🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும், மெய்ஞானமும் - பகுதி 38

விஞ்ஞானமும் மெய்ஞானமும் -பகுதி-38

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

சென்ற வாரம்  சூரிய ஒளியில் இருந்து எப்படி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அறிந்தோம். இந்த வாரம் காற்றிலிருந்து மின்சாரம் எப்படி தயாரிக்க முடியும் என்பதை அறிந்து கொள்வோம்.

உலகில் பல முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. நீர்மின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள், காற்றாலைகள், சூரிய சக்தி உள்பட பல முறைகள் நடைமுறையில் உள்ளன. இதில் அனைத்து முறைகளிலும் ஆற்றலை உருவாக்கி அதை மின்சக்தியாக மாற்றப்படுகிறது.

தற்போதைய சூழலில், மின் சக்திக்கு ஏற்றபடி காற்றாலையில் தேவை அதிகரித்துள்ளது. ஆரம்ப காலத்தில், சோளத்திலிருந்து மாவு தயாரிக்கவே இந்த காற்றாலை அமைப்பு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து தண்ணீரை நிலத்தடியில் இருந்து மேலே கொண்டுவரவும் இந்த முறை பயன்படுத்தப்பட்டது.

தற்சமயம், காற்றிலிருந்து மின்சாரம் தயாரிப்பதில் காற்றாலைகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா காற்றாலை உற்பத்தியில் 4 வது இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு அதில் 29% மின் உற்பத்தி செய்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள முக்கியமான 5 காற்றாலை நிலையங்கள்.

முப்பந்தல் கன்னியாகுமரி, தமிழ்நாடு

ஜெய்சால்மர் விண்ட் பார்க், ராஜஸ்தான்

பிரம்மன்வெல் காற்றாலை, மகாராஷ்டிரா

தமன்ஜோடி விண்ட் ஃபார்ம், ஒடிசா

துப்பதஹள்ளி காற்றாலை, கர்நாடகா

இந்தியா போன்ற பல நாடுகளில் மின்சக்தியை பெற காற்றாலை பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. அதில், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் போன்ற நாடுகளிலும் காற்றாலை மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

மின் உற்பத்தியில் காற்றாலையின் அமைப்பு


மின் உற்பத்திக்கு உருவாக்கப்படும் காற்றாலைகள், 200 லிருந்து 350 அடி உயரத்தில் அமைக்கப்படுகின்றது. காரணம் பிளேடுகள் சுழலும் போது எந்த இடையூறும் ஏற்படக்கூடாது. அத்துடன், உயரம் அதிகமாக இருந்தால் காற்றும் இடையூறு இல்லாமல் வந்து சேரும்.

காற்றாலையில் மூன்று அல்லது இரண்டு பிளேடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பிளேடுகள் 120 அடிக்கும் அதிகமான நீளம் கொண்டிருக்கும். இந்த பிளேடுகள் பைபர் கிளாஸ் மூலம் தயாரிக்கப்படுகின்றது. காற்றாலையில் தூண்கள், ஸ்டீல் மூலம் தயாரிக்கப்படும். இந்த அமைப்பு முழுவதும், ஒவ்வொரு காலநிலையையும் எதிர் கொள்ளும் வகையில் பவுடர் கோட்டிங் மூலம் சாயம் பூசப்பட்டிருக்கும். அதை 20 டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட கான்கிரீட்டால் நிலையான அமைப்பை உருவாக்கி நிறுவுகின்றனர்.. 

மீண்டும் அடுத்த வாரம் சிந்திப்போம். வாழ்க வளமோடு!

என்றும் அன்புடன் உங்கள்
முனைவர் கெ நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved