🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இந்திய அரசியலின் திசைவழிப்போக்கை மாற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு!

இந்தியாவில் முதன்முதலாக 1872-இல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1931-ம் ஆண்டு வரை ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒருமுறை இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்திய ஆங்கில அரசு, 1941-இல் இரண்டாம் உலக யுத்தம் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட ஒவ்வொரு முறையும் அதில் சாதி தொடர்பான தகவல்களும் பதிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சுதந்திர இந்தியாவிற்கு முன்பிருந்தே பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும்நிலையில், 1951-இல் சுதந்திர இந்தியா  தனது முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியபோது, ​​பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மட்டுமே சாதியின் பெயரால் வகைப்படுத்தப்பட்டனர்.

அன்று முதல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை இந்திய அரசு ஒரு கொள்கை முடிவாக தவிர்த்து வருகிறது. சட்டப்படி சாதிக் கணக்கெடுப்பு நடத்த முடியாது. ஏனென்றால் அரசியல் சாசனம் மக்கள் தொகையை ஏற்கிறது, சாதி அல்லது மதத்தை அல்ல என்று இது தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் 1920 களில் இருந்தே பிராந்திய உணர்வும், மாநில உரிமைகளை வலியுறுத்தும் இயக்கங்களும் வலுவாக இயங்கிவரும் நிலையில், 1980 க்குப்பின் இந்தியாவின் பிறபகுதிகளில் சாதி அரசியலை அடிப்படையாகக் கொண்ட பல பிராந்திய கட்சிகள் தோன்றியபோது நிலைமை மாறியது.

அதேபோல் தமிழகத்தில் 1920 களில் காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்தே அரசியலில் உயர்சாதியினர் என்று அழைக்கப்படுபவர்களின் மேலாதிக்கத்திற்கு எதிரான குரல் எழுந்ததுபோல், புதிதாக தோன்றிய பிராந்திய கட்சிகளும் தாழ்த்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் என்று அழைக்கப்படுபவர்களுக்கு அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான பிரச்சாரத்தை தொடங்கின.

சட்ட மேதை அம்பேத்கார் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தேசிய அளவில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை நிராகரித்து விட்டாலும், சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய சாதிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆராய இந்திய அரசு 1953-இல் காகா கலேகார் தலைமையில் ஒரு ஆணையமும், 1979 ஆம் ஆண்டில் மண்டல் தலைமையில் ஒரு ஆணையத்தையும் அமைத்தது.

நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தகவல்களையும், தரவுகளையும் திரட்டிய மண்டல் ஆணையம் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க 1980-இல் பரிந்துரைத்தது. ஆனால் இந்த பரிந்துரை பத்தாண்டுகள் கிடப்பில் போடப்பட்டு, வி.பி.சிங் பிரதமராக இருந்த 1990 ஆம் ஆண்டுதான் செயல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பொதுப்பிரிவு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். துரதிஷ்டவசமாக நாட்டின் மிக அதிக மக்கள்தொகையுள்ள இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய வி.பி.சிங் ஆட்சி காங்கிரஸ்-பாஜக இருகட்சிகளாலும் கவிழ்க்கப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் இடஒதுக்கீட்டுடன் இணைக்கப்பட்டதால், அரசியல் கட்சிகள் அது தொடர்பான கோரிக்கையை அவ்வப்போது எழுப்பத் தொடங்கின. இறுதியாக 2010 இல், ஏராளமான எம்.பி.,க்கள், சாதிவாரி கணக்கெடுப்பை கோரியபோது, ​​அப்போதைய காங்கிரஸ் அரசு அதற்கு சம்மதிக்க வேண்டியதாயிற்று.

இந்திய அரசு சமூக-பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு 2011 இல் நடத்தியது. ஆனால் இதன் மூலம் பெறப்பட்ட சாதி தொடர்பான தகவல்களை அரசு பகிரங்கப்படுத்தப்படவில்லை. 1931 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது, ​​நாட்டில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை 4,147 ஆக இருந்தது என்றும், 2011 ஆம் ஆண்டு சாதிக் கணக்கெடுப்பிற்கு பிறகு, நாட்டில் உள்ள மொத்த சாதிகளின் எண்ணிக்கை 46 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியிடப்படாததிற்கான காரணமாக அன்றைய காங்கிரஸ் அரசு கூறியது.

மேலும், 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக மகாராஷ்டிர மாநிலத்தின் உதாரணத்தை மேற்கோள் காட்டிய மத்திய அரசு, மகாராஷ்டிராவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சாதிகள், பழங்குடியினர் மற்றும் ஓபிசிகளின் கீழ் வரும் சாதிகளின் எண்ணிக்கை 494 என்ற நிலையில் 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிக் கணக்கெடுப்பில் மொத்த சாதிகளின் எண்ணிக்கை 4,28,677 என்று கண்டறியப்பட்டதாக குறிப்பிட்டது.

இதனுடன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது நிர்வாக ரீதியாக சிரமங்கள் நிறைந்தது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இதில் பெறப்பட்ட தரவுகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இந்தியாவில் முதன்முதலில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு சுதந்திரத்துக்கு முன்பாக, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1931-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில்தான், தற்போது இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது.

இதற்கிடையே, பிகாரில் இரண்டு கட்டங்களாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி மாநில அரசு கணக்கெடுப்பு பணியைத் தொடங்கி முடித்த பிகார் மாநில அரசு, சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து அதன் முடிவுகளை அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் இதுவரை மாநில அரசுகளுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரமில்லை என்ற வாதம் தகர்த்தெறியப்பட்டுள்ளது. தற்போது பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்டுள்ளது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு சர்வே மட்டுமே என்று சொல்லும் விபரமறிந்த பஹ்திரிக்கையாளர்கள், மத்திய அரசு நாடு தழுவிய அளவில் நடத்தும்போது மட்டுமே துல்லியமான புள்ளி விவரங்கள் கிடைக்கும் என்கின்றனர். வழக்கமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்தே நடத்தும்போது, மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்ந்தவர்கள் விவரமும் தெரியவரும் என்கின்றனர். அதேவேளையில் தற்போது பிகார் மாநில அரசு நடத்தியுள்ள சர்வே இடஒதுக்கீடு வழங்க போதுமானது என்கின்றனர்.

தமிழகத்தில் வன்னியர் உள்இடஒதுக்கீடு உட்பட பல மாநிலங்களில் செய்யப்பட்ட இடஒதுக்கீடுகளை ரத்து செய்த உச்சநீதிமன்றம் சொன்ன ஒரே கருத்து மாநில அரசுகளிடம் போதிய புள்ளிவிவரம் இல்லை என்பதும், இடஒதுக்கீடு  50% உட்சபட்ச அளவை  தாண்டக்கூடாது என்பதால் மட்டும் தான். ஆனால் இந்த இரண்டு கட்டுப்பாடுகளையும் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதிகளுக்கு (EWS) 10% இடஒதுக்கீடு வழங்கிய தீர்ப்பில் தான் விதித்த கட்டுப்பாடுகளையே நீதிமன்றம் காற்றில் பறக்கவிட்ட கேலிக்கூத்தை உச்சநீதிமன்றம் கூச்ச நாச்சமில்லாமல் செய்தது. இதற்குக்காரணம் இந்தியாவின் மிக உட்ச பதவிகளில் ஆக்கிரமித்துள்ள உயர்சாதி பிராமணர்களே.

தற்போது பிகார் மாநில அரசு வெளியிட்டுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு சர்வே மூலம் அம்மாநிலத்தில் ஏறக்குறைய 85% மக்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் என்று தெளிவாகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பிகாரில் 15% உள்ள உயர்சாதியினரில், ஏழைகளுக்கு மட்டும் 10% இடஒதுக்கீடு என்பது மிகப்பெரிய மோசடி என்பதை சுட்டிக்காட்டும் அரசியல் தலைவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீடு என்ற உச்சவரம்பை நீக்கி, மக்கள்தொகைக்கு ஏற்ப உயர்த்த வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். 

நாடுமுழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வெளியிடப்பட்டு விட்டால், இந்திய அரசியலின் திசைவழிப்போக்கை மாற்றும் என்கின்றனர் அரசியல் விற்பனர்கள். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தியும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வற்புறுத்தியுள்ள நிலையில், இனி இந்திய அரசியலின் பயணத்தில் மிகப்பெரும் மாறுதல்கள் நடக்கும் என்கின்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved