🔴 LIVE | முப்பெரும் விழா 2023


லட்சக்கணக்கான இஸ்ரேல் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவது ஏன்?

மத்திய கிழக்காசிய நாடான இஸ்ரேல் சமீப மாதங்களாக மக்கள் போராட்டங்களால் குலுங்கி வருகிறது. நீதித்துறை அதிகாரத்தை இல்லாமல் செய்து எதேச்சதிகார அரசை நிறுவும் நோக்கில் பிரதமர் நெதன்யாகு அறிமுகம் செய்த நீதித்துறை மறுசீரமைப்பு தொகுப்பு மசோதாவிற்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய போராட்டம் 30 வாரங்களையும் கடந்து இன்னும் ஓயவில்லை. பல லட்ச கணக்கான இஸ்ரேலிய மக்கள் இப்போராட்டத்தில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். இஸ்ரேல் வரலாற்றில் இப்படி ஒரு போராட்டமே நடந்ததில்லை என்று இப்போராட்டம் வர்ணிக்கப்படுகிறது. இருப்பினும் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி இஸ்ரேல் அரசாங்கம் இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதனையடுத்து இஸ்ரேலில் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

நீதித்துறை அதிகாரத்தை  ஒழித்துக்கட்டும் பாசிஸ்டுகள்:

இஸ்ரேல் நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் மதவாத சியோனிச கட்சி, ஷா கட்சி உள்ளிட்ட யூத இனவெறி பாசிச கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்தார் நெதன்யாகு. ஆட்சி பொறுப்பெடுத்து கொண்ட கையோடு இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்-இல் நீதித்துறையின் விதியான “நியாயமான கோட்பாடு” என்ற அதிகாரத்தை பறிக்கும் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவை அறிமுகப்படுத்தினார், நெதன்யாகு.

இஸ்ரேல் அரசியல் அமைப்பு சட்டத்தில் நீதித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள “நியாயமான கோட்பாடு” அதிகாரமானது யூத சட்டமான “ஹலகா”வில் இருந்தே பின்பற்றபடுகிறது. இந்த ஹலகா சட்டத்தில் சட்ட முடிவு எடுப்பதில் நியாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. எழுதப்படாத அரசியலமைப்பு சட்டத்தை (Unwritten Constitution) கொண்ட இஸ்ரேல் நாட்டில் “நியாயமான கோட்பாடு” விதியை பயன்படுத்தி அரசாங்கத்தின் முடிவுகள் நியாயமாக உள்ளதா என்று கண்காணித்து அதை திருத்துவதற்கான அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளது.

இஸ்ரேல் அரசியல் அமைப்பு சட்டத்தில் சொல்லிகொள்ளும் அளவிற்கு அதிகாரங்கள் வழங்கப்படாத இஸ்ரேலிய நீதித்துறைக்கு நாடாளுமன்றத்தை சோதிக்க (Check) இருக்கும் ஒரே வழி இந்த “நியாயமான கோட்பாடு” மட்டுமே. இவ்விதியின் மூலம் நாடாளுமன்றத்தில் நியமிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் தகுதி வாய்ந்தவர்கள் தானா என்று சோதித்து இஸ்ரேல் நீதிமன்றத்தால் அவர்களை நீக்க முடியும். மேலும் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டங்களும் அமல்படுத்தப்படும் கொள்கைகளும் திட்டங்களும் “நியாயமான கோட்பாடு” விதிக்கு உட்பட்டுள்ளதா என்று சோதித்து அவற்றையும் நீக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு உள்ளது. தங்களுக்கு தொந்தரவாக இருக்கும் நீதித்துறையின் இந்த அதிகாரத்தை பறிக்க வேண்டும் என்பது பாசிஸ்டுகளின் நெடுநாள் திட்டமாகும்.

எனவே இந்த மசோதா மூலம் நீதித்துறையில் மூன்று முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது நெதன்யாகு அரசு. முதலில் நீதித்துறையின் “நியாயமான கோட்பாடு” என்பது தேர்ந்தெடுக்கப்படாத நீதிபதிகளுக்கு “நியாமற்ற” அதிகாரங்களை வழங்குகிறது என்று வாதாடும் பாசிஸ்டுகள் இம்மசோதாவின் மூலம் நீதித்துறையின் அதிகாரத்தை பறித்துள்ளனர். இரண்டாவதாக,  “ஓவர்ரைடு ஷரத்”-ஐ அறிமுகம் செய்துள்ளதன் மூலம் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யவும் நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையை (Simple Majority) நிரூபித்து அம்முடிவுகளை முறியடிக்கவும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. மூன்றாவதாக, நீதிபதிகளை நியமிக்கும் 9 பேர் கொண்ட நீதித்துறை தேர்வு குழுவில் அரசின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீதிபதிகளை நியமிப்பதில் அரசின் கை ஓங்குகிறது. இஸ்ரேலிய நீதிமன்றத்தில் ஏற்கனவே திட்டமிட்டு வலதுசாரி பாசிச சித்தாந்தம் கொண்டவர்கள் நிரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த சட்ட மசோதாவின் மூலம் பாசிச அடிவருடி நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் சட்டபூர்வமாகவே பாசிஸ்டுகளின் கரங்களில் குவிக்கப்படுகிறது.

இதற்கிடையே பிரதமரை “பதவிக்கு தகுதியற்றவர்’ என்று அறிவிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியின் அதிகாரத்தை நீக்கும் சட்டமும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் ஒரு நாட்டின் பெயரளவிலான அதிகாரப்பகிர்வு கூட ஒழித்துகட்டப்பட்டு, பாசிஸ்டுகளுக்கு ஏதுவாக ஏற்கனவே அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்த அதிகாரங்களும் குவிக்கப்படுகின்றன.

எனவே, இச்சட்டத்திருத்தத்தின் மூலம் இஸ்ரேலிய பாசிஸ்ட்டுகளின் நெடுநாள் கனவான இஸ்ரேலையும் பாலஸ்தீனத்தையும் உள்ளடக்கிய “கிரேட்டர் இஸ்ரேல்” (இந்திய காவி பாசிஸ்டுகளின் “அகண்ட பாரதத்தை” போல) கனவை நனவாக்கிகொள்ள முடியும். அதாவது, பல தாசப்தங்களாக இஸ்ரேலிய வலதுசாரிகள் திட்டமிட்டு ஆக்கிரமித்து வரும் பாலஸ்தீனத்தை முழுமையாக விழுங்கி பாலஸ்தீன மக்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே அந்த கொடுங்கனவு. இந்த நோக்கத்தில் பல ஆண்டுகளாகவே நெதன்யாகு ஆட்சிக் காலத்தில் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் இஸ்ரேலின் மேற்கு கரையை  வைதீக தீவிர யூதர்கள் (Orthodox Ultra Jews – நம் நாட்டின் உயர்சாதி பார்ப்பனர்களை போல) திட்டமிட்டு ஆக்கிரமித்து வருகின்றனர். ஆனால், சில நேரங்களில் நீதிமன்றம் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால், தற்போது பாசிஸ்டுகளுக்கு இத்தடை விலகியுள்ளது.

இவையன்றி, இந்த சட்டத்திருத்தத்தின் மூலமாக ஊழல், மோசடி, நம்பிக்கை மீறல் மற்றும் லஞ்சம் வாங்கிய புகார்களில் சிக்கியுள்ள நெதன்யாகுவும், பிற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது கூட்டாளிகளும் தப்பிக்க முடியும் என்பது இன்னொரு  அம்சம். ஏனெனில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நெதன்யாகுவின் கூட்டணி கட்சி தலைவர்களில் ஒருவரான ஷா கட்சியின் தலைவர் ஆர்யே டெரியை உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிப்பதற்கு எதிராக “நியாயமான கோட்பாட்டை” பயன்படுத்தி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் அவரை நீக்க வேண்டிய நிலைக்கு நெதன்யாகு தள்ளப்பட்டார். எனவே, தற்போது  எந்த கவலையுமின்றி பாசிஸ்டுகளால் ஊழல் செய்யமுடியும்.

மேலும், இந்த சட்டத்தை பயன்படுத்தி பாசிஸ்டுகளால் அரபு கட்சிகளை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுக்க முடியும் என்கிறார் இஸ்ரேல் வரலாற்றாசிரியரான யுவால் நோ ஹராரி.  மேலும், தாங்கள் மத நூல்களை படிக்க வேண்டும் என்று காரணம்காட்டி கட்டாய ராணுவ சேவையிலிருந்து விலகி இருந்த வைதீக யூதர்களை ராணுவ சேவை செய்யும்மாறு தீர்ப்பு வழங்கிய நீதித்துறையின் தீர்ப்புக்கும் முடிவு கட்ட முடியும். தொகுப்பாக, இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் பெயரளவிலான நீதித்துறை அதிகாரம் கூட இனி பாசிஸ்டுகளுக்கு ஒரு தடையாக இருக்க போவதில்லை.

வரலாறு காணாத இஸ்ரேல் மக்கள் போராட்டம்:

ஏற்கனவே நெதன்யாகுவின் ஊழல் மோசடிகள் காரணமாக அவர் மீது ஆத்திரத்தில் இருந்த இளைஞர்களை பாசிஸ்டுகளின் இந்நடவடிக்கை வீதிக்கு அழைத்து வந்தது. ஜனவரி 4 ஆம் தேதி நீதித்துறை சீர்திருத்தம் குறித்து நீதித்துறை அமைச்சர் யாரிவ் லெவின் அறிவித்தவுடனேயே கிரைம் மினிஸ்டர் (Crime Minister – நெதன்யாகு ஊழல் வழக்கில் அம்பலப்பட்ட போது அவருக்கு எதிராக இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட இயக்கம்), ஓம்டிம் பெயசட் (Omdim Beyachad) உள்ளிட்ட இயக்கங்கள் போராட்டத்திற்கு அறைகூவின. மூன்றே நாட்களில் ஜனவரி 7 அன்று ஆயிரக்கணக்காணோர் டெல் அவிவ் நகரில் கூடி போராட்டம் நடத்தினர். ஜனவரி 14 தொடங்கி டெல் அவிவ் நகரின் கப்லான் தெருவில் வாராந்திர அடிப்படையில் சனிக்கிழமை இரவுதோறும் 60,000 முதல் 1,50,000 வரையிலான போராட்டக்காரர்கள் கூடத் தொடங்கினர்.

போராட்டகளம் தோறும் இஸ்ரேலின் நீலம் மற்றும் வெள்ளை நிறக் கொடிகள் எதிர்ப்பின் அடையாளமாக மாறியது. “இஸ்ரேல் கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரம்”, “அவர்களை நிறுத்துங்கள்”, “அவமானம்”, ”ஜனநாயகம் ஜனநாயகம்” உள்ளிட்ட முழக்கங்களும் பதாகைகளும் போராட்டக்களத்தை அலங்கரித்தன. இஸ்ரேலில் இப்படியொரு போராட்டத்தை எதிர்பார்க்காதவர்கள் அதனை “வரலாறு காணாத போராட்டம்” என்றும் “இஸ்ரேல்  வசந்தம்” என்றும் வர்ணித்தனர்.

மார்ச்  மாத இறுதியில்  போராட்டம் நடத்தும் மக்களுக்கு ஆதரவாக கருத்து சொன்ன இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மார்ச் 26 அன்று, நூறாயிரக்கணக்கில் ஒன்றிணைந்து இஸ்ரேல் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் செய்தனர். இஸ்ரேலியப் பல்கலைக்கழகங்கள் (மேற்குக் கரையில் அமைந்துள்ள ஏரியல் பல்கலைக்கழகத்தைத் தவிர) காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தன. அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்து வகுப்புகளும் ஆராய்ச்சிகளும் நிறுத்தப்பட்டன. 23 உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், நீதித்துறை சீர்திருத்தத்தை நிறுத்தக்கோரி, பிரதமர் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக அறிவித்தனர்.

நாட்கள் செல்ல செல்ல போராட்டங்களும் அதில் பங்குபெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே சென்றன. டெல் அவிவ் முதல் ஜெருசலேம் வரை பல பேரணிகள் நடைபெற்றன. பல இடங்களில் சாலை மறியல்கள் நடந்தன. கிட்டத்தட்ட மார்ச் மாத தொடக்கத்திலேயே டெல் அவிவ் நகரம் போராட்டங்களால் முடக்கப்பட்டது. சிலர் ஜெருசேலத்தில் உள்ள பழமைவாத சிந்தனைக் குழுவின் அலுவலகங்களை முற்றுகையிட தொடங்கினர்.

இளைஞர்கள், தொழிலாளர்கள், வணிக தலைவர்கள், மருத்துவர்கள், பாதுகாப்பு படையினர் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் பங்குபெற ஆரம்பித்தனர். மருத்துவர்கள் இரண்டு மணி நேர வேலைநிறுத்தம் செய்தனர். ஜூலை 23 அன்று 200 இஸ்ரேலிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தாங்களும் போராட்டத்தில் இணைவதாக அறிவித்தன. விக்ஸ், விஸ், மண்டே மற்றும் ரெடிஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்கள் குழு போராட்டத்திற்கு வருவதற்காக 100 பேருந்துகளை வாடகைக்கு எடுத்தன. ஜூலை 23 அன்று, இஸ்ரேலின் 150 மிகப்பெரிய வணிக நிறுவனங்களின் அமைப்பான “இஸ்ரேல் பிசினஸ் ஃபோரம்” வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தது.

எந்த ராணுவத்தை வைத்து பாலஸ்தீனத்தை ஒடுக்க வேண்டும் என்று நெதன்யாகு கனவு கண்டு கொண்டிருந்தாரோ அந்த பாதுகாப்பு படையினரும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். ஜூன் 27 அன்று, நீதித்துறை அமைச்சர் யாரிவ் லெவின் வீட்டிற்கு வெளியே 300-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் (Israel Defence Force – IDF) ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றபட்டால் தாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றும் பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கிடையே சட்டத்திருத்தத்திற்கு நெசெட் ஒப்புதல் அளித்ததையடுத்து போராட்டங்கள் வீரியமாக நடைபெறுகின்றன.

பாலஸ்தீனியர்களை இணைத்து போராடாமல் தீர்வில்லை:

ஆனால், வினோதமான விஷயம் என்னவென்றால் இஸ்ரேலின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவிகிதமாக உள்ள பாலஸ்தீனியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது தான். உண்மையிலேயே இந்த சட்டத்திருத்தின் மூலம் இஸ்ரேல் மாக்களை காட்டிலும் அதிகமாக பாதிக்கப்படப்போவது பாலஸ்தீனியர்கள் தான்.

அதற்காக, நீதித்துறை பாலஸ்தீனியர்களின் அரணாக இருந்துள்ளது என்று பொருளில்லை. பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இராணுவ துப்பாக்கிச் சூடும் வன்முறையும் அடக்குமுறையும் நடக்கும் போது அதனை வேடிக்கை பார்த்து அதற்கு துணை போனது தான் இந்த நீதிமன்றம். ஆனால், நீதிமன்றத்தின் அதிகாரங்கள் ஒழித்துகட்டப்பட்டு அவை பாசிஸ்டுகளின் கரங்களில் குவிக்கப்படுவது தங்கள் மீதான ஒடுக்குமுறையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பது பாலஸ்தீனியர்களுக்கு நன்றாக தெரியும். இருப்பினும் பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்கு காரணம், இந்த போராட்டங்களில் தங்களுக்கு ஒரு வெளி உள்ளது என்ற நம்பிக்கை பாலஸ்தீன மக்களுக்கு அளிக்கப்படவில்லை.

பாலஸ்தீனியர்களின் விடுதலை அவர்களின் நிலத்தில் தான் உள்ளது. ஒருவேளை அதற்கான முழக்கம் இஸ்ரேல் மக்கள் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் அப்போராட்டத்தில் பங்குபெற்றிப்பர்.  அப்படி நடக்காததாலேயே இஸ்ரேலின் மதசார்பற்ற யூத மக்கள் நீதித்துறை சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராடி கொண்டிருக்கும் போது, இஸ்ரேல் அரசு தங்கள் நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்த்துப் போராடிய நில தினத்தை பாலஸ்தீனியர்கள் கொண்டாடி கொண்டிருந்தனர்.

மேலும், இப்போராட்டத்தில் பாலஸ்தீனியர்கள் போராடுவதற்கு ஏற்ற சூழலும் இல்லை. பல இடங்களில் பாலஸ்தீனிய குடிமக்கள் உரையாற்ற அழைக்கப்படுவதில்லை. அப்படியே அழைக்கபட்டாலும் தங்கள் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை குறிப்பிடாமல் பேச ஒப்புக்கொண்டால் மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறார்கள். பல இடங்களில் போராட்டத்தில் பாலஸ்தீன கொடிகள் ஏந்த அனுமதியில்லை. மேலும், இந்த போராட்டத்தில் பங்கேற்றால் நெதன்யாகு அரசால் யூதர்களை காட்டிலும் பாலஸ்தீனியர்களுக்கு கொடூரமான தண்டனை விதிக்கப்படும்.

எனவே பாலஸ்தீனிய மக்களையும் தங்களோடு இணைத்துக்கொண்டு அவர்களின் உரிமை முழக்கத்தையும் முன்வைத்து போராடுவதே இந்த போராட்டத்தின் பலத்தை அதிகரிக்கும். இது குறித்து எழுத்தாளரும், பாலஸ்தீனிய குடிமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பலாட் கட்சியின் உறுப்பினருமான ஓர்லி நோய், “அரேபிய மக்களின் பங்கேற்பு இல்லாமலும் பிரதேசங்களிலும் இஸ்ரேலுக்குள்ளும் உள்ள நிறவெறியை பற்றி பேசாமலும் இஸ்ரேலை ஜனநாயகப்படுத்த வழி கிடையாது” என்கிறார்.

பாலஸ்தீனியப் நகரமான நாசரேத்தின் முன்னாள் துணை மேயர் சுஹில் டியாப் கூறுகையில், “இஸ்ரேலிய பாலஸ்தீனியர்களாகிய நாங்கள் போராட்டத்தின் சொற்பொழிவிலிருந்து விலக்கப்பட்டிருந்தாலும், முந்தைய ஆண்டுகளின் போராட்ட இயக்கங்களுடன் ஒப்பிடுகையில் போராட்டக்காரர்கள் சரியான திசையில் நீண்ட தூரம் வந்துள்ளனர் என்று நான் உணர்கிறேன்” என்கிறார். எனவே கொஞ்சம் கொஞ்சமாக ஜனநாயகப்பட்டு கொண்டிருக்கும் இப்போராட்டத்தில் பாலஸ்தீனியர்களை இணைக்க வேண்டியது மட்டுமே மீதம் உள்ளது. அதுவே பாசிஸ்டுகளுக்கும் சம்மட்டி அடியாக இருக்கும்.

தங்கள் வாழ்நாளில் பாசிஸ்டுகளால் சகித்துக்கொள்ள முடியாத விஷயம் என்றால் அது தாங்கள் பிரித்தாண்டு கொண்டிருக்கும் இரண்டு பிரிவினர் வர்க்க ரீதியாக ஒன்றிணைந்து தங்களுக்கு எதிராக குரல் எழுப்புவதே. இந்த வர்க்க அணிசேர்க்கை தான் இலங்கை பாசிஸ்டுகளான ராஜபக்சேக்களுக்கு உயிர் பயத்தை கொடுத்து நாட்டைவிட்டு ஓட வைத்தது. எனவே, தாங்கள் எதிர்த்து போராடி கொண்டிருப்பது பாசிஸ்டுகளை என்பதை உணர்ந்து பொது எதிரிக்கு எதிராக பாலஸ்தீனியர்களையும் இணைத்து அவர்களின் முழக்கங்களையும் முன்வைத்து போராடுவதே இஸ்ரேல் மக்கள் போராட்டத்தை  வெற்றியை நோக்கி கொண்டுசெல்லும். இல்லையேல், இன்று தற்காலிகமாக இஸ்ரேல் சட்டதிருத்த மசோதா திரும்பபெறபட்டாலும் நாளை பாசிஸ்டுகளுக்கு எதிராக கண்டிப்பாக பாலஸ்தீனியர்களோடு இணைந்துதான் போராட வேண்டியிருக்கும்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved