🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 31

விஞ்ஞானமும் மெய்ஞானமும் – பகுதி 31

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

கடந்த ஆறு வாரங்களாக நாம் நமது உடலில் உள்ள ஏழு ஆற்றல் நிலைகளில் முதல் ஆறு ஆற்றல் நிலைகளாகிய மூலாதாரம்,   சுவாதிஷ்டானம்,  மணிபூரகம், அனாகதம், விசுக்தி மற்றும் ஆக்ஞயா சக்கரங்கள் பற்றி அறிந்து கொண்டோம். இந்தப் பதிவில் நாம் ஏழாவது சக்கரமாகிய சகஸ்ரார சக்கரத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.

பிரபஞ்சத்தோடும், இறைவனோடும் நம்மை இணைக்கும் சக்கரம் சகஸ்ராரம். இதுவே நமது சக்கரங்களில் மிகமிக சக்திவாய்ந்த சக்கரமாகும். பிற ஆறு சக்கரங்களையும் ஆளுகின்ற தலைமைச் சக்கரம் இது. பல தந்திரயோக நூல்களில் சகஸ்ராரம் ஒரு சக்கரமல்ல; அது பிரபஞ்ச சக்தியின் அம்சமாக உடலில் உறைந்துள்ள சக்தி என்ற குறிப்பும் காணப்படுகிறது.

ஆக்ஞயா  சக்கரத்தில் இருந்து 8 விரக்கடை தலைக்கு மேல் அமைந்துள்ளது. இந்த சக்கரம் மட்டுமே உடலுக்கு வெளியே அமைந்துள்ள சக்கரம் மற்ற ஆறு சக்கரங்கள் உடலுக்குள் அமைந்துள்ளது எனவே அவைகள் ஜட சக்கரங்கள் எனப்படும். இந்த சகஸ்ரார சக்கரம் மூலம் வெளியில் உள்ள ஆற்றலை கிரகித்துக் கொள்ள முடியும்.

இந்த சக்கரம் ஐங்கோண நட்சத்திரம் மற்றும் வட்ட வடிவம் கொண்டது அதில் 1008 தாமரை மலர்கள் கவிழ்ந்த நிலையில் இருக்கும் இவைகள் மண்டை ஓட்டிலுள்ள 1008 நுண் துளைகளை குறிக்கும். ஐந்து கோணங்கள் விந்து, நாதம், சக்தி, சிவம், பரம் ஆகியவற்றை குறிக்கும்.

இருப்பிடம்:  தலையின் மேற்பரப்பில் 

நிறம்:  படிக வர்ணம் 

ஒலி:  ஓம் 

தொழில்: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளல். 

அதிதேவதை: பராபரன், பரப்பிரம்மம்.

குண்டலினனி சக்தி சகஸ்ராரத்தைத் திறக்கும் போது ஏற்படும் உணர்வு நிலைகள் சகஸ்ராரச் சக்கரத்தினுள் குண்டலினி சக்தி நுழையும்போது ஏற்படும் உணர்வு நிலை மனித அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையாகும். இதையே “சமாதி நிலை’ அல்லது “ஜீவ சமாதி’ என்றும் அழைப்பார்கள். இந்த நிலையை அடைந்தவர்களின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் உருவாகும்.


சமாதி நிலையை அடைந்தவர்கள் தன்னுள்ளே ஒடுங்கிப்போவார்கள். (தாமச நாடி தூண்டப்படுவதால் இது நிகழுகிறது). அவர்கள்நிறைகுடம்; அதன்பின் தளும்பமாட்டார்கள்.பேச்சு, பிரசங்கம், ஆரவாரங்கள் அனைத்தும் அடங்கிப்போகும். எல்லையற்ற ஆனந்த நிலையில் லயித்திருப்பார்கள். இது இறையோடு ஒன்றிய நிலை. மனித உணர்வுகளைக் கடந்த நிலை.இந்த நிலையை அடைந்தவர்கள் எவரும் அந்த நிலை எப்படிப்பட்டது என்பதை விளக்கியதில்லை. அது விளக்கங்களால் புரிந்து கொள்ளமுடியாத ஒரு அனுபவம்.

சகஸ்ராரச் சக்கரத்தினுள் குண்டலினி நுழைந்தால் எத்தகைய உணர்வு நிலை ஏற்படும் என்ற கேள்விக்கு, “கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’ என்பதையே பதிலாகக் கூறமுடியும். இந்த வாரத்துடன் நமது உடலில் உள்ள ஏழு முக்கிய உணர்வு நிலைகள் அல்லது ஆற்றல் நிலைகளைப் பற்றி அறிந்து கொண்டோம். இன்னும் பல் வேறு துணைச் சக்கரங்கள் நமது உடலில் உள்ளது. அதைப் பற்றி அறிய விரும்புகின்றவர்கள் முறைப்படி தியான வகுப்புகள் நடத்தும் இடங்களில் சேர்ந்து பயனடையும்படி கேட்டுக் கொள்கிறேன். அடுத்த வாரம் இந்த ஏழு சக்கரங்களையும் எப்படி முறைப்படி இயக்கி அதன் பலனை அடைவது என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம். 

என்றும் அன்புடன் உங்கள்
முனைவர் கெ நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச. கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved