🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கலைஞர் 100 : ரூஸ்வெல்ட்-கருணாநிதி- லாயிட் ஜார்ஜ்

தமிழினம் பெருமையோடு கொண்டாடும் தலைவர் கலைஞரின் பெயரை எவ்விதசிறப்பும் மதிப்பும் இன்றி எழுதலாமா என்று இக்கட்டுரையைப் படிப்பவர்களுக்குத் தோன்றலாம். அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்தவர்  ரூஸ்வெல்ட். இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் லாயிட்ஜார்ஜ். அவர்களுக்கும் கலைஞருக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியும் எழலாம். இரண்டு கேள்விகளுக்கும் விடை சொல்கிறது கலைஞரின் நெஞ்சுக்கு நீதி .

எண்ண எண்ண வியப்பூட்டுவதும், எழுதி எழுதித் தீராததும் ஆக அமைந்த அதிசயம் தான் முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்க்கை. அவரது வாழ்க்கைப் பதிவுகள் ஒரு தனிமனிதரின் வரலாறாக இல்லாமல் ஒரு நூற்றாண்டின் தொகுப்பாக இருக்கிறது. ஆயினும் இந்த உண்மை சிலருக்கு உவப்பாக இல்லை. யாரந்த சிலர்.?

முதல் வகையினர் , கலைஞரின் ஆட்சிக்காலங்களில் அவர் உருவாக்கிய திட்டங்களால் பயன்பெற்றவர்கள். ஆனால் அந்தத் திட்டங்களை செயல்படுத்த கலைஞர் அவர்கள் எதிர்கொண்ட தொல்லைகளையும், அவரால் தானும் தன் குடும்பமும், தன் சமூகமும் கல்வி,வேலை,மற்றும் வாழ்க்கைத்தரத்தில் உயர்ந்த வரலாற்றை உணராதவர்கள். தங்கள் உயர்வுக்கும் சுயமரியாதைக்கும்  நெருக்கடிகள் வரும்போது அவர்கள் கலைஞரின் அருமையை உணர்வார்கள்.

இரண்டாவது வகையினர் பல பெயர்களில் இருப்பார்கள். அவர்களுக்குக் கலைஞரின் சிந்தனையும் தெரியும், செயல்திறனும் தெரியும். அவரால் தமிழ்நாடு கண்ட முன்னேற்றமும் புள்ளி விவரத்தோடு தெரியும். ஆனால் அதனை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அந்த சாதனைக்கு வேறு யாரையோ பொறுப்பாக்குவார்கள். அவர்கள் மனமும் வாயும் கலைஞர் என்ற பெயரைக் கேட்டவுடன் கடுமையான வன்மத்தைக் கக்கும். காரணம் அவர்கள் மூளையை நிறைத்திருக்கும் சாதி ஆதிக்கம், மதவெறி மற்றும் பெண்ணடிமைச் சிந்தனை எனும் கொடிய நோய்கள். 

இந்த மூன்று நோய்களையும் குணப்படுத்தவே சமத்துவம், நல்லிணக்கம்,பெண்விடுதலை என்ற  கோட்பாடுகளை முன்வைத்தது திராவிட இயக்கம். அந்த சமூக மருத்துவத்தை தன் ஆட்சியின் மூலமாக கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட , மக்களிடம் கொண்டு சேர்த்தவர் கலைஞர். ஆகவே ஆதிக்க வெறி கொண்டவர்கள் அவரை இழிவு செய்வதன் மூலம் தங்கள் எரிச்சலை எப்போதும் வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் ஒருபோதும்மாறமாட்டார்கள்.

சுயநலத்தில் தோய்ந்த வன்மம் நிறைந்த சொல்லம்புகளின் வலியை அடிபட்டவர்கள் மட்டுமே உணர்வார்கள். இன்று வளரும் குழந்தைகளை பெற்றோர் ஒருசொல் கடிந்து சொன்னால்கூட முகம் வாடிப் போகிறார்கள். வளரும் சிறுவர்களோ ஆசிரியர் கண்டித்தால் தற்கொலைக்கும் போகிறார்கள். அதற்கு மேல் வளர்ந்தவர்கள் அறிவுறை கூறுபவர்  உறவையே முறித்துக் கொள்கிறார்கள். ஆனால் எந்தக் காரணமும் இன்றியே  அத்தகைய வன்மங்களையும் கொடுஞ்சொற்களையும் தன் வாழ்வில் இளம்வயது முதல் சந்தித்து வந்த  கலைஞர் அதை எப்படி எதிர்கொண்டார் என்பது நாம் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்வியல் பாடங்களில் ஒன்று.

தன்னை அறிந்தவரே தலைவராவார்!

கலைஞர் அவர்கள் தனது வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் , அது ஏற்றமோ இறக்கமோ, உயர்வோ தாழ்வோ, மகிழ்ச்சியோ துயரமோ, பெருமையோ அவமானமோ எதுவாக இருப்பினும் அந்தக் கட்டத்திலேயே தன்நிலையையும் நிலைப்பாட்டையும், அகச்சூழலையும் புறச்சூழலையும் விருப்பு வெறுப்பின்றி ஆய்ந்து, சுயவிமர்சனத்துக்கு உட்படுத்திக் கொண்டார். சான்றாக பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த பின் கலைஞர் அவர்கள் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அன்றைய சூழலில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள்  முதல்வராக வரலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் பேரறிஞர் அண்ணா என்ற ஒப்பற்ற ஆளுமை இல்லாத வெற்றிடத்தை கலைஞரைப் போன்ற செயல்திறனும் இயக்கத்தைக் கட்டிக்காக்கும் ஆற்றலும் உள்ளவரால் தான் நிரப்பமுடியும் என்று தந்தை பெரியார் அவர்கள் வற்புறுத்தினார். அதன்பிறகே முதல்வர் பதவியை ஏற்றார் கலைஞர். 

அப்போது அவர் வயது நாற்பத்தைந்து. 

அதுவரை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர்களில் இளையவர் கலைஞர்தான். அத்தகைய சூழ்நிலையில் ஒருவருக்கு எவ்வளவு மகிழ்ச்சியும் பெருமிதமும் தலைக்கணமும் ஏற்பட்டிருக்கும். ஆனால் கலைஞர் தன் மன உணர்வு எப்படிஇருந்தது என்று எழுதினார்.

“ குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த தலைவி திடீரென்று காலமாகி விடவே. அவரது மகள்- சிற்றாடை கூடக் கட்டத் தெரியாத சிறுமி-அடுக்களை வேலையிலிருந்து வீட்டாருக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் செய்ய முற்படும்போது குற்றங் குறைகள் இருந்தாலும் அதனைப் பொருட்படுத்த மாட்டார் அன்றோ? அந்த நம்பிக்கையில் தான், தாயற்ற அந்தச் சிறுமியைப்போல். நான் பெரும் பளுவைச் சுமக்கலானேன்.”

இப்படி தன்னைத்தானே மதிப்பிட்டுக்கொண்டு ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்கலைஞர்.  ஆனாலும் ‘அந்த சிலருக்கு’ கலைஞர் முதல்வராகிறார் என்ற செய்தி கசந்தது. அதுவரை பேரறிஞர் அண்ணாவை திட்டித் தீர்த்தவர்களுக்கு, திடீரென்று அண்ணாவே நல்லவர் ஆகத் தோன்றினார். அதனை அவர்கள் நாகரீகம் அற்றசொற்களில் வெளிப்படுத்தினார்கள். எப்படிப்பட்ட நெஞ்சுரம் கொண்டவர்களையும் சோர்ந்துவிடச் செய்யும்.

ஆனால் கலைஞர் என்ற அரசியல் தலைவர் தந்தை பெரியாரின் பட்டறையில்உருவானவர். பேரறிஞர் அண்ணாவால் பட்டை தீட்டப் பட்டவர். எனவே அவரது சிந்தனை அந்த வசவுகளுக்குப் பின் உள்ள காரணத்தைத் தேடியது. அத்துடன், உலகில் வேறு யாரேனும் அரசியல் தலைவர்களுக்கு இத்தகைய இழிமொழிகள் எதிரிகளால் பரிசாகத் தரப்பட்டுள்ளதா  என்று தேடியது. அப்போது அவர் நினைவில் வந்தவர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் ( Franklin D Roosevelt) அமெரிக்காவின் 32 ஆவது குடியரசுத் தலைவர். அவரைப் பற்றிய முக்கியமான செய்தியை நமக்குச் சொல்கிறார் கலைஞர்.

“1938 ஆம் ஆண்டு அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க பத்திரிகைகளில் ஒன்றான ‘எஸ்கொயர்’ ( Squire) ஒரு கேலிச் சித்திரம் வெளியிட்டது. 

நடைபாதையில் ஒரு சிறுவன் “ ரூஸ்வெல்ட்” என்று எழுதிக் கொண்டிருக்கிறான். அதைப் பார்த்த அவனது அண்ணன், தன் தாயாரிடம், ”அம்மா, இதோ பார் தம்பி ஒரு கெட்ட வார்த்தையை எழுதுகிறான் ”என்று கூச்சலிடுகிறான். இதுதான் அந்தக்கேலிச்சித்திரம்.

“ எஸ்கொயர் ஏட்டில் அதனைக் கண்ட ரூஸ்வெல்ட் ஆத்திரப்படவில்லை. பத்திரிகைகளின் நியாயமான உரிமைகளைப் பறிக்கும் பயங்கரச் சட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. அந்தக் கேலிச்சித்திரத்தை ரசித்தார். அது மட்டுமல்ல, அதற்குக் கண்ணாடியும் சட்டமும் அமைக்கச் செய்து வெள்ளை மாளிகையில் அவரது படுக்கையறைக் கதவில் மாட்டி வைத்தார்”.

இந்த நிகழ்வை கலைஞர் எதற்காக்க் குறிப்பிட்டார்.  பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு  1932 முதல் 1945 வரையில் பொறுப்பு வகித்தவர். நீண்டகாலம் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்தவர். முதன் முதலாகத் தேர்தலில் வென்றபோது ரூஸ்வெல்ட்டின் வயது 42. அவரது பெயரை “ கெட்டவார்த்தை” என்று ஒரு புகழ்பெற்ற ஏடு அதுவும் அறிவாளிகள் விரும்பும் பத்திரிகை எனப் பெயர் பெற்ற “எஸ்கொயர்” எழுதியது எப்போது என்றால் ரூஸ்வெல்ட் இரண்டாவது முறையும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற பிறகுதான். அப்படியானால் ‘அந்த அறிவாளிகளுக்கு ‘அவர் மீது எப்போது எதற்காக வெறுப்பு தோன்றியது? ரூஸ்வெல்ட் தனது முதல் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றிய உள்ளாட்சி சீர்திருத்தங்கள் பெரும்பாலான அமெரிக்க மக்களுக்குப் பயன்கொடுத்தன. அதனை பணம் படைத்தவர்ககளின் மனம் ஏற்கவில்லை. அதனால் மேட்டுக்குடி அறிவாளிகளுக்கு அவர் பெயரே கெட்டவார்த்தையாகத் தோன்றியது. 

அவரைப்போலவே கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வரான போது அவரது வயது 45. தமிழ்நாட்டின் முதல்வராக நீண்டகாலம் ஆட்சி செய்தவர் அவர்தான். ஆனால் கலைஞரின் பெயர் முதல்வர் பதவிக்கு முன் மொழியப்பட்டபோதே தமிழ்நாட்டின் ஆதிக்கவாதிகளுக்கு கலக்கம் ஏற்பட்டுவிட்டது. தாங்கள் மட்டுமே அறிவாளிகள் என்று சொல்லிக் கொண்டிருந்த கூட்டம் அவர் பெயரைக் கேட்டாலே வெறுப்பையும் நஞ்சையும் உமிழ்ந்தது. இந்த இரண்டையும் ஒப்பிட்டுக் கலைஞர் அவர்கள்எழுதினார்.  “…. இங்கேயும் சில பத்திரிகை அதிபர்கள்,ஆதிக்கபுரியினர்,ஆலயஅரசர்கள்,பெரும்பண்ணைக்கார்ர்கள்,சீமான்கள்,கோமான்கள், ஒரு கெட்டவார்த்தையைக் கண்டு பிடித்து வைத்திருந்தார்கள். அவர்களது பார்வையில் கெட்ட வார்த்தையாகப்பட்ட அந்தப் பெயர்தான் கருணாநிதி என்பது.”

சாமானியன் தலைவராவதா ?

சாதியாலும் பணத்தாலும் நசுக்கப்பட்ட  எளிய மக்களின் கல்வி, வாழ்விடம், வேலைவாய்ப்பு, குடிநீர், மின்சாரம், உணவுப் பொருட்கள் வழங்குதல் (ரேஷன்) என அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகத் திட்டங்களைத் தீட்டியதால் அவர்களை ஒடுக்கி வாழ்வதில் பெருமையடைந்த ஆதிக்க புரியினரும் மாளிகை வாசிகளும் கலைஞரைப் பற்றிய வெறுப்பை விடாது விதைத்து வந்தார்கள். 

அவர் செய்த சாதனைகளை , அவர் உருவாக்கிய தமிழ்நாட்டின் கட்டமைப்பை கல்வி முன்னேற்றத்தை பெண்ணுரிமைச் சட்டங்களை நலத்திட்டங்களை அறிந்த மேட்டுக்குடிப் பெருமைவாதிகள் வேறு ஒரு கோணத்தில் தாக்குதலைத் தொடுத்தார்கள். கலைஞர் ஒரு சாமானியர். சாதிஅமைப்பில் மிக அடித்தட்டில் இருப்பவர்களை விடவும் அவமானங்களைச் சுமந்த சமூகத்தில் பிறந்தவர்.” நானே ஒரு தலித் தான்” என்று பலமுறை அவர் குறிப்பிட்டார்.  அத்தகைய ஒரு சாமானியரா இந்து மத்த்தின் சொத்துரிமைச் சட்டத்தைத் திருத்தி பெண்களைப்  பரம்பரை சொத்தில் பங்காளியாக்குவது?

அவரா அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க சட்டம்போடுவது? 

முதலாளிகளின் கோபத்தைப் புறக்கணித்து தொழிலாளர் மேம்பாட்டுச் சட்டங்களை அறிமுகப்படுத்த அவருக்கு என்ன தகுதி?

இந்தக் கணைகள் அத்தனையும் ஒருவரது சாதியைக் குறிவைத்து தாக்கும் போது, தாக்கப்படுவோர் யாராக இருந்தாலும் சற்று நிலைகுலைந்து போவது உறுதி. அதைத் தெரிந்துதான் எதிரிகள் குறிபார்த்து தாக்குவார்கள் . அந்த நிலையிலும் தந்தை பெரியார் காட்டிய  வழியில் கலைஞரின் அசைக்க முடியாத பாறை போன்ற உள்ளம் உறுதியுடன் நின்றது. அவரது சிந்தனையில் இன்னொரு மனிதரின் பெயர் உலவுகிறது. அவர்தான் லாயிட் ஹார்ஜ் .  இங்கிலாந்தின் பிரதமராக 1916 ஆம்  ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதற்கு முன்னால் நிதி அமைச்சராக அவர்  தேர்ந்தெடுக்கப்பட்ட போது இங்கிலாந்திப் பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டது. ஏனெனில் லாயிட் ஜார்ஜ் ஒரு சாமானியர். எளிய குடும்பப் பின்னணியில் இருந்து அரசியலுக்கு வந்தவர். அதனால் அவரை மட்டம் தட்டுவதாக நினைத்து சர்கான் பிரபு என்ற சீமான் ஒருவர் “ உலகத்தில் நற்செயல்களும் நல்ல திட்டங்களும் சீமான்களாகப் பிறந்தவர்களால் தான் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன” என்று கூறினார். அதற்கு பதிலளித்த லாயிட் ஜார்ஜ் “சர்கான் பிரபுவுக்கு அவர் வீட்டிலேயே மாட்டப்பட்டிருக்கும் ஏசுவின் படம் கண்ணில் தெரியவில்லை போலும். கலேலியா கடற்கரையில் சாதாரணக் குடியில் பனிரெண்டு் மீனவர்களால் தான் கிறிஸ்தவ மதம் உலகெங்கும் பரவியது. பிரபுக்களால் அல்ல:. வரலாறு அவர் விரும்புவதுபோல்அமையவில்லையே!” என்று நிதானiமாக பதிலுரைத்தார்.''

என்று இந்த நகழ்வை தன் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தார்.

 இப்படி தமிழ்நாட்டின் சட்டசபையிலும், பொது வெளிகளிலும் தன்மீது எறியப்பட்ட சுடுகணைகளை தனக்கு மட்டும் நடந்ததாக கலைஞர் எண்ணவில்லை. அஞ்சாமையும், பகுத்தறிவும், சுயமரியாதை உணர்வும் அவரது பரந்து பட்ட படிப்பறிவும் அவரை உலக வரலாற்றின் பக்கங்களில் தன்னைப்போல் செயல்பட்டவர்களையும் அவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளையும் எண்ணிப் பார்க்க வைத்தது. “ எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? “ என்று புலம்புகிறவர்களை நாம் அறிவோம். ஆனால் இது எனக்கு மட்டும் நடக்கவில்லை, என்னைப்போல் சமூகத்திற்காக் உழைத்த மற்ற தலைவர்களுக்கும், நாடுகளின் எல்லைகளைக் கடந்து நடந்திருக்கிறது என்ற செய்தியை தன் உடன்பிறப்புகளுடன் பகிர்ந்து தானும் ஆறுதல் பெறுகிறார் அந்த மாபெரும் தலைவர் என்பதை உணரவைக்கிறது அவரது எழுத்து.

அதே நேரத்தில் கோணல் புத்திக்கார்ர்கள் இந்த ஒப்பீடுகளைக் குறித்து என்ன நினைப்பார்கள் என்றும் எண்ணிப்பார்த்து அவர்களுக்கும் ஒரு விளக்கத்தைக் கூறுகிறார்.

“சில பெரிய தலைவர்கள், சிறந்த மனிதர்களின் வாழ்வில் தொடர்புடையநிகழ்ச்சிகளைப்போல் என் வாழ்விலும் சில நிகழ்ச்சிகள் ஒப்பிடத்தக்க அளவுக்கு இருப்பதாக நான் குறிப்பிட நேர்ந்தால், என்னையும் நான் அவர்களின் அளவுக்கு ஆணவத்துடன் உயர்த்திக் கொள்வதாக யாரும் எண்ணிட வேண்டாம். நிகழ்ச்சிகள் அல்லது செய்திகளின் ஒற்றுமைக்காக மட்டுமே அவற்றைக் குறிப்பிடுகிறேன் என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். “

‘நீ யார் என்று எனக்குத் தெரியும்’ என்று எதிரியின் முன்நின்று பேசும் தந்தை பெரியாரின் கூர்த்தமதியும் தெளிவும் கலைஞர் அவர்களின் இந்த விளக்கத்தில் வெளிப்படும். 

மேலும் கலைஞர் அவர்கள் கூறும் ஒரு நுட்பமான வேறுபாட்டை  நாம் கூர்ந்து நோக்கி புரிந்து கொள்ள வேண்டும். சாமானிய குடும்பத்தில் இருந்து வளர்ந்து அதிகாரம் பெறுகிறவர்கள் இரண்டு வகையினர். சமூகத்துக்காக உழைப்பவர்கள் ஒரு வகை,மக்களின் தலையிலேறி மிதிப்பவர்கள் மற்றொரு வகை.  தங்களுக்காக உழைக்கும் ஒரு சாமானிய மனிதனின் வளர்ச்சியை, உழைப்பை, சாதனைகளை எளிய மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள், ஆதிக்க எண்ணம் கொண்டவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்ற வேறுபாடுதான் அது. 

“ஓயாமல் உழைத்து உயிருக்கு அஞ்சாமல் கடமையாற்றி, தியாகங்கள் பல செய்து, தன்னலம் மறந்து அடக்கு முறைகளைப் புன்னகையுடன் ஏற்ற காரணத்தால் எத்தனையோ சாமான்ய குடும்பத்தினர் மக்களின் இதய சிம்மாசனத்திலே இடம் பெற்றதுண்டு.

பணம், பகட்டு, ஆடம்பரம், அதிகாரவலிவு, இவைகள் பக்க பலமாக அமைந்துவிட்ட காரணத்தினாலேயே மக்களின் தலையிலேறி உட்காரக்கூடய வாய்ப்பு பெற்ற எத்தர்களும் உண்டு. அந்த எத்தர்களை இனிய நண்பர்களாக ஆக்கிக் கொள்ளும் பரந்த இதயம் படைத்த பணக்காரப் பிரபுக்கள், இடதுசாரி சக்திகளாக வளருகிற எந்தவொரு மனிதனையும் அழித்து ஒழிப்பதற்குத் தங்கள் கையில்கிடைத்த ஆயுதங்களையெல்லாம் பயன்படுத்தியே தீருவர்.” 

இப்படிப்பட்ட இரு்வேறு உலகத்தில் தான் யார் என்பதை உணர்ந்தவர் கலைஞர். அதனால் தனக்கு இழைக்கப்பட்ட அவமானங்களுக்கு என்ன காரணம் என்பதையும்  “இங்கிலாந்தின் ஜனநாயகத்தில் இடம் கிடைத்த பிறகும் லாயிட் ஜார்ஜ் போன்ற ஆற்றலாளர்களையே சர்கான் பிரபுக்களுப் போன்றவர்களின் ஏசல் கணைகள் மோதிப் பார்த்தன என்றால், மிகச் சாதாரன குடும்பத்தில் - குடிப்பெருமையோ குலப்பெருமையோ இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த என்னை சீமான்களின் முகாம் ஏற்றுக் கொள்ளுமா ? புறக்கணிக்கத்தானே செய்யும்! ஆனால் ஒன்று- அந்தப் புறக்கணிப்புத்தான் எனக்கு இயற்கையாகக் கிடைத்த பெருமையென்று நான் கருதி மகிழ்ச்சி கொண்டேன்.”

என்று தன் நெஞ்சுக்கு நீதி பிடைக்காதபோது தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்ட கலைஞர் அவர்களின் எழுத்து படிப்பவர்கள் மனதை உருக்கக் கூடியது. 

இப்படித்தான் அமெரிக்காவின் ரூஸ்வெல்ட்டும் , இங்கிலாந்து நாட்டின் லாயிட் ஜார்ஜும், தமிழ்நாட்டின் கலைஞரும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள் என்பதைப் படித்தபோது , கலைஞர் எனும் வரலாறு எளிதில் படித்து முடித்துவிட முடியாத பேராறு என்றே தோன்றுகிறது.


கலைஞர் 100 க்காக நமது தளபதி இதழுக்காக திராவிடர் கழக பிரச்சார அணி செயலாளர் திருமதி.அருள்மொழி அண்ணாமலை எழுதியுள்ள கட்டுரை.



  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved