🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பட்டாளத்து நாயக்கர் வீட்டு அஞ்சாநெஞ்சன் அழகர்சாமி!

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தங்களை ஒப்படைத்து எதிர்நீச்சலில் வாழ்ந்து காட்டிய அஞ்சாநெஞ்சன் அழகிரி.

நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகிய இயக்கங்களின் வளர்ச்சிப் போக்கில், தம்மை இணைத்து கொண்டு பணியாற்றியவர் பட்டுக்கோட்டை அழகர்சாமி! இவரது பெயருக்கு முன்பு பட்டுக்கோட்டை என்று அடைமொழி இருந்தாலும், இவரது சொந்த ஊர் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள காருகுறிச்சி ஆகும். இவரது பெற்றோர் வாசுதேவ நாயுடு - கண்ணம்மாள், தந்தையார் வாசுதேவ நாயுடு பட்டாளத்தில் சுபேதாராகப் பணியாற்றி விட்டுப் பின்னர் காவல் நிலையத் தலைமைக் காவலராக (ஹெட் கான்ஸ்டபிள்) வேலை பார்த்தவர்.

அழகர்சாமி பசுமலையில் நான்காவது படிவம் (9ஆம் வகுப்பு) வரை படித்தவர். அதன் பிறகு, பட்டுக்கோட்டையில் அந்நாளில் நீதிக்கட்சியில் புகழ்பெற்ற வழக்கறிஞராய் இருந்த வேணுகோபால் நாயுடு என்பவரின் பரிந்துரையின் பெயரில் கூட்டுறவு வங்கியில் எழுத்தராகச் சில காலம் பணியாற்றினார். அந்த வங்கியில் வேலை பார்த்த பார்ப்பன மேலாளருக்கும் இவருக்கும் ஏற்பட்ட சச்சரவு காரணமாக அப்பணியிலிருந்து விலகினார். 

முதல் உலகப் போர் (1914-18) சமயத்தில் பட்டாளத்தில் சேர்ந்தார். இவரது பரம்பரையினர் அனைவரும் இராணுவத்தில் பணியாற்றியவர்கள். அந்த மரபுப்படி அழகர்சாமியும் இராணுவத்தில் சேர்ந்து விட்டார். இதனால் அழகர்சாமி அவர்களது வீட்டை ஊரார் குறிப்பிடும் போது ‘பட்டாளத்து நாயக்கர் வீடு’ என்றே அழைப்பார்கள். அழகர்சாமி ஆறாண்டுகள் பட்டாளத்தில் பணியாற்றிவிட்டுப் பட்டுக்கோட்டைக்குத் திரும்பினார்.

பட்டுக்கோட்டையில் அழகர்சாமியின் சிறிய தந்தையான வேணுகோபால் நாயுடு நீதிக்கட்சியையும் சுயமரியாதை இயக்கத்தையும் வளர்த்தெடுப்பதில் பெரும் அக்கறைகாட்டி வந்தார். அழகர்சாமி தமது 27ஆம் வயதில் வழக்கறிஞர் வேணுகோபால் நாயுடு அவர்களின் தங்கை மகளான எத்திராசம்மாளை மணந்தார். அழகர்சாமியின் சிந்தனையைக் கிளறி விட்டவர், பட்டுக்கோட்டை சாமி முதலித்தெருவிலுள்ள மாரியம்மன் கோவில் பூசாரி - பக்கிரிச் சட்டாம்பிள்ளையாவார். இவர் முறையாகத் தமிழ் படித்து இசையறிவையும் வளர்த்துக் கொண்டவர். இயல்பாகவே அறிவுக் கூர்மை உடையவர். இவர் மூலமாகப் பூசாரித் தொழிலின் இரகசியங்கள் முதல் தமிழிசை வரை அறிந்து கொண்டார் அழகர்சாமி!

அழகர்சாமியைச் சேரன் மாதேவி குருகுலப் போராட்டம் வெகுவாகக் கவர்ந்தது. இது குறித்து வரதராசுலு நாயுடுவின் ‘தமிழ்நாடு’ இதழ் வெளியிட்ட செய்திகளைக் கட்டுரைகளை அழகர்சாமி ஒன்றுவிடாமல் படித்தார். கதராடை, கட்டுக் குடுமி, திருநீறு அணிந்திருந்த பட்டுக்கோட்டையார், மெல்ல இருள் நீங்கி வெளிச்சம் வருவதைப் போலச் சுயமரியாதை இயக்க வீரராக மாறலானார். இவரை முழுவதுமாக மாற்றிய பெருமை எஸ்.வி.லிங்கம் அவர்களையே சாரும். இயக்கத்தைக் குறித்துத் தம்மைக் கேள்விகளால் துளைத்தெடுத்து விட்ட தாக எஸ்.வி.லிங்கம் குறிப்பிட்டுள்ளார். இவரது தலைமையில் நாகப்பட்டினத்தில் பேசத் தொடங்கிய - அழகர்சாமி, 1948 ஈரோடு மாநாடு முடியத் தொடர்ந்து கொள்கைக்கு வாதிடும் மிகப் பெரிய பேச்சாளராகவே திகழ்ந்தார்.

சுயமரியாதை இயக்கப் பேச்சாளர்களில் இவரது பேச்சு புதிய உத்தியைத் தழுவியதாக விளங்கியது. கேட்போரை வினயமாகவும், நகைச்சுவை உணர்வுடனும், ஈர்க்கும் தன்மையைக் கொண்டதாக அது விளங்கியது.நமது தமிழ்நாட்டில் மிகப் பெரிய இழிவாகக் கருதப்படும் சாதிகளைப் பற்றி அவர் புதிய கோணத்துடன் பேசத் தலைப்படும் போது, மக்கள் அதிலுள்ள உண்மைகளை வாய்பிளந்து கேட்கக் கூடியவர்களாக விளங்கியிருக்கிறார்கள்.

‘நுட்பமான புத்தியினாலே, கூர்மையான கத்தியைக் கொண்டு முகத்திலே உள்ள உரோமங்களை முகத்திற்கும் ஒன்றும் ஆகாமல் உரோமங்களும் முகத்தில் தங்காமல் மழிக்கிறானே அந்தத் தொழிலாளியை அம்பட்டன் என்று இழிவாகக் கருதலாமா? நினைக்கலாமா? அவன் மனிதனை அழகுபடுத்தும் சிறந்தோன் அன்றோ’ என்று இப்படி தாழ்ந்த சாதிகள் குறித்த தொழில்களை வரிசைப்படுத்தி அவர் பேசுகிற பேச்சைச் சுவைத்துக் கேட்காத ஆட்களே இருக்க முடியாது.

மேலும் அவரது பேச்சில் ரத, கஜ, துரக, பதாதிகள், 33 கோடி தேவர்கள், கின்னரர், கிம்புருடர், வித்யாதரர் இன்னுமுள்ள தெய்வங்களின் பட்டியல் மேலேழு உலகங்களான புவர்லோகம், சுவர் லோகம், சனலோகம், சத்தியலோகம் போன்றவற்றையும் கீழ் உலகம் என்று சொல்லப்படும் அதலம், விதலம், கதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாளம் ஆகிய இவற்றையும் இணைத்து அழகர்சாமி பேசுகிறபோது கேட்போர் கிறங்கிப் போவர்.

பொதுவாக, அக்காலக் கூட்டங்களில் (1926-32) நடைபெற்ற சுயமரியாதை இயக்கக் கூட்டங்கள் அமைதியாக நடைபெற்றன என்று சொல்ல முடியாது. அவற்றில் பெருங்கலவரங்களும், எதிர்ப்புகளும் உண்டாக்கப்பட்டன. கூட்டங்களில் வினாக்கள் கேட்கப்பட்டன. அதே மேடையில் அதற்குரிய ஆணித்தரமான பதில்கள் வழங்கப்பட்டன. ஊரிலுள்ள காங்கிரஸ் பெரிய மனிதர்கள் கூட்டத்தைக் கலைக்க ஏற்பாடு செய்திருப்பர். இல்லையெனில், செருப்போ, கல்லோ, சாணமோ, மலமோ, முட்டையோ பேச்சாளரின் மீது வீசப்பட்டுக் கூட்டத்தை நடத்த வொட்டாமல் ஆட்களை நியமித்துக் கலகம் விளைவிப்பர். இவற்றையெல்லாம் மேடையிலே வீராவேசமாகச் சந்தித்துக் கொண்டே பேசக் கூடியவராகத் திகழ்ந்தார் பட்டுக்கோட்டை அழகர்சாமி! 

இதேபோல் நீதிக்கட்சி அரசியலில் - உட்கட்சிப் போராட்டங்களில் - தந்தை பெரியாரின் தலைமையை நிலைநிறுத்துவதில் அவர் காட்டி வந்த ஈடுபாடு - வழிமுறைகள் - பணிகளெல்லாம் நம்மை வியப்பிலேயே ஆழ்த்துகின்றன. அதனால்தான் இயக்கத் தோழர்கள் இவரை ‘அஞ்சாநெஞ்சன்’ என அழைத்தனர். அதுமட்டு மன்று; முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களை, இவரது மேடைப் பேச்சும் - நெஞ்சுறுதியும் அந்நாட்களில் வெகுவாகக் கவர்ந்துள்ளன. கலைஞர் அவர்கள் அழகர்சாமி அவர்களைத் தமது முதல் வழிகாட்டியாக (முன் மாதிரியாக) கொண்டார். அதனால்தான் அவர் தம் புதல்வர்க்கு அழகர்சாமியின் பெயரை சூட்டினார். 

அவரது தொண்டுக்குப் பெருமை சேர்த்தார். பட்டுக்கோட்டையாரின் பேச்சுக்களில் சில “சகோதரர்களே,

நாம் பிறந்த நாள் முதலே சடங்குகளும் நம்முடன் பிறந்து விடுகின்றன. பிறந்த அன்றே ஒரு அருத்தமற்ற சடங்கைச் செய்கிறோம். எட்டாம் சடங்கு, முதல் வருடச் சடங்கு, பள்ளி செல்லும்போது ஒரு சடங்கு, கலியாணம் செய்யும்போது நூறு சடங்கு இப்படியாக நம் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான சடங்கை அர்த்தம் என்பதையே அறியாமல் செய்து வருகிறோம்.

அச்சடங்குகளின் மூலமாக, நம்மை அறியாமல் நெற்றி வியர்வை நிலத்தில் விழச் சம்பாதித்த பணம், பார்ப்பனர் வயிற்றில் விழுந்து கொண்டே இருக்கிறது. இதுவும் போதாது என்று, நாம் இறந்தவுடனும் பணம் பறிக்கப் பின் தொடர்ந்து விடுகின்றனர்.

சிரார்த்தம் என்பதின் பேரால், நம் மூதாதையர்களை மோட்சலோகத்திற்கு அனுப்பு வதாகச் சொல்லித் தங்களுக்குப் போதிய காய்கறி, அரிசி, சாமான் பெற்றுக் கொள் வதுடன், செருப்பு, வேட்டி உட்படக் குடும்பத்துக்கு வேண்டிய சாமான்களை நம் பிதுரர்கள் (இறந்து போனவர்கள்) ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நாமும் ஏமாந்து களிப்புற்று இருக்கிறோம். அந்தோ! நம் மடமைதான் என்னே! தற்காலத்தில் இங்கிலாந்தில் உள்ள ஒருவர்க்கு ஒரு ரூபாய் மணியார்டரில் அனுப்பினால், அதைப் பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக ஓர் இரசீது நமக்குத் திரும்பி வருகிறது. ஆனால், வருடந்தோறும் நம் பிதுரர் களுக்கு அனுப்பும் சாமான்களுக்கு ஏதாவது பதில் இரசீது வருகின்றதா என்பதை நம்மில் ஒருவராவது கவனிக்கிறோமா?”

இப்பேச்சு 1929ஆம் ஆண்டு ‘திராவிடன்’ இதழில் வெளியாகியுள்ளது. விருதுநகரில் வி.வி. இராமசாமி அவர்கள் தலைமையில் சடங்குகள் என்ற தலைப்பில் அழகர்சாமி மூன்று மணி நேரம் பேசியதாகத் ‘திராவிடன்’ குறிப்பிட்டுள்ளது. ஒரு முறை அழகர்சாமி தூத்துக்குடியில் பேசுகிற போது பின்வருமாறு குறிப்பிட்டார்.

“.... தீண்டாமைக்குக் காரணம் பிராமணர் (முகத்திலிருந்து வந்தவர்) களுடைய தந்திரமே - பள்ளர், பறையர், சக்கிலியர் முதலியவர்களை நீங்கள் எப்படித் தீண்டப்படாதவர்கள் என்று தள்ளி வைக்கின்றீர்களோ, அதுபோல உங்களைத் தீண்டப்படாதவர்கள் - தொடப்படாதவர்கள் என்று ஒரு வகுப்பார் விலக்கி வைத்திருக்கின்றனர்.

ஆகையால், முதல் முதல் நீங்கள் அவர் களோடு ஒற்றுமையாய் சகோதரத்து வத்துடன், உண்மையான பாசத்தோடு அவர்களும் நம் சகோதரர்கள் என்று உறவாட வேண்டும். அவர்களைச் சுதந்திரத்துடன் இருக்க விடவேண்டும். அப்படியானால்தான் நமக்கும் சேமம் பிறக்கும் - பிராமணர்கள் உங்களை எப்படி நடத்துகின்றனர்? ‘சூத்திரன்’ என்று அழைக்கின்றனர். சூத்திரனென்றால் வேசிமகன், விலைக்கு வாங்கப்பட்டவன், அடிமைத் தொழில் புரிகிறவன், மிலேச்சன், வைப்பாட்டி மகன் என்று அர்த்தம். ஒரு மனிதன் ஒரு மனிதனைத் தொடுவதால் என்ன கெட்டுப்போகிறது.

குதிரை, நாய் முதலியவைகளைத் தொட்டால் குளிக்கிறதில்லை. நம்மைப் போலிருக்கிற ஒரு மனிதனைத் தொட்ட வுடன் தீட்டுப்பட்டு விட்டதாம்; உடனே குளித்துத் தீட்டைப் போக்கிக் கொள் கின்றனர். இத்தீண்டாமையை ஒழித்தாக வேண்டும்” என இரண்டு மணி நேரம் பேசினார்.

அடுத்து அழகர்சாமி சுயமரியாதைத் திருமணத்தில் பேசிய பேசியபோது. அதில் அவர் எவ்வளவு சேதிகளைக் கூறுகிறார் . “இன்று இங்கு நடைபெற்ற விவாகந் தான் போற்றத் தகுந்த விவாகமாகும். அநேக சீர்திருத்தக்காரர்கள், சுயமரியாதைக் கொள்கைகளை ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால், நாம் அதிவேகமாகவும், தீவிரமாகவும் செல்வதாகக் குற்றங் கூறுகிறார்கள். பழைய தமிழ்நாட்டில் புரோகிதர்கள் திருமணம் செய்து வைக்கும் வழக்கமே கிடையாது. இன்றும் நமது தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், அகம்படியர் (மதுரை) ஆகியவர்களிடையிலும், மற்றும் வேடர், வில்லியர், தீண்டப் படாதார் ஆகிய சமூகங்களிலும், எவ்விதச் சடங்குகளும், புகைச்சலுமின்றியேதான் விவாகங்கள் நடைபெறுகின்றன. ஆதிகாலத்தில், ‘எடுத்தார் சங்கைப் பிடித்தார்’ என்பதாகவேதான் நமது விவாகங்கள் நடை பெற்று வந்திருக்கின்றன. இவ்விஷயங்களை இன்றும் நீங்கள் நமது தமிழ் நூல்களில் காணலாம். ஆனால், ஆரியர்கள் நமது நாட்டில் குடியேறிய பிறகுதான் அநேக சடங்குகள் நாட்டில் தோன்ற ஆரம்பித்தன.

சாதாரணமாகச் செட்டி நாட்டில் நடைபெறும் விவாகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் பெண்களுக்குப் பரியமென்பதாக ரூ.30,000 மும் நகைகளுக்கென ரூ.15,000 மும், கல்யாணச் செலவுக்கென ரூ.10,000 மும், ஒதுக்கி வைத்துவிட்டுக் கலியாண வைபவத்தை ஒரு மாதம் வரையும் கொண்டாடு கிறார்கள். விவாகத்துக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கருதிக் கடவுள் அருள் கிடைக்க வேண்டு மெனப் பல சடங்குகளையும் செய்கிறார் கள். இவைகளால் என்ன பிரயோஜன மென்பதைச் சற்று யோசனை செய்து பாருங்கள்.

நமது வீடுகளிலோ, விவாகங்கள் மூன்று நாட்கள் முதற்கொண்டு அய்ந்து அல்லது ஏழு நாட்கள் வரையிலும் நடைபெறு கின்றன. இவ்வழக்கத்தையும் அறவே நாம் விட்டொழிக்க வேண்டும். விவாகத்துக்கும் கடவுளுக்கும் ஏதாகிலும் சம்பந்தமிருப்பது உண்மையாக இருக்குமானால், இவ்விதச் சடங்குகள் உலகத்திலுள்ள எல்லா ஊர்களிலுமன்றோ நடைபெற வேண்டும்? அவ்வாறு நடைபெறுகின்றதா? அப்படி யிருக்க நமது நாட்டில், ஒரு கூட்டத்தாரை மட்டும் நாம் வைத்துச் சடங்குகளை ஏன் செய்ய வேண்டும்? இவைகளுக்கெல்லாம் காரணம், நமக்குப் போதியஅறிவில்லாததேயாகும். சடங்குகளின்றி நடைபெறும் விவாகங் களில் தம்பதிகள் இன்பமாயிருக்க முடியா தெனவும், குழந்தைகள் ஜனிக்காதெனவும் ஒரு குருட்டு நம்பிக்கை நம்மிடம் இருந்து கொண்டு வருகின்றது. இவ்வித வழக்கங்களை நாம் அடியோடு விட்டொழிக்க வேண்டும்.

பட்டுக்கோட்டைச் சுயமரியாதை மாநாட்டில் அழகர்சாமி பேசியபோது, மிகத் தெளிவாக இயக்கக் கொள்கைகளை விளக்கிப் பேசினார்.

நான் இளைஞர்களை இயக்கத்தில் ஈடுபடுத்தும் கருத்துடையோன். ஆஸ்திகத்தை நான் முழு மனத்துடன் எதிர்க்கிறேன். சுயமரியாதை இயக்கத் தைப் பூர்ணமாகத் தழுவுகிறேன். இவ்வியக்கம் எல்லா மனிதர்களும் சமம் என்னும் கொள்கையைக் கொண்டு ஜனங்களுக்குப் பொருளாதாரச் சமூக விஷயங்களில் சமத்துவம் எல்லாவற் றாலும் எய்தல் வேண்டும் என்னும் கருத்தை உறுதியாய்க் கொண்டது.

பலர் கூறுவது பணக்காரர்களை நாம் எதிர்த்தால் பயனற்றதாகுமென்பதே. இது கோழைத்தனமாகும். சத்தியத்திற்கே போராடு வோம். சத்தியமே ஜெயிக்கும். வீரர்களாகிய இளைஞர்களுடைய ஊக்கத்தை மாற்ற, எந்தப் பலத்தாலும் எந்தக் காலத்திலும் எதிர்க்க முடியாது. இந்த இயக்கத்தைச் சிலரே துவக்கினர். ஆனால், இவ்வியக் கத்தில் இப்பொழுது பல பெரியோர்க ளும், அளவற்ற ஜனங்களும் சேர்ந்திருக் கின்றனர். இவ்வியக்கத்தை இனி அசைத்தல் இயலாது. இதுபோல, இவரது அறிவார்ந்த பல பேச்சுகள் ‘திராவிடன்’ (என்.வி.என். நடத்தியது அல்ல. நீதிக்கட்சியின் அதிகாரப்பூர்வமான தமிழ் ஏடு) ‘குடிஅரசு’ ஏடுகளில் காணக் கிடக்கின்றன.

இவர் எழுதியவை என நமக்குத் தெரிய இரண்டு கட்டுரைகளே தென்படுகின்றன. ‘கடவுள் செயலும் கட்டுக் கதைகளும்’ எனும் கட்டுரை புதுவை முரசிலும், ‘திரு. காந்தியின் சாஸ்வதக் கொள்கை எது?’ எனும் முடியாக் கட்டுரை ஒன்று குடிஅரசிலும் காண முடிந்தது. இந்த இரண்டு கட்டுரைகளிலும் பல ஆழமான சேதிகளை விவாதிக்கிறார். படிப்பதற்கும் சிந்திப்பதற்கும் ஏற்றனவாக அவை திகழுகின்றன. நாடகங்கள் எழுதப்பட்டனவாகப் பதிவுகள் இருந்தாலும், என்ன நாடகங்கள் என்றும் - அவற்றிற்கான புத்தகங்கள் இருக்கின்றனவா என்றும் தெரியவில்லை.

அஞ்சாநெஞ்சன் அழகர்சாமி, வெறும் பேச்சாளராக மட்டும் இருந்து காலத்தைக் கடத்தியவர் அல்லர். நீதிக்கட்சிக் காலத் தில் பல இராசதந்திர உத்திகளோடு செயலாற்றியிருக்கிறார் என்பதை ‘திராவிட நாடு’ ஏட்டில் எஸ்.வி. லிங்கம் அவர்களின் கட்டுரைத் தெரிவிக்கின்றது. சரியாகச் சொல்வதானால் அழகர்சாமி அவர்கள் தொண்டர் நிலையிலிருந்து தலைவர் நிலை வரை அனைத்து மட்டங்களிலும், அவரது பணியின் வேகத்தைக் காட்டியிருக்கிறார். எதற்கும் அவர் அச்சமோ, தயக்கமோ கொண்டதாகத் தெரியவில்லை. அவரது அந்நாளைய அரசியலுக்கு அவரது வறுமை ஒரு தடையாகவே இல்லை. அவர் ஒரு சிறந்த இயக்கவாதியாக வார்ந்து காட்டியிருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

அந்நாட்களில் பட்டுக்கோட்டையில் புகழ் பெற்ற தலைவராக வி.நாடிமுத்துப் பிள்ளை என்பவர் இருந்தார். இவருக்கு அழகர்சாமி அவர்கள் பயங்கரவாதியாகத் தோன்றினார். இதற்குக் காரணம், ஆதிக்கக்காரர்களின் அட்டூழியங்களை அம்பலப் படுத்துவதில் அஞ்சாநெஞ்சுடன் அழகர்சாமி செயலாற்றியதே ஆகும். நாளை என்ன செய்வது என்பதைப் பற்றியே கவலை கொள்ளாமல் வாழ்ந்த அழகர்சாமி, பட்டுக்கோட்டையில் வரி கொடுப்போர் சங்கம் ஒன்றை நிறுவினார். அதன் சார்பில் மாபெரும் மாநாடு ஒன்றைக் கூட்டிப் பட்டுக் கோட்டை யூனியன் போர்டு இழைக்கும் அநீதிகளை அம்பலமாக்கினார். அப்பொழுது நடைபெற்ற மாவட்டக் கழகத் தேர்தல்களிலும், சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரசை முறியடிப்பதில் கண்ணுங் கருத்துமாகப் பணியாற்றினார்.

நீதிக்கட்சி மாநாடு தஞ்சையில் நடந்த போது, பொப்பிலி அரசரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. பொப்பிலி அரசர்க்குப் பக்கலமாக இருந்து மாநாட்டில் ஏற்பட்ட குழப்பத்தைச் சமாளித்தார். பட்டுக்கோட்டை வேணு கோபால் நாயுடு மூலமாக சர். ஏ.டி. பன்னீர்ச்செல்வம் அவர்களின் நட்பைப் பெற்றார். இருவரும் கடைசி வரை ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு வாழ்ந்தனர். அழகர்சாமி எந்த மேடையையும் தன் வயப்படுத்தக் கூடிய ஆற்றல் மிக்கப் பேச்சாளராகத் திகழ்ந்தார். அவரது பேச்சு எவரையும் கவர்ந்துவிடும் தன்மையுடையதாக விளங்கியது. அதற்கு எடுத்துக் காட்டாகப் பின்வரும் நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.

1927ஆம் ஆண்டு அமெரிக்காவில் சாக்கோ, வான்சிட்டி எனும் இரண்டு பொதுவுடைமைத் தலைவர்களை மின்சார நாற்காலியில் அமர வைத்துக் கொன்றார்கள். இச்செயலைக் கண்டித்துச் சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர், சென்னை பீப்பிள்ஸ் பார்க்கில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். இக்கூட்டத்தைப் பார்ப்பதற்காகச் சென்ற அழகர்சாமி அவர்களைச் சிங்காரவேலர் பேசுமாறு கேட்டுக் கொண்டார். அக்கூட்டத்தில் பேசுகிறபோது அழகர்சாமி, ஒரு செம்படவத் தொழிலாளியும் - ஒரு சக்கிலித் தொழிலாளியும் அமெரிக்காவில் கொலை செய்யப்பட்டார்கள். அதைக் கண்டிக்க நாம் இங்கே கூடியிருக்கிறோம். நமது செம்படவத் தொழிலாளியான சிங்காரவேலர் அவர்கள் தூக்கிலிடப்படும் காலம் வந்தாலும் வரலாம். அப்படி ஏற்பட்டால் அதுவே நாட்டின் விடுதலை நாள் என்று பேசினார். இப்பேச்சு சிந்தனையாளர் சிங்காரவேலரை வெகுவாகக் கவர்ந்தது. இதன் பிறகுதான், சிங்கார வேலர் சுயமரியாதை இயக்கத்தோடு தொடர்பு கொள்ளவும் தந்தை பெரியாரோடு நெருங்கிச் சிக்கல்களை விவாதிக்கவும் தொடங்கினார்.

பனகல் அரசர் நீதிக்கட்சியின் தலைவ ராகவும், சென்னை இராஜதானியின் முதல்வராகவும் விளங்கிய காலக்கட்ட ங்களில், அவரிடம் உட்கார்ந்து பேசக் கூடியவர்கள் இருவர் மட்டுமே! ஒருவர் தந்தை பெரியார், மற்றவர் அழகர்சாமி அவர்கள்! இப்படி அச்சமின்றி, நடுங்குதல் இன்றி, அவை அஞ்சாமையோடு செயல் பட்டவர் அழகர்சாமி!

தந்தை பெரியார், அய்ரோப்பியச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பொழுது (1932) சென்னையில் ஒரு சுயமரியாதை மாநாட்டைக் ‘குத்தூசி’ குருசாமி நடத்தினார். முதல் நாள் சுயமரியாதை மாநாடு. இரண்டாம் நாள் பெண்கள் மாநாடு. இச்சமயத்தில் கல்லூரி மாணவி ஒருத்தி கல்கத்தாவில் நீதிமன்ற நடுவரைச் சுட்டுவிட்ட நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. இந்நிகழ்ச்சியைக் கண்டித்துப் பெண்கள் மாநாட்டில் ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டது. தீர்மானத்தின் மீது இருவர் வழிமொழிந்து பேசி வாக்கெடுப்பு எடுக்கிற சமயத்தில், சிங்காரவேலர் எதிர்த்துப் பேசி - மாநாட்டினரைத் தம் பக்கம் ஈர்த்து விட்டார்.

இந்நிலையில், தீர்மானத்தை விட்டால் ‘தோற்றுவிடும்’. பெரியார் ஊரிலில்லாத நேரத்தில் இப்படி ஏற்படுவது சரியன்று என்ற முடிவை எடுத்த அழகர்சாமி எழுந்து பேசத் தொடங்கினார். இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்று இரவு சிங்காரவேலரைச் சந்தித்துச் சமாதானம் கூறினார் அழகர்சாமி! அப்போதும் சிங்காரவேலர் அழகர்சாமியைப் பார்த்து, “நீ பேசிய கருத்து முரண்பாடானது. சொன்ன உதாரணங்கள் தப்பு. எனது பேச்சை எதிர்த்து இதுவரை எவரும் பேசிய தில்லை. நீ பேசியது எனக்குப் பிடிக்க வில்லை என்ற போதிலும், தலைவர் இல்லாத காலத்தில் கட்சிப் பொறுப்பை எண்ணி எனது கருத்தை முழுவதும் கண்டிக்காமலும் உனது எண்ணத்தை நிறைவேற்றுகின்ற முறையிலும் நீ கையாண்ட முறைகளைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார்.

1934களில் ‘தமிழன்பர் மாநாடு’ என்ற பெயரில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் மாநாடு ஒன்று நடைபெற்றது. இம்மாநாட்டின் மூலவராகக் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி  விளங்கினார். எல்லாவற்றிலும் செல்வாக்குப் பெற்றிருந்த மேல் சாதியினர் பள்ளிப் பாடப் புத்தகங்கள் அச்சிட்டு விற்கும் உரிமையைக்கூட வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்களது மேலாண்மையை இதிலும் நிலைநாட்ட வேண்டு மென்றும் கருதித் தமிழன்பர் மாநாடு கூட்டலாயினர். இது குறித்துச் சுயமரியாதை இயக்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இத்தகைய முடிவுகளை எதிரிகள் மேற்கொள்கிற போது, திராவிடர் இயக்கத் தோழர்களே அவற்றைத் தனியாக நின்று எதிர்த்துப் போராடினார்கள்.

தமிழன்பர் மாநாட்டில் வேங்கடஇராம சாஸ்திரி, ‘சில்வர் டங்’ சீனிவாச சாஸ்திரி, சுதேசமித்திரன் சீனிவாசன் ஆகியோர் பங்கு கொண்டனர். இதனை அறிந்து கொண்ட அழகர்சாமி தமது படையோடு சென்று மாநாட்டு ஆசனங்களில் - மேடை மீது திராவிடர் இயக்கத் தின் சார்பில் டி.வி. சுப்ரமணியம், ஜீவானந்தம், என். தண்டபாணி போன்றோரை அமரச் செய்து, தாமும் எஸ்.வி. லிங்கமும் எஸ். இராமநாதனும் பிரதிநிதிகள் அமர்கிற இடத்தில் இடம் கிடைக்காமல் நின்றனர். அவர்கள் மாநாட்டுத் தலைவரை முன்மொழிந்தும் வழிமொழிந்தும் மாநாட்டை நடத்தத் தொடங்கினர். திராவிடர் இயக்கத்தவர்கள் மாநாட்டுத் தலைவரை ஏற்க முடியாதென்று பேசினர்.

உடனே வெள்ளி நாக்குப் படைத்த சீனிவாச சாஸ்திரி, ‘இது பார்லிமெண்டரி முறைக்கு உகந்ததல்ல’ என்று கூறினார். இருப்பினும், எஸ். இராமநாதனும் தாவுத் ஷாவும் (இவர்கள் சுயமரியாதை இயக்கவாதிகள்) மாநாட்டுப் பிரதிநிதிகளின் கருத்தை ஏற்காமல், தலைமை தாங்குவது எங்ஙனம் சாத்தியமாகும் என்று கூறினர். பிறகு மாநாட்டினர் நமது தோழர்களை அமைதிப்படுத்தித் தலைவரை ஒரு வழியாகத் தேர்ந்தெடுத்தனர்.

திராவிடர் இயக்கத்தவர்கள் பேசிய பேச்சு களுக்கு மாநாட்டில் நல்ல வரவேற்பு இருந்தது. மாநாடு இயக்கத்தார் கைக்கு வந்துவிட்டதில் அழகர்சாமி மகிழ்ந்தார். எந்தத் தீர்மானத்திலும் திராவிடர் இயக்கத்தாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற சூழ்நிலையும் மாநாட்டில் உருவாகியிருந்தது.

இந்நிலையைக் கருத்திற்கொண்டே வெங்கட இராம சாஸ்திரியார், “நண்பர்களே, மாநாடு இனிது முடிந்தது. இந்தப் பெருமையாவும் சுயமரியாதைக் காரர்களையே சாரும். உங்களில் பலருக்கு ஈரோடு திரு. இராமசாமி நாயக்கரும், நானும் நெருங்கிய சிநே கிதர்கள் என்று தெரியாது. உங்களைப் பற்றிச் சொன்னவர்கள் தப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காகக் கோபித்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் யாவரும் ஃபூல்ஸ் (Fools), ரோக்ஸ் (Rogues) என்றே எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது.

இந்த இரண்டு நாள் நடவடிக்கைகளில் - உங்கள் ஒவ்வொருவரின் பேச்சையும், விவாத முறையையும் நான் கவனித் தேன். ஃபூல்சும், ரோக்சும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இருந்தால், மாநாடு இவ்வளவு சிறப்பாக நடந்திருக்க முடியாது. தப்பெண்ணங்களை மறந்து, இனி மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றிவைப்பதில் ஒன்றுபடுவோம்.”இப்படி வெங்கட இராம சாஸ்திரி பேசியதற்குப் பிறகு கல்கி கிருஷ்ணமூர்த்திக்குப் பொறுக்க முடியவில்லை. மாநாடு முடிந்த பிறகு தனது அடிப்படைத் திட்டம் சுயமரியாதை வீரர்களினால் தகர்க்கப்பட்டதை எண்ணி அவர், “மாநாடு முடிந்துவிட்டது. இனி யாரையும் கேட்காமலேயே நான் பேசலாம். மாநாட் டுப் போக்குதான் சுயமரியாதைக்காரர்களுக்குப் பிடிக்கவில்லையே! பின் ஏன் இங்கு வந்தார்கள்? இவர்களை யார் பாக்கு வைத்து அழைத்தார்கள்?” என்று பேசினார். ஆக, அஞ்சாநெஞ்சன் அழகர்சாமி நினைத்ததைச் செய்து முடித்தார். இதுபோலப் பல சிக்கல்கள், வழக்குகள், அடிதடிகள் என்று அழகர்சாமி அவர்களின் பங்களிப்பு இவ்வியக்கத் திற்குப் பலவாகும்.

அதேபோல, அமைப்பை உருவாக்குவ திலும் கட்டமைப்பதிலும் அழர்சாமி முன்னோடியாகத் திகழ்ந்தார். சுயமரியாதை இயக்கம் எனப் பெயர் தாங்கவே பட்டுக்கோட்டை இயக்கத் தோழர்கள்தான் காரணமாக இருந்தனர். இயக்கம் தோன்றி மூன்று ஆண்டுகள் ஆகியும் மாநாடுகள் நடைபெறாமல் இருந்தன. செங்கற்பட்டில் 1929இல் நடைபெற்ற முதலாவது சுயமரியாதை மாநாடு நடத்துவதற்கு அழகர்சாமியின் தீர்மானமே காரணமாக அமைந்தது.

திருச்சியில் நடைபெற்ற தமிழர் மாநாடு கூடுவதற்கு அழகர்சாமி அவர்களும் ஒரு காரணமாக இருந்தார். 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற போது, அழகர்சாமி தமிழர் பெரும் படையைத் திருச்சியில் திரட்டினார். இப்பெரும் படையில் மணவை ரெ. திருமலைச்சாமி, எஸ்.வி. லிங்கம், இராமாமிர்தத்தம்மையார், சித்தர்காடு இராமையா ஆகியோர் கலந்து கொண் டனர். இப்படையில் 100 பேரைச் சேர்த்துக் கொண்டு திருச்சியிலிருந்து 60 ஊர்களில் தங்கி, 180 ஊர்களுக்கு மேலாகப் பிரச்சாரம் செய்து கொண்டு, 250 கல் தொலைவு படையை இரண்டு மாதம் நடத்திச் சென்னைக்கு அழைத்து வந்தார். இப்படையை வழி நடத்திய பெருமை, அஞ்சா நெஞ்சன் அழகர்சாமிக்கு உண்டு. இதுமட்டுமின்றி முதல் முதலாகக் காஞ்சிபுரத்தில் இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்திய பெருமை - ஏற்பாட்டை மேற்கொண்டு பணியாற்றிய பெருமை அழகர்சாமியையே சாரும்.

பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டம் காரணமாகச் சிறையில் இருக்கும்போது, நீதிக் கட்சியின் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட் டிற்குத் தலைவராக இருக்க வேண்டும் என ஒரு பெரிய புள்ளி விரும்பி அழகர்சாமியைச் சென்னைக்கு வரவழைத்துப் பெரிய விருந்து உபச்சாரம் எல்லாம் செய்தார். இச்சமயத்தில் நீதிக்கட்சியின் பொறுப்பை சர். ஏ.டி. பன்னீர் செல்வம் நிர்வகித்து வந்தார். இதனால் பொறுக்காத அப்பெரும்புள்ளி தாம் தலைமையேற்க விரும்பி அவ்வாறு செய்தார். மாநாடு நடத்தப்படும் நாள் வந்தது. அந்த பெரும்புள்ளி, மேடையில் அழகர்சாமி யிடம் தம்மைத் தலைவராக அறிவிக்கும்படி சொல்லிவிட்டு வந்தமர்ந்தார். அழகர்சாமி எழுந்து, ‘இம்மாநாட்டைத் தோழர் ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமை தாங்கி நடத்தித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்றார். அப்பெரும் புள்ளி மாநாட்டிலிருந்து வெளியேறினார். இதுபோலப் பல நிகழ்ச்சிகளைச் சொல்லலாம்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், அரசியலில் வளர்வதற்குக் காரணமாக இருந்தவர்களில் அழகர்சாமி அவர்களும் ஒருவராவார். இவரையே கலைஞர் தமது தொடக்கக்கால வழிகாட்டியாகவும் கொண்டிருக்கிறார். கலைஞரது தொடக்க நாட்களில் அவரைக் கூட்டத்திற்கு அழைப்போர், திருவாரூர் மு. கருணாநிதி என்றே விளம்பரப்படுத்தினர். பிறகு அவர் புகழடையத் தொடங்கியவுடன் மு. கருணாநிதி என்று விளம்பரப்படுத்தப் பட்டார்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போற்றி வளர்த்த இயக்கக் கொள்கைகளை மய்யமாகக் கொண்டு ‘தூக்கு மேடை’ என்ற நாடகத்தைக் கலைஞர் எழுதினார். அந்த நாடகத்தில், நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களுடன் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கவும் செய்தார். முதன்முதலாக இந்நாடகம் தஞ்சையில் அரங்கேற்றப்பட்டது. இந்நாடகத்திற்கு அழகர்சாமி தலைமை தாங்கினார். தலைமையுரையின் போது நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களை உற்சாக மூட்டி - ஊக்கமூட்டிப் பேசியதோடு கலைஞர் அவர்களின் எழுத்தாற்றலையும், நடிப்பையும் பார்த்து விட்டுக் ‘கலைஞர்’ என்ற பட்டத்தைத் தம் வாயால் உச்சரித்து வழங்கினார். அது முதல் மு. கருணாநிதி என்ற பெயரோடு கலைஞர் என்ற அடைமொழி சேர்த்து வழங்கப்படுவதாயிற்று. பொது வாழ்வில் அவர் புகழ் சிறக்கச் சிறக்க அவரது இயற்பெயரைப் பெரும்பாலோர் எழுதுவதோ பேசுவதோ கிடையாது. ‘கலைஞர்’ என்றஅடைமொழி இன்று தமிழ்நாட்டில் அவரை மட்டுமே குறிக்கின்ற ஒரு சொல்லாகிவிட்டது. 

லெனின், ஸ்டாலின் போன்ற பெயர்கள் எப்படி இயற்பெயராக இல்லாமல் கட்சிக் காரர்களால் வழங்கப்படும் புகழடைந்த பெயர்களாக விளங்கி வருகின்றனவோ, அவ்வாறே, கலைஞர் என்ற பெயரும் இன்று நிலைபெற்ற பெயராக ஆகிவிட் டது. இத்தகைய சிறப்புக்குரிய பட்டத்தை வழங்கியவர் பட்டுக்கோட்டை அழகர்சாமி அவர்களாவார். அவரது பெயர் ‘அழகர்சாமி’ என்பதே சரியான உச்சரிப்பாகும். மேடையிலே பேசுகிற போது அவர் பெயர் அழகிரிசாமி எனத் திரிந்துவிட்டது. 

அழகர்சாமியிடம் எவ்வளவு பணமிருந்தாலும் செலவழித்து விடுவார். அவர்தம் தோழர்களுக்குத் தாராளமாகக் கொடுப்பார். எப்போதும் மல்வேட்டியும், ஜிப்பாவும் அணிவார். தம் வாழ்நாள் முழுவதும் மதம், கடவுள், சாதி ஆகிய மூன்றையும் ஒழிக்கப் பாடுபட்டார். எந்நிலை யிலும் அவர் கொள்கையிலிருந்து வழுவாமல் வாழ்ந்தார்.

ஓயாத பேச்சு, சுற்றுப் பயணம் இவற்றுக் கிடையே மூளை உழைப்பு ஆகியவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, அஞ்சாநெஞ்சரை என்புருக்கி நோய் பற்றியது. 1948ஆம் ஆண்டு அழகர்சாமி சேலம் (திராவிடர் கழக) மாநாட்டிற்குச் சென்றார். அப்போது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களைச் சந்தித்துத் தமக்கிருக்கும் கடன்கள் குறித்து வருத்தப்பட்டார். அதற்குக் கலைவாணர், “என்ன அண்ணே இது? கடனைப் பற்றி நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நிச்சயம் நான் சொத்துக்களை மீட்டுக் கொடுத்து விடுகிறேன்” என்று உறுதி கூறினார்.

1948ஆம் ஆண்டு ஈரோடு மாநாட்டின் போது அழகர்சாமியின் உடல்நிலை மிக மோசமாயிற்று. இருப்பினும் அம்மாநாட்டில் கலந்து கொண்டு, “நான் கலந்து கொள்ளும் கடைசி நிகழ்ச்சி இதுவாகத் தான் இருக்கும்” (எனது தலைவரிடம் விடைபெறவே வந்திருக்கிறேன்) என்று கூறினார். இவ்வாறு அவர் கூறிய போது, மாநாட்டிற்கு வருகை புரிந்தோர் கண் கலங்கினர். மாநாடு முடிந்து பட்டுக்கோட்டைக்கு அவர் திரும்பியதும் படுக்கையில் விழுந்தார். அதன் பிறகு, சி.என். விசுவநாதன் முயற்சியால் திருச்சியில் டாக்டர் ஈனக் என்பவரிடம் பரிசோதிக்கப்பட்டது. அவர் ஆய்வு செய்து பார்த்துவிட்டு, ஒரு வருடத்திற்கு மேல் உயிரோடு இருக்க முடியாது என்ற விவரத்தை அந்தத் தோழரிடம் தெரிவித்தார்.

அவர் அழகர்சாமியை அழைத்துக் கொண்டு பட்டுக்கோட்டை போய்ச் சேர்ந்தார். அணுக்கத் தோழர்களிடம் நிதி திரட்டி, அழகர்சாமி உடல்நிலையைப் பேணி வந்தார். இதற்கிடையில் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களின் பரிந்துரையின் பெயரில், பெருந்துறை சானிடோரியத்தில் சேர்க்க முயற்சி நடந்தது. முடியவில்லை, நிதி போதாத நிலையில், ‘விடுதலை’யில் வேண்டுகோள்விட அழகர்சாமியிடம் அனுமதி கோரியபோது, அழகிரி அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இந்நிலையில், இயக்கத் தோழர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அச்சமயத்தில் நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்கள் ரூ. 1,000/- கொடுத்து உதவினார். அதுமட்டுமல்ல, அழகர்சாமி விரும்பிய வெல்வெட் மெத்தை, தலையணை ஆகியவற்றை தைத்து அனுப்பினார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தாம்பரம் சானிடோரியத்தில் சேர்க்கப் பட்டார். பெரியார், அண்ணா, இளம்வழுதி, எஸ்.வி. லிங்கம் ஆகியோர் அழகர்சாமி யைச் சென்று பார்த்தனர்.

அறிஞர் அண்ணா கே.ஏ.மதியழகன் மூலமாக ஒரு தொகையை அழகர்சாமிக்குக் கொடுத்தனுப்பினார். அதன் பிறகு ஒரு தொகையை அனுப்பினார். யார் தம்மைக் கூட்டத்திற்கு அழைத்தாலும் ரூ.100/- அழகர்சாமி அவர்களுக்கு பணவிடையின் மூலம் அனுப்பி விட்டு, அதன் இரசீதைக் காண்பித்தால் வரத் தயார் என அறிக்கைவிட்டார். அதன் மூலமாக ரூ. 1,000/- வரை அழகர்சாமி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இவற்றையெல்லாம் கொண்டு தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த (49 ஆண்டுகளோடு அவரது வாழ்க்கை முடிந்தது) அழகர்சாமி 28.3.1949இல் இறந்தார்.

நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களின் முயற்சியால் அவரது மூடுந்தில் (வேனில்) அழகர்சாமியின் உடல் கிடத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதுவரையில் தஞ்சையில் அத்தகையதொரு இறுதி ஊர்வலம் நடைபெற்றதில்லை எனும்படியாக - அவ்வூர்வலம் அமைந்தது. இறுதி நிகழ்ச்சிக்குப் பிறகு - இரண்டு மாதங்கள் கழித்து அழகர்சாமியின் குடும்ப நிதி வழங்கு விழா 29.5.1949இல் தஞ்சை அரண்மனைத் திடலில் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கலைவானர் காந்தி மகான் வில்லுப்பாட்டு, கிந்தனார் கதை ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தினார். அதன் மூலம் ரூ.3,500/- மட்டுமே கிடைத்தது. ஆனால், அழகர்சாமியின் குடும்பத்திற்கு ரூ.6,000/-க்குக் கடன் இருந்தது. கலைவாணர் திரட்டிய நிதியுடன் தன் சொந்தப் பணத்திலிருந்து ரூ.2,500/- அய்ச் சேர்த்து ரூ.6,000/- குடும்ப நிதியாக வழங்கினார்.

இந்நிதியளிப்பு விழாவிற்குப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், எஸ். குருசாமி, எஸ்.வி. லிங்கம், குடந்தை எஸ்.கே. சாமி, நாகை என். காளியப்பன், டி.கே. சீனிவாசன், நாவலர் இரா. நெடுஞ்செழி யன், நாஞ்சில் நாடு எஸ்.கே. சாமி, டி.பி. பொன்னுசாமி, வழக்கறிஞர் வேணு கோபால், சர். ஆர்.எஸ். சர்மா, மருதவனம் பெரு நிலக்கிழார் ஏ.டி. சுல்தான், கலைஞர் மு. கருணாநிதி ஆகியோர் வந்து சிறப்பித்தனர். அழகர்சாமியின் இறுதிப் பயணத்தின் போது உடல் நலிவுற்றிருந்த கலைஞர் இதில் பங்கு கொண்டார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் மாணவர் மன்றச் சார்பில் நடைபெற்ற படத்திறப்பு விழாவினுக்குக் கலைஞர் மு. கருணா நிதி அழைக்கப்பட்டு அழகர்சாமியின் படத்தினைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

அறிஞர் அண்ணா அவர்கள், அழகர்சாமி மறைந்த நேரத்தில் 1949ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 3ஆம் நாள் ‘திராவிட நாடு’ இதழில் பின்வருமாறு எழுதினார்.

“சுயமரியாதை இயக்கத்தின் சுடர்! தன்மதிப்பு இயக்கத்தின் தனிப்பெரும் தளபதி! மூடப் பழக்க வழக்கங்களை முறியடிக்கும் முன்னணித் தலைவன்! வைதீகத்தின் வைரி! வருணாசிரமத்தின் விரோதி! சீர்திருத்தச் செம்மல்! சொற் செல்வன்! சோர்வற்ற உழைப்பாளி! தன்னலம் மறந்து தன்னாட்டுக்குப் பணியாற்றிய பண்புடையோன்! அறிவுப் பாதையில் அங்கும் இங்கும் கிடந்த பள்ளம் படுகுழிகளை நிரப்பிய பகுத்தறிவாளன்! அறியாமையை அகற்ற அஞ்சா நெஞ்சுடன் அவனி சுற்றி வந்த ஆண்மையாளன்! கல்லடியா? கவலைப்ப டாதே! சொல்லடியா? சோர்வடையாதே! பகைவரின் படையா? பயப்படாதே! எதிர்க்கட்சியினரா? ஏமாந்துவிடாதே! சனாதனமா? சாய்ந்து விடாதே! சதியா? சாகடி! மதமா? அதனை மங்க வை! மாசுகளைத் துடை! மன்பதையின் மாணிக்கமாக விளங்கு! மரியாதையைப் பெறு! சுயமரியாதை பெற்று சுகவாழ்வு வாழ முற்படு! - இது உன்னுடைய குறிக்கோளாக இருக்க வேண்டுமென்று எங்குச் சென்றாலும் எக்காளமிட்டு, மூலைமுடுக்கெல்லாம் முரசொலி கிளப்பித் தன்மான இயக்கத்தின் முன்னணித் தலைவனாக விளங்கி அஞ்சாநெஞ்சுடன் அறிவுப் பணிபுரிந்து வந்த அழகிரிசாமியே நீயா மறைந்தாய்? நின்னை மக்கள் மறந்த போதிலும், நீ அவர்களை மறவாமல் அரும்பணி ஆற்றி வந்தனையே! கைம்மாறு கருதாது கடமையைச் செய்த கருமவீரனே! நீயா மறைந்தாய்! என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதை நடைமுறையில் செய்து காட்டிய செம்மலே! நீயா மறைந்தாய்? எதிர்ப்பையே விருந்தாகக் கொண்டு எண்ணற்ற மக்களின் அறிவுக் கண் களைத் திறந்த ஏந்தலே! நீயா மறைந்தாய்? பகுத்தறிவுப் பாசறையின் படைத் தலைவனே! நீயா மறைந்தாய்?

தாயைப் பிரிந்த சேயைப் போல் தனித்து நின்ற தமிழ் மக்களின் தன்மானத்தைக் காக்க வந்த தளபதியே - நீயா மறைந்தாய்? 

அந்தோ! அழகர்சாமி! நீயா மறைந்தாய்!

நினைத்தாலே நெஞ்சு திடுக்கிடும் செய்தி மறக்க முடியாத சம்பவம்! மனத்தைக் குழப்பும் நிகழ்ச்சி!”  

நன்றி: செந்தாமரை கண்ணன். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved