🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும்-தொகுதி-37

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

சென்ற வாரம்  சூரிய ஒளியில் இருந்து எப்படி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை பற்றி சிந்தித்தோம். இந்த பதிவில் அதன் பயன்பாடுகள் பற்றி அறிந்து கொள்வோம்.

சூரிய ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து நேரடியாக பெறப்படும் ஆற்றல் சூரிய ஆற்றல் (Solar Energy) எனப்படுகிறது. சூரிய ஆற்றல் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாகவும் மற்ற மீள் உருவாக்கக்கூடிய ஆற்றல்களான, காற்றாற்றல், நீர்மின்னியல், மற்றும் உயிரியல் தொகுதி (Bio Mass) ஆகியவற்றின் உருவாக்கத்திற்குப் பெருமளவில் துணை புரிகிறது. பூமியில் விழும் சூரிய ஆற்றலில் மிகவும் சிறிய பகுதியே ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறது.

சூரிய ஒளிக்கதிர்களை நேரடியாகக் கவருதலே பொதுவாக சோலார் தொழில்நுட்பம் எனப்பட்டாலும் (புவிவெப்ப ஆற்றல் மற்றும் ஓத ஆற்றல் தவிர) அனைத்து புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களும் மறைமுகமாக சூரிசக்தியின் மூலமே கிடைக்கப்பெறுகின்றன.

சூரிய ஒளி நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தப்படுகிறது. போட்டோவோல்டயிக் செல்களைக் கொண்டு மின்சாரம் தயாரித்தல், சோலார் தொழில்நுட்பத்தில் இயங்கும் விசையியக்கக் குழாய்கள், மின்விசிறிகள் போன்றவை இதன் நேரடிப் பயன்பாடுகள் எனக்கூறலாம். 

சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தில் இயங்கும் நூனா 3 மகிழுந்து (Solar Car)   

சோலார் இம்பல்ஸ்-2 (HB-SIB) விமானம்:

சூரிய ஒளியை கண்ணாடிகள் மூலம் ஒருமுகப்படுத்தி கிடைக்கும் வெப்பத்தைக் கொண்டு நீராவி எஞ்சின் தத்துவத்தின் முறையிலும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

தேவையான வெப்பப் பண்புகள் கொண்ட பொருட்களைத் தேர்வு செய்தல், இடங்களை இயற்கைக் காற்றோட்டத்துடனும் கட்டிடங்களைச் சூரியனின் நிலையைப் பொருத்தும் அமைத்தல் ஆகியவை மறைமுகப் பயன்பாடுகள் எனக் கூறமுடியும்.

இந்தோனேசியாவில் குடிநீர்த் தொற்று நீக்கம் சோலார் தொழில்நுட்பத்தில் செய்யப்படுகிறது.

சூரியனை நோக்கி இருக்கும் சோலார் தண்ணீர் சூடாக்கிகள்.


தண்ணீரைச் சூடாக்குவதற்கும், நிரப்பிடம் சூடாக்குவதற்கும், நிரப்பிடம் குளிரரூட்டவும் மற்றும் செயல்முறை வெப்ப உற்பத்திக்கும் சூரிய வெப்ப ஆற்றலை பயன்படுத்தலாம். நீரைச் சூடாக்குதலில் (Water Heating) சூரிய ஆற்றல் மிகவும் பயன்படுகிறது. 40 டிகிரிக்குக் குறைவான நிலநேர்க்கோடு உள்ள பகுதிகளில் வீடுகளில் தண்ணீரை சூடாக்க (60 °C வரை) 60 - 70 சதவீதம் சூரிய ஆற்றலே பயன்படுகிறது. 

சூடாக்குதல், குளிரூட்டுதல் மற்றும் காற்றோட்ட முறையில் (Heating, Cooling, Ventilation) சூரிய ஆற்றல் மிகவும் பயன்படுகிறது. அமெரிக்காவில் 30 சதவீதம் (4.65 EJ) வணிகக் கட்டிடங்களிலும் 50 சதவீதம் (10.1 EJ) குடியிருப்புக் கட்டிடங்களிலும் சூரிய ஆற்றல் மூலம் சூடாக்குதல், குளிரூட்டுதல், காற்றோட்ட முறை பயன்படுத்தப்படுகிறது.

சமைத்தலிலும் (Cooking) சூரிய ஆற்றல் உபையோகப்படுகிறது. 

சோலார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமைக்கக்கூடிய பாத்திரம். இடம்: ஆரோவில், புதுச்சேரி, இந்தியா செயல்முறை வெப்ப உற்பத்தியில் (Process Heat Generation) பல நாடுகள் சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. 

கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள பவகடாவில் 13,000 ஏக்கர் பரப்பில், பவகடா சூரிய மின்சக்தி பூங்கா அமைந்துள்ளது. துவக்கத்தில் 2,000 மெகாவாட் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டு, பின்னர் 50 மெகாவாட் சேர்க்கப்பட்டு, உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்காவாக அமைந்துள்ளது.

வரும் காலங்களில் விவசாயம், குடியிருப்புகள், பேருந்துகள் மற்றும் வானவூர்திகள் ஆகியவற்றிலும் சூரிய ஒளி ஆற்றல் முழுவதுமாக பயன்படக்கூடிய வகையில் இருக்கும். மீண்டும் அடுத்த வாரம் சிந்திப்போம். 

வாழ்க வளமோடு!
என்றும் அன்புடன் உங்கள்
முனைவர் கெ நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved