🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 50

விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி 50

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதியில் ஊழ்வினை என்ற ஒன்றை பற்றி சிந்தித்து கொண்டு உள்ளோம். இதிலே சென்றவாரம் சில இலக்கியங்கள் மற்றும் திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்கள் மூலம் ஊழியின் தன்மையை அறிந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் நாம் சிந்திக்க இருப்பது அதன்  பொருள்.

சிலப்பதிகாரம்: 55

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,

1) அரசியலில் தவறு செய்வோர்க்கு அறக்கடவுள் எமனாகும்

2) புகழ்பெற்ற பத்தினியை மேலோர் போற்றுவர்

3) ஊழ்வினை தவறாது தன் பயனை ஊட்டும்என்பன அவை.

திருமந்திரம்: 323

தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி

ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி

மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை

நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே.

அண்ட சராசரங்களில் தோன்றிய அனைத்தையும் அழிப்பவன் சதாசிவ மூர்த்தி ஒருவனே.அவன் இல்லாமல் வேறு எதுவும் இல்லை என்பதை உணர்ந்து ஈசன் திருவடிகளப்பற்றி மும்மூர்த்திகளுக்கும் முதல்வனாகிய சதாசிவ மூர்த்தியின் திருநாமமாகிய நமசிவாய மந்திரதத்தை சிந்தித்து கொண்டு இருப்பவர்கள் நடுநிலையுடன்  இருக்கும் ஞானியாகி விடுவார்கள் .

திருமந்திரம்: 450

ஆரும் அறியாத அண்டத் திருவுருப்

பார்முத லாகப் பயிலுங் கடத்திலே

நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்

சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே

யாராலும் அறிந்திட முடியாத அண்ட சராசரங்களடங்கிய திருமேனியைக் கொண்ட இறைவன் நீரில் பால் சேர்க்கும் போது எப்படி இரண்டும் ஒன்றாக கலந்து விடுகின்றதோ அதுபோலவே உலகத்தில் பிறக்கும்  உயிர்களுடன் உயிராக கலந்து உடலாகி ஒன்றாக இருப்பதை இடைவிடாமல் கண்டு பேரின்பம் அடையும் பாக்கியத்தை அவன் திருவருளாலே யான் பெற்றிருக்கிறேன்.

திருமந்திரம்: 1630

அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்

பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே

அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி

இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே

நுண்ணறிவு மிக்க அமைச்சர்களைக்கொண்டு,வலிமை மிக்க யானைப் படைகளுடன் உயர்ந்த பேரரசர்களாக இருந்தாலும், ஒரு பகை நாட்டு அரசன் அவர்கள் மீது கொண்ட விரோதத்தால் எழுகின்ற போருக்குள்  அகப்பட்டு அழிந்து போகிறார்கள். அப்படி அழிகின்றவர்களுக்கு நடுவில் இறைவன் தனது மாபெரும் கருணையினால் வைத்து அருளிய ஒரு உண்மை ஞானத்தையும் அதனால் கிடைக்கின்ற முக்தியையும் குறிக்கோளாகக் கொண்டு ஒரு கணப்பொழுதும் இறைவனை மறக்காமல் தவ நிலையில் இருந்து எப்போதும் அழிந்து போகாது நிலையில் இருப்பவர்களே தவசிகள் ஆவர் .

ஔவையார்.ஆத்திச்சூடி:

வஞ்சகம்பேசேல்.

கெடுப்பதொழி.

கொள்ளைவிரும்பேல்.

சித்திரம்பேசேல்.

சூது விரும்பேல்

ஒருவரிடமும் வஞ்சகம் வேண்டாம், மற்றவர்களை கெடுப்பது வேண்டாம், பிறர் உரிமைகளை கொள்ளை கொள்ள வேண்டாம், பொய் பேச வேண்டாம் , சூது விளையாட வேண்டாம் என ஒழுக்கமாக வாழ சான்றோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இங்கே சனாதனம் குறித்து அனைவரும் சண்டை யிட்டு கொண்டு உள்ளனர். உண்மையில் சனாதனம் என்பது அறநெறியுடன் வாழ்தல். இது மதம், மொழி, நாடு , ஜாதி என எல்லாவற்றையும் கடந்து அனைத்திற்கும் பொதுவானது மற்றும் நிலையானது. இந்த பிரபஞ்சம் தோன்றிய நாள் முதல் உள்ளது. இது ஆண்டிக்கும் , அரசனுக்கும் ஒன்றே! பேசுபனற்றுக்கும, பேசாதவற்றுக்கும் ஒன்றே! என்று கூறி ஊழ்வினை சேராது வாழ்வாங்கு வாழ்வீர் என கூறி விடைபெறுகிறேன். 

வாருங்கள் சிந்திப்போம் ! மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.


என்றும் அன்புடன் உங்கள்
முனைவர் கெ. நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved