் நிசான் நிறுவனம், 2021ம் ஆண்டு  மார்ச் மாதம், அவர்கள் நாட்டு சட்டத்தின் சரத்துக்களை காட்டி, தமிழக அரசு சில சரத்துகளை நிறைவேற்றவில்லை என்று கூறி, எடப்பாடி பழனிசாமி அரசிடம் இருந்து 1500 கோடி ரூபாயை பறித்துக் கொண்டது. எந்த நிறுவனம் வந்து தமிழகத்திற்கு லாபம் கிடைத்திருக்கிறது?

வேலை நேரத்தை உயர்த்துவது கொத்தடிமை முறைக்கும், காட்டுமிராண்டி காலத்திற்கும் செல்கிறோம் என்றுதானே பொருள். வேலையை முறைப்படுத்த வேண்டும். அரசு, நிர்வாகம், தொழிலாளர் செய்ய வேண்டியது என வரையறுத்துள்ளதில், யாரும்  தலையிடக் கூடாது என்பதாக இந்த சட்டத்  திருத்தம் அமைந்துள்ளது. இதன்படி, 12, 16, 18 மணி நேரம் என எவ்வளவு நேரம்  வேண்டுமானாலும் வேலை வாங்க முடியும். நேர வரையறை சட்டத்திருத்தத்தில் இல்லை. எனவே, அடிப்படையில் வேலை  நேரம் குறித்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இந்த சட்டத்திருத்தத்தின் வாயிலாக தளர்த்தி விட முடியும். அவசர வேலை என்றால் 12-16 மணி நேரம் வேலை பார்க்கக் கூடாதா? என கேட்கின்றனர். சட்டப்பிரிவு 65ன்படி, அனைத்து தொழிற்சாலைகளிலும் மிகைநேர வேலை நடைபெறுகிறது. அதற்காக ஒட்டுமொத்த கட்டுப்பாடுகளையும் நீக்குவது எப்படி சரியாக இருக்கும்?

தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுகிறபோது, கம்ப்யூட்டர்களை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஏற்கெனவே உள்ள வேலைவாய்ப்புகளை பறிக்காமல் அதை செயல்படுத்த வேண்டும் என்று கம்யூனிஸ்ட்டுகள் கூறிய போது, பலரும் கொந்தளித்தனர். மெட்டா உரிமையாளர் எலான் மஸ்க், மைக்ரோ சாப்ட் பில்கேட்ஸ் ஆகியோர், சாட்-ஜிபிடி வந்தால் பெரும் பிரச்சனை உருவாகும். அதை கவனமாக அணுக வேண்டும் என்று கூறுகிறார்கள். யாருக்கு பிரச்சனையாகும்? தொழிலே பிரச்சனையாகும். எல்லா இடத்திலும் ரோபோவை நிறுத்திவிட்டால், விற்பதை வாங்க கையில் பணம் வேண்டுமில்லையா. வேலையே இல்லை என்றால் எப்படி பணம் வரும். குறைந்த செலவில் கூட உற்பத்தி செய்யலாம், ஆனால், அதை வாங்க பணம்  வேண்டுமில்லையா? எனவே, இது ஒரு கடுமையான சூழல். 2008ல் அமெரிக்கா பொருளாதார பெருமந்தத்தை சந்தித்தது. இப்போதும் கடுமையான சூழலில் உள்ளது. அந்த நாட்டில் சராசரி வேலை நேரம் வாரத்திற்கு 35 மணி  நேரமாக உள்ளது. எந்த வெளிநாட்டு கம்பெனி வேலை நேரத்தை அதிகரிக்க கேட்கிறது? அந்த நாட்டில் 35 மணி நேரம் வைத்துக் கொண்டு, இந்தியாவில் கூடுதல் நேரம் தொழிலாளி வேலை செய்ய வேண்டும் என்று கூறுவதில் நியாயம் உள்ளதா? இதை அனுமதிக்கக் கூடாது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது, பணி நேரம் அதிகரித்தால் எழும் மிக மோசமான விஷயங்களை கருத்தில் கொண்டு இதை அனுமதிக்கக் கூடாது என்றார். இன்றைக்கும் நிலை மாறவில்லை. தாராளமயக் கொள்கையை தீவிரமாக ஒன்றிய அரசு அமல்படுத்துகிறது. மூலதனத்திற்கும் போக்கிடம் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறது. எனவே, இந்த சட்டத் திருத்தம் பொருத்தமற்றது.

நன்றி:க.கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved