🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பிறந்தநாள் இன்று!

ஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்று கூறி மற்றும், அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்திடை செலுத்த இவ்வுலகில் இறைவனால் வருவுவிக்க வுற்ற அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். 

1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் மாலை 5:30 மணி அளவில் இராமையாபிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகவாக இறைவனால் வருவிக்க உற்றார். சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக்கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப் படுகிறது.

பிறந்த குழந்தைகளை முதன் முதலில் கோயிலுக்கு எடுத்துச்சென்று வழிபடுவது அக்கால வழக்கம் . அவ்வாறே இராமலிங்கம் அவதரித்த ஐந்தாம் மாதம், இராமைய்யா தன் மனைவி மக்களுடன் சிதம்பரம் சென்று வழிபட்டார்கள் .சிதம்பரத்தில் உள்ள சிற்சபையில் நடராஜ பெருமானை வழிப்பட்ட பின் சிதம்பர சகசியம் என்னும் திரையை தூக்கி தரிசனம் காட்டப் பெற்றது. அனைவரும் தரிசித்தனர் .

அந்த சமயம், கைக் குழைந்தையாகிய இராமலிங்கமும் தன்னுடைய தாயின் கரங்களில் இருந்து கொண்டு தரிசித்தார். அனைவருக்கும் இரகசியமாய் இருந்த சிதம்பர ரகசியத்தை பார்த்த குழந்தை இராமலிங்கம் கல கல வென்று இடைவிடாமல் சிரித்தது. அதைக் கண்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு போயினர் .சிதம்பரம் கோயில் பூசகராக இருந்த அப்பைய்யா தீட்சதர் என்பவர் குழந்தை சிரிப்பு ஒலியைக் கண்டு கேட்டு பார்த்து ஆச்சரியப்பட்டு போயினர். பல ஆண்டுகளாக இக்கோயிலில் நான் வேலைப் பார்க்கிறேன், பல குடும்பங்கள் குழைந்தைகளுடன் தரிசனம் பார்க்க வந்துள்ளார்கள் இ ப்படி ஒரு ஞான குழைந்தையை நான் பார்த்ததே இல்லை எனக்கருதி, இராமையாவிடம், இக் குழைந்தையை எடுத்துக் கொண்டு என் வீட்டிற்கு வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டதின் பேரில், குருக்கள் வீட்டிற்கு, இராமைய்யா தன் குடும்பத்துடன் சென்றார் .

அப்பய்யா தீட்சதர், பாய்விரித்து குழைந்தையை கையில் பெற்று, கீழே படுக்க வைத்து சாஷ்டாங்கமாய் விழுந்து குழைந்தை இராமலிங்கத்தின் காலில் விழுந்து வணங்கினார் .அதைப் பார்த்த இராமைய்யா குடும்பத்தினர் ஆச்சரியத்தில் அதிசயித்தனர்.

இராமையா கணக்கராகவும், தமிழாசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். இராமலிங்கர் பிறந்த கொஞ்ச நாளிலேயே தந்தை காலமானார். குடும்பம் வறுமையில் சிக்கியது. ஆதரவற்ற சின்னம்மை பிள்ளைகளின் படிப்பை முன்னிட்டு குழந்தைகளுடன் சென்னை அருகிலுள்ள பொன்னேரியில் உள்ள தனது தாய்வீட்டிற்கு சென்று குடியேறினார்கள். பின்னர் சென்னைக்கு வந்தனர் அண்ணன் சபாபதி தமிழ் பயின்று ஆசிரியரானார். பிள்ளைகளுக்கு வீட்டில் வைத்து பாடம் சொல்லிக் கொடுத்தும், புராணச் சொற்பொழிவுகள் செய்தும். போதிய வருமானம் வந்ததால் குடும்பம் நல்ல நிலையை அடைந்தது.

இராமலிங்கப் பெருமானுக்கு பள்ளிப்பருவம் எய்தியதும் அண்ணன் சபாபதி தாமே கல்விப் பயிற்சியை தொடங்கி வைத்தார் . பின்னர் தான் பயின்ற ஆசிரியராகிய காஞ்சிபுரம் மகா வித்துவான் சபாபதி அவர்களிடம் கல்வி கற்க அனுப்பி வைத்தார் .

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்.

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் .

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்.

வஞ்சனைகள் செய்வாரோடு இனங்கவேண்டாம்.

என்ற பாடலை ஆசிரியர் சொல்ல, இராமலிங்கம் தவிர அனைத்து மாணவர்களும் சொன்னார்கள். ஆசிரியர் காரணம் கேட்டதற்கு ஒவ்வொரு வரியிலும் அமங்கலமான வார்த்தையில் முடிகிறது எனக் கூறி

ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற

உத்தமர் தம் உறவு வேண்டும்.

உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்.

பெருமை பெரு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை

பேசா திருக்க வேண்டும்.

பெரு நெறி பிடித் தொழுக வேண்டும் மதமான பேய்

பிடியாது இருக்க வேண்டும்.

மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை

மறவாது இருக்க வேண்டும்.

என்ற பாடலை பாடினார். மாணவரின் ஆன்ம வளர்ச்சி கண்டு ஆசிரியர் வியந்தார். அதே சமயம் அவருக்கு மேலும் பாடம் நடத்த மறுத்துவிட்டார்.

இராமலிங்கரோ பள்ளிக்குச் சென்று கல்வி பயில்வதில் நாட்டம் கொள்ளவில்லை. கந்தகோட்டத்தில் முருகனைச் வணங்கி பாடல்கள் பாடத் தொடங்கினார்.

தம்பியின் போக்கில் அண்ணன் சபாபதி சினமடைந்தார். அவரை வீட்டில் சேர்ப்பதோ, உணவளிப்பதோ கூடாது என்று தடை விதித்தார். ஆனால் அண்ணனுக்குத் தெரியாமல் அண்ணியார் அவருக்கு உணவளிப்பார். ஒரு கட்டத்தில் அண்ணியின் வேண்டுகோளுக்கிணங்கி இராமலிங்கர் வீட்டுக்குத் திரும்பியதோடு படிப்பைத் தொடரவும் செய்தார்.

அப்போது அவருக்கு வயது ஒன்பது. படிப்பதற்காக நூல்களையும், எழுது பொருள்களையும் பெற்றுக்கொண்டு தமது அறைக்குள் நுழைவார். அறைக்குள்ளிருந்த கண்ணாடி முன் அமர்ந்து தியானம் செய்வார். மடை திறந்த வெள்ளமாய் அவருக்குள்ளிருந்து பாடல்கள் வெளிப்படும். இறைவனின் அருட்குழந்தை யாயிற்றே அவர்! சிறுவயதிலேயே அவருக்குத் தமிழ்ப் புலமை ஏற்பட்டிருந்தது.

இராமலிங்கருக்குப் பன்னிரண்டு வயது. ஒரு சமயம் தமையனார் உடல்நலமில்லாததால் ஆன்மிகச் சொற்பொழிவுக்குச் செல்ல இயலவில்லை. தாம் வர இயலாத காரணத்தைக் தெரிவிக்கும்படி இராமலிங்கரை அனுப்பி வைத்தார்.

இராமலிங்கரோ ஞானசம்பந்தரின் தேவாரப் பாடலொன்றுக்கு அருமையாய் விளக்கம் அளித்து விட்டுத் திரும்பினார். அதன் பிறகே தம்பியின் அருள்டிறம் அண்ணனுக்குப் புரிந்தது. அது முதல் இராமலிங்கர் அவருடைய விருப்பம்போல் செயல்பட அண்ணன் விட்டுவிட்டார்.

வீட்டிலேயே தனியறையில் கண்ணாடி வைத்து தீப ஒளியில், கற்பூரச் சுடரில் இறைவனை வணங்கி வந்தார் இராமலிங்கம்.

இராமலிங்கரை இல்லற வாழ்க்கையில் ஈடுபடுத்த விரும்பிய தமையனார், தனம்மாள் என்கிற உறவுக்காரப் பெண்ணை அவருக்குத் திருமணம் செய்து வைத்தார். ஆனால், இராமலிங்கரோ தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை. அவர் இல்லறத்துறவியாகவே இருந்து வந்தார், வெள்ளை ஆடையே உடுத்தினார். ஆடம்பரங்களை அறவே வெறுத்தார்.

முருகன் புகழ் கூறும் 'தெய்வமணிமாலையே அவர் பாடிய முதல் நூல். அவர் பாடிய மொத்தப் பாடல்கள் நாற்பதாயிரம். அவற்றை அவருடைய பிரதான சீடர் தொழுவூர் வேலாயுத முதலியார் தொகுத்துப் பதிப்பித்தார்.

திருவொற்றியூர் தியாகேசரிடம் இராமலிங்கர் ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி கோயிலிலேயே தியானத்தில் மூழ்கிவிடுவார். ஒரு முறை வீட்டுத் திண்ணையில் பசியோடு வருந்திய இராமலிங்கரின் பசி தீர்க்க வடிவுடையம்மையே இராமலிங்கரின் தமக்கையார் உருக்கொண்டு வந்து அவருக்கு உணவளித்துச் சென்றார்.

1865 ஆம் ஆண்டு ராமலிங்கம் "சமரச வேத சன்மார்க்க சங்கம்" என்ற அமைப்பை உருவாக்கினார். பிற்காலத்தில் அந்தப் பெயரை "சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம்" என்று மாற்றியமைத்தார். இந்தப் புதிய சங்கத்தின் கொள்கைகளாக அவர் அறிவித்தவை, மக்கள் பின்பற்றக்கூடிய மிக எளிய கொள்கைகள். அவை: 

கடவுள் ஒருவரே.

கடவுளை உண்மையான அன்புடன், ஒளி வடிவில் வழிபட வேண்டும்.

சிறு தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கொடுக்கக்கூடாது.

மாமிச உணவை உண்ணக்கூடாது.

ஜாதி, மத வேறுபாடு கூடாது.

பிற உயிர்களையும் தன்னுயிர் போல் கருத வேண்டும்.

பசித்த உயிர்களுக்கு உணவு அளித்து ஆதரிப்பதும் உயிர்க்கொலை செய்யாத பண்பும் மாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !

எல்லா உயிரையும் தம் உயிர்போல் பாவிக்கும் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும் !

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் வேண்டாம் !

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வேம்டாம் !

எதிலும் பொது நோக்கம் வேண்டும்.!

வேதம் ஆகமம் ,புராணம்,இதிகாசம்,சாத்திரம் போன்ற எதையும் நம்ப வேண்டாம் ! அதில் உண்மையை சொல்ல வில்லை !

இராமலிங்க அடிகள் 23–5–1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது. மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

சமத்துவம், கல்வி, தியான யோகம் இவற்றை வலியுறுத்தினார். உயிர்ப்பலியைத் தடுத்து நிறுத்தினார். சன்மார்க்க சங்கம், சத்திய ஞானசயை, அறக் கூழ்ச்சாலை என்று அவர் தோற்றுவித்த ஆன்மிகப் பணிகள் இன்றும் வடலூரில் நடந்து வருகின்றன.

வள்ளல் பெருமான் தன் வாழ்வில் சில சித்து அற்புதங்களை புரிந்துள்ளார். ஒரு சமயம் வள்ளலாரை புகைப்படம் எடுக்க விரும்பிய சிலர் எத்தனை முறை புகைப்படம் எடுத்தும் அவரின் உருவம் அதில் பதிவாகவில்லை. இதற்கு காரணம் வள்ளலார் பெற்ற "ஒளி தேகத்தை" அந்த புகைப்பட கருவியல் பதிவு செய்ய முடியவில்லை. பின்பு தனது அடியவர்களின் ஆசைக்காக சிறிது நேரம் தியானத்தில் ஆழ்ந்தார் வள்ளலார், அதன் பிறகு புகை படம் எடுத்துக் கொள்ளுமாறு கூறியபோது அவரது உருவம் அதில் பதிவாகியது.

ஒரு முறை வடலூரிலுள்ள சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம் ஸ்தாபிக்க, அதற்கான மரத்தை வாங்க வள்ளலார் தனது சீடர்கள் சிலரை சென்னைக்கு அனுப்பிவைத்தார். சென்னைக்கு ரயிலில் வந்து இறங்கிய அந்த சீடர்கள் வள்ளலார் அவர்களிடம் முன்பே கூறிய அந்த குறிப்பிட்ட மரக்கடைக்கு சென்றனர். அப்போது அச்சீடர்கள் காணும் வகையில் "சூட்சம" வடிவில் தோன்றிய வள்ளலார் ஒரு மரத்துண்டின் மீது நின்று, கொடிமரத்துக்கான மரம் அதுதான் என அடையாளம் காட்டினார். இந்த அதிசயத்தை கண்ட அந்த சீடர்கள் வடலூர் திரும்பிய பின்பு இது பற்றி அங்கிருந்தவர்களிடம் கூறினர். அப்போது அங்கிருந்தவர்கள் வள்ளலார் அந்த சீடர்களுக்கு சென்னையில் காட்சியளித்த அதே நேரத்தில், இங்கு வடலூரில் தங்களுக்கு ஆன்மீக போதனைகளை வழங்கி கொண்டிருந்ததாக கூறினர். இதை கேள்விப்பட்ட அனைவரும் வள்ளலாரின் யோக ஆற்றலை எண்ணி வியந்தனர்.

சித்துக்கள் பலவும் செய்த இராமலிங்கர் 3.1.1874 வெள்ளி இரவு வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் சொருப சமாதியானார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved