🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சாந்திராயன் 3 - பேராசிரியர் கெ.நாகராஜன்

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

இந்தவாரமும் நாம்  நமது விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதியில்  சிந்திக்க இருப்பது நம்மை மட்டும் அல்லாமல் உலகையே உற்று நோக்கி பார்க்க வைத்திருக்கும் சந்திராயன் -3ஐ பற்றி தான். இன்று இரவு சரியாக 7 மணி அளவில் பூமியின் நீள் வட்ட பாதையில் இருந்து சந்திரனின் நீள்வட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும். பின்னர் அது நீள் வட்ட பாதையில் சென்று சந்திரனின் நிலப்பரப்பை அடையும்.

நாம் ஏற்கனவே பார்த்தபடி இந்தியா தனது ஆளுமையை மற்றும் இந்திய விஞ்ஞானிகளின் ஆற்றலை வெளிக்கொணரும் வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிலே நிலவுக்கு வின்கலன்களை அனுப்பி ஆய்வு செய்வதில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடு இந்தியா என்ற இலக்கை இந்தியா தனது சந்திராயன் -1 என்ற திட்டத்தின் மூலம் அடைந்ததை உறுதி செய்தது. 

சந்திராயன் -1 நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்யும் செயற்கை கோள் அல்லது ஆர்பிட்டராக செயல்பட்டது. அதன் காலம் இரண்டு ஆண்டுகள் பின்னர் செயலிழந்து விட்டது. முதன் முதலில் நிலவில் நீர் உள்ளது என்பதை உலகிற்கு உறுதி செய்தது. பின்னர் சந்திராயன் -2 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது ஆனால் நிலவுக்கு 2 கி.மீ அருகில் சென்ற நிலையில் தனது சமிக்ஞையை பூமியில் இருந்து துண்டித்து கொண்டது. இதனால் சந்திராயன் -2 வெற்றி பெற வில்லை.

தற்சமயம் சந்திராயன் -3 , மூன்று முக்கிய நோக்கங்கள் உடன் அனுப்பப்படுகிறது. 

1. நிலவில் ரோவரை இலகுவாக தரையிறக்குதல் மற்றும் அதை நிரூபித்தல் 

2. ரோவர் நிலவில் உலவவிடுதல்

3. நிலவில் குறிப்பிட்ட இடத்தில் ஆய்வு மேற்கொள்ளல் .

இதன்மூலம் கீழே உள்ள நான்கு முக்கிய அம்சங்களை உறுதி செய்தல்.

1. சந்திரனுடைய நிலப்பரப்பில் கூழ்ம நிலையில் உள்ள  அயன்கள் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை அறிதல்.

2. சந்திரனின் துருவப் பகுதியில் உள்ள வெப்ப தன்மையை ஆராய்ச்சி செய்தல் குறிப்பாக தென் துருவப் பகுதியில்.

3. சந்திராயன் -3 தரையிறங்கும் போது உணரக்கூடிய நில அதிர்வுகள் மற்றும் மேற்பரப்பு விரிவடைதல் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்தல்.

4. இறுதியாக நிலவின் மண்ணில் உள்ள தாதுக்களை கண்டறிதல்.

இதுவே இந்த  சந்திராயன்-3 இன் முக்கிய நோக்கங்கள்.

இதை அடைவதற்கு நாம் 3,84,400 கி.மீ. தொலைவில் உள்ள நிலவை அடைய ஒரு நாள் ஒன்றுக்கு சுமார் 9100 கி.மீ. வேகத்தில் 40 நாட்களுக்கு பயணம் செய்து பூமியின் நிலப்பரப்பை அடைய உள்ளது. இது நேரே நிலவுக்கு செல்லாமல் பூமியின் நீள்வட்ட பாதையிலும், பின்னர் சந்திரனின் நீள்வட்ட பாதையிலும் சென்று சந்திரனின் நிலப்பரப்பை அடைந்து அதனை ஆராய்ச்சி செய்தல். இதன் நிழல் படங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இந்த விண்வெளி ஆராய்ச்சியின் நோக்கம் பூமியை தவிர பிற கோள்களில் அல்லது துணை கோள்களில் மனிதர்கள் வாழமுடியுமா என்பதை கண்டறியவும் மற்றும் கனிம வளங்களை கண்டறியவும் பயன்படும்.




மீண்டும் அடுத்த வாரம் சிந்திப்போம். நன்றி .
என்றும் அன்புடன் உங்கள்
முனைவர் கெ நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved