🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இசைமகா சமுத்திரம் நல்லப்பசுவாமிகளை கொண்டாடும் ஜாம்பவான்கள்

இசை மகாசமுத்திரம் என்று மாபெரும் இசை மேதைகளாலும்,  அறிஞர்களாலும் போற்றப்பட்ட விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகள், விடுதலைப் போராட்ட வீரரும்,  பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் உறவினரான காடல்குடி பாளையக்காரரின் வழிவந்தவர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் சோமசுந்தர ஜெகவீர கஞ்செய பாண்டியன் - கோவம்மாள் தம்பதியரின் ஐந்தாவது மகனாக 24.9.1889 இல் பிறந்தார். வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி 135 ஆவது ஜெயந்தி விழா இவருக்கு கொண்டாடப்படுகிறது.

சுவாமிகள் சிறுவனாக இருந்தபோது எங்கே இசை நிகழ்ச்சி நடந்தாலும் அங்கு சென்றுவிடுவது அவரது வழக்கம். காவடிசிந்து, திருப்புகழ் முதலியவற்றைப் பாடுவதில் ஆர்வம் காட்டினார். சபையில் வித்வான் பாடிய பாட்டையும் ராகங்களையும் கேட்டு அவற்றை உடனுக்குடன் சுவாமிகள் பாடிக் காட்டுவதைக் கண்டு எல்லோருமே ஆச்சரியம்படுவதுண்டு. 

பேச்சு, சிந்தனை, செயல் அனைத்துமே அவருக்கு இசைமயமாக இருக்கும், சுவாமிகளின் ராக ஆலாபனைகளைக் கேட்ட வித்வான்கள் எம்.கே. தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள், எம்.எம்.மாரியப்பா, திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன் போன்றோர் பிரமித்தது உண்டு.

சங்கீத விமர்சகரான எட்டயபரத்தைச் சேர்ந்த சுப்புக்குட்டி அண்ணாவியைப் பார்த்தாலே மகா வித்வான்களெல்லாம் மிரளுவார்கள். இந்த சுப்புக்குட்டி அண்ணாவி, விளாத்திகுளம் சுவாமிகளைக் கண்டால் மட்டுமே எழுந்து வணங்குவார். மாபெரும் நாதஸ்வர மேதைகளான திருவாவடுதுறை டி.என்.நாஜரத்தினம் பிள்ளையும் அவரது சீடரான காருகுறிச்சி அருணாசலமும் சுவாமிகளின் இசை மேதா விலாசத்தைக் கண்டு பிரமித்து,  அவரைத் தங்களின் மானசீக குருவாகப் போற்றிக் கொண்டாடியவர்கள். 

கரிசல் இயக்கிய பிதாமகர் கி.ரா.(கி.ராஜநாராயணன்), ராகங்களை ஆலாபனை செய்வதில் ஈடு இணையற்ற சுவாமிகளின் மேதா விலாசத்தை அடிக்கடி சிலாகித்ததுண்டு. கர்நாடக இசை உலகில் சுவாமிகள் ஒரு விதிவிலக்கு என்று கி.ரா.அடிக்கடி கூறுவார்.

"எத்தனை தடவை இந்தத் தோடியைப் பாடிப் பார்த்திருக்கிறோம். மன்னாதி மன்னர்களிடம் கேட்டிருக்கிறோம். இந்த மாதிரி இப்படி அதில் ஒரு இடம் இருக்கிறது என்று தெரியாமல்தானே இருந்திருக்கிறோம்? காலையில் பாடிய தோடி, மதியானத்துக்கு வராது. மதியானம் பாடிய தேடி, சாயந்திரத்துக்கு வராது. ராத்திரி பாடுகிற தோடியோ புத்தம் புதுசாக இப்போதுதான் கப்பலில் வந்து இறங்கியது போல் இருக்கும்! நமக்குத் தெரிந்த ஒரு ராகத்தை எத்தனை கோணங்களில், விதங்களில் விஸ்வரூப தரிசனம் காணும் போதும் நாம் மெய்மறந்து போகிறோம்" என கி.ரா.கூறியுள்ளார்.

ரசிகமணி டி.கே.சி. "விளாத்திகுளம் சுவாமிகள் ஆங்கிலப் பண்களை நம் கர்னாடக ராகங்கள் சிலவற்றில் பொருத்தி அழகாகப் பாடுவார்கள்"என்றார்.

"சங்கீத்தில் ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் உறவு தேடிக் கொடுத்த பெருமை நம் சுவாமியவர்களையே சேரும்" என்று எழுத்தாளர் கு.அழகிரிசாமி கூறியிருக்கிறாரென்பதை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் என்.ஏ.எஸ். சிவகுமார். இவர் விளாத்திகுளம் சிவாமிகள் குறித்த ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார்.

"சுவாமிகளின் மூத்த சகோதரியின் பேரன் பால்ராஜையும், அவரது சகோதரரின் மகனான அய்யனாரையும் சந்தித்தேன். பால்ராஜ், சுவாமிகளின் வம்சாவளி பற்றிய பல ஆவணங்களையும் அங்குவிலாஸ் இசையகத்தில் இருந்து தான் பெற்ற சுவாமிகள் பாடிய பாடலின் குறுந்தகட்டையும் கொடுத்து உதவினார். இதற்கிடையில் கி.ரா.வையும், பிரபல இசை அறிஞர் டாக்டர் தஞ்சாவூர் பி.எம்.சுந்தரத்தையும் சந்தித்தேன். அவர்கள் இருவரும் சுவாமிகள் பற்றி நான் எழுதிய நூலுக்கு அற்புதமான அணிந்துரையும் முன்னுரையும் வழங்கினர்" என்றும் சிவகுமார் தெரிவித்தார்.


நன்றி: கோமதி விநாயகம், தமிழ் ஹிந்து

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved