🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மண் வளத்தை பாதுகாப்பதின் மூலம் புவி வெப்பமயமாதால் தடுக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள வேளாண் மண்ணை சிறிதளவு மேம்படுத்தினால் அதிக கார்பனை மண்ணில் சேகரிக்கலாம் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. இதன் மூலம் புவி வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மண்ணை வளமுடையதாக்கினால் விளைச்சல் அதிகரிக்கும்.

இதன் மூலம் மண்ணில் கார்பனை அதிக அளவு சேகரிக்கலாம். ஆனால் அதிக அளவு செயற்கை உரங்களைப் பயன்படுத்தி தீவிர விவசாயம் செய்யப்படுவதால் மண் வளம் புறக்கணிக்கப்படுகிறது. நிலத்தில் போடப்படும் பெரும்பாலான செயற்கை உரங்களும் வீணாகின்றன. இது பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வை அதிகரிக்கிறது.

உலகில் பாதி வேளாண் நிலத்தில் 1% கார்பனை கூடுதலாக சேகரிக்க இப்போது உள்ளதை விட சூழலுக்கு நட்புடைய விதத்தில் வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.Tractor 640 இது மண்ணிற்கு ஆண்டிற்கு 31 கிகாடன்கள் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்ச உதவும். இது உலகளவில் 2030ம் ஆண்டிற்குள் புவி வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த இலட்சியமிடப்பட்டுள்ள, ஆண்டிற்கு 32 கிகா டன் கார்பன் டை ஆக்சைடு குறைப்பு என்ற அளவிற்கு நெருக்கமானதே. இந்த ஆய்வுகள் ஐநாவின் சூழல் திட்டத்தின் (UNEP) முன்னாள் தலைமை விஞ்ஞானியும் ஐரோப்பிய சூழல் முகமையின் (EEP) முன்னாள் செயல் இயக்குனருமான ஜாக்கிலேன் மக்லேட் (Jacqueline McGlade) அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது.

இதன் மூலம் உலகில் இன்று வளமிழந்திருக்கும் விவசாய நிலங்களின் மேல் மண்ணில் 30% கூடுதல் கார்பனை சேகரிக்க முடியும். மக்லேட் தற்போது மண் வளம் குறித்த விவரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் டவுன்ஃபோர்ஸ் தொழில்நுட்பம் (Downforce technologies) என்ற நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பேற்று நடத்துகிறார்.

ஒவ்வொரு விவசாயியின் நிலத்திலும் கார்பனின் சேமிப்பு:

இந்நிறுவனம் பொதுவெளியில் கிடைக்கும் உலகளாவிய தரவுகள், செயற்கைக்கோள் படங்கள், லைடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெறப்படும் தகவல்களைக் கொண்டு மண்ணில் எவ்வளவு கார்பன் சேகரிக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து விவசாயிகளுக்குக் கூறுகிறது. இந்த நிறுவனம் ஒவ்வொரு விவசாயியும் பயிர் செய்யும் வேளாண் பரப்பில் சேகரிக்கப்பட்டுள்ள கார்பன் பற்றிய தகவல்களை அளிக்கிறது.

விவசாயிகளைத் தவிர மற்ற பொதுமக்கள் மண்ணின் முக்கியத்துவத்தைப் பற்றி இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. காலநிலையில் மண்ணிற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இயற்கையாக பயிர் செய்யும் முறைகளை மாற்றுவது கார்பன் சேகரிப்பை எதிர்மறையானதாக்கி விடும். விவசாய மண்ணே கார்பனை அதிக அளவில் உறிஞ்சுகிறது. சூழலுக்கு நட்புடைய பயிர் முறை குறைந்த செலவில் விவசாயம் செய்யவும் உதவுகிறது.

நீடித்த வளர்ச்சிக்கு இயற்கை விவசாயம்:

மிதமிஞ்சிய செயற்கை உரங்கள், வேதிப்பொருட்கள் பயன்பாடு போன்றவை அடங்கிய இன்றைய விவசாய முறையில் இருந்து சூழல் நட்புடைய விவசாய முறைக்கு மாற தொடக்கத்தில் சற்று கூடுதல் செலவாகும் என்றாலும் புதிய முறைக்கு மாறிய இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் நல்ல விளைச்சலை எடுக்கலாம். இந்த மண் மற்றவற்றுடன் ஒப்பிடும்போது அதிக ஆரோக்கியம் உடையதாக இருக்கும்.

300,000 பேர் வாழ்ந்துவரும் கென்யாவின் வளமிழந்த 40,000 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ள வேளாண் நிலப்பகுதியை பயிர் செய்ய ஏற்றதாக மீட்டெடுக்க 1 மில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நிலம் எவ்வளவு கார்பனை உறிஞ்சியது என்பதைப் பொறுத்து விவசாயிகள் சேகரிக்கப்பட்ட கூடுதல் கார்பனை கார்பன் கிரெடிட் என்ற முறையில் கணக்கிட்டு விற்கலாம்.

கார்பன் கிரெடிட் (Carbon credit) என்பது உமிழப்படும் கார்பன் டை ஆக்சைடை விட அதிகம் சேமிக்கப்பட்டு கார்பன் டை ஆக்சைடின் அளவைக் குறிக்கிறது. இதன் அளவைப் பொறுத்து இது சர்வதேச சந்தையில் மதிப்பிடப்படுகிறது. பின்னர் இது அதிகம் கார்பனை உமிழும் அமைப்புகளுக்கு விற்கப்படுகிறது.

வளமில்லாமல் போன 40% விவசாய மண்:

மண் பூமியில் கார்பனை உறிஞ்சும் முக்கிய ஆதாரம். ஆனால் இதுவரை உலகின் குறிப்பிட்ட பகுதிகளில் இருக்கும் விவசாய நிலப்பகுதி மண் எவ்வளவு கார்பனை பிடித்து வைத்துக் கொள்கிறது, எவ்வளவு கார்பன் டை ஆக்சைடை உமிழ்கிறது என்பது பற்றி அறிய முடியாமல் இருந்தது. ஐநா புள்ளிவிவரங்களின்படி இன்று உலகில் உள்ள 40% வளமான மண் தரமிழந்துவிட்டது.

புவி வெப்ப உயர்வு தொழிற்புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரி செல்சியஸ் என்ற வரையறையை கடந்து கொண்டிருக்கும் நிலையில் காற்றில் இருந்து கார்பன் டை ஆக்சைடைப் பிடித்து ஏதேனும் ஒரு முறையில் சேகரித்து வைக்க கார்பனைக் கைப்பற்றி சேகரித்தல் (Carbon Capturing System CCS) பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. ஆனால் இத்தொழில்நுட்பங்கள் எந்த அளவு பயன் தரக் கூடியவை என்பது பற்றி இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

தீர்வு என்ன?:

விவசாயிகள் பயிர் சுழற்சி முறையைப் பயன்படுத்தி பயிர் செய்தால் மண்ணில் அதிக கார்பனை சேகரித்து வைக்கலாம். க்ளோவர் (Clover) போன்ற கால்நடைத் தீவனமாகப் பயன்படும் புல் போன்றவற்றை வேலியோரங்களில் அதிகமாக வளர்க்கலாம். மைக்ரோரைஸல் பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிரிகளை அதிகம் பெற்ற, மண்ணில் பல மீட்டர் ஆழத்தில் வேர்களை ஊன்றி வளர்க்கும் புதர்வகைச் செடிகளை (Hedgerows) வளர்ப்பதன் மூலம் அதிக கார்பன் மண்ணில் சேமிக்கப்படுகிறது.

ஆனால் தீவிர வேளாண்மைக்காக விவசாயிகள் இந்த வகைத் தாவரங்களை தங்கள் வயல்களில் இருந்து சுலபமாக அகற்றினர். மீண்டும் இவற்றை வளர்ப்பதன் மூலமும், இருக்கும் இவ்வகை செடிகளை அழியாமல் காப்பதன் மூலமும் உயிர்ப்பன்மயத் தன்மை மேம்படும். மேல் மண் அரிப்பு தடுக்கப்படும். நதிகளை மாசுபடுத்த முக்கிய காரணியாக இருக்கும் தீமை செய்யும் வேளாண் கழிவுகள் மண்ணை நஞ்சாக்காமல் பாதுகாக்கும்.

மண் இல்லாமல் மனிதன் இல்லை. மண் என்னும் மதிப்புமிக்க வளம் பூமியில் இருப்பதால்தான் மனிதன் இங்கு வாழ முடிகிறது. மண்ணை மரணமடையாமல் பார்த்துக் கொள்வது மனித குலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கு மட்டும் இல்லாமல் புவி வெப்ப உயர்வில் இருந்தும் பூமியைக் காப்பாற்ற உதவுகிறது என்பதை இந்த ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/jul/04/improving-farming-soil-carbon-store-global-heating-target?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved