🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தமிழகத்தின் அறிவு பொக்கிஷம்!

தமிழகத்தின் அறிவு பொக்கிஷங்களில் ஒருவர் பொ.வேல்சாமி!

இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் படித்தறியாத, ஏன் கேட்டே அறியாத பல ஆழமான மொழி மற்றும் பண்பாடு தொடர்பான அரிய தகவல்களை அறிந்து வைத்திருப்பவர். அந்த அளவுக்கு தீவிர வாசிப்பாளர்! இரவுகளில் இவர் தூங்கிய நேரங்களைவிட வாசித்த நேரங்களே மிக அதிகம்.

உலகத் தமிழ் ஆராய்சி நிறுவனம், சென்னை பல்கலைக் கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம் போன்றவை அவ்வப்போது இவரை அழைத்து இவர் சிந்தும், சிந்தனைத் தேன் மழையை பருகி வருகிறார்கள்.

இவர் எழுதிய பொற்காலங்களும், இருண்ட காலங்களும் நூலாகட்டும், கோவில் நிலம் சாதியாகட்டும், வரலாறு எனும் கற்பிதமாகட்டும் தமிழ்ச் சமூகத்தின் ஆய்வுப் புலத்தில் பல வெளிச்சங்களை பாய்ச்சியவை என படிப்பவர்களே உணர முடியும்.

விளம்பரங்களை விரும்பாதவர், மிகைப்படுத்தப்படும் பிம்பங்களை தகர்த்துவிடத் துடிப்பவர், மாயைகளை விளக்கி யதார்த்தங்களை தரிசிக்க தருபவர், எதையும் நேர்படப் பேசுபவர்..! இது தான் பொ.வேல்சாமி அவர்களைக் குறித்த என்னுடைய மதிப்பீடு. 

இவர் அ.மார்க்ஸ் மற்றும் ரவிக்குமாரை இணைத்துக் கொண்டு நடத்திய நிறப்பிரிகை இதழ் தமிழ் இதழியல் வரலாற்றில் பற்பல அதிர்வுகளை ஏற்படுத்திய முக்கிய பத்திரிகையாகும். தலித் இலக்கியம், அவர்களின் வாழ் நிலைகள் குறித்து முதன்முதலில் அதிகமான விவாதங்களை இவை உருவாக்கின. இதன் தாக்கத்தால் தான் தமிழகத்தில் தமிழ் அரசியல் மேலோங்கி முக்கியத்துவம் பெற்றது!

தமிழ்ச் சமூகத்தில் கார்டுவெல் என்ற மகத்தான ஆய்வாளரைப் பற்றிய புரிதலையும், தேடுதல் வேட்கையையும் இவர் உருவாக்கிய பிறகு தான் கவிதாசரண் மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்கள் கார்டுவெல்லின் மறைக்கப்பட்ட படைப்புகளையும் வெளிக் கொண்டு வந்தனர். இவரே கார்டுவெல் எழுதிய பரதகண்ட புராதனம் என்ற பெயரில் கார்டுவெல்லின் வேத, இதிகாசங்களைப் பற்றிய விமர்சன நூலை வெளிக் கொண்டு வந்துள்ளார்.

வரலாற்றை எவ்வாறு பார்க்க வேண்டும். எப்படி புரிந்து கொள்ள வேண்டும். அதை எப்படி முன்னெடுக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவான பார்வை கொண்டவர் பொ.வேல்சாமி!

நான் அடிக்கடி தொடர்பெடுத்து பேசும் அறிஞர்களில் முக்கியமானவர் பொ.வேல்சாமி. நாங்கள் இருவரும் பேசத் தொடங்கினால் அந்தப் பேச்சு மணிக் கணக்கில் நீளும். அந்தப் பேச்சின் இறுதியில் பல நூல்களை வாசித்த பேரனுபவத்தை நான் பெற்று உள்ளேன்.

சமீபத்தில் தமிழக அரசு திரு.வி.க விருது வழங்கி இவரை கெளரவித்தது. அதன் பிறகு தற்போது அமெரிக்கத் தமிழர்கள் இவரை விளக்கு விருதுக்கு தேர்வு செய்துள்ளனர். இதனால், அந்த விருதுக்கு தான் பெருமை! இலக்கியம் படைக்கும் புனைவு எழுத்தாளர்கள் மட்டுமே விருதுக்குரியவர்கள் என்ற நிலையைக் கடந்து புனைவற்ற வகையில் சமூகத்தை முன்னெடுத்துச் செல்லும் புனைவற்ற படைப்புகளுக்கானவர்களுக்கும் விருதை அறிவித்த விளக்கு அமைப்பு பாராட்டுக்குரியதாகும்.

இவர் முழு நேர எழுத்தாளராக, பேச்சாளராக செயல்பட்டிருந்தால் இந்த தமிழ் சமூகம் அளப்பரிய நன்மைகளை பெற்று இருக்கும். ஆனால், அப்படி அவரைப் பயன்படுத்திக் கொள்ள இயலாமல் போனது தமிழ்ச் சமூகத்தின் துரதிர்ஷ்டம் என்று எனக்கு அடிக்கடி தோன்றுவது உண்டு.

சாவித்திரி கண்ணன்
வேல்சாமி ஓவியம்; ஒவியர் சுந்தர முருகேசன்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved