🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மானிட சமூகத்திற்கு அழியாத தத்துவம் தந்த பிரெடெரிக் எங்கல்ஸ் பிறந்தநாள் இன்று!

கம்யூனிச சித்தாந்த ஆசான்களில் ஒருவரான பிரெடெரிக் எங்கெல்ஸ் இன்றுதான் பிறந்தார். நவம்பர் 28, 1820, அவர் கம்யூனிச தத்து வத்தை உருவாக்கிய கார்ல் மார்க்சின் உயிர்த்தோழர். ஒரு நெசவாலை முதலாளியின் மகனாக ஜெர்மனியில் பிறந்தவர்.அதிகம் படிக்க ஆசை இருந்தும் 17 வயதில் அப்பாவின் தொழிலை பார்க்கச்சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனாலும் சுயமாக கல்வி பயின்று மேதையானார். மார்க்ஸ் இவரை ‘இன்னொரு நான்’ என அழைத்தார்.

 எங்கெல்ஸ் என்றொரு புரட்சியாளர் -  இரகுராம் ராஜன்

துடிப்புமிக்க இளைஞராக இருந்த பிரெடெரிக் எங்கெல்ஸ், தனது புரட்சித் தோழன் கார்ல் மார்க்சுடன் பழகுவதற்கு முன்னரே (அக்டோபர் 1842) மார்க்ஸ் ஆசிரியராக இயங்கிய ரைனிஸ் ஜைதுங் பத்திரிக்கைக்கு கட்டுரைகள் எழுதியிருந்தார். “உள்நெருக்கடிகள் பற்றிய ஆங்கிலேயர்களின் பார்வை”, “உள் நெருக்கடிகள்”, “இங்கிலாந்தில் பாட்டாளி வர்க்கத்தின் நிலை” மற்றும் “கார்ன் விதிகள்” போன்றவை அவரின் முக்கியமான கட்டுரைகளாகும். இங்கிலாந்தின் சமூக அமைப்பையும், வெவ்வேறு வர்க்கங்களையும், வர்க்கங்களுக்கு இடையேயான சமூக உறவுகளையும் மிக நுட்பமாக ஆராய்ந்து அக்கட்டுரைகளை அவர் எழுதினார்.

இங்கிலாந்தில் வளர்ந்து கொண்டிருந்த பாட்டாளி வர்க்க இயக்கமான “சார்டிஸ்டு இயக்கத்தை” அவர் ஆர்வமுடன் நோக்கினார். அந்த இயக்கத்தின் பாட்டாளிகளைச் சந்தித்தார். அதே சமயம் “சட்டரீதியான புரட்சி என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று” என மிகச் சரியான விமர்சனத்தையும் அவர் முன்வைத்தார்.

அவர் எழுத்தராகப் பணிபுரிந்த நிறுவனத்தில் பணியாற்றிவந்த அயர்லாந்தைச் சேர்ந்த மேரி பர்ன்ஸ் என்பவரை மணம் புரிந்தார். அவரோடு இணைந்து மான்செஸ்டர் நகரில் உள்ள கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்றார்.

சோசலிச, கம்யூனிச இயக்கங்கள் குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டார். ஆங்கிலேய சோசலிஸ்டுகளின் பத்திரிக்கையான “நியூ மாரல் வேல்டிற்க்காக எழுதிய கட்டுரையில் “ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள மனித நாகரீகம் வளர்ச்சியடைந்த நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி முதலான நாடுகள் அனைத்திலும் பொதுச்சொத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகக் கட்டமைப்பைப் புரட்சியின் மூலம் உருவாக்குவது தவிர்க்கமுடியாததாகவும், அவசியமானதாகவும் உள்ளது” என முன்வைத்தார். அதேசமயம் அவர் கற்பனாவாத கம்யூனிசத்தை ஏற்கவில்லை.

 மார்க்ஸ்–எங்கெல்ஸ் சந்திப்பு:

கார்ல் மார்க்சும் ரூகேவும் இணைந்து நிறுவிய டச்சு-பிரன்சு ஆண்டறிக்கை என்ற பத்திரிக்கையில் அரசியல் பொருளாதார விமர்சனத்தின் வரையறுப்பு என்ற கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரை மார்க்சும், எங்கெல்சும் இணைந்து பணிபுரியவும், விவாதிக்கவும் உதவியாக அமைந்தது. 1844 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியிலிருந்து மான்செஸ்டர் நகருக்குச் செல்லும் வழியில் பாரிஸ் நகரில் எங்கெல்ஸ், மார்க்சை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது மார்க்சுடன் சுமார் 10 நாட்கள் தங்கியிருந்தார். மார்க்சுடனான இச்சந்திப்பைப்பற்றி “1844 இல் பாரீஸ் நகரில் மார்க்சை சந்தித்தபோது தத்துவார்த்த தளத்தில் அவருடன் இணைந்து இயங்குவது என்ற முடிவை இருவரும் எட்டினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே காலகட்டத்தில் ஹெகலின் மாணவர்களான ப்ருனோ பவுர்(Bruno Bauer) உள்ளிட்டவர்களுக்கு எதிரான தத்துவச் சமருக்கு கார்ல் மார்க்ஸ் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார்.1844ஆம் ஆண்டில் மார்க்சும், எங்கெல்சும் இணைந்து “புனிதக் குடும்பம் அல்லது விமர்சன பகுப்பாய்வின் மீதான விமர்சனம்” என்ற நூலை எழுதினார்கள். 1845இல் வெளியான இந்நூலே அவர்கள் இருவரும் பொறுப்புகளை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு எழுதத் தொடங்கிய முதல் நூல் ஆகும்.

1844 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பர்மன் நகருக்குத் திரும்பிய எங்கெல்ஸ் கம்யூனிஸம் மற்றும் சோசலிஸத்திற்கு ஆதரவாக பர்மன் மற்றும் எல்பேர்பில்த் நகரங்களில் பிரச்சாரங்களில் பங்கேற்றார். பிப். 8 நடைபெற்ற முதல் கூட்டத்தில் சுமார் 40 நபர்கள் பங்கேற்றனர். பிப். 15, இரண்டாவது கூட்டத்தில் 130 பேரும், 22 ஆம் தேதி கூட்டத்தில் சுமார் 200 பேரும் பங்கேற்றனர்.  எங்கெல்ஸ் தனது சொற்பொழிவில் முதலாளித்துவத்தால் நேர்ந்த, நேர்ந்து கொண்டிருக்கின்ற, நேரஇருக்கின்ற பல இன்னல்களை விரிவாக விளக்கியிருந்தார். சுருக்கமாக “தாராளவாதம் என்பது பொருளாதாரத்தைச் சீர்குலைப்பது, சுரண்டல் நிறைந்தது, ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டிற்கு எதிராகப் பகைமையை  வளர்த்துக் கொண்டு போர்முனையில் சந்திக்க வைப்பது, சுயலாபத்திற்காக ‘பொதுநலம்‘ என்ற பெயரில் ஒவ்வொருவருக்கு இடையேயும் பகைமையை வளர்க்கிறது, சமூகத்தின் பெரும்பான்மையானவர்களை ஏழைகளாகவும், சிலரை மிகவும் வளமிக்க பணக்காரர்களாகவும் மாற்றுவது, சமூகத்தைத் தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலைக்கு இட்டுச் செல்வது, முரண்பாடான பொருள் உற்பத்தி மற்றும் நுகர்வுகலாச்சாரம் என முதலாளித்துவம் பல சிக்கல்கள் நிறைந்தது” எனக் கடுமையாகச் சாடினார்.

 பாட்டாளி வர்க்கம் பற்றிய ஆய்வு:

நவம்பர் 19, 1844 இல் மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்சின் ஆகச் சிறந்த படைப்புகளில் ஒன்றான இங்கிலாந்து பாட்டாளி வர்க்கத்தின் நிலையைப் பற்றி மார்க்சுக்கு தெரியப்படுத்தினார். பாட்டாளி வர்க்கத்தின் நிலையை எழுதும்போது எங்கெல்ஸின் வயது 24 மட்டுமே. தொழிற்சங்கம் மற்றும் வேலைநிறுத்தம் பற்றிப் பேசிய முதல் கம்யூனிஸ்டு எங்கெல்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. “பொதுவேலைநிறுத்தம் என்பது உழைக்கும் மக்களை ஒரு பெரும் போராட்டத்திற்காக தயார்ப்படுத்துகிற ஒரு இராணுவப் பள்ளி என்றும், அப்பெரும் போராட்டத்தை ஒருவராலும், ஒருபோதும் தடுத்து நிறுத்த இயலாது என்றும், உழைக்கும் மக்கள் யாவரையும் ஒரே இயக்கமாக இணைக்கும் பாலமே பொதுவேலைநிறுத்தம்” எனக் கூறியுள்ளார்.

1845 ஆம் ஆண்டில் பாரிஸிலிருந்து பிரஸ்ஸல்ஸ் நகருக்கு மார்க்ஸ் குடிபெயர்ந்தார். தன்னுடைய பதிப்பாளர் உடனான ஒப்பந்தத்தின்படி “அரசியல் மீதான விமர்சனம் (Critique of Politics)” மற்றும் அரசியல் பொருளாதாரத்தின் இரண்டு தொகுதிகளின் கையெழுத்துப் பிரதியை மிக விரைவாக முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். இவ்விரு தொகுதிகளை முடிக்கவேண்டுமெனில் அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்திருந்த பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகள் பலவற்றை வாசிக்க வேண்டியிருந்தது. மார்க்சின் ஆங்கிலப் புலமை சற்று குறைவு. ஆகையால் எங்கெல்சையும் தன்னுடன் இங்கிலாந்திற்கு அழைத்துச் சென்றார்.

ஜூலை 12, 1845லிருந்து ஆகஸ்ட் 21 ஆம்தேதி வரை மான்செஸ்டர் நகரில் இருவரும் தங்கியிருந்தனர். அப்போது இங்கிலாந்தின் புகழ்பெற்ற நூலகமான சாத்தம்(Chatham) நூலகத்தில் பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகள், புத்தகங்கள் எனப் பலவற்றை இருவரும் வாசித்தனர். இருவரும் சார்டிஸ்ட் இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் லீக் ஆப் ஜஸ்ட்-ன் தலைவர்கள் பலரைச் சந்தித்தனர். சார்டிஸ்ட் இயக்கக் குழுஉறுப்பினர்களையும், அவ்வியக்கத்தின் இடதுசாரி உறுப்பினர்களையும் சந்தித்தனர். ஆகஸ்ட் மாத மத்தியில் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த ஜனநாயக வாதிகளின் கூட்டத்தில் மார்க்சும், எங்கெல்சும் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் முடிவில் “சகோதர ஜனநாயக வாதிகள் (Fraternal Democrats)” என்னும் ஒரு குழு தோற்றுவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எழுதிய கட்டுரையில் எங்கெல்ஸ் “வெவ்வேறு தேசங்களில் நிலவுகின்ற அநீதிக்கும், தேசியவாதத்திற்கும் எதிரானதாகவும், மனித நேயத்திற்கு ஆதரவாகவும் பாட்டாளி  வர்க்கம் வளர்ந்து வருகின்றது. பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே தேசிய வாதத்தை அழித்தொழித்து, தேசங்களுக்கிடையே சகோதரத்துவத்தையும் நட்புறவையும் வென்றெடுக்க இயலும்” என முதல்முறையாக “சர்வதேசியம்” வேண்டி அறைகூவல் விடுத்தார்.

 விஞ்ஞான கம்யூனிசத்தின் பிறப்பு:

1845 ஆம் ஆண்டு ஹெகலின் தத்துவார்த்தங்களை விமர்சிக்கும் விதத்திலும், அதே ஆண்டு வெளிவந்த பயர்பாக்கின் கட்டுரைகளை விமர்சிக்கும் விதத்திலும் மார்க்சும், எங்கெல்சும் இணைந்து மிகப்பெரிய தத்துவார்த்த போரில் ஈடுபடத் துவங்கினர். இத்தத்துவார்த்த போரின் இறுதிவடிவமே உலக கம்யூனிச வரலாற்றின் மிகவும் புகழ்பெற்ற படைப்பான “ஜெர்மானிய சித்தாந்தம் (German Ideology)”ஆகும்.

ஜெர்மன் சித்தாந்தத்தில் இருவரும் முதலாளித்துவ அமைப்பில் அரசு என்பது சுதந்திரமாகத் தனித்துச் செயல்படுகிறது என்று நிலவிவந்த மாயையைத் தகர்த்தெறிந்துள்ளனர். மேலும் தற்போது நிறுவப்பட்டுள்ள அரசு என்பது “முதலாளிகளின் சொத்துகளைப் பாதுகாக்கவும், அவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்ளத் தேவையான அனைத்து நிபந்தனைகளைக் கொண்ட அமைப்பு” என அறிவியல் பூர்வமாக நிறுவியுள்ளனர். மேலும் ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆளும் வர்க்கம் பெருந்திரளான மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான ஆளும் வர்க்க கருத்தாக்கங்களைக் கொண்டிருந்தது. அதாவது ஆளும் வர்க்கம், சமூகத்திலிருந்த உற்பத்தி சக்திகளைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த அதேநேரத்தில் தத்துவார்த்தக் கோட்பாடுகளையும், அறிவார்ந்த கோட்பாடுகளையும் தனக்குக் கீழ் கட்டுப்படுத்தியே வைத்திருந்தது.

ஜெர்மன் சித்தாந்தத்தில் மார்க்சும், எங்கெல்சும் கம்யூனிச சித்தாந்தத்தை “கற்பனாவாத கம்யூனிசம்” என்னும் நிலையிலிருந்து “விஞ்ஞான கம்யூனிசம்” என்னும் உயர்ந்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றனர்.

அக்காலகட்டத்தில் ஸ்டிர்னர் என்பவர் “கம்யூனிச சமூகத்தில் தனியுடைமை சொத்து அழித்தொழிக்கப்படுவதால் ஒவ்வொருவரின் தனித்தன்மையும் அழிக்கப்படுகிறது என்றும் ஒவ்வொரு தனிமனிதர்களும் சமூகத்தின் அடிமையாகும் அபாயம் உள்ளது” எனக் குற்றம் சாட்டிப் பல இடங்களில் கம்யூனிசத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த மார்க்சும், எங்கெல்சும் “தனியுடைமை சொத்து என்பது முதலாளித்துவ அமைப்பில் பின்பற்றப்படும் தனிமனிதத்துவத்துக்கான அடிப்படைக் கூறாகும். முதலாளித்துவ அமைப்பு சொத்து ஏதுமில்லாத பெருவாரியான மக்களின் தனித்தன்மையை சூறையாடுகின்றது. அவ்வாறு சூறையாடப்பட்ட பாட்டாளி மற்றும் ஏழை, எளிய மக்களின் தனித்தன்மையை முதலாளித்துவத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டங்களின் மூலமே வென்றெடுக்க இயலும்” என ஜெர்மன் சித்தாந்தத்தில் விவரித்துள்ளனர்.

“சுதந்திரம் என்னும் கருத்தாக்கத்திற்கு வரலாற்றுரீதியான அணுகுமுறைகளை அளித்ததோடு, ஒவ்வொரு சகாப்தத்திலும் நிலவியிருந்த ஒடுக்குமுறைகள் மற்றும் சமூக உறவு முறைகளுக்குத் தகுந்தாற் போன்று, ஒடுக்கப்பட்ட மக்கள் குழு ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரத்தைப் போராட்டத்தின் மூலம் வென்றெடுத்தனர். சமூக உறவு முறையின் மிகவும் உச்சகட்ட வளர்ச்சியான கம்யூனிச சமூகத்தில் மட்டுமே, மனித குலம் முழுமையான சுதந்திரத்தை அடைய முடியும்.” என இருவரும் வாதிட்டனர்.

இடைவிடாத விமர்சனத்துக்குள்ளான இப்படைப்பை கையெழுத்துப் பிரதி வடிவத்திலேயே நாங்கள் பல காலம் வைத்திருந்தோம் என 1859 ஆம் ஆண்டு மார்க்ஸ் வேடிக்கையாகக் கூறியிருந்தார். இவ்வரிய நூலின் முதற்பதிப்பு சோவியத் ஒன்றியத்தில் 1933 ஆம் ஆண்டுதான் வெளியிடப்பட்டது.

 கம்யூனிஸ்ட் லீக் உருவானது:

மார்க்சும், எங்கெல்சும் “லீக் ஆப் ஜஸ்ட்” அமைப்பில் இணைந்தபிறகு சங்கத்தின் முதல் மாநாடு ஜூன் 2 ஆம் தேதி 1847 ஆம் ஆண்டு லண்டன் நகரில் துவங்கியது. பாரிஸ் கமிட்டியின் பிரதிநிதியாக எங்கெல்சும், பிரஸ்ஸல்ஸ் கமிட்டியின் பிரதிநிதியாக வில்ஹம் வொல்ஃப் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். பொருளாதார நெருக்கடியின் காரணமாக மார்க்ஸ் இம்மாநாட்டில் கலந்துகொள்ள இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதுதான் அந்த அமைப்பின் பெயர் “கம்யூனிஸ்ட் லீக்” என மாற்றம் செய்யப்பட்டது. சங்கத்தின் முதன்மையான நோக்கமாக இருந்து வந்த “அனைவரும் சகோதரர்களே” என்பது “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!” என பிரகடனம் செய்யப்பட்டது. இம்மாநாடு கம்யூனிஸ்டுகளின் பொதுவேலைத் திட்டத்தைத் தயாரிக்குமாறு எங்கல்சிடம் கேட்டுக்கொண்டது. வினா-விடை வடிவத்தில் “கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (Principles of Communism)” எனும் சிறு புத்தகத்தை இதனை ஒட்டியே எங்கெல்ஸ் எழுதினார்.

கம்யூனிஸ்ட் லீகின் இரண்டாவது மாநாடு அதே ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி துவங்கியது. இம்மாநாட்டில் மார்க்சும் கலந்து கொண்டார். பின்னாளில் இம்மாநாட்டை மார்க்ஸ் “முதல் அகிலம்” எனக் கூறினார். பத்து நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் அனைவரும் கம்யூனிஸ்டுகளுக்கான “பொது வேலைத்திட்டம்” ஒன்றைத் தயாரிக்குமாறு மார்க்சையும் எங்கல்சையும் கேட்டுக் கொண்டனர்.

முதல் அகிலம் முடிவடைந்தபிறகு எங்கெல்ஸ் பாரிஸ் நகருக்கும் மார்க்ஸ் பிரஸ்ஸல்ஸ் நகருக்கும் திரும்பினர். 1848 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதிக்குள் பொது வேலைத்திட்டத்தை அவர்கள் எழுதி முடித்தார்கள். இதற்கு “கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை” எனப் பெயரிட்டனர்.

 கிளர்ச்சிப் போராட்டக் களத்தில்:

1848 முதல் 1849 வரையிலான இடைப்பட்ட காலங்களில் மார்க்ஸ் மற்றும் எங்கல்சின் இருவரது வாழ்வும் போராட்டம் நிறைந்ததாகவே இருந்தது. பிப்ரவரி 22 முதல் 24 ஆம் தேதி வரை குடியரசு வேண்டி மற்ற சமூக அமைப்புகளுடன் இணைந்து பாரிஸ் நகரத் தொழிலாளர்கள், பிரான்சு நாட்டில் நடைபெற்று வந்த லூயிஸ் பிலிப்பேயின் ஏகாதிபத்திய முடியாட்சியை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதே காலகட்டத்தில் இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா எனப் பல நாடுகளில் குடியரசு வேண்டி பல எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்றன. பெல்ஜியத்திலும் ஜனநாயக வாதிகள் பலர் குடியரசு வேண்டி கிளர்ச்சிப் போராட்டங்களைத் துவங்கினர்.

கம்யூனிஸ்ட் லீகின் பிரஸ்ஸல்ஸ் குழு தினமும் கூடி கிளர்ச்சிப் போராட்டங்களைப் பற்றி விவாதிப்பது வழக்கம். பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சங்கக் கமிட்டி மிக விரிவான இயக்கத்தை ஆரம்பிக்கவும், முனிசிபல் கமிட்டியின் கவுன்சில்கள் ராணுவ அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவற்றில் பூர்சுவா சிவில் படையுடன் தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரவும் தீர்மானித்தது. ஜனநாயக சங்கமே நேரடியாகத் தொழிலாளர்களை ஆயுதபாணியாக்கத் தொடங்கியது. இதற்குச் சுமார் இரு வாரங்களுக்கு முன்புதான் மார்க்சிற்கு அவருடைய தகப்பனாருடைய சொத்துக்களிலிருந்து பங்குத்தொகையாக பணம் கிடைத்தது. அதிலிருந்து கணிசமான அளவு தொகையை தொழிலாளர்களுக்கு ஆயுதங்கள் வாங்க அவர் செலவிட்டார்.

1848 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மார்க்சும், எங்கெல்சும் அக்காலகட்டத்தில் ஜெர்மனியில் ஏற்பட்ட கிளர்ச்சியில் பங்கேற்பதற்காகத் தங்கள் தாய்நாடு திரும்பியதோடு, சொந்தமாக பத்திரிக்கையொன்றை துவக்க முடிவு செய்து ரைனிஷ் ஜைதுன் பத்திரிக்கையை புதிப்பித்து புதிய ரைனிஷ் ஜைதுங் எனும் பெயரில் வெளியிட்டனர்.

எங்கெல்ஸ் இப்பத்திரிகைக்கு கட்டுரைகள் எழுதியது மட்டுமின்றி, பத்திரிக்கையின் பதிப்பாசிரியர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். “எங்கெல்ஸ் ஒரு கலைக்களஞ்சியம், இரவு-பகல் பாராமல் மிகவும் களிப்பாகத் தன் பணியைச் செவ்வனே செய்து முடிக்கும் திறமை பெற்றவர்” என புகழ்ந்துள்ளார் கார்ல் மார்க்ஸ். தெற்கு ஜெர்மனியில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்திலிருந்த சமயத்தில் மார்க்சும், எங்கெல்சும் பாட்டாளிகளை ஒன்றிணைப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தனர். எல்பேர் பில்த் செல்லும் வழியில் சுமார் 400 உழைப்பாளிகளைக் கொண்ட கிளர்ச்சிப் படையொன்றை மே 10, 1849 ஆம் தேதி சொளிங்கேன் எனும் ஊரில் உருவாக்கினர். இக்கிளர்ச்சிப் படையுடன் எல்பேர் பில்த் நகரில் உள்ள பாலம் ஒன்றை அடையும்போது தேவாலயம் சென்று கொண்டிருந்த தனது தந்தையை சந்தித்தார் எங்கெல்ஸ். ஆங்காங்கே நடைபெற்று வந்த கிளர்ச்சிப் போராட்டங்களில் பங்கேற்ற எங்கெல்சை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இக்கிளர்ச்சிப் போராட்டங்களுக்கிடையில் மார்க்சும், எங்கெல்சும் இணைந்து நடத்தி வந்த பத்திரிக்கையின் இறுதிப்பதிப்பைக் குறிக்கும் விதத்தில் “சிகப்பு நிறத்தில்” மே 19, 1849 ஆம்தேதி வெளியிட்டனர்.

1851 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் லீக் கலைக்கப்பட்டது. மார்க்ஸ் முதலில் பாரிஸ் நகருக்கும் பிறகு லண்டன் நகருக்கும் இடம்பெயர வேண்டியதாயிற்று. பிரஷ்ய அரசு மார்க்சுக்கு குடியுரிமை தர மறுத்துவிட்டது.

 தந்தையின் ஆலையில் எங்கெல்ஸ்:

எங்கெல்ஸ் இரு காரணங்களுக்காகவே மான்செஸ்டர் நகரில் உள்ள தனது தந்தை பங்குதாரராகவுள்ள நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். மார்க்சின் குடும்பத்திற்குப் பொருளாதார உதவி அளிக்கவும், ஐரோப்பியக் கண்டம் முழுவதும் பரவிவந்த கிளர்ச்சிகளை ஐரோப்பிய அரசுகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிய பின், புரட்சியாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அடுத்த புரட்சிப் போராட்டத்திற்கு தங்களை தயார்ப்படுத்தி கொள்வதற்குக் காலஅவகாசம் தேவைப்படுகிறது என்பதை மனதில் கொண்டும் அவர் இதைச் செய்தார். 1850 முதல் 1869 ஜூலை வரை பணியாற்றினார்.

மார்க்ஸ் அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டெய்லி எனும் பத்திரிக்கைக்கு கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அப்போது ஆங்கிலத்தில் குறைந்த புலமையுடையவராக இருந்த மார்க்ஸ் எங்கெல்சின் உதவியை நாடினார். மார்க்சின் கட்டுரைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் எங்கெல்ஸ். பின்னர் அதே பத்திரிக்கைக்கு மார்க்சின் பெயரிலேயே எங்கெல்ஸ் பல கட்டுரைகளை எழுதி அனுப்பினார்.

எங்கெல்ஸ் “துருக்கி நாட்டின் உண்மையான பிரச்சினை”, “துருக்கியின் பிரச்சினைகள் (The Turkish Question)” மற்றும் “ஐரோப்பியக் கண்டத்தில் துருக்கி என்னவாகவுள்ளது? (What is to Become of Turkey in Europe?)” போன்ற கட்டுரைகளில் ஐரோப்பியக் கண்டத்தின் மிகப் பெரிய பேரரசுகளான இங்கிலாந்து மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் துருக்கி நாட்டின் உள்விவகாரங்களில் ஈடுபட்டு வருவதைக் கடுமையாகச் சாடியிருந்தார். ஐரோப்பியப் பேரரசுகளின் தலையீட்டால் தனிநாடு பெற்றிராத ஸ்லாவோனிய இன மக்களின் விடுதலையை நசுக்கிய துருக்கி அரசையும் அவர் கடுமையாகச் சாடினார். இக்கட்டுரைகளின் வாயிலாக எங்கெல்ஸ் இன விடுதலைக்கு ஆதரவாக இருந்தார் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இச்சமூகம் மற்றும் உலக வரலாற்றின் தனது புரிதலிலிருந்து எதிர்காலத்தில் வரஇருந்த புரட்சி இயக்கங்களையும் அவர் யூகித்திருந்தார். “ஐரோப்பியக் கண்டத்தில் ஏற்பட்ட புரட்சிகர அடையாளங்கள் 1789 ஆம் ஆண்டு முதல் நிதானமாக முன்னேறியிருந்தது. ஐரோப்பியப் புரட்சிகளின் அரணாக வார்சா (Warsaw), தெப்ரஜின் (Debreczin) மற்றும் புச்சறேஸ்ட் (Bucharest) ஆகிய இடங்கள் இருந்தன. அடுத்த கட்ட முன்னேற்றமடைந்த புரட்சி பீட்டர்ஸ்பர்க் (Petersburg) மற்றும் கோன்ச்டண்டி நோப்லே (Constantinople) ஆகிய இடங்களாக இருக்க வேண்டும்” என அவர் கணித்திருந்தார். எங்கெல்சின் இக்கணிப்பை தோழர் லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சி உண்மையென நிரூபித்துக் காட்டியது.

  இந்தியாவைக் குறித்து எங்கெல்ஸ்:

1856 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அன்றைய உலகின் பேரரசுகள் அனைத்தும் தங்களுடைய சந்தையை விரிவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைக் காலனி நாடுகளாகப் பங்கிட்டுக் கொண்டிருந்தது. முதலாளித்துவ சக்திகளின் காலனி வெறியை நுட்பமாகக் கவனித்து அவர்களின் கோர முகத்தை வெளிக்கொணர்ந்தார் ஏங்கெல்ஸ். காலனி நாடுகளில் ஏற்பட்ட தேசிய விடுதலை இயக்கங்களைக் கவனிக்கத் தவறவில்லை. இதுபற்றிய கட்டுரை ஒன்றில் “பொருளாதாரம், இராணுவம் மற்றும் பொதுப்பணித் துறையென மூன்று துறைகளை மட்டுமே கொண்டிருந்த கீழை நாடுகளில் முதல் இரண்டு துறைகளும் இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டிலிருந்தது. மேலும் பொதுப்பணித் துறையைக் கைவிட்டதோடு கீழை நாடுகளின் முக்கிய தொழிலான விவசாயத்தை முற்றிலுமாக அழித்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எங்கெல்சின் காலனி ஆதிக்கம் பற்றிய கருத்தை அடிப்படையாகக் கொண்டு மார்க்ஸ் பின்னாளில் “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி” எனும் புகழ்பெற்ற நூல் ஒன்றை எழுதினார். தேசிய எழுச்சியில் ஆர்வம் கொண்ட எங்கெல்ஸ் இந்தியாவில் 1806ஆம் ஆண்டு நடைபெற்ற வேலூர் சிப்பாய்கள் எழுச்சி, 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்கள் கலகம் பற்றி பல கட்டுரைகளை எழுதினார். அவற்றில் “டெல்லியைக் கைப்பற்றுதல் (The Capture of Delhi)”, “லக்னோவின் விடுதலை (The Relief of Lucknow)”, “வின்தமின் தோல்வி(The Defeat of Windham)” மற்றும் “இந்தியாவில் கிளர்ச்சி (The Revolt in India)” போன்றவை முக்கியமான கட்டுரைகளாகும்.

இக்கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் உதவியுடன், பின்னாளில் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை மார்க்சிய மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாத பார்வையுடன் தொடர்கட்டுரைகளைத் தோழர் இ.எம்.எஸ். எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் சிப்பாய்க் கலகத்தைப் பற்றி எழுதிய பல கட்டுரைகளில் ஒன்றில் “கலகத்தை ஒடுக்கியபின் இந்தியாவின் பெரும்பகுதிகளை பிடிக்கத் தொடங்கிய இங்கிலாந்து அரசு மற்றும் கிழக்கிந்தியக் கம்பெனியின் காலனி ஆதிக்கத்தை இந்திய மக்கள் முன்பை காட்டிலும் அதிகமாகவே வெறுத்தனர்” எங்கெல்சின் இக்கூற்றை இந்திய விடுதலைப் போராட்டம் நிரூபித்துக் காட்டியது.

 தொடர் எழுத்தும், இயக்கப் பணியும்:

மனிதவியலாளர் (anthropologist) எங்கெல்ஸ் அவர்கள் அறிவியலையும் விட்டுவைக்கவில்லை. அறிவியலின் உட்பிரிவுகளான இயற்பியல், உடல் உட்கூறு அமைப்பியல், கரிமவேதியியல் மற்றும் உடலியங்கியல் பற்றியும் கற்கத் துவங்கினார். மேலும் மத்தியாஸ் ஸ்ஹெளேய்டன் (Matthias Scheleiden) அவர்களின் செல் பற்றிய கண்டுபிடிப்புகளிலும், தியோடர் ஸ்வான் அவர்களின் ஆற்றல் பரிமாற்ற விதிகளிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தார் எங்கெல்ஸ்.

முதலாளித்துவ முறை பிறந்த சில ஆண்டுகளிலேயே குறிப்பாக 1857 ஆம் ஆண்டு ஐரோப்பியக் கண்டத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படத் துவங்கியது. இப்பொருளாதார நெருக்கடியால் மேலும் உத்வேகமடைந்த எங்கெல்ஸ் “பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகே கம்யூனிச மற்றும் சோசலிச புரட்சி இச்சமூகத்தில் சாத்தியப்படும்” என நம்பிக்கை தெரிவித்தார். கட்டுரைகள் பல எழுதிவந்த எங்கெல்ஸ் பிரசுரங்கள் எழுதவும் துவங்கியிருந்த அத்தருணங்களில் “Po and the Rhine” எனும் தலைப்பில் மூன்றாவது நெப்போலியனின் அரசியல் நடவடிக்கைகளை விவரிக்கும் விதத்தில் பிரசுரத்தைப் பெயரின்றி ஜெர்மனியில் வெளியிட்டார். ஜெர்மானிய பாட்டாளிகளுடனான தங்களது உறவை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாக மார்க்சும் எங்கெல்சும் தாஸ் வொலக்(Das Volk) எனும் ஜெர்மானியப் பத்திரிகையில் தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதினர்.

1860 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எங்கெல்சின் தந்தை காலமானார். அவர் இறந்து இரண்டு நாட்களுக்குப் பிறகே  எங்கெல்சால் தனது சொந்த ஊருக்குச் செல்ல முடிந்தது. அவரது தந்தையின் சொத்துக்கள் பங்குபிரித்தபோது மான்செஸ்டர் நகரில் உள்ள எர்மென் மற்றும் எங்கெல்ஸ் நிறுவனத்தில் 10,000 பவுண்டுகள் மதிப்புள்ள பங்குகள் எங்கெல்சுக்கு கிடைத்தது. அவருடைய தந்தையாரின் மரணம் எங்கெல்சை பொருளாதார ரீதியாக உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 1863 ஆம் ஆண்டு சனவரி 6 ஆம் தேதி எங்கெல்சின் மனைவி மேரி பர்ன்ஸ் காலமானார்.

சுமார் 19 ஆண்டுகள் தான் பணியாற்றிவந்த நிறுவனத்திலிருந்து 1869 ஆம் ஆண்டு சூன் 30ஆம் தேதி எங்கெல்ஸ் ஓய்வு பெற்றார். மார்க்சின் மகள் எலீனார், எங்கெல்ஸ் ஓய்வுபெற்ற தினத்தை இவ்வாறு நினைவு கூர்ந்துள்ளார். “அன்றைய தினம் நான் ஜெனரல் எங்கல்சுடன் இருந்தேன். சுமார் 19 ஆண்டுகள் அவர் அடைந்த வேதனைகளை நான் நன்கு அறிந்திருந்தேன். அன்று வெகுசீக்கிரமாகவே அலுவலகம் சென்ற எங்கெல்சின் வருகைக்காக நாங்கள் காத்திருந்தோம். சில மணி நேரத்திற்குப் பிறகு தன் கைத்தடியைக் காற்றில் சுழற்றியவாறு முகம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க, பாட்டு ஒன்றைப் பாடிக்கொண்டே  அவர் வந்தார். பிறகு நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து திராட்சை ஒயினை அருந்தி அந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடினோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். அப்பணியிலிருந்து ஓய்வுபெற்றபிறகு எங்கெல்ஸ் தன்னை முழுவதுமாகப் பாட்டாளி வர்க்க இயக்கப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார்.

1867 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேசிய பொதுச்சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முடிவுகளின்படி 1869 மற்றும் 1870 ஆண்டுகளில் அயர்லாந்து நாட்டின் வரலாற்றையும், பல நூற்றாண்டுகளாகப் பிரிட்டிஷ் அரசிடம் அடிமைப்பட்டுக் கிடக்கின்ற இதர நாடுகளைப் பற்றியும் வாசிக்கத் துவங்கினார். இத்தகைய காலகட்டங்களில் அயர்லாந்து நாட்டில் ஏற்பட்ட புரட்சி இயக்கங்களுக்கு ஆதரவாளராகவிருந்த தனது முதல் மனைவி மேரி பர்ன்ஸின் சகோதரி லிஸ்ஜி பர்ன்ஸை மணந்துகொண்டார். “பண்டைய அயர்லாந்து” எனும் தலைப்பில் இரண்டாவது அத்தியாயத்தை எழுதத் துவங்கியபோது 1870 மற்றும் 1871 ஆம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பிரான்கோ-பிரஷ்யா போர் பற்றி எழுதுமாறு பாரீஸ் கம்யூன் எங்கெல்சை கேட்டுக் கொண்டது.

1870 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி லண்டன் நகருக்குக் குடிபெயர்ந்த எங்கெல்ஸ் மார்க்ஸ் வீட்டிற்கு மிக அருகிலேயே வசித்தார். லண்டன் நகருக்குக் குடிபெயர்ந்த நாள்முதல் இருவரும் சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

பாரீஸ் நகரத்தில் பாட்டாளிகளின் கிளர்ச்சி:

1871 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி பாரீஸ் நகர உழைப்பாளிகள் ஆயுதமேந்திய போராட்டத்தைத் துவங்கினார்கள். இக்கிளர்ச்சிப் போராட்டத்திற்கு சில காலம் முன்னரே சர்வதேச ஜெனரல் கவுன்சிலின் உறுப்பினரான எங்கெல்ஸ், பாரீஸ் நகரில் துவங்கிய புரட்சிப் போராட்டங்களைப் பற்றிச் சொற்பொழிவாற்றினார். இதைத் தொடர்ந்து மார்க்சுக்கு எழுதிய கடிதமொன்றில் “பாரீஸ் நகரில் ஆயுதமேந்தி போராடத் துவங்கியுள்ள பாட்டாளி மக்களைக் காப்பாற்ற வேண்டும். ஒரு அமைதியான சூழல் திரும்பும்வரை அனைத்துப் பாட்டாளிகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் ஜெர்மன் படைகளிடமிருந்து கிளர்ச்சியாளர்களை ஒடுக்கிவிடாதவாறு காக்க வேண்டும். இல்லையெனில் கிளர்ந்தெழுந்துள்ள பாட்டாளி வர்க்கம் 20 ஆண்டுகளுக்கு முன்னிருந்த அவலநிலையை நோக்கித் தள்ளப்பட்டு விடும்” எனக் கூறினார்.

1871, செப்டம்பர் 17 ஆம் தேதி லண்டன் நகரில் துவங்கிய மாநாட்டில் புரட்சி பற்றி உரையாற்றிய எங்கெல்ஸ் “புரட்சி என்பது உச்சக்கட்டமான ஓர் அரசியல் போராட்டம். இந்தச் சமூகத்தில் உள்ள அவலநிலையை மாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் புரட்சிக்கான அரசியல் போராட்டங்களிலும், புரட்சிக்காகப் பாட்டாளி மக்களைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபடுவதும் தலையாய கடமையாகும். பாட்டாளி வர்க்கத்திற்கான நமது அரசியலில் எக்காரணத்தைக் கொண்டும் முதலாளித்துவ கட்சிகளையோ, நிறுவனங்களையோ அண்டிப் பிழைக்கக் கூடாது என்றும், பாட்டாளி வர்க்கத்திற்கென தன்னிச்சையான குறிக்கோள்களும், கொள்கைகளும் அவசியம்” எனக் கூறினார். இம்மாநாட்டிற்குப் பிறகு அகிலத்தின் ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாட்டிற்கான தொடர்பாடல் குழுவிற்கு செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாட்டில் உள்ள புரட்சியாளர்களுடனான தனது நட்பை வளர்த்துக் கொண்டார்.

 பக்கூனிஸ்டுகளுக்கு எதிரான போராட்டம்:

1870 களின் துவக்கத்தில் கற்பனாவாத கம்யூனிச கொள்கைகள் சமூகத்தில் மீண்டும் தலையெடுக்கத் துவங்கியது. பல பாட்டாளி குழுக்களும், சமூக ஜனநாயக வாதிகளும் இணைந்து செயல்படத் துவங்கியிருப்பதை மார்க்ஸ்-எங்கெல்ஸ் மற்றும் இதர விஞ்ஞானரீதியான கம்யூனிஸ்டுகளும் எச்சரிக்கையுடன் கவனித்தனர்.

பக்கூனிஸ்டுகளின் வேலைத் திட்டத்தைப் பகுப்பாய்வு செய்து மார்க்சும் எங்கெல்சும் கீழ்க்கண்டவாறு விவரித்தனர். “அது வெறும் பகட்டான வெற்று வார்த்தைகளால் ஆன கருத்துக் குப்பையைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இந்தக் கருத்துக்கள் வெகுகாலத்திற்க்கு முன்பே செத்துவிட்டவை. அவை சில முதலாளித்துவ அசடுகளைப் பயமுறுத்துவதற்கு உதவுமேயன்றி வேறு எதுவும் செய்யத் திறனற்றவை அல்லது அகிலத்தின் உறுப்பினர்களுக்கு எதிராகப் போனபார்ட்டிஸ்டுகளோ அல்லது இதர காவல்துறை மற்றும் வழக்குமன்ற அதிகாரிகளோ சாட்சியமாக உபயோகப்படுத்துவதற்கு உதவுமேயன்றி வேறு எதற்கும் பயன்படாது.” அராஜக வாதம், தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான புரட்சிகரமான தத்துவத்திற்கும் ஒத்துவராததும் பகைமையானதுமாகும் என்று அவர்கள் நிரூபித்தனர்.

1872 – 73 ஆம் ஆண்டு காலங்களில் எங்கெல்ஸ் எழுதிய புத்தகம், கட்டுரை மற்றும் பிரசுரங்கள் என அனைத்திலும், அனைத்து விதமான அராஜகவாதத்திற்கு எதிரான தங்களது கருத்துக்களை வெளியிட்டனர்.

டூரிங்கிற்கு எதிர்ப்பு:

பல்வேறு தரப்பட்ட குட்டி பூர்ஷ்வா கற்பனாவாதக் கருத்துக்களும் புத்தம்புதிய பாணிகளில் பூர்ஷ்வா தத்துவஞான மற்றும் பொருளாதார தத்துவக் கருத்துக்களும் வளர்ந்து கொண்டிருந்தன. யுஜின் டூரிங் (Eugen Duhring) பெர்லின் பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியராக இருந்தார். அவர் தன்னை “ஒரு புதிய உலகு தழுவிய சர்வாம்ச விஞ்ஞான முறையின் சிற்பி” என்று வர்ணித்துக் கொண்டார். தத்துவ ஞானம், அரசியல் பொருளாதாரம் மற்றும் சோசலிசக் கருத்துக்கள் கொள்கைகள் என எல்லாவற்றையும் விமர்சனம் செய்துவந்த அவர் மார்க்சியத்தையும் தாக்கினார்.

மார்க்ஸ் மற்றும் எங்கெல்சின் செல்வாக்கின்கீழ் கட்சித்தலைவர்கள் டூரிங்கியனிஸத்திற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர். 1877 ஜனவரி 3 ஆம் தேதியிலிருந்து 1878 ஜூலை 7 ஆம் தேதி வரை எங்கெல்ஸ் ஜெர்மானிய சோசலிஸ்டு தொழிலாளர் கட்சியின் பத்திரிக்கையான வோர்வார்ட்ஸில் தொடர்ச்சியாக விமர்சனக் கட்டுரைகள் எழுதினார். எங்கெல்சின் அக்கட்டுரைகளில் சில பிரசுரங்களாகவும் வெளியிடப்பட்டன.

அவற்றில் தத்துவ ஞானத்தில் இயக்கவியல் பொருள் முதல் வாதம் பற்றி விவரித்துள்ளார். டூரிங், பொருள் மற்றும் அதன் இயக்கங்களை வேறுவேறாகப் பார்த்தார். ஆனால் “பொருளின் இயக்கம் என்பது அப்பொருளின் இருத்தலுக்கான காரணமேயன்றி இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பது தவறாகும்” என்றார் எங்கெல்ஸ்.

மார்க்ஸ் மறைவிற்குப் பின்

1878 செப்டம்பர் 12 ஆம்தேதி எங்கெல்சின் மனைவி லிஸ்ஜெ பர்ன்ஸ் காலமானார். “அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பாட்டாளியான என் மனைவி என்னுடைய வாழ்க்கையின் மிகவும் கடினமான காலங்களைக் கடந்து செல்வதற்கு உறுதுணையாகவும், பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் மிகவும் ஆர்வத்துடனும் ஈடுபட்டிருந்தார்” என எங்கெல்ஸ் கூறினார்.

1881 ஆம் ஆண்டு கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வாடிய மார்க்சின் மனைவி ஜென்னி மார்க்ஸ் அதே ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அப்போது படுத்த படுக்கையாக இருந்த மார்க்ஸ் தனது மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நலம் தேறி வந்து கொண்டிருந்த மார்க்சிற்கு அடுத்ததாக மீண்டும் ஒரு துயர நிகழ்வு நிகழ்ந்தது. மார்க்சின் மூத்த மகள் ஜென்னி மார்க்ஸ் 1883, ஜனவரி 11 ஆம் தேதி இறந்தார். மார்க்ஸ்  ஏழ்மையில் வாடிய போதெல்லாம் அவரது குடும்பச் சுமையை எங்கெல்ஸ் ஏற்றுக் கொண்டார். தன் ஆருயிர் மனைவி மற்றும் அருமை மகள் இறந்தபிறகு மிகவும் சோகத்தில் ஆழ்ந்திருந்த மார்க்ஸ் அதே ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி இரத்தபோக்கு காரணமாக மதியம் 2:45 மணியளவில் நாற்காலியில் அமர்ந்தவாறே உயிர் நீத்தார். அவர் இறந்து மூன்று நாட்களுக்குப் பிறகு மார்ச் 17 ஆம் தேதி லண்டன் ஹைகேட் கல்லறையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது “அரசுகள், அவை எதேச்சதிகார அரசுகளாயினும் சரி, குடியரசுகளாயினும் சரி, அவர்களுடைய பிரதேசங்களிலிருந்து அவரை வெளியேற்றி நாடு கடத்தினார்கள். பூர்ஷுவாக்கள் அவர்கள் பழமைவாதிகள் ஆயினும் சரி, அதிதீவிர ஜனநாயக வாதிகள் ஆயினும் சரி,  அவர் மீது அவதூறுக் குப்பைகளை எறிவதில் ஒருவருக்கொருவரை மிஞ்சுவதில் போட்டி போட்டனர்.  இவற்றையெல்லாம் அவர் நூலாம்படையைத் தள்ளிவிடுவதைப் போல் துடைத்துத் தள்ளினார்… கோடிக்கணக்கான தோழர்களின் துயரம் பெருக, கண்கள் குளமாக இந்த மாமனிதர் மறைந்து விட்டார். நான் உச்சி மீதிருந்து உறுதியாக ஒன்று கூற முடியும். அவருக்கு எத்தனையோ மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தவர்கள் இருந்திருந்தாலும் தனிப்பட்ட விரோதி ஒருவர்கூட இருந்ததில்லை. யுகயுகாந்திரத்திற்கு அவர் பெயர் நிலைத்து நின்று நீடித்திருக்கும். அதேபோல் அவருடைய மாபெரும் பணியும் என்றும் நிலைத்திருக்கும்.” இவ்வாறு எங்கெல்ஸ் மார்க்சுக்கு புகழஞ்சலி செலுத்தினார்.

மார்க்சின் மறைவிற்குப் பிறகு ஐரோப்பிய சோசலிஸ்டுகளின் தலைவராகவும், உலக பாட்டாளி வர்க்கத்தினரை வழிநடத்திச் செல்லும் பொறுப்பை எங்கெல்ஸ் ஏற்றார்.

மூலதனத்தின் முதல் தொகுதி மட்டுமே மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் வெளியிடப்பட்டது. மூலதனத்தின் மற்ற இரு தொகுதிகளை வெளியிடும் பொறுப்பை எங்கெல்ஸ் ஏற்றுக் கொண்டு திறம்பட செய்து முடித்தார். “இதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் மார்க்ஸ் போன்ற மாமனிதரின் ஒவ்வொரு பொன்னான வார்த்தையும் மிகவும் முக்கியமானது. இவ்வாறு கடினமாக உழைப்பதை நான் மிகவும் மகிழ்ச்சியான தருணமாகவே கருதுகிறேன். ஏனென்றால், என் நீண்ட நாள் நண்பன் மீண்டும் என்னருகில் இருப்பதாகவே உணருகிறேன்” எனக் கூறியுள்ளார். ஒருகால் எங்கெல்ஸ் இல்லாமல் இருந்திருந்தால் மூலதனம் என்னும் அறியப் படைப்பைப் பற்றி நாம் அறிந்து கொள்ளாமலேயே இருந்திருப்போம்.

மார்க்ஸ் இறந்தபிறகு “குடும்பம், தனிச்சொத்து, அரசுஆகியவற்றின்தோற்றம்” என்னும் புத்தகத்தை இரண்டே மாதங்களில் எழுதி முடித்தார். இப்புத்தகத்தில் மனிதகுல வரலாற்றையும், எவ்வாறு மனித சமூகம் பழமையான சமூகத்திலிருந்து தனிச்சொத்தை அடிப்படையாகக் கொண்ட வகுப்புவாத சமூகமாக மாறியது என்பதை விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்து விவரித்துள்ளார். “நவீன சோசலிஸத்தின் அடிப்படையான கூறுகளைக் கொண்ட முக்கிய நூல்களில் ஒன்று” என லெனின்  இந்நூலைப் பற்றிக் கூறியுள்ளார்.

மார்க்சின் மறைவிற்குப் பிறகு உலக பாட்டாளி வர்க்க புரட்சியாளர்களை வழிநடத்திய எங்கெல்ஸ் ஐரோப்பியக் கண்டங்களில் உள்ள பல நாடுகளில் சோசலிஸ கட்சிகளைத் தோற்றுவித்ததில் பெரும் பங்காற்றினார். 1885 ஆம் ஆண்டுகளில் பெல்ஜியத்திலும் மற்றும் சுவீடனிலும், 1887 ல் நார்வே நாட்டிலும், 1888ல் சுவிட்சர்லாந்திலும் மற்றும் ஆஸ்திரியாவிலும், 1879 ல் ஸ்பெயினிலும் பொதுவுடைமைக் கட்சிகளைத் துவக்குவதில் அரும்பணியாற்றினார். எங்கெல்சின்  வீடு இருந்த  122, ரிஜென்டு பார்க் சாலை அக்கால புரட்சியாளர்களின் “புனிததளமாகவே” கருதப்பட்டது.

1893 ஆம் ஆண்டு ஆயுதக் குறைப்பு பற்றிப் பேசிய எங்கெல்ஸ் “ஐரோப்பாவால் ஆயுதங்களைக் குறைக்க முடியுமா?” என்னும் கட்டுரையொன்றை எழுதினார். அக்கட்டுரையில் உலக அமைதியை நிலைநாட்டவும் ஆயுதப் பெருக்கத்தைத் தடுக்கவும் முதலாளித்துவத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் எவ்வாறு போராட வேண்டும் எனவும் விவரித்துள்ளார். 8 மணி நேர வேலை வேண்டி லண்டன் நகரில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட எங்கெல்ஸ் முதலாளித்துவ அமைப்பில் நிகழ்ந்துவந்த மாற்றங்களை உற்றுக் கவனித்து வந்தார்.

1894 ஆம் ஆண்டு தனது உயிலை எழுதிய எங்கெல்ஸ், தனது சொத்தின் பெரும்பான்மையான பகுதியை மார்க்சின் குடும்பத்தினருக்கே எழுதி வைத்தார். தன்னுடைய 74 ஆவது வயதில் பவுல் லஃபர்குவெ (Lafargue) அவர்களுக்கு எழுதிய கடிதமொன்றில் “நான் இரு இளைஞர்களைப் போன்றே பணியாற்ற விரும்புகிறேன். முதலாவது இளைஞனுக்கு 40 வயதும், இரண்டாவது இளைஞனுக்கு 34 வயதுமாக இருக்கவேண்டும்.” (ஆம். தனது 74 வயதை இரண்டாகப் பிரித்துப் பார்த்தார்.)

1894 ஆம் ஆண்டிலிருந்து புற்றுநோயால் அவர் அவதியுற்றார். 19 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனைவாதிகளில் ஒருவரான எங்கெல்ஸ், 1895 ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி காலமானார். மார்க்சியம் என்ற தத்துவம் நிலைத்திருக்கும் வரையில் எப்படி மார்க்சின் பெயர் நிலைத்திருக்குமோ, அதே போன்று மார்க்சின் இணைபிரியாத் தோழனான எங்கெல்சின் பெயரும் அவரோடு இணைந்து என்றும் நிலைத்திருக்கும்.

அவரது இறுதிச் சடங்கில் சொற்பொழிவாற்றிய வில்ஹெம் லிம்கினெட்ச் “உலக பாட்டாளி வர்க்க மக்களின் தலைவரும், போராளியுமான ஏங்கெல்ஸ் அமைத்துக்கொடுத்த புரட்சிகர பாதையில் நாம் பயணிப்பதின் மூலம் முதலாளித்துவ முறையை அழிக்க முடியும்” எனக் கூறினார்.

“ஜென்ரல் ஏங்கெல்ஸ் இன்று நம்மை விட்டுப் பிரிந்த போதிலும், எண்ணற்ற பாட்டாளி வர்க்க படைகளை வழிநடத்திய தலைவர்களான மார்க்ஸ், ஏங்கெல்ஸின் கருத்துக்களைக் கொண்டு உலகத் தொழிலாளர்கள் ஒன்று கூடுவதன் மூலம் அவர்களுடைய தத்துவார்த்த கோட்பாடுகள் மென்மேலும் வலுவடைவதோடு சுரண்டலற்ற சமுதாயத்தை அமைப்பதில் வெற்றி காண இயலும்” எனப் பவுல் லஃபர்குவெ கூறினார்.

தோழர் லெனின் குறிப்பிடுவதைப் போல, “ஒவ்வொரு பாட்டாளியும் ஏங்கெல்ஸின் வாழ்க்கையை அறிந்து கொள்வது அவசியம்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved