🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 43

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

இந்த வாரம் நமது விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதியில் காண இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. 

அதாவது, கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் நமது நாட்டின் தயாரிப்பில் அனுப்பப்பட சந்திராயன் -3  பற்றி அதிகமாக சிந்தித்து வருகிறோம். சென்ற வாரம் எனது நண்பர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார். என்ன கேள்வி? ஏன் சந்திராயனை நீள் வட்ட பாதையில் அனுப்புகின்றனர்? ஏன் நேரே அதாவது பூமியிலிருந்து நேரே சந்திரனை நோக்கி அதாவது 3,84,440 கி.மீ தொலைவை அடைய அனுப்பப்படவில்லை. இதற்கு பதில் கூறவேண்டும் என்று இந்த பதிவை பதிவு செய்கிறேன். 

எல்லாவற்றுக்கும் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் பொருளாதார நிலைதான் காரணம். 1969 இல் முதன் முதலில் அமெரிக்கா மனிதனை அப்பல்லோ 11 மூலம் நிலவுக்கு அனுப்பிய சோதனையில் வெற்றி கண்டது. அதில் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின், மைக்கேல் என மூன்று விண்வெளி வீரர்களை சுமார் 50000 (49,735 கி.கி) எடை கொண்ட ராக்கெட் மூலம், 8 நாட்கள் முப்பது மணி நேரம்  பயணத்திற்கு பின்பு நிலவை அடைந்து ஆராய்ச்சி செய்து 27‌.5 கி‌.கி எடை கொண்ட நிலவின் மண்ணை பூமிக்கு கொண்டு வந்தது.

இதில் பயன்படுத்திய எடை அளவைவிட சந்திராயன் -3ன் எரிபொருள் பத்தில் ஒரு பங்கு மட்டுமே. சந்திராயன் -3ன் மொத்த எடை  3900 கி.கி. மட்டுமே. விண்கலன்களை  நேரான பாதையில் அனுப்ப அதிக எரிபொருள் தேவை, அதற்கு அதிகமான பொருள் செலவு ஏற்படும். ஏனெனில் புவியீர்ப்பு விசையின் முடுக்கம் அதிகமாக எதிர் திசையில் செயல்படும். ஆனால் நீள்வட்ட பாதையில் அதன் தாக்கம் மிக குறைவான அளவே இருக்கும். இதனால் எரிபொருள் மிச்சம், மிகவும் பாதுகாப்பான பயணம், விண்கலம் அதிக பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்கும். மேலும் அதன் செயல்திறன் அதிகரிக்கும்.

ரஷ்யா கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி அனுப்பி  லூனா 25 விண்கலம் பத்தே நாட்களில் அதாவது ஆகஸ்டு 21 அடைய திட்டமிடப்பட்டது தோல்வியில் முடிந்துள்ளது. சந்திராயன் 3 ஐ விட லூனா 25 விண்கலம் வேகமாக செல்லக்காரணம், அதிக எரிபொருள் மற்றும் வேறு தொழிநுட்பம் அதற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஒரு கி.கி. எடையுள்ள ஒரு பொருளை பூமியின் புவியீர்ப்பு விசையின் பிடியில் இருந்து வெளியே அனுப்ப சுமார் ₹10,000 தேவைப்படும். ஆக எரிபொருள் செலவு, தொழில்நுட்ப கட்டமைப்பு ஆகியவையும் புவியீர்ப்பு விசை ஆகியவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவேதான் நமது சந்திராயன் -3ன் பயணம் 44 நாட்கள் ஆக எடுத்துக்கொண்டு உள்ளது.

மேலும் பாதுகாப்பான இடத்தில் தரையிறக்குதல் ஆகியவை அடங்கும். எனவே சந்திராயன் -3ன் மூலம் இந்தியா பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு மனிதனை நிலவுக்கு அனுப்பி மீண்டும் திரும்பி பூமிக்கு கொண்டு வரும் வெள்ளோட்டமாக சந்திராயன் -3ஐ பயன்படுத்தி இருக்கிறது. இதன் வெற்றி இன்னும் இரண்டு தினங்களில் உலகிற்கு உறுதி செய்ய உள்ளோம்.

மீண்டும் அடுத்த வாரம் சிந்திப்போம். நன்றி.


என்றும் அன்புடன் உங்கள்
முனைவர் கெ நாகராஜன்
இயற்பியல் பேராசிரியர்
பூ.ச. கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.



  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved