🔴 LIVE | முப்பெரும் விழா 2023


குரங்கிலிருந்து மனிதனாக பரிணாமம் பெற்றதில் உழைப்பின் பாத்திரம்!

" சகல செல்வத்தினுடைய தோற்றுவாயும் உழைப்பே என அரசியல் பொருளியல்வாதிகள் அறைந்து கூறுகின்றனர். உண்மையிலே அதுதான் தோற்றுவாய்-இயற்கைக்கு அடுத்தபடியாக; அதற்கு இயற்கை மூலாதாரமாக வழங்கும் பொருளை அது செல்வமாக மாற்றுகிறது. அதேபோல், மனித செயற்பாடுகளில் அளவிடற் கரிய ரீதியில் அதைவிட இன்னும் கூடுதலான மாற்றத்தை உருவாக்குகிறது. ஓர் அர்த்தத்தில், உழைப்பு மனிதனையே சிருஷ்டித்தது என்று நாம் கூறவேண்டிய அளவுக்கு அது மானுட வாழ்வு முழுவதற்கும் முதன்மையான அடிப்படை நிபந்தனையாக உள்ளது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால், இன்னும் திட்டமாக நிர்ணயிக்கப்படாத, மூன்றாம் காலக்கூறு (Tertiary period) எனப் பூகர்ப்பவியல்வாதிகள் அறிந்துள்ள பூமியின் வரலாற்றின் ஒரு சகாப்தத்தில்- (அந்த வரலாற்றினுடைய முடிவு கட்டமாக இருப்பதற்கு அதிக சாத்தியக்கூறு உண்டு)-மிகவும் உன்னதமான வளர்ச்சி பெற்ற மனிதக் குரங்கு இனம் உஷ்ண மண்டலத்தில் தற்போது இந்திய பெருங்கடலின் அடியில் ஒருவேளை மூழ்கிப் போன ஒரு பெரும் கண்டமாக கூட இருக்கலாம் - இப்படி ஏதோ ஓர் இடத்தில் வாழ்ந்தது. நம்முடைய இந்த மூதாதையர்களைக் குறித்து ஒரு தோராயமான வர்ணனையை டார்வின்! நமக்குக் கொடுத்துள்ளார். அவர்கள் முழுமையாகவே உரோமத்தால் மூடப்பட்டிருந்தனர்; அவர்கள் தாடிகளையும். கூர் முனையுள்ள காதுகளையும் பெற்றிருந்தனர்; மரங்களின் மீது கூட்டங்களாக அவர்கள் வாழ்ந்தனர்.

மரமேறுதல் என்பது கை, கால்களுக்கு வித்தியாசப்பட்ட தொழில்களைப் பகிர்ந்துவிடுகிறது; அவர்களுடைய வாழ்க்கை முறையில் தட்டையான நிலத்தின்மீது நிலைபெயர்ந்து செல்ல வேண்டி ஏற்பட்டபோது இந்த மனிதக் குரங்குகள் படிப் படியாகக் கைகளைப் பயன்படுத்தும் பழக்கத்தைக் கைவிட்டன; அதன் காரணமாக மேலும் மேலும் அதிகமாக நிமிர்ந்தபடியே இரு கால்களில் மட்டுமே நடக்கும் ஒரு உடற்பாணியையே தொடர்ச்சியாக கடைபிடித்தன. மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலையில் இது நிர்ணயமானதொரு படியாகும்.

தற்போதுள்ள எல்லா மனிதக் குரங்குகளுக்கும் நிமிர்ந்து நிற்கவும் பாதங்களின்மீது மட்டும் நடக்கவும் இயலும்; ஆனால் அது அவசர காலங்களிலேதான், அதுவும் விகாரமாகத்தான் இருக்கும். அவைகளுடைய இயல்பான நடை பாதி நிமிர்ந்தும் பாதி குனிந்தும் செல்லும் நடை, அதில் அவை கைகளையும் பயன்படுத்துகின்றன. பெரும்பாலானவை தங்களது முஷ்டியின் விரற்கணுக்களைப் பூமியின்மீது ஊன்றிக் கால்களை உள் இழுத்து நீண்ட கைகளிடையே உடலை ஊசலாட்டிச் செலுத்துகின்றன - ஒரு ஊனமுற்றோர் கவைக் கோல்களின் மீது நடந்து செல்வதற்கொப்பாக இதைக் கூறலாம். பொதுவாக, நான்கு கால்களின் மீது நடந்தது முதல் இரண்டு கால்களின்மீது நடப்பதுவரை உள்ள இடைநிலைக் கட்டங்களை எல்லாம் இன்றைய மனிதக் குரங்குகளிடையே காணலாம். இருந்தாலும், பின் சொன்ன நடைமுறையின்படி அவைகளில் எதற்கும் தற்காலிகமாகச் சமாளித்துக் கொள்ளலாம் என்பதற்கு  மேலான முக்கியத்துவம் எதுவும் உடையதாக இருக்கவில்லை.

உரோமம் படர்ந்த நமது மூதாதையரிடையே நிமிர்ந்த நடை என்பது முதலில் ஒரு விதியாகவும் பின்னர் கால அடைவில் ஓர் அவசியமாகவும் ஆயிற்று, இதற்குள்ளாக, கைகளுக்குப் பல்வேறு வகையான இதர வேலைகளின் பொறுப்பும் ஏற்பட்டிருந்தது என்பதையும் சேர்த்து புரிந்துகொள்ள வேண்டும். மனிதக் குரங்குகளிடையே ஏற்கனவே கைகளும் பாதங்களும் பயன்படுத்தப்படுவதில் சிறிது வித்தியாசம் இருக்கிறது. மேலே சொன்னதற்கொப்ப, மரமேறுவதில் கைகளுக்கும் பாதங்களுக்கும் வெவ்வேறு உபயோகங்கள் உள்ளன. கீழ் படியில் உள்ள பாலூட்டிகள் (mammals) தங்களது முன்பாதங்களை உபயோகிப்பதைப்போல உணவைச் சேகரிக்கவும் பிடிக்கவுமே கைகள் பிரதானமாக உபயோகிக்கப்படுகின்றன. மரங்களில் தங்களுக்குக் கூடுகளைக் கட்டிக் கொள்ளவும். அல்லது உதாரணமாக, சிம்பன்ஸி குரங்கைப் போலத் தங்களை சீதோஷ்ண நிலைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளக் கிளைகளிடையே கூரைகள் வேய்ந்துகொள்ளவும்கூடப் பல மனிதக் குரங்குகள் கைகளைப் பயன்படுத்துகின்றன. பகைவர்களிடமிருந்து காத்துக்கொள்ளத் தங்களது கைகளினால் கழிகளைப் பிடிக்கின்றன; தங்களது கைகளைக்கொண்டு எதிரிகளைப் பழங்களாலும் கற்களாலும் தாக்குகின்றன. அவைகள் கூண்டில் பிடிபடும்போது மனிதர்களிடமிருந்து பல சிறிய செயல்களை ஒத்த வடிவத்தில் செய்யத் தங்களது கைகளைப் பயன்படுத்துகின்றன. இந்த இடத்தில்தான் மனிதனை அதிகப்பட்சம் ஒத்த மனிதக் குரங்குகளின் வளர்ச்சியடையாத கைக்கும் லட்சக்கணக்கான ஆண்டுகளின் உழைப்பினால் உன்னதமான சிறப்பு பெற்றுள்ள மனிதக் கைக்குமிடையே உள்ள பெரிய கடலளவிலான வித்தியாசத்தை ஒருவன் காண்கிறான். இந்த இரு கைகளிலும் உள்ள எலும்புகளும் தசைகளும் எண்ணிக்கையிலும் பொதுவான இணைப்பு ஏற்பாட்டிலும் ஒரே மாதிரியானவை; ஆனால், எந்தக் குரங்கின் கையும் ஒத்தமாதிரி செய்ய முடியாத நூற்றுக்கணக்கான செயல்களை மிகக் கீழ்படியிலுள்ள ஒரு காட்டுமிராண்டியின் கை செய்ய முடியும்- எந்தக் குரங்கின் கையும் எந்தக் காலத்திலும் மிகக் கரடுமுரடான கல்கத்தியைக் கூட உருவாக்கியதில்லை.

மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலையான பல்லாயிரமாண்டுகளில் நமது மூதாதையர்கள் படிப்படியாகத் தங்களது கைகளைப் பொருந்தியவாறு செயல்படுத்த பழக்கப்படுத்திக் கற்றுக்கொண்ட முதற்செயல்கள் மிக சாதாரண மானவையாக மட்டுமே இருந்திருக்க முடியும். எவரிடையேயும் மிருகங்களை யொத்த நிலைக்கு மீண்டும் திரும்பக் கூடிய நிலைமை அதிகமிருக்கவில்லை, அதே சமயத்தில் உடல் துறையில் பின்னடைவு கொண்டவர்களாக நாம் அனுமானிக்கின்ற அப்படிப்பட்ட மிகக் கீழ்படியிலிருந்த காட்டுமிராண்டிகளும் கூட அந்த இடைநிலை வாசிகளைவிட எவ்வளவோ மேம்பட்டவர்களே. முதல் கருங்கல் மனிதக் கையினால் கத்தியாக உருவாக்கப்படுவதற்கு முந்தைய காலத்தை ஒப்பு நோக்கினால் நாமறிந்த வரலாற்றுக் காலம் அற்பமானதாக கடந்துவிடுகின்ற ஒரு காலக்கூறாக மட்டுமே இருக்கும். ஆனால் நிர்ணயமான அடி. எடுத்து வைக்கப்பட்டாகிவிட்டது, கை சுதந்திரம் பெற்றுவிட்டது; இனி மேற்கொண்டு அது மேலும் மேலும் அதிக நுண்திறத்தைப் பெற முடியும். இவ்வாறு பெறப்பட்ட அதிக நெகிழ்ச்சித் திறமும் வழி வழியாக அடையப்பட்டு, தலைமுறைக்குத் தலைமுறை பெருகிவந்தது.

இவ்வாறாக, கை உழைப்பிற்கான உறுப்பு என்பது மட்டுமல்ல, உழைப்பின் விளைபயனும் அதுவே. உழைப்பு என்பது எப்பொழுதும் புதிய செயல்களுக்குப் பொருந்தியவாறு கைகளை அமைத்துக் கொள்வதுதான், இவ்விதத்தில் விசேஷ வளர்ச்சி அடைந்த தசைகள், தசை நார்கள், எலும்புகள் ஆகியவை காலத்தின் மிக நீண்ட கூறுகளினால் வழி வழியாக மேம்பாடுடையதாக பெற்று, இவ்வாறு வழி வழியாகப் பெறப்பட்ட நுண்ணயங்களை மேலும் மேலும் கூடுதலான புதிய சிக்கலான செயல்களுக்குத் திரும்பத்திரும்பப் பயன்படுத்தல்-ஆகியன ஒரு ராபேலின் ஓவியங்களையும் ஒரு தோர்வால்ட்ஸனின்" சிற்பங்களையும், ஒரு பகானீனியின் சங்கீதத்தையும் செப்பிடு வித்தையின் விளைவுபோல முன்கொண்டுவந்து நிறுத்தத்தக்க மகோன்னதத் தேர்ச்சியை மனிதனின் கைகளுக்கு அளித்தன.

- பேராசான் எங்கெல்ஸ்
"மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்" நூலில்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved