🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உழைக்கும் மக்களை சுரண்டுபவர்களுக்கே சுதந்திர தினம் - அறச்சீற்றம்.

நாடு 77-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும்வேளையில், ஏகாதியபத்தியதிற்கு அடிபணிய மறுத்து மரணத்தைத் தழுவிய மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால நாயக்கர், மருது சகோதரர்கள், வீரன் அழகு முத்துக்கோன், வ.ஊ.சிதம்பரம் பிள்ளை, பகத்சிங் உள்ளிட்ட ஏராளமான தியாகிகளை இந்நன்னாளில் நினைவு கூர்கிறோம்.

அதேவேளையில், தந்தை பெரியார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட தலைவர்கள் இந்நாளை கருப்புநாள் என்றனர். தேவர் திருமகனார் சுதந்திரம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் ஆகஸ்டு 15 ஆம் நாள் பிரிட்டீஷாரால் மற்றொரு அடிமைவிலங்கு மாட்டப்பட்டநாள் என்று கடுமையாக சாடினார். இது குறித்து அவரின் கருத்தாவது,

ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்றும் சில விவரங்களை,  விளக்கங்களை பொது மக்களுக்கு அறிவிக்க வேண்டியது எமது கடமை. 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று இந்தியா பரிபூரண சுதந்திரமடைந்து விட்டதாக நேருஜி, பட்டேல்ஜி, இராஜாஜி போன்ற பெரிய மனிதர்கள் கூறுகிறார்கள். அது பொய். சுத்தப் புரட்டு. வஞ்சக வார்த்தை என்று நாம் சொல்கிறோம்.

"ஏன், எதற்காக இப்படி சொல்லுகிறீர்கள்? வெள்ளைக்காரர்களெல்லாம் வெளியேறி விடவில்லையா? நம் சுதந்திரக் கொடி பட்டொளி வீசிப் பறக்கவில்லையா? கவர்னர் ஜெனரல் என்பவர் நம் இந்திய நாட்டைச் சேர்ந்தவரில்லையா? இந்த மாற்றங்களெல்லாம், ஏற்பாடுகளெல்லாம் சுதந்திரம் இல்லையென்றால் வேறு எதற்குத்தான் சுதந்திரம் என்று சொல்வது " என்று சிலர் கேட்கலாம். 

கேள்விகளெல்லாம் மிகவும் நியாயமானவை. சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்று சொல்லும் நம்மால் பதிலளிக்கப்பட வேண்டியவை. 

வெள்ளைக்காரர்கள் பலர் வெளியேறிவிட்டனரென்பது உண்மையே. நம் மூவர்ணக் கொடி தேசமெங்கும் பறக்கிறது என்பதுவும் வாஸ்தவமே. கவர்னர் ஜெனரலாக இருக்கும் இராஜாஜியும் இந்திய நாட்டைச் சேர்ந்த இந்தியரே. இவற்றை " இல்லை" என்று யார் தான் சொல்ல முடியும்?

நாம் சொல்வது வேறு. இந்த ஏற்பாடுகளால், அல்லது மாற்றங்களால், மக்கள் எதிர்பார்த்த, விரும்பிய சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதே நமது கட்சி .

1947- ஆகஸ்ட் 15ல்  ஒரு மாற்றம் ஏற்பட்டதென்று சொல்லலாமேயொழிய, சுதந்திரம் கிடைத்ததென்று சொல்வதற்கு ஒரு துளி ஆதாரம் கூட இல்லை. 

சுதந்திரம் என்பதற்கு என்ன பொருள்? உள்நாடு, வெளிநாடு ஆகிய சகல விஷயங்களிலும் நம் இஷ்டம் போல் நடந்து கொள்வதற்கு உரிமை இருப்பதற்கல்லவா சுதந்தரம் என்று சொல்ல வேண்டும்? இந்த இரண்டில் ஒன்று கூட நமக்கு கிட்டவில்லையே? 

ஓர் இராஜாஜி கவர்னர் ஜெனரலாவதற்கும், ஒரு நேருவும், படேலும் மந்திரிகள் ஆவதற்கும் வேண்டுமானால் சிலருக்கு 1947 ஆகஸ்ட் 15 சுதந்திர தினமாகத் தென்படலாம்.

ஆனால், கம்பங்கஞ்சியில் கலப்பதற்கு இரண்டு உப்புக் கல்லுக்குக் கூட விதியற்று " காலாகாலத்தில்  எமன் வந்து நம்மை அழைத்துப் போக மாட்டானா " என வாழ்நாளில் வெறுப்புற்றிருக்கும் கோடானு கோடி இந்தியர்களுக்கு இது சுதந்திர தினம் அல்ல. 

சுதந்திரம் கேட்ட உங்களுக்கு இதோ இரட்டை விலங்கு என உயர்ந்த இராஜதந்திரத்துடன்  பிரிட்டீஷாரால்  மற்றொரு அடிமை விலங்கு மாட்டப்பட்ட நாள் தான் இந்த ஆகஸ்ட் 15 என்று தேவர் பெருமகனார் குறிப்பிட்டார்.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது பெரும்பாலானவர்கள் அதனை கொண்டாடிய போது பெரியார் மட்டும் அதனை கருப்பு தினமாக தன்னுடைய தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். அதனை அவர்கள் கட்சியிக்குள்ளேயே பலரும் ஏற்க மறந்த நிலையில், அவர் விடாப்படியாக இருந்தார். "ஆங்கிலேயர் ஆட்சியில் சாதி, மத பேதமின்றி அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். இங்கே இருப்பவர்களின் கையில் ஆட்சியை ஒப்படைத்தால் அவர்கள் சாதி ஏற்றத்தாழ்வுகளின் படி மக்களை பிரிப்பார்கள். எனவே இந்த விடுதலையை கருப்பு தினமாக கொண்டாடுங்கள்" என்று பெரியார் கூறினார். 

மேற்கூறிய இரண்டு தலைவர்களுக்கும் சுதந்திரத்தின் மீதான விமர்சனப்பார்வை மற்றும் பயம் 77 வது சுதந்திர தினத்தின் கொண்டாடி வரும் வேளையில், தற்போது நடக்கும் அரசியல் சூழ்நிலைகள் அதனை மெய்பிக்கும் வகையிலேயே இருக்கின்றது. நாம் இங்கு அரசியல் குறித்து அதிகம் பேசவேண்டியதில்லை. ஆனால் சமீபத்தில் நாடாளுமன்றத்திலிருந்து வெளியாகிய அறிக்கை சுதந்திர இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அநீதி சுதந்திரம் குறித்து விமர்சனம் வைத்த தலைவர்களின் பயத்தை உறுதி செய்கிறது.

அந்த அறிக்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர், உதவிப்பேராசிரியர், இணைப்பேராசிரியர் ஆகிய பதவிகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 10% க்கும் குறைவாகவே உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் 70% உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை தொடங்கி 33 ஆண்டுகள் ஆன நிலையிலும் 10% மட்டுமே வழங்கிவிட்டு, மீத இடங்களை உயர்சாதிகள் ஆக்கிரமித்துக்கொண்டு வருகிறது. நீதிமன்றம், நிர்வாகம், அரசுச் செயலாளர் என அனைத்து மட்டத்திலும் 3% சதவீத உயர்சாதிகள் 90% சதவீத இடங்களை அக்கிரமித்துக்கொண்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மதத்தின் பெயரால் மதி மயங்கச் செய்து வருகின்றனர். கல்வியறிவில்லாத பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களிடம் புரணக்கதைகளையும், வர்ணாசிரம ஏற்றத்தாழ்வுகளையும் பலநூறு ஆண்டுகளாக புகுத்தி அவர்களை சுய சிந்தனையற்றவர்களாக ஆக்கிவைத்துள்ளது ஒரு கூட்டம். சமூகநீதி போராட்டாங்களால் ஒரு சிறிய வழியை ஏற்படுத்திக்கொடுத்ததின் வழியாக முதல் தலைமுறையாக படித்து முன்னேறியவர்களிடம் அறிவியல், பகுத்தறிவு சிந்தனையோ ஏதுமில்லை என்பதை கண்கூடாகப் பார்த்து வருகிறோம். அதைக்கூட சகித்துக்கொள்ள முடிகிறது, ஆனால் தனக்குக்கீழ் இருக்கும் கோடிக்கணக்கான மக்களை கைதூக்கி விட வேண்டும் என்று குறைந்தபட்ச சமூக அறமும், அக்கறையுமின்றி இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிரான மனநிலைக்கு அவர்கள் வந்துள்ளது மிகுந்த கவலைக்குறியது.

முதலில் உயர்சாதியினரின் நயவஞ்சகப்போக்கிற்கு மட்டுமே பலியாகி வந்த பிற்படுத்தப்பட்ட சாதியினர், தற்போது சமூகநீதி சித்தாந்தத்தால் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறியவர்கள், தனக்குப் பின்னால் உள்ள கோடிக்கணக்கான மக்களைப்பற்றி கவலையின்றி, சமூகநீதிக்கு எதிரான, எதிர்கருத்துகளை பரப்புவது நடைபெற்று வருகிறது. இதனால் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட சமுதாய இளைஞர்களும், சமூகநீதி கோட்பாடும் இருமுனை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. 

பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவலம் நீங்கி, என்றைக்கு நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களுக்கு உயர் வகுப்பினருக்கு கிடைக்கும் அனைத்தும் சமமாக, எந்தவித தங்கு தடையுமின்றி கிடைக்கிறதோ அன்று மட்டுமே உண்மையான சுதந்திர நாளாக இருக்க முடியும். அதுவரை பெரும்பான்மை மக்களை சுரண்டி வாழ்பவர்களின் சுதந்திர நாளாக மட்டுமே இருக்கும்.

இன்றைய நாளை சுதந்திர நாளாக கொண்டாடுபவர்கள் குறைந்தபட்சம் கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட சமுதாய  மக்கள் தங்கள் உடல் உழைப்பை ஆண்டாண்டுகாலமாக  இந்த நாட்டிற்கு வழகியபோதும், அவர்களுக்கு இந்த தேசம் செய்த கைமாறு என்ன? சட்டம் வழங்கிய உரிய வாய்ப்புகளையாவது வழங்கியுள்ளதா என்பதை மனசாட்சியோடு சிந்திக்கட்டும்..

அறம் வெல்லட்டும்!                   
சமூகநீதி தழைக்கட்டும்!

நன்றி: அப்பணசாமி பெருமாள்,  நல்லாசிரியர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved