🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தமிழகத்தை தலைநிமிர்த்திய முன்னத்தி ஏர்

முத்துக் கடல் பதித்து மூன்று நெறி வளர்த்து கத்தும் கடல் மீது கலங்களில் விளையாடும் கற்றுக் கலை மிகுந்த காவலனே, கலைஞரே! தென்பாண்டி சிங்கம் தந்த முத்தமிழே! நின் நூற்றாண்டு விழா காணும் இந்நன்நாளில், உம்மை நினைத்தவுடன் எந்தன் நினைவில் வந்தவற்றை அணிசேர்த்து சரம் தொடுக்க முனைகிறேன், எமை ஆசீர்வதிப்பீராக... 

கூத்தன் இருந்தான் குறளரசன் அங்கு இருந்தான் வார்த்தைத் தமிழுக்கு வணங்கிய தமிழ்வேந்தன் கம்பன் இருந்தான் வயதான தமிழ் பாட்டி ஔவையிருந்தாள் நக்கீரன் நன்னாகன் நப்பசலை ஓக்கூர் மாசாத்தி  ஒண்சாத்தான் சிலம்பு எடுத்த தக்கோன் என புலவர் பலர் இருந்தனர். யாபபிலா பாடலேனும் யார் தரும் கவிதையேனும் மா பலா போல் மடியில் வாங்கி காப்பிலார் தமிழர் நெஞ்சில் பதித்துவிட்ட பைந்தமிழ் காவலர் எங்கள் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா. ஆம். காலமெல்லாம் தமிழர் தம் பண்பாடு  காக்க, தமிழ் இனம் காக்க, தமிழ் மொழி காக்க, தமிழர் நலன் காக்க, காலமெல்லாம் உழைத்திட்ட தலைவருக்கு நூற்றாண்டு விழா! 

ஈசனுக்கு பூசகன் நானே, நாராயணனுக்கு நாலும் நானே, ஈரேழு லோகங்கள் இருக்குது பார் என ஈராயிரம் ஆண்டுகளாக இட்டுக்கட்டிய கதைகள் புனைந்து ஆதிக்கம் செலுத்திவோருக்கு ஆமாம் சாமி போட்டுத்திரிந்த அறியாக் கூட்டத்தின் நடுவே, ஈரேழு வயதில் திருவாரூர் வீதிகளில் புலிக் கொடியைக் கையில் ஏந்திய பாலகனாக, 

"வாருங்கள் எல்லோரும் இந்திப்

போருக்குச் சென்றிடுவோம்; 

வந்திருக்கும்

இந்திப் பேயை விரட்டித் 

திரும்பிடுவோம்!

ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ

தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே;

வீரத் தமிழ் கொஞ்சும் நாட்டிலே - நாங்கள்

சாரமில்லாச் சொற்கள் ஏற்க மாட்டோம் வீட்டிலே!", 

என்று அன்னை தமிழ் காக்க வீதியில் இறங்கி உரிமை முழக்கமிட்ட உறுதியோடு, ஈரோட்டுப் பகலவனின் பாசறையில் பகுத்தறிவு பயின்று,  இறுதி காலம் வரை ஆதிக்கத்திற்கு எதிராகவும், பகுத்தறிவுக்கு நெருக்கமாகவும் எண்பது ஆண்டுகள் வாழ்ந்து வரலாறாகிப் போனவர் தலைவர் கலைஞர்.

இறையாண்மைமிக்க சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமராக  பொறுப்பேற்று முப்பதாண்டுகள் கடுமையான தொடர் உழைப்பால் நவீன சிங்கப்பூரை வடிவமைத்து உலகை வியக்க வைத்த சிங்கப்பூரின் தந்தை லீகுவான் யூ போல் தொடர்ச்சியாக ஆளும் வாய்ப்பும் இல்லையென்றாலும், இந்திய ஒன்றியத்தின் கட்டுப்படுத்தப்பட்ட இறையாண்மையுள்ள ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்துகொண்டு நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி கலைஞர் என்றால் அது மிகையாகாது.

தமிழகம் கண்டுள்ள முன்னேற்றத்திற்கு தலைவர் கலைஞரின் சிந்தையிலே தோன்றிய பல்வேறு திட்டங்களும், சட்டங்களும் தான் காரணம் என்பதை ஊரறியும், நாடறியும். தலைவர் கலைஞர் அவர்கள் எந்த துறையில் சென்றாலும் அந்த துறையில் முத்திரை பதித்தவர். இலக்கணமா? இலக்கியமா? திரைப்படத் துறையா? அரசியலா? கவிதையா? அவர் தொட்ட துறை அனைத்திலும் உச்சம் தொட்டவர் கலைஞர். 

1967-இல் முதல்முறையாக கழக ஆட்சி அமைந்தபோது பொதுப்பணி மற்றும் போக்குவரத்து ஆகிய மிகமுக்கியத்துவம் வாய்ந்த துறையின் பொறுப்பை கலைஞரிடம் வழங்கினார் அறிஞர் அண்ணா. போக்குவரத்துத்துறையை அரசுடமையாக்கி அகில இந்தியாவின் பார்வையையும் தன்பக்கம் திருப்பினார் கலைஞர்.  போக்குவரத்து துறையை அரசுடைமை ஆக்கியதன் விளைவாக தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் பேருந்து வசதி, இதன்பலனாக தரமான சாலை, பின்னாட்களில் மாணவ-மாணவியர், தியாகிகள் ஆகியோருக்கு இலவச பஸ் பாஸ் தொடங்கி இன்று மகளிருக்கு இலவச பயணம் வரை சாத்தியமாகியுள்ளது. கலைஞர் போட்ட எந்த விதையும் எதிர்கால நலன் சார்ந்திருப்பதால் அரைநூற்றாண்டுக்கு கடந்துகூட புதிய திட்டங்களுக்கு அது பயனளித்து வருகிறது.

அதே போல் இரண்டு மூன்று கிலோமீட்டருக்கு ஒரு ஆரம்பப்பள்ளியும், நான்கு ஐந்து கிலோ மீட்டருக்குள் ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியும், மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள் அமைந்திடவும் தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாக இன்றைக்கு இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளும், அதிக கல்லூரிகளும் இருக்கின்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருப்பதற்கும், உயர்கல்வியில் தமிழகம் தேசிய சராசரியைவிட இருமடங்கு அதிகம் பெற்றிருப்பதற்கும் கலைஞரின் பங்களிப்பு மகத்தானது.

அதேபோல் சென்னை போன்ற மாநகரங்களில் மண்ணின் பூர்வகுடிகள் வசிக்கும் குடிசைகள் அடிக்கடி தீக்கரையாகி, நிற்கதியாய் நிற்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி குடிசைகள் இல்லாத தமிழகத்தை அமைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். எளிய மக்களின் சுகாதாரத்தை காக்கும் வகையில் குடிநீர் வடிகால் வாரியத்தை உருவாக்கி பாதுகாக்கப்பட்ட குடிநீரை மக்களுக்கு வழங்கி பல்வேறு நோய்களிலிருந்து மக்களை காப்பாற்றியவர். அதே போல் மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையத்தை உருவாக்கி  மாதந்தோறும் கிராம புரங்களில் வரும் முன் காப்போம் முகாம்களை அமைத்து மக்களை பல்வேறு நோய்களிலிருந்து இன்றைக்கு காப்பாற்றிக் கொண்டிருப்பது கலைஞரின் திட்டம் என்று சொன்னால் அது மிகையாகாது. சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்துவந்த கண் அறுவை சிகிச்சை மருத்துவத்தை இலவச கண்ணொளி வழங்கும் திட்டத்தினை அரைநூற்றாண்டுக்கு முன்பே (1970 இல்) தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி மக்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். அதன் தொடர்ச்சியாக இலவச கண் அறுவை சிகிச்சை முகாம்கள் வீதி தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அதற்கு மூல காரணம் கலைஞர்.

எளிய மக்களின் மேம்பாட்டில் என்றுமே அக்கறை கொண்ட கலைஞர், மனிதனை மனிதனே கை ரிக்ஷாவில் அமர வைத்து இழுத்துச்செல்லும் இழிநிலையை ஒழித்துக் கட்டி, சைக்கிள் ரிக்ஷாவை அறிமுகப்படுத்தி மனிதகுலம் மற்றும் ஓர் அடி அடிமைத்தனத்திலிருந்து முன்னேற வழிவகை செய்தார். மகளிர் முன்னேற்றத்தில் நாட்டிற்கே வழிகாட்டியாக விளங்கும் தலைவர் கலைஞரின் திட்டங்கள் ஏராளம், தாராளம். முதன் முதலில் காவல்துறை பணியில் பெண்களை அமர்த்தியதும், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு இலவச திருமண உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் கலைஞர். ஒரு தலைமுறைக்கு முன்பு கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தால் இன்று உயர்கல்வி படிக்கின்ற பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்பதை நாடறியும். இதன் தொடர்ச்சியாக கல்லூரி படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வியை சாத்தியமாக்கினார்.

முதியோர் உதவித்தொகை வழங்கிய கலைஞர், விதவைகளுக்கு மறுவாழ்வழிக்கும் திட்டத்தையும் செயல்படுத்த தவறவில்லை. பெரியார் முதல் அம்பேத்கார் வரை பெண்களுக்கு சொத்தில் சமபங்கு வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தாலும் அதை சட்டமாக்கி நிறைவேற்றிக் கொடுத்தவர் கலைஞர். இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதபோது இந்தியாவிலேயே முதன்முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும், உழவர் சந்தை திட்டத்தையும் அறிமுகப்படுத்தியவர் கலைஞர். கடும் வறட்சியால் விளச்சலின்றி விவசாயிகள் கடன்களால் துயரற்ற போது 7000 கோடி அளவுக்கு விவசாயக்கடனை தள்ளுபடி செய்து சரித்திரம் படைத்தார். இந்திய தேசத்தை பட்டினி சாவுகள் சூழ்ந்தபோது ஒரு ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி திட்டத்தைக் கொண்டுவந்து தமிழ்நாட்டில் பட்டினி சாவுகளை அறவே ஒழித்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். 

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு இல்லங்களையும், தொழு  நோயாளிகளுக்கு மறுவாழ் முகாம்களையும் அமைத்து கொடுத்த கலைஞர், தமிழ்நாட்டில் அனாதை என்று சொல்லி இருக்கக்கூடாது என்று சொல்லி இந்து சமய அறநிலைத்துறை சார்பாக இயங்கும் கோயில்கள் மூலமாக கருணை இல்லங்களை உருவாக்கி ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்தோடு அவர்களுக்கு கல்வி அறிவை கொடுத்தார் கலைஞர். 

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று முழங்கிய கலைஞர், மத்திய – மாநில அரசுகளின் உறவுகளை சீரமைக்கும் வழிவகைகளை கண்டிட இராஜமன்னார் குழுவை நியமித்து ஆணையிட்டார். அதேபோல் உரிமைக்கு குரல் கொடுப்பதில் கலைஞரை மிஞ்ச யாருமே இல்லை. இந்தியாவில் இருக்கின்ற மாநில முதல்வர்கள் ஆகஸ்ட் 15, சுதந்திரதினத்தன்று அவரவர் மாநில தலைநகரங்களில் தேசியக் கொடியை ஏற்றிடும் உரிமையை பெற்றுக்கொடுத்தார். 

அதேபோல் தமிழ்நாட்டுக்கென்று தனியாக தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் ஒன்றை நிறுவினார். இதன் பலனாக பின்னாட்களில் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கவும், மாநில அரசின் கல்வித்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கு பாடபுத்தகங்களை அச்சிட்டு உரிய காலத்தில் வழங்கிடவும் உதவிகரமாக இருந்தது. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான நியாய விலைக் கடைகளை அமைத்து அரசின் நலத்திட்டங்கள் எளியமுறையிலும், விரைவாகவும் கடைக்கோடி மக்களுக்கு கொண்டு சேர்த்தார்.

இந்தி மொழி திணிப்பிற்கெதிராக இளம்கன்றாக களமிறங்கிய கலைஞர் தமிழ்மொழிக்கு செம்மொழி அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தார். சமகால  மொழிப்போர் தியாகிகளுக்கு உரிய மரியாதை கிடைக்கச் செய்த அதே கலைஞர் தான், ஆங்கியேலேயர்களை எதிர்த்து சமர்புரிந்து இன்னுயிரீந்த மண்ணின் மைந்தர்கள் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் முதல் மருது சகோதரர்கள் வரை பல்வேறு  சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நினைவு சின்னங்களை அமைத்து இளம் தலைமுறையினருக்கு தியாக வரலாற்றை கொண்டு சேர்த்தவர் கலைஞர். 

கணினியை இந்திய மாநிலங்கள் அறிந்திடாத காலத்தில் 1969-இல் தமிழகத்தில் கணினியை துணைப் பாடநூலாக்கியவர் அன்று பாடநூல் வாரியத் தலைவராகவும் இருந்த கலைஞர். இதுமட்டுமா? செமிகண்டக்டர் தான் கணினி உலகின் முக்கிய விஷயம் என்பதை உணர்ந்து அதற்கும் தனி புத்தகம் கொண்டு வந்தார். 1990-களில் இந்தியாவில் கம்ப்யூட்டர் அறிமுகம்  ஆனபோது 1996-இல் ஆட்சிப்பொறுப்பேற்றுக்கொண்ட கலைஞர் சட்டங்களை திருத்தி இந்தியாவிலேயே முதன்முதலாக தகவல் தொழில்நுட்பத்திற்கென்றே தனியாக ஒரு துறை ஏற்படுத்தி, மாணவர்கள் கணினி படிக்கின்ற ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததோடு, அவர்கள் கல்லூரி படிப்பை முடித்து வரும் முன்பே மூன்றே ஆண்டுகளில் கணினிதுறையை மையப்படுத்தி தொழில்நுட்ப பூங்கா ஒன்றை டைடல் பார்க் என்ற பெயரில் 1999-இல் தொடங்கி ஒரே ஆண்டில் 2000 மாவது ஆண்டில் செயல்பாட்டிற்குக் கொண்டுவந்து பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்தார்.

தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படுகின்ற சரி சிப்காட்,  எல்காட் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் கலைஞரால் தொடங்கப்பட்டதின் விளைவு இன்று மாவட்டம்தோறும் தொழில்பூங்காக்கள் அமைக்கப்பட்டு பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொடுத்துள்ளதோடு,  இந்தியாவிலேயே தொழில் வளத்தில் முதன்மை மாநிலமாக வளர்ந்துள்ளது. 

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு கலைஞர் ஆற்றிய பங்கு அளப்பரியது. தமிழ்நாட்டின் நூறாண்டு சரித்திரத்தை யார் எழுத முற்பட்டாலும் கலைஞருடைய பெயரை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியலை மட்டுமல்ல இந்தியாவின் அரசியலை எழுத முடியாது என்ற அளவுக்கு முத்திரை பதித்தவர் கலைஞர். அவருடைய அரசியல் வாழ்க்கையில் தான் போட்டியிட்ட 13 தேர்தலிலும் தோல்வியை தழுவாமல் வெற்றி அடைந்து சாதனை படைத்தவரும் கலைஞர் தான், தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு இயக்கத்தின் தலைவராக இருந்ததும் கலைஞர் தான்.

இப்படியாக கலைஞரின் சாதனைகளைப் பட்டியலிட பக்கங்கள் போதாது என்பதே நிதர்சனம். கலைஞரின் நூற்றாண்டை தமிழகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் எந்த கொள்கையை இந்த மண்ணில் விதைத்துச் சென்றாரோ அதை மக்கள் மனதில் வளர்த்தெடுத்து தொடர்ந்து தமிழகம் சமூகநீதி பாதையில் பயணித்து எல்லா வளமும் பெற்றிட கழக கண்மணிகள் தொடர்ந்து உழைத்து, கலைஞர் நூற்றாண்டில் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதற்கும் நாற்பதைப் பெற்று சமூகநீதியை இந்திய மண்ணெங்கும் வளர்த்தெடுக்க உறுதியேற்போம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved