🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஜூலை 20 சர்வதேச நிலா நாள்!

இன்று (ஜூலை 20) சர்வதேச நிலா நாள்.

இந்த நாளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றுமொரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.

அது என்ன சாதனை? 

அது என்ன சர்வதேச நிலா நாள்? அது ஏன் வந்தது? 

அது அமெரிக்காவிற்கும்-சோவியத் ரஷ்யாவிற்குமிடையே யார் பெரியவன் என்ற பனிப்போர் நடந்த கொண்டிருந்த காலகட்டம்.

ரஷ்யா யூரி காகரின் தலைமையில் ஒரு குழுவை, ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பி, பூமியைச் சுற்றி சில பல ரவுண்ட்களை அடிக்க வைத்து விண்வெளித் துறையில் தான் வல்லவன் என நிரூபித்துக் காட்டியது.

அது அமெரிக்காவின் தன்மானத்தை ஏகத்துக்கும் கிளறி விட்டது. ரஷ்யாவை விட பெரிதாக எதையாவது செய்ய வேண்டும். அதுவும் உலகில் முதன் முதலாக இருக்க வேண்டும். அடுத்த சில பல ஆண்டுகளுக்கு அப்படியான ஒரு செயலை வேறு எவரும் செய்யவே கூடாது என அமெரிக்க அரசாங்கம் திட்டம் தீட்டியது.

என்ன செய்யலாம் என மண்டையை பிய்த்துக் கொண்டனர். அப்போது தான் அந்த இடம்,அவர்களது கண்களில் பட்டது.

அது தான் "நிலா".

ஆம் நிலவுக்கு நாம் மனிதனை அனுப்ப வேண்டும். அங்கு சென்று அமெரிக்க கொடியை நட்டுவிட வேண்டும். அது நம்மை சீண்டிய ரஷ்யாவிற்குப் பதிலாக இருக்க வேண்டும். கங்கனம் கட்டிக் கொண்டு செயலில் இறங்கியது அமெரிக்காவின் நாசா.

ஜனவரி - 1967, நிலவுப்பயணத்தின் முதல்படியாக அங்கே செல்வதற்கான ராக்கெட்டை வடிவமைத்து, அதன் உறுதித் தன்மையை சோதித்தறிய கென்னடி ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஏவ முயற்சித்தது நாசா. அந்த விண்கலத்தில் மூன்று விண்வெளி வீரர்கள் இருந்தனர். கவுண்டவுன் தொடங்கி, புறப்பட தயாரான நொடியில் அந்த விண்கலம் வெடித்துச் சிதறியது. மூன்று வீரர்களும் அந்த இடத்திலேயே பலியாயினர். கவலை தொற்றிக் கொண்டனர்.

ராக்கெட் வெடித்து, மூன்று பேர்கள் இறந்து விட்டனரே என்ற கவலையை விட, இனி நிலவை நோக்கிய அடுத்தடுத்த சோதனைகளுக்கும் பயணங்களுக்கும் யார் முன்வருவார்கள் என்ற கவலை.

அந்த தருணத்தில் தான் நான் வருகிறேன் என்று ஒருவர் சொன்னார். சொன்னவர் ஒன்றும் சாதாரணமானவரல்ல. தன் 16 வயதிலேயே, கார் ஓட்டுவதற்கான உரிமம் பெறும் முன்னமே, விமானம் ஓட்டும் உரிமை பெற்றவர். தலைசிறந்த பொறியாளர்.

அவர் பெயர் நீல் ஆம்ஸ்ட்ராங்.

உடனே அடுத்தடுத்த திட்டங்கள், சோதனைகள் முடிக்கப் பெற்று இறுதியான பயணம் தொடங்கியது.

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவை நோக்கிய அந்த சாகசப் பயணத்திற்குத் தலைமை தாங்கினார். அவரையும் அவருடன் மைக்கேல் காலின்ஸ்,எட்வின் ஆல்டிரின் என இன்னும் இரண்டு விண்வெளி வீரர்களையும் சுமந்து கொண்டு அப்பல்லோ 11 என்ற அந்த விண்கலம் கென்னடி ஏவுதளத்தில் இருந்து நிலவை நோக்கி பயணித்தது.

கிட்டத்தட்ட 240,000 மைல்கள் தூரத்தை,76 மணிநேரங்களில் கடந்து வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் புகுந்தது அப்பல்லோ 11.

மைக்கேல் காலின்ஸ் அப்பல்லோவிலேயே இருந்து கொண்டார். அவர் நிலைவத் தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டேயிருந்தார்.

அப்பல்லோ 11 விண்கலத்தின் உள்ளேயே ஈகிள் என்ற ஒரு லூனார் லேண்டர் இருந்தது. அது தான் நிலவில் இறங்கப் போகும் வாகனம். அந்த ஈகிள் லேண்டரை நிலவில் பத்திரமாகத் தரை இறக்க வேண்டும். நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய இரு வீரர்கள் அந்த ஈகிள் லேண்டரில் ஏறிக் கொண்டனர்.

மைக்கல் காலின்ஸ் அப்பல்லோ 11 விண்கலத்திலேயே இருந்து கொண்டார். அவரது வேலை ஈகிள் இறக்கி விட்டுவிட்டு நிலவைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டே  ஈகிளை கண்காணிக்க வேண்டும்.

ஈகிள் வாகனம் அப்பல்லோ 11 விண்கலத்தில் இருந்து பத்திரமாகப் பிரிந்து நிலவில் இறங்கி பரிசோதனைகளை செய்துவிட்டு பின் மீண்டும் அப்பல்லோ 11 க்கு திரும்பி வர வேண்டும்.

அப்படி திரும்பி பத்திரமாக வந்துவிட்டால் அதை அப்பல்லோவில் மீண்டும் இணைத்து மீண்டும் பூமிக்கு கொண்டு வர வேண்டும்.

ஒருவேளை எதாவது அசம்பாவிதம் நடந்து ஈகிள் திரும்ப வராவிட்டால், அது வரவில்லை, நிலவிலேயே வெடித்துச் சிதறிவிட்டது. அதிலிருந்தவர்களும் பலியாகினர் என்ற செய்தியை பூமிக்குக் கொண்டு வர வேண்டும். இதற்காகத் தான் மைக்கேல் காலின்ஸ் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் வட்டமடித்துக் கொண்டிருந்தார்.

இப்படியான ஒரு நிச்சயமற்ற சூழ்நிலையில் ஈகிள் வாகனம் அப்பல்லோ 11 ல் இருந்து வெளியே வந்தது.

ஜூலை 20 மதியம் 1:46 க்கு ஈகிள் அப்பல்லோ 11 லிருந்து பிரிந்து நிலவை நோக்கி கீழே இறங்கத் தொடங்கியது. ஈகிளை நீல் ஆம்ஸ்ட்ராங் தான் செலுத்தினார்.

மிக மிக கவனமாகச் செலுத்தினார்.

இரண்டேமுக்கால் மணி நேரப் பயணத்திற்குப் பின் ஈகிள் நிலவின் தரையை நெருங்கியது.

சரியாக மாலை 4:17 க்கு ஈகிள் நிலவின் தரையைத் தொட்டது. ஜம்மென்று நங்கூரம் போட்டது போல நிலவின் தரையில் தன் உலோக கால்களை நிறுவியது.

ஒருவித நிம்மதி வந்தது. ஒரு வழியாக கால்வாசி கிணற்றை தாண்டியாகிவிட்டது. முதல் வெற்றி. ஆனால் இனிதான் இருக்கிறது சோதனை. அது நடந்தால் தான் பயணத்திற்கான வெற்றி. அடுத்து ஈகிளில் இருந்து மனிதர்கள் இறங்க வேண்டும்.

இப்போது நிலவில் மனிதன் தரை இறங்க வேண்டும்.

நிலவின் தரை எப்படி இருக்கும்? 

தெரியாது.

இறங்கப் போகிறவர் பத்திரமாக இறங்குவாரா?

தெரியாது.

கால் பதித்தால் நிற்க முடியுமா? உயிரோடு திரும்புவோமா? 

தெரியாது.

நிலவில் கண்ணுக்குத் தெரியாம விஷக்கிருமிகள் இருந்தால், கதிரியக்கம் இருந்தால், அதிர்வுகள் இருந்தால்?

எதுவும் தெரியாது.

இதயம் படபடத்துக் கொண்டிருந்தது. ஒட்டு மொத்த நிகழ்வையும் உலகமே தொலைக்காட்சியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.அமெரிக்க வெள்ளை மாளிகையில் பெருத்த அமைதி நிலவியது. அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் தன் இருக்கையின் நுனியில் இருந்தார். நாசா வைப் பற்றி சொல்லவே வேண்டாம்.உச்சகட்ட பரபரப்பு.

யார் முதலில் இறங்குவது? என்ற கேள்வி எழ,

"நான் முதலில் இறங்குகிறேன்" என்று நீல் ஆம்ஸ்ட்ராங் துணிச்சலாக, தைரியமாக முன் வந்தார்.

ஒன்பது படிக்கட்டுகள் கொண்ட அந்த ஏணியிலிருந்து ஒவ்வொரு படியாக இறங்கினார்.

சரியாக இரவு 10:39 ல் நிலவில் முதல் மனிதனாக கால் பதித்தார்.

"இது ஒரு சாதாரண மனிதனின் சிறிய கால்தடம். ஆனால் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே மிகப்பெரும் பாய்ச்சல்-That's one small step for a man,but one giant leap for mankind" என்ற புகழ்பெற்ற தன் வாசகங்களை தன்னுடன் பூமியில் இருந்து தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் நிக்சனிடம் சொன்னார்.

கைதட்டலால் வெள்ளை மாளிகையே அதிர்ந்தது. ஒட்டு மொத்த உலகமும்-ரஷ்யாவும் சேர்த்து சொல்ல முடியாத பெருமிதத்தில் ஆழ்ந்தது.

முதல் மனிதனாக நிலவிற்குச் சென்று இதே போன்றதொரு ஜூலை 20,1969 ல் கால் பதித்தார் நீல் ஆம்ஸ்ட்ராங்.

இன்று ஜூலை 20 2023,நிலவுக்கு மனிதனை முதன் முதலில் தூக்கிச் சென்ற சாகசப் பயணம் நிகழந்ததன் 54 ஆம் ஆண்டு.

அதை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ம் தேதியை சர்வதேச நிலா நாள் என அமெரிக்க கொண்டாடி வருகிறது.

அப்படியான இந்த நாளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவப் பகுதியை நோக்கிய சந்திரயான் 3 பயணத்தில் மற்றுமொரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது.

சந்திரயான் 3 ராக்கெட்டை பூமியில் இருந்து கிளப்பி விட்டதும், அது பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் சர்வீஸ் போல,நேராக நிலவில் சென்று லேண்டிங் ஆகாது.பூமியை ஐந்து முறைகள் சுற்றும்.ஒவ்வொரு முறை சுற்றும் போதும், சந்திரயான் 3 ராக்கெட்டின் வேகமும், அதன் உயரமும் படிப்படியாக அதிகரிக்கப் படும்.

அந்த வகையில் சந்திரயான் 3 ராக்கெட் பூமியைச் சுற்றும் தன் நான்காவது வட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்தது. அதற்கான என்ஜின் பயரிங் இன்று வெற்றிகரமாக நடந்தது. இதற்கடுத்து வரும் ஜூலை 25 ல் ஐந்தாவது மற்றும் பூமியைச் சுற்றும் தன் இறுதி வட்டப் பாதையை சந்திரயான் 3 ராக்கெட் அடையும். அப்போது அதன் வேகமும், உயரமும் இன்னமும் அதிகரிக்கும். அது தான் சந்திரயான் 3 பூமியைச் சுற்றும் இறுதிப் பயணம்.

அதன் பின் நிலவை நோக்கிய தன் பயணத்தை சந்திரயான் 3 தொடரும்.நிலவை நெருங்கியதும் பூமியை வட்டமடித்தது போலவே நிலவையும் ஐந்து முறைகள் வட்டமடிக்கும். அதன் பின் படிப்படியாக ஒரு பறவை தரை இறங்குவது போல, பயணிகள் விமானம் தரையிறங்குவது போல அட்டகாசமாக நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திரயான் 3 தரை இறங்கும்.

அந்த நாளை எதிர்நோக்கித் தான் விண்வெளியில் ஆர்வம் கொண்ட அனைவரது கவனமும் இருக்கிறது.....

நன்றி: துரை மோகன்ராஜ்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved