🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கலைத்தாய் தந்த கட்டபொம்மன் சிவாஜி கணேசன் நினைவு நாள்!

ஜீலை - 21, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள்.

தமிழ் சினிமா சாம்ராஜ்ஜியத்தின் முடிசூடா மன்னனாக ஒப்பாரும், மிக்காருமில்ல நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் தன் தனித்துவமான நடிப்புத்திறமையால் உலகின் கவனத்தைப் பெற்றவர்.

நடிப்பு உலகில் இந்த படிக்காதமேதை பொதுவாழ்வில் நடிக்காத மேதை. குணத்தாலும், மனதாலும் மாமனிதன். 

தான் ஏற்ற பாத்திரங்களுக்கெல்லாம் உயிரூட்டியவர். நடிகர் திலகத்தின் உருக்கமான நடிப்பில் முந்தானையை கண்ணீர் துளிகளால் நனைக்காத தாய்க்குலங்கள் யாருமில்லை.  கல் நெஞ்சுக்காரர்களையும் கரைக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய வல்லமைமிக்க நடிப்புலக மேதை. நினைத்தவுணன் ஒவ்வொருவர் மனதிலும் பல உருவில் வந்து செல்லுமளவு மனதோடு ஐக்கியமானவர். வரலாற்று நயகர்களை சிலைவடிக்கும் சிற்பியின் சிந்தையில் நிறைந்தவர். நடிகர் திலகத்தை பிரதிபலிக்காமல் எந்த மன்னன் சிலையும் வடிக்க முடியாத அளவுக்கு உயிரோவியம் தந்தவர். 

தன் உச்சரிப்பால் வார்த்தைக்கு உயிரூட்டி திரையுலக வசன கர்த்தாக்களுக்கு விலாசம் கொடுத்தவர். 

நீண்ட வசனங்கள் நடிகர் திலகத்தின் நாவினில் நர்த்தனமாடும். சொற்துளிகள் பெருக்கெடுத்து தமிழருவி பொழிவிக்கும் வித்தை தெரிந்தவர் சிவாஜி. பராசக்தி, மனோகரா, உத்தமபுத்திரன் போன்றவை பல படங்களில் வசனங்களில் எரிமலையை கண்முன் கொண்டு நிறுத்துவார்.

வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், திருப்பூர் குமரன், பகத்சிங், மாவீரன் அலெக்சாண்டர் போன்ற வரலாற்று நாயகர்களை சாமானியன் மரபணுவில் கொண்டு சேர்த்து நிலைக்கச் செய்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். 

நடிப்புக்காகவே படைக்கப்பட்டவர் சிவாஜி. இந்த உலகம் உள்ளவரை அவர் புகழ் நிலைத்து நிற்கும். வாழ்க சிவாஜி புகழ்!

கட்டுரையாளர்: வை .மலைராஜன் பி.ஏ,
நிறுவனர் - செயலாளர்,
கட்டபொம்மன் கல்வி அறக்கட்டளை,
விருதுநகர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved